மழையோடு ஒரு நாள் – 3 (1)

தேவா சொன்ன வார்த்தைகளின் சரியான அர்த்தம் புரிய பல்லவிக்கு முழுதாய் ஒரு நிமிடம் தேவைப்பட்டது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு முதன்முதலாகச் சூர்யா வேலை விஷயமாக வெளிநாடு சென்ற போது, அவனை வழியனுப்ப மொத்த குடும்பமும் விமான நிலையம் சென்றிருந்தனர். அப்போது தாங்கள் இருவரும் பேசிக் கொண்டது அந்நேரம் இருவருக்குமே நினைவில் வந்தது.

“அடுத்து நீதான் இல்ல தேவா? நீ எந்த நாட்டுக்குப் போகப் போற?” என்று கேட்டாள், அப்போதுதான் கல்லூரி முதலாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருந்த பல்லவி.

“நான் எங்கயேயும் போக மாட்டேன் பல்லவி. இங்கேயேதான் இருப்பேன். அம்மா, அப்பா கூடவே. அவங்களைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாதுப்பா. அப்புறம் அவங்களை யார் பார்த்துப்பா?” என்றவனின் பார்வை அவள் முகத்தை விட்டு அகலவே இல்லை.

“சூப்பர் தேவா. நானும் வெளிநாடு எல்லாம் போக மாட்டேன். ஏன், வெளியூர் கூடப் போக மாட்டேன். அம்மா, அப்பா பக்கத்திலேயேதான் இருப்பேன். சங்கவி கா, கல்யாணம் பண்ணிட்டு மும்பை போய்ட்டா, வித்யா கல்யாணம் பண்ணிட்டு விருதுநகர் போய்ட்டா. இதோ சூர்யா அண்ணா வேலைக்கு வெளிநாடு போறான். இப்போ அம்மா, அப்பாவை நான்தானே பார்த்துக்கணும்?” என்று அவள் தேவாவிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்ட அவள் அம்மா கஸ்தூரியின் கண்கள் சந்தோஷத்தில் மின்ன, மகளின் கன்னம் வழித்து நெட்டி முறித்தார் அவர். தங்கையின் பேச்சில் மனம் நெகிழ புன்னகைத்தான் சூர்யா.

“கண்டிப்பா தங்கம். எங்களை இனி நீதான் பார்த்துக்கணும். நீ பார்த்துப்பன்னு எனக்குத் தெரியும்” என்ற அம்மாவின் வார்த்தைகளில் பூவாய் மலர்ந்தது அவள் முகம்.

“ஆனா, உனக்கும் வெளிநாடு போக வாய்ப்பு வந்தா கண்டிப்பா போய்ட்டு வாடா பல்லவி” என்றவரைப் பார்த்து வெகு தீர்க்கமாக, மறுப்பாகத் தலையை அசைத்தாள் பல்லவி.

இப்போதும் அந்நினைவில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் தேவாவும், பல்லவியும்.

அவன் சொல்ல வந்ததைச் சரியாகப் புரிந்து கொள்ளாத தன் மூளையை மானசீகமாகக் குட்டிக் கொண்டாள். அதற்குள் மழைச் சாரலை பொழிந்த தன் மனதைதானே திட்டிக் கொண்டாள் அவள்.

“டேய் தேவா, என்ன பேசிட்டு இருக்க நீ?” என்ற சூர்யாவின் கேள்வி அவளைக் கலைத்தது.

“ஓ. அப்போ, நீ என்னை வேற ஆளாதான் இத்தனை நாள் பார்த்துருக்க? இல்லடா சூர்யா? நாளைக்கு நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஒன்னுன்னா நீ வந்து நிக்க மாட்ட? அப்படித்தானே?” என்று கோபத்துடன் தேவா கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறினான் சூர்யா.

“அது அப்படி இல்லடா தேவா…” என்று சூர்யா இழுக்க, இருவரையும் பார்க்க எரிச்சலாக வந்தது பல்லவிக்கு.

“வேற எப்படி டா? அதையும் நீயே சொல்லு. உன் குடும்பம் வேற? என் குடும்பம் வேறயா? இந்த நிமிஷம் வரை நான் அப்படி நினைச்சது இல்லடா. எங்க வீட்லயும் நினைச்சது இல்ல. நம்ம குடும்பம்னுதான் நினைச்சுருக்கேன். ஆனா, நீ…” கோபமும், ஆற்றாமையும் மிக, குரலை உயர்த்திக் கொண்டிருந்தான் தேவா.

“டேய் தேவா, நான் குடிச்சுருக்கேனா? இல்ல நீ குடிச்சு…” தங்கையின் கடினப் பார்வையில் வாயை பட்டென்று மூடிக் கொண்டான் சூர்யா.

தேவாவின் பேச்சு சரி என்றே பல்லவிக்குப் பட்டது. இதோ, இந்த நிமிடம் வரை அவன் வீட்டில் சட்டமாக, சொந்த வீடு போல அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். இரத்த பந்தமோ, உறவோ, சொந்தமோ இல்லை என்றாலும் கூட, அதற்கும் மீறிய பாசமும், உரிமையும் இரு வீட்டினரிடமும் இருக்கிறதுதான். ஆனால், பெற்றோர் என்று வரும் போது அண்ணன் யோசிப்பதுதான் சரி என்று அவளுக்குப்பட்டது.

தேவா சொல்வது எல்லாம் அந்த நேர உணர்ச்சி வேக வார்த்தைகள். அது நடைமுறைக்கு அத்தனை சரிபட்டு வராது என்று அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.

அதை இப்போது அவனிடம் சொன்னால், கோபத்தில் வானுக்கும் பூமிக்குமாகக் குதிப்பான் என்பதை அறிந்தவளாகச் சட்டென்று பேச்சுச் செல்லும் திசையை மாற்றினாள் பல்லவி.

“நான் அப்பாக்கிட்ட அண்ணி பத்தி பேசுறேன். எனக்கு அவங்க ஃபேமிலி பத்தி சொல்லு அண்ணா” என்ற பல்லவி, தன் கைப் பையைத் தேடி அதில் இருந்து அலைபேசியை எடுத்தாள்.

மெதுவாகப் பாரதி பற்றிய தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தான் சூர்யா.

தேவாவிற்கு எல்லாம் முன்னரே தெரிந்துதான் இருந்தது. பல்லவிதான் அவன் சொல்வதைப் புதிதாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

மீண்டும் தொடங்கியது இடத்திற்கே வந்து, வீட்டோடு மாப்பிள்ளை விவகாரத்திற்கு வந்து நின்றனர் நண்பர்கள்.

அவர்கள் இருவரும் காரசார விவாதத்தில் இருக்க, பல்லவி தன் அலைபேசியுடன் மெல்ல அங்கிருந்து நழுவினாள்.

இருபது நிமிடம் கழித்து அவள் அறைக்குள் நுழையும் போதும் நண்பர்களின் பேச்சு வார்த்தை நல்லதொரு முடிவை எட்டியது போலத் தெரியவில்லை.

“ஷப்ப்பா” என்று கண்களை உருட்டியபடி சோஃபாவில் அமர்ந்தாள் பல்லவி.

“உனக்கு என்ன அவ்வளவு சலிப்பு?” என்று அவளிடம் எகிறிக் கொண்டு போனான் தேவா.

“இப்ப அவளை ஏன்டா கத்துற? எனக்குப் பதில் சொல்லு டா நீ. உன்னை வீட்டோட மாப்பிள்ளையா வரச் சொன்னா, நீ போவியா? அதைச் சொல்லு முதல்ல? அப்புறம் என்னைப் பத்தி பேசுவோம்” என்று சூர்யா கேட்க,

கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், “அது நான் கட்டிக்கப் போற பொண்ணைப் பொறுத்து இருக்கு.” என்ற தேவா, “அவதான் எனக்கு முக்கியம்னா, அவளுக்காக எதையும் செய்வேன். ஆனா, எனக்கு அப்படி ஒரு நிலைமை எல்லாம் வராதுன்னுதான் தோனுது.” என்றான் தீர்க்கமாக.

“பாரேன். நிஜமாவா தேவா? அதையும்தான் பார்ப்போம் டா. நாளைக்கே உனக்கு இப்படி ஒரு நிலை வந்தா என்ன முடிவு எடுக்கப் போறன்னு நானும் இங்கேயே இருந்து பார்க்கத்தானே போறேன்” என்று கையைத் தட்டிச் சொன்னான் சூர்யா.

பல்லவி அலைபேசியையும், அறை வாயிலையும் மாற்றி மாற்றிப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

மழை மீண்டும் தன் கச்சேரியை தொடங்குவது போல் இருந்தது. மழையை விட வேகமாக நழுவி கொண்டிருந்தது நேரம். மீண்டும் மெலிதாகத் தூறத் ஆரம்பித்திருக்க, அவளுள்ளும் மெலிதான பதட்டம் பரவ ஆரம்பித்தது.

ஆனால், அதற்கு அவசியம் இல்லாமல், அவளின் பெற்றோரும், தேவா அப்பா கதிர்வேலனும் ஒன்றாகப் பேசிக் கொண்டே வீட்டிற்குள் வருவது அவர்களின் பேச்சுக் குரலில் இருந்தே தெரிந்தது.

மழையிலும் வியர்த்திருந்த தன் உள்ளங்கையை உடையில் துடைத்துக் கொண்டாள் பல்லவி. எல்லாம்தான் விரும்பியபடி நடக்க வேண்டும் என்ற பதட்டம் நிறைத்திருந்தது அவளுள்.

அவளின் அம்மா கஸ்தூரி, அப்பா சேதுராமன், கூடவே தேவாவின் அப்பா கதிர்வேலன் பேசிக் கொண்டே அந்த அறைக்குள் நுழைந்தனர்.

“என்ன ஆச்சு சூர்யா? மழையில் இப்படியா தடுக்கி விழுவ? பார்த்து நடக்க மாட்டியாப்பா?” கஸ்தூரி மகனைப் பார்த்ததும் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தார். பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்த அவன் நெற்றியையும், கைக் காயத்தையும் ஆராய்ந்தது அவரது கண்கள். சின்னக் காயங்கள் தானா என்று தொட்டுச் சோதித்துப் பார்த்தது அந்தத் தாயின் கரங்கள்.

“எப்படிப்பா கீழ விழுந்த?, மழை நேரம் தரை ஈரமா இருக்கும். வழுக்கும்னு தெரியாதா தம்பி உனக்கு? நீயென்ன இன்னும் சின்னப் பிள்ளையா? நல்லவேளை பெருசா அடிபடலை. கவனமா இருக்கணும் பா” என்று தன் பங்கிற்குச் சேதுராமனும் கேட்க, பதில் சொல்ல முடியாமல் முழித்தான் சூர்யா.

இம்முறை நண்பனுக்குக் கைக் கொடுக்காமல் நடப்பதை ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்தான் தேவா.

“அட, என்ன நீங்க? மாப்பிள்ளை காதல்ல விழுந்த போது பட்ட அடி இது. அந்நேரம் அவருக்கு மழை எல்லாம் எங்க கண்ணுக்கு தெரிஞ்சு இருக்கும். என்ன மாப்பிள்ளை நான் சொல்றது?” என்று சொல்லிக் கொண்டே போய்ச் சூர்யாவின் பக்கத்தில் அமர்ந்தார் கதிர்வேலன்.

அவர் சொன்னதில் அதிர்ந்து அனைவரும் அவரையும், சூர்யாவையும் பார்க்க, தேவா மட்டும் திரும்பி தன் பக்கத்தில் நின்றிருந்த பல்லவியைப் பார்த்தான்.

error: Content is protected !!
Scroll to Top