தேவா தன்னைப் பார்ப்பது தெரிந்தே இருந்தது பல்லவிக்கு. ஆனாலும், வேண்டுமென்றே அவனது பார்வையைக் கவனமாகத் தவிர்த்தாள் பல்லவி.
“மாமா, என்னப்பா சொல்றாங்க சூர்யா?” என்று கஸ்தூரி அதிர்ந்து போய்க் கேட்க,
“என்னம்மா நீ, ஏன் பதறுற?” என்று கஸ்தூரியை பார்த்துச் சொன்னவர்,
“எல்லாம் நமக்குத் தெரிஞ்ச நல்ல குடும்பம்தான். பொண்ணும் நல்ல பொண்ணுதான். நம்ம மாப்பிள்ளை கூட வேலை பார்க்கற பொண்ணு. பேரு பாரதி. சூர்யா மாப்பிள்ளை ஆசைப்பட்டு, கல்யாணம் பண்ணிக்கறேன்னு வாக்கு கொடுத்துட்டார் போல. நாம ஒரு முறை நல்லா விசாரிச்சுட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம். என்ன சொல்றீங்க?” என்று சொல்லி, அவர் சூர்யாவின் பெற்றோரை பார்க்க, அவர்கள் இன்னுமே அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது.
ஏன் சூர்யாவுக்கே கூட அது அதிர்ச்சிதான் என்பது அவன் விழி பிதுங்க முழித்ததில் இருந்தே தெரிந்தது. ஆனால், சில நொடிகளில் அது தங்கை வேலையாகதான் இருக்கும் என்று சரியாகக் கணித்து விட்டான் அவன்.
‘அடிப்பாவி, அதுக்குள்ள இத்தனை வேலை பார்த்துட்டியா?’ என்று கண்களாலேயே பல்லவியை வினவினான் தேவா. இம்முறையும் அவனை, அவள் கண்டு கொள்வதாகவே இல்லை.
அதில் கடுப்பானவன், மெல்ல யாரின் கவனத்தையும் ஈர்க்காமல் அவளின் பக்கம் நகர்ந்து வந்தான்.
“என்ன?” என்று பல்லவி அவனிடம் கண்களால் வினவ,
பதிலுக்கு, “என்ன நடக்குது இங்க?” என்று அவள் புறமாகச் சாய்ந்து கிசுகிசுத்தான் தேவா.
“பாத்தா தெரியல தேவா? சூர்யாண்ணா கல்யாண பேச்சு வார்த்தை” என்றாள் பல்லவி சாதாரணமாக, அதற்கும் தேவா முறைக்க,
“இங்க பாரு தேவா. விஷயத்தை முதல்ல அப்பாகிட்ட சொல்லி, அவரு அம்மாகிட்ட பேசி, அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து நம்மளை கேள்வி கேட்டு, நீ ஒரு பதில் சொல்லி, அதை மாத்தி, நான் ஏதாவது உளறி வச்சு.. அப்புறமா, கட்டக் கடைசில அண்ணாவை கூண்டுல ஏத்தி… ஷப்ப்பா, விசாரணை ரொம்பப் பெருசா போகும். டைம் வேஸ்ட் ஆகுமே தவிர, வேலை நடக்குமா? சந்தேகம்தான். இல்லையா? அதான், யாரைப் பிடிச்சா சட்டுனு வேலை நடக்குமோ அவரைப் பிடிச்சேன்” என்று தோளை குலுக்கினாள் பல்லவி. அவளை வாயடைத்துப் போய்ப் பார்த்திருந்தான் தேவா.
மணி இரவு ஒன்பதுதான் ஆகியிருந்தது. இந்நேரம்தான் சென்னையில் இருந்து சிவகாசிக்குச் செல்லும் இரு பேருந்தும், அங்கிருந்து சென்னை வரும் இரு பேருந்தும் கிளம்பும் என்பதை அவன் நன்கு அறிவான். பொதுவாக இந்நேரம் கதிர்வேலன் எத்தனை பிஸியாக இருப்பார் என்பது அங்கிருக்கும் அனைவருக்குமே தெரியும்.
அவரின் அலைபேசியும், அலுவலகத் தொலைபேசியும் அடித்துக் கொண்டே இருக்கும். டிரைவர்கள், பயணிகள் என விடாமல் அழைப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும்.
பயணிகள் அனைவரும் பேருந்தில் ஏறி, பேருந்து சென்னையைக் கடந்ததும்தான் அவரால் நிம்மதியாக மூச்சு விட முடியும்.
அதே போல, அந்தப் பக்கம் சிவகாசியில் இருந்து கிளம்பும் பேருந்து மதுரையைக் கடந்தால்தான் ஓய்ந்து அமருவார் அவர்.
ஆனால், இன்று அனைத்தையும் போட்டு விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அதுவும் வார இறுதி நாளான வெள்ளி இரவு. பேருந்து முழுவதுமாகப் பயணிகளால் நிறைந்திருக்கும் நாள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாள்.
ஆனால், அத்தனையையும் அப்படியே பாதியில், அலுவலக மேலாளரிடம் விட்டு விட்டு வந்திருக்கிறார். எதற்காக? இந்தப் பல்லவி அழைத்தாள் என்பதற்காக. ஏனோ, அவனுக்குக் கோபமே வரவில்லை.
தன் காரியம் சாதிக்க, அதுவும் அண்ணனுக்காகச் சரியான ஆளைப் பிடித்த அவளை மனதில் பாராட்டத்தான் தோன்றியது.
“என்ன ஏலக்கா மணம் ஆளைத் தூக்குது. கனி நல்ல விஷயம் பேசுறோம்னு இனிப்புச் செய்யறா போல..” என்று கதிர்வேலன் வாசனைப் பிடித்துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்தார் கனிமொழி.
“வாங்கண்ணா, வாங்க அண்ணி. எப்ப வந்தீங்க? எனக்கு நீங்க வந்ததே தெரியல” என்று பல்லவியின் பெற்றோரை பார்த்து அவர் கேட்க,
“பெர்பெக்ட் டைமிங்” என்று அம்மாவை பார்த்து முணுமுணுத்தான் தேவா. அவன் கையைக் கிள்ளி வைத்தாள் பல்லவி.
“நாங்க வந்து, கால் மணி நேரத்துக்கு மேல ஆச்சு அண்ணி. மழை சத்ததுல எங்க குரல் அடுப்படி வரைக்கும் கேட்டு இருக்காது” என்றார் கஸ்தூரி.
“ம்ம். ஆமா, அண்ணி. சுத்தமா, சத்தமே கேட்கல.” என்றவர், திரும்பி கணவரை ஆச்சரியமாகப் பார்த்து,
“என்ன நீங்களும் வந்து இருக்கீங்க தேவாப்பா? சாப்பாடு எடுத்து வைக்கவா? தேவாகிட்ட கொடுத்து விடலாம்னு அப்பவே எடுத்து வச்சேன். ஆமா, என்ன விஷயம் எல்லோரும் வந்திருக்கீங்க?” என்று கேட்டவர், மற்றவர்கள் பதில் சொல்ல வாய்ப்பே கொடுக்காமல்,
“ஆமா, என்ன நல்ல செய்தி? அதைப் பேசதான் எல்லோரும் ஒன்னா வந்தீங்களா? அதுக்குதான் பல்லவி இனிப்புச் செய்யச் சொன்னாளா?” என்று அப்பாவியாகக் கேட்டவரை, கண்களைச் சுருக்கி முறைத்து வைத்தாள் பல்லவி.
“ஒன்னு விடல. ம்ம், நீ நடத்துப் பல்லவி” என்று முணுமுணுத்தான் தேவா. பொங்கி வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள் பல்லவி.
“உனக்கும், உங்க அத்தைக்கும் எவனாவது ஆஸ்கார் அவார்ட் தரேன்னு சொன்னானா? இந்த நடிப்பு நடிக்கறீங்க?” அவள் பக்கம் சாய்ந்து தேவா கேட்க, அதற்கு மேல் முடியாமல் மெலிதாகப் புன்னகைத்து விட்டிருந்தாள் பல்லவி.
“எங்கம்மா, என்னமா உளறுது பார். டைமிங் எல்லாம் சொல்லிக் கொடுத்து இருப்பியே? இல்லனா, இப்படிச் சரியான நேரத்துக்கு எங்கம்மா எண்ட்ரி கொடுக்காதே? முன்னாடியே, வாங்க அண்ணா, வாங்க அண்ணின்னு தண்ணீரோட வந்து நின்னு இருப்பாங்களே” என்று அவன் கேட்க,
“எல்லாத்துக்கும் என்னையே சந்தேகப்படாத தேவா. அத்தைக்கு நிஜமா கிட்சன் வரை சத்தம் கேட்டு இருக்காது. மழை பெய்யுது இல்ல?” என்று அவள் விளக்கம் கொடுக்க,
“நம்பிட்டேன் பல்லவி. ஆனாலும், எனக்கே காதுல பூ சுத்துற பார்த்தியா? அங்க நிக்கிற நீ” என்று அவன் புருவம் உயர்த்திச் சொல்ல,
“சரி போனா போகுதுன்னு, பாவம் பார்த்து, உன் காதலுக்கும் இது போல ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா, இனி அதுக்கு வாய்ப்பே இல்ல, போ. நீ என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்ட” என்று அவள் சடைத்துக் கொள்ள,
“சூர்யா மாதிரியே நானும், எனக்கு ஹெல்ப் பண்ண கை வசம் ஆள் வச்சுருக்கேன். அப்போ நீ என்ன பண்றன்னு நானும் பார்க்கத்தானே போறேன்” என்று சொன்னவனை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து பார்த்தாள் பல்லவி.
இங்கே அவர்கள் சலசலத்துக் கொண்டிருக்க, அங்கே பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
“என்ன நல்ல செய்தி?” என்று கேட்ட மனைவிக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் கதிர்வேலன்.
“ஆமா கனி. நல்ல செய்திதான். எல்லாம் நம்ம சூர்யா தம்பி கல்யாணம் விஷயம். பொண்ணு பேரு பாரதி” என்றவர், “ஃபோட்டோ காட்டுங்க மாப்பிள்ளை” என்றும் சேர்த்து சொல்ல, வேறு வழியின்றி அலைபேசியில் தேடி பாரதியின் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தான் சூர்யா.
அடுத்த அரை மணி நேரத்தில் அவள் பெற்றோரிடம் இருந்து சூர்யாவின் காதலுக்குப் பலமாகப் பச்சைக் கொடி காட்டப்பட்டிருந்தது.
அவர்களுக்குப் புகைப்படத்தில் பெண்ணைப் பார்த்ததும் பிடித்து விட்டிருந்தது. மேலும் விவரங்கள் கேட்டு அறிந்ததில் இன்னுமே திருப்தி. உடனே கல்யாணம் பேச தயாராகி இருந்தனர்.
வீட்டோடு மாப்பிள்ளை விஷயம் இப்போது சொல்ல வேண்டாம் என்று தேவா எச்சரிக்க, அதை அப்படியே சொல்லாமல் மறைத்தான் சூர்யாவும்.
கதிர்வேலன் கடகடவென்று இரவு உணவை முடித்துக் கொண்டு, வேலையைப் பார்க்க கிளம்ப, வேகமாக அவரிடம் போய், பருப்புப் பாயாசம் இருந்த கிண்ணத்தை நீட்டினாள் பல்லவி.
அப்பாவின் காதை கடித்துக் கொண்டிருக்கும் பல்லவியைச் சந்தேகக் கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
பல்லவியோடு பேசிக் கொண்டே பாயாசத்தை உண்டு முடித்தவர், கிண்ணத்தை அவரை நோக்கி, நடந்து வந்த மனைவியிடம் நீட்டிக் கொண்டே, “ஏன்பா சேது, நம்ம பல்லவி குட்டி வேலை பார்க்கற ஹாஸ்பிட்டல் ஒன்னும் சரியில்லை போலவே. காதுக்கு வர்ற செய்தி எல்லாம் அப்படி ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல. அதான், நாளையில் இருந்து வேலைக்குப் போக வேணாம்னு சொல்லிட்டேன். ஊர்ல வேற நல்ல ஹாஸ்பிட்டலா இல்ல? அதுவும் நம்ம புள்ளை படிச்ச படிப்புக்கு எல்லாம் போட்டி போட்டுட்டு வேலைக் கொடுப்பான்.” என்று அவர் சேதுராமனிடம் சொல்ல, அடுத்த அதிர்ச்சியா என்பதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
“என்ன பிரச்சினை டா பல்லவி? யார் என்ன பண்ணாங்க?” என்று கஸ்தூரி மகளைப் பார்த்து கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா தங்கச்சி. பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்ல. ரெண்டு வருஷமா வேலைக்குப் போகுது. பாவம், புள்ளை கொஞ்ச நாள் வீட்ல இருக்கட்டும்” என்று பல்லவிக்குப் பதிலாக, தானே பதில் அளித்தார் கதிர்வேலன்.
“சரிங்க ண்ணா” என்றார் கஸ்தூரி. தானும் ஒப்புதலாகத் தலையை அசைத்தார் சேதுராமன்.
கதிர்வேலன் எதையும் காரணம் இன்றிச் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கைதான் அவர்களுக்கு. அதிலும் பெண் பிள்ளை விஷயத்தில் எப்பொழுதுமே கதிர்வேலனுக்குக் கூடுதல் அக்கறை உண்டு என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அது அவரின் மகள் வித்யா என்று இல்லை. சங்கவி, பல்லவிக்குமே அதுதான் என்று அவருக்குத் தெரியும்.
ஒரு புரிதலுடன், “நீங்க சொன்னா சரிதான்” என்றார் சேதுராமன்.
‘மாஸ்டர் மைண்ட் பல்லவி உனக்கு. ஒவ்வொரு காயையும் என்ன லாகவமா நகர்த்தறா பாரு. கேடி. இவளை காப்பாத்த எங்க அப்பாவும் ஹாஸ்பிட்டலை குறை சொல்றார் பாரு.’ மனதில் அவளைச் சிலாகித்துக் கொண்டான் தேவா. அவனுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது.