“ஒரு துண்டு இஞ்சி போட்டு மிக்சியில் அரைச்சு, சாறு எடுத்துக்கோ பல்லவி. லெமன் ஜுஸ் போட்டு, அதுல இந்த இஞ்சி சாறையும் கலந்து எடுத்துட்டு வா. சாரோட போதை குறையும்.” என்று சூர்யாவை முறைத்துக் கொண்டே சொன்ன, தேவாவை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் பல்லவி.
அவள் அங்கிருந்து நகராததைப் பார்த்து, “என்ன?” என்றான் எரிச்சலுடன்,
“குடிக்க மாட்டேன்னு சொன்ன தேவா? ஆனா, இதெல்லாம் தெரியுது? எப்படி?” என்று அவள் முணுமுணுக்க, வந்த சிரிப்பை உதட்டோடு விழுங்கி,
“ரொம்ப முக்கியம். போய் ஜூஸை போட்டுக் கொண்டு வா பல்லவி. முதல்ல உங்க அண்ணனை கவனி” என்று அழுத்தமாகச் சொன்னவனை முறைத்துக் கொண்டே சென்றாள் பல்லவி.
அவள் நீட்டிய லெமன் ஜூஸை எந்தக் கேள்வியும் கேட்காமல், கையில் வாங்கி முகம் சுளித்தபடி குடித்து முடித்தான் சூர்யா. தங்கையின் முகத்தை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் துளியும் இல்லாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.
“சாரி” பார்வையைத் தரையில் பதித்து முணுமுணுத்தான் சூர்யா.
“எப்படிக் குடிச்ச? எங்க போய்க் குடிச்ச? எதுக்காகக் குடிச்ச?” வரிசையாகக் கேள்விகளை அடுக்கினான் தேவா.
ஏதோ ஒரு மூன்று நட்சத்திர உணவு விடுதியின் பெயரை குறிப்பிட்டான் சூர்யா. அங்கேதான் குடித்தான் போலும்.
“ம்ம்” என்று தேவா அவனை மேலே சொல்லத் தூண்ட, “பாரதி கிட்ட அவ இல்லனா, என்ன ஆவேன்னு காட்ட…” அவன் சொல்லி கூட முடிக்கவில்லை, அதற்குள் கோபத்துடன் இடையிட்டான் தேவா.
“ஓஹோ, தெய்வீக காதல். அவங்க இல்லனா சார், குடி, கூடவே நாய்க் குட்டின்னு தேவதாஸ் ஆகிடுவார். அப்படித்தானே?” என்று அவன் நக்கலாகக் கேட்க,
“இல்ல தேவா. சும்மா அவளை மிரட்ட…” என்று சொல்லிக் கொண்டே மெல்ல முகத்தை நிமிர்த்திச் சூர்யா பார்க்க, நண்பனுக்குப் பக்கத்தில் கண் கலங்க நின்றிருந்த தங்கையைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோ போலாகி விட்டது.
“சாரி டா குட்டி” என்று சமாதான கொடியை அசைக்க முயன்றான் சூர்யா.
சமாதான கொடியை சிறிதும் சட்டை செய்யாமல், பல்லவி அமைதியாய் நிற்க, தேவாதான் பேசினான்.
“இவ ஒரு பெரிய மனுஷின்னு இவளுக்குக் கால் பண்ணி, உனக்கு ஆக்சிடென்ட் ஆகி, மயங்கி இருக்கன்னு சொல்லி இருக்காங்க டா. நல்லவேளை அந்த நேரம் உன் போனுக்கு நான் கால் பண்ணேன். எனக்கு விஷயம் தெரிய வந்தது. அப்பவும் ரெண்டு மூணு முறை என் காலை எடுக்காம, அப்புறமா ஏதோ தோனி அவங்களே திரும்பவும் கூப்பிட்டு சொன்னாங்க. ஒருவேளை எனக்குத் தெரியாம இருந்து, பல்லவி மட்டும் போய் இருந்தா, எப்படி உன்னைத் தனியா இந்த மழையில… நினைச்சாலே கோபமா வருது.
ஏன் இப்படிப் பண்ற சூர்யா? அந்த.. அவங்களுக்கும் பொறுப்பு வேணாமா? நான் போற வரை பல்லவிக்கு அவங்க ஹெல்ப் பண்ணவே இல்ல. இவளை மிரட்டிட்டுதான் இருந்தாங்க. எல்லாம் உன்னால..” என்று தேவா படபடக்க,
“அவளுக்கு என் மேல கோபம்…” என்ற சூர்யாவை புதிதாக முளைத்த எரிச்சலுடன் பார்த்தான் தேவா.
“அதுக்கு? அதைக் காட்ட, பல்லவிதான் கிடைச்சாளா? பயந்துட்டு எனக்குக் கால் பண்றா, அதோட வண்டி ஓட்டிட்டு வந்தா.. ஏதாவது ஆகி இருந்தா..” என்றவனுக்கு மேலே சொல்ல முடியாமல் போனது.
“இல்ல தேவா, சாரி டா. நான் மயங்கவும் பாரதி பயந்து இருப்பா… அதான்..” என்று அவன் தயக்கமாக இழுக்க,
“அப்போ நம்ம பல்லவி? இவ எவ்வளவு பயந்து இருப்பா? கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? நீயெல்லாம் என்ன அண்ணன்?” என்று அடிக்காத குறையாகக் கேள்வி கேட்கும் நண்பனை பதில் இல்லாது வெறுமையாய் பார்த்தான் சூர்யா.
அண்ணன் திட்டு வாங்குவதைத் தாங்கிக் கொள்ள இயலாத பாசமலர், பட்டென்று பேச்சை மாற்றினாள்.
“அண்ணி கூட என்ன பிரச்சினை அண்ணா?” என்று கேட்ட பல்லவி, அவனிடம் மிதமான சூட்டிற்கு மாறி இருந்த காய்கறி சூப்பை எடுத்து நீட்டினாள்.
இன்னொரு கோப்பையைத் தேவாவின் பக்கம் நகர்த்தி வைக்க, அவளைக் கோபமாகப் பார்த்தாலும் மறுக்காமல் எடுத்து அதை அருந்தினான் தேவா.
“என்ன அண்ணி, அண்ணின்னு சொல்லிட்டு இருக்க? பாரதினு பேரை சொல்லி பேசு பல்லவி. அது போதும்” பல்லைக் கடித்தபடி சொன்னான் தேவா. அவன் சொன்னதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை பல்லவி.
“நீ சொல்லு ண்ணா” என்றாள் சூர்யாவிடம்,
ஒரு வாய் சூப்பை குடித்து விட்டு, “அது, அது வந்து…” என்று சூர்யா தடுமாற, தன்னிடம் தன் காதலைப் பற்றிப் பேச அண்ணன் தயங்குகிறான் என்று புரிந்து கொண்ட பல்லவி, “எல்லாம் உன் ப்ரெண்ட் கிட்ட மட்டும் சொல்லு” என்று நொடித்துக் கொண்டாள்.
உடனே இறங்கி வந்தவள், “நான் அப்பா கிட்ட பேசறேன். அண்ணி பத்தி சொல்லு.” என்றும் சொல்ல, தங்கையை வாஞ்சையுடன் பார்த்தான் சூர்யா.
நொடியில் மலர்ந்து விட்ட முகத்துடன், “அண்ணா இனி குடிக்க மாட்டேன் பல்லவி. ஏதுக்காகவும், யாருக்காகவும் அதை இனி தொட மாட்டேன். சத்தியம்” என்றவனைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்தாள் பல்லவி.
இருவரும் குடித்து முடித்திருந்த சூப் கோப்பைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் வெளியில் செல்ல, “நீயும் சூப்பை குடி. ஆறி இருக்கும். சூடு பண்ணி குடி. அப்புறம், இவனுக்கு இஞ்ஜெக்சன் போட போறேன். சாப்பிட ஏதாவது கொண்டு வா. அப்படியே மாத்திரை போட தண்ணி…” என்று சொன்ன தேவாவை பார்த்து லேசாகத் தலையசைத்து விட்டு சென்றாள் பல்லவி.
அடுத்த ஒரு மணி நேரம் கழித்து, சுடுநீரில் குளித்து, உணவு உண்டு நன்றாக நிதானத்திற்கு வந்திருந்த சூர்யா, தொண்டையைச் செருமிக் கொண்டு, “ரெண்டு வருஷமா விரும்பறோம்” என்று சொல்ல, அதிர்ந்து தேவாவை பார்த்தாள் பல்லவி.
அவன் அதைக் கேட்டு அதிரவில்லை என்பதையும் குறித்துக் கொண்டாள்.
“இப்போ மூனு மாசமா அவங்க வீட்ல கல்யாண பேச்சு எடுக்கறாங்க போல, நம்ம வீட்லயும் ஒரு வருஷத்துக்கு மேல அந்தப் பேச்சு ஓடுதுன்னு முன்னாடியே அவ கிட்ட நான் கல்யாணம் பத்தி பேசினேன். அவதான் கொஞ்ச நாள் போகட்டும் சொன்னா. இப்போ என்னன்னா, வீட்டோட மாப்பிள்ளை வேணும்னு, அவங்க வீட்ல சொல்றதா சொன்னா. அதுக்கு நான் முடியாது சொன்னதும், அவங்க வீட்ல பார்க்கற பையனை கல்யாணம் பண்ண சரின்னு சொல்லிட்டா. அதான், நான், கோபத்துல என்ன பண்ணனும்னு தெரியாம…” அதற்கு மேல் சொல்ல முடியாமல் நிறுத்தினான் சூர்யா.
அவன் சொன்ன, வீட்டோடு மாப்பிள்ளையில் விழி விரித்த பல்லவி, பல நொடிகள் கடந்தும் தன் இயல்புக்கு திரும்பவேயில்லை.
“சரி. அவங்க வீட்ல சொன்னாங்க. நீ அதைப் பத்தி நம்ம வீட்ல பேசாம, நீ ஏன் அவகிட்ட முடியாதுன்னு சொன்ன?” என்ற தேவாவை விலுக்கென்று அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தாள் பல்லவி.
“என்ன சொல்ற தேவா நீ? அண்ணா கல்யாணம் பண்ணிட்டு அவங்க வீட்டுக்கு போய்ட்டா, அம்மா, அப்பாவை யார் பார்த்துப்பா?”
கலங்கிய குரலில் கேட்டவளின் முகத்தைத் திரும்பிப் பார்த்து,
“ஏன், அவங்களை நான் பார்த்துக்க மாட்டேனா? இல்ல, நீ பார்த்துக்க மாட்டியா? நான் இங்கேயேதானே இருக்கப் போறேன். நீயும் இங்கேயேதான் இருக்கப் போற. அப்புறம் என்ன?” என்ற தேவாவின் வார்த்தைகளில், அவளுக்கு அடுத்து என்ன பேசுவது, அவன் கேள்விக்கு என்ன பதில் கொடுப்பது என்றே மறந்து போனது.
நான்கைந்து முறை கண்ணைச் சிமிட்டியும் கூட அவளால் இயல்புக்கு வரவே இயலவில்லை.
வெகு இயல்பாய் தேவா கேட்டது, என்னவென்று புரிந்தும் புரியாதொரு நிலை அவளுக்கு.
தூவானம் போல் அவள் நெஞ்சில் பூந்தூவலாய் மழையடிக்க ஆரம்பித்தது.
மழை நனைக்கும்…