எட்டே நிமிடத்தில் இரு கோப்பைகளில் இஞ்சி தேநீரை ஊற்றி அவளிடம் நீட்டினான். அதில் ஒன்றை வாங்கிக் கொண்டு போய் ஹாலில் அமர்ந்திருந்த கனிமொழியிடம் கொடுத்து விட்டு வந்தாள்.
அவளதை கையில் எடுத்துக் கொண்டாள். அவரவர் தேநீர் கோப்பையுடன் அடுப்படியை ஓட்டி இருந்த, பின்கட்டுக்குச் செல்லும் படியில் நின்றனர்.
ஒரே இசைக் கருவியைக் கொண்டு உருவாக்கிய இசைக் கோர்ப்பை போல, ஒரே லயத்துடன் பெய்து கொண்டிருந்த மழையை விழியெடுக்காது பார்த்திருந்தாள் பல்லவி.
மழைச் சாரலாய் அவள் மேனியில் சிதறி சிலிர்க்கச் செய்தது. சூடான தேநீர் கோப்பையை இறுக பற்றிக் கொண்டு, லேசாக விழிகளை மட்டும் திருப்பிப் பக்கத்தில் நின்றிருந்த தேவாவைப் பார்த்தாள்.
அவன் கைகளில் இருந்த கோப்பையில் தேநீர் காலியாகி இருக்க, அவனை இப்போது மழை நிறைத்துக் கொண்டிருந்ததை உணர்ந்தவள், சட்டென்று அவன் கைப் பிடித்து இழுத்து, அவர்கள் முன் இருந்த இரு படிகளையும் மின்னல் வேகத்தில் கடந்து, அவனோடு மழையில் இறங்கி இருந்தாள்.
“ஏய், பல்லவி. என்ன பண்ற?” என்று அதிர்ந்து கத்தியவனின் மேல் மழை தன் பல்லவியைத் தாண்டி சரணத்தை எழுதத் தொடங்கியிருந்தது.
என்ன நடந்தது என்று அவன் முழுதாக உணர்வதற்குள்,
“அத்த… தேவா மழையில நனையறான்” என்று கத்திக் கொண்டே, ஈரம் காலை வழுக்க, சமாளித்து வீட்டிற்குள் ஓடி இருந்தாள் பல்லவி.
அவளது செய்கையில் துளிர்த்த அவனது கோபத்தை, மழை தழுவி குளிர்வித்தது. ஒரு நொடி கண் மூடி, முகத்தை வானத்தை நோக்கி உயர்த்தி முகத்தில் விழுந்த மழைத் துளிகளை ரசித்து உள்வாங்கினான்.
பின்னர் மெல்ல படியேறி வீட்டுக்குள் நுழைந்தவனின் நினைவுகள், அவனை அறியாமல் பின்னோக்கிப் போய் நின்றது.
எட்டு வயது பல்லவி மழையில் நனையும் ஆசையில், அதற்கு முந்தைய வருடம்தான் டீன் ஏஜ்ஜிற்குள் அடியெடுத்து வைத்திருந்த பதினான்கு வயது தேவாவை இழுத்து, முழுவதுமாக மழையில் நனைய செய்து விட்டு, அவள் தப்பிக்க இன்று போல, அன்றும் அவனை மாட்டி விட்டது நினைவில் வர, மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டான் தேவா.
“என்ன தேவா? ஏற்கனவே மழையில் நனைஞ்சு சூர்யா காய்ச்சல்ல இருக்கான். நீயும், சின்னப் பிள்ளை மாதிரி… ஏன்டா இப்படி இருக்க?” என்று அலுப்பும், சலிப்புமாகப் புலம்பிய அம்மாவை, ‘நீயும் மாறவே மாட்டியா மா?’ என்பது போலப் பார்த்தான் தேவா.
அன்று போல இன்றும் பல்லவிக்காகப் பேசும் அவர் மேல் அவனுக்குக் கோபமே வரவில்லை.
“இனி நனைய மாட்டேன் மா” என்று தனது அறையை நோக்கி நடந்தான் தேவா.
“எப்பவும் இதையே சொல்லு” என்று முணுமுணுத்தார் அவர்.
தேவாவின் தங்கை வித்யாவின் அறைக்குள் நுழைந்த பல்லவி, அவளது உடைகளில் இருந்து தனக்குப் பொருத்தமான ஒன்றை தேர்ந்தெடுத்து, சுடுநீரில் உடல் கழுவி அதை அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.
இந்நேரம் வித்யா இங்கிருந்தால் அவளுக்கு மழையில் ஆட்டம் போட ஆள் கிடைத்திருக்கும். மழையைக் கண்டால் போதும் வித்யாவிற்குள் இருக்கும் மயில் படக்கென்று தோகை விரித்து விடும். நாட்டிய தாரகை உயிர் பெற்று விடுவாள். மழையில் நனைந்தபடி அவள் ஆடும் பரத நாட்டியத்தைக் காண கண் கோடி வேண்டும் என்பாள் பல்லவி.
சமயங்களில் தேவாவையும் இழுத்து விடுவார்கள். வித்யாவை, மிஞ்சும் நளினம் அவன் நடனத்தில் இருக்கும். ஆனால், என்னவொன்று அத்தனை எளிதில் அவனை ஆட வைத்து விட முடியாது. அவன் விரும்பாமல் சுண்டு விரலை கூட அசைத்திட மாட்டான் தேவா.
நடனம் அவர்களது இரத்தத்தில் கலந்திருந்தது. தேவாவின் அம்மா கனிமொழி முறையாகப் பரதம் பயின்று அரங்கேற்றம் வரை செய்தவர். அதனால் சிறு வயதிலேயே தன் பிள்ளைகள் இருவரையும் நடன வகுப்பிற்கு அனுப்பினார். ஆனால், அவர்கள் அரங்கேற்றம் வரை எல்லாம் செல்லவில்லை. அதில் அவருக்குப் பெரும் வருத்தம் உண்டு.
பல்லவி, வித்யாவிடம்தான் நடனம் கற்றுக் கொண்டாள். வெறுமே கையை, காலை அசைப்பதற்குதான். அவளுக்கு அபிநயமும் வரவில்லை, அடவுகளும் வரவில்லை. அத்தோடு அந்த விஷப் பரீட்சையை நிறுத்திக் கொண்டாள் பல்லவி.
அவளைப் பொறுத்தவரை, வித்யாவுடன் ஃப்ரீ ஸ்டைலாக அவள் ஆடுவதுதான் நடனம்.
இன்றைக்கு மழை இருக்கிறது, ஆனால் வித்யா இங்கில்லையே என்ற வருத்தத்துடன், கண்ணாடிப் பார்த்து தலையைச் சரி செய்தாள் பல்லவி.
காரில் வரும் போதே வீட்டிற்குத் தகவல் சொல்லி இருந்த போதும், மீண்டும் ஒருமுறை அம்மாவிற்கு அழைத்துப் பேசி விட்டு, தேவாவின் அறையை நோக்கி நடந்தாள்.
அவனும் உடை மாற்றி இருந்தான். அவனது படுக்கையில் அவளது அண்ணன் சூர்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவனது பக்கத்தில் சாய்ந்து அமர்ந்து, லேப்டாப்பில் ஏதோ வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.
‘நாம் எவ்வளவு வளர்ந்தாலும், எத்தனை வருடங்கள் ஆனாலும், வயது கூடிக் கொண்டே போனாலும் கூட, சிலரிடம் மட்டும் ஏன் நம் இயல்பு மாறுவதே இல்லை?’ என்ற கேள்வி மனதில் ஓட தேவாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் பல்லவி.
‘தேவாவிடம் மட்டும், நான் ஏன் இன்னமும் இப்படி நடந்து கொள்கிறேன்?’ அவளுக்கு எப்போதும் விடை கண்டுபிடிக்க முடியா கேள்விதான் அது.
அவள் அங்கு நிற்பதை உணர்ந்து, “என்ன பல்லவி? ஏன் நின்னுட்டே இருக்க? உட்காரு” என்ற தேவா, பார்வையை லேப்டாப்பில் இருந்து அகற்றவேயில்லை.
“பத்து நிமிஷம். ஒரு முக்கியமான மெயில் அனுப்பிட்டு இருக்கேன். வந்துடுறேன்” என்றான்.
“ம்ம், ஓகே” என்று விட்டு அங்கிருந்த ஒற்றைச் சோஃபாவில் அமர்ந்த பல்லவி,
“அண்ணா, யாரை விரும்பறான் தேவா?” என்று மெதுவாக விசாரிக்க,
சிரித்துக் கொண்டே, “ஏன் உனக்குக் கால் பண்ணி கூப்பிட்ட உங்க அண்ணி, உன்கிட்ட எதுவும் சொல்லலையா?” என்று கேட்க, அதிர்ந்து விழித்தாள் பல்லவி.
“யாரு, யாரை சொல்ற தேவா? பார்க்கில் அண்ணனுக்குத் துணையா நின்ன பொண்ணா? அவங்களா? என் பேர் கூடத் தெரியாத மாதிரி, என்னை யாருன்னு தெரியாத மாதிரி காட்டிக்கிட்டாங்க தெரியுமா? ஹெல்ப் பண்ண கூட ரெடியா இல்ல. அண்ணனை குடிகாரன் சொன்னாங்க. வெட்டிபய சொன்னாங்க” என்று அவள் அதிர்ச்சியும், கோபமுமாக அடுக்கிக் கொண்டே போக,
“உங்க அண்ணனையே வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாங்க. அப்புறம் உன்னை மட்டும் எதுக்குத் தெரிந்த மாதிரி காட்டிக்கணும்னு அப்படி நடந்துட்டு இருப்பாங்களா இருக்கும்” என்று அவளிடம் சொல்லிக் கொண்டே, லேப்டாப்பில் டைப் செய்வதைத் தொடர்ந்தான் தேவா.
அவன் வேலையை முடிக்கும் வரை மௌனமாய் அமர்ந்திருந்தாள் பல்லவி.
“சூர்யாக்குக் குடிக்கக் கஞ்சி வைக்கவா பல்லவி? காய்ச்சல் இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் கனிமொழி.
“நான் வந்து வைக்கறேன் அத்த, நீங்க உட்காருங்க. அண்ணா நல்லா தூங்கறான்” என்று எழுந்து அவருடன் நடந்தாள் பல்லவி.
அவருடன் இணைந்து இரவு உணவை தயாரிக்க உதவியவள், கூடவே அண்ணனுக்குச் சூடாகப் பால் கஞ்சியும் வைத்து முடித்திருந்தாள்.
மணி இரவு எட்டை கடந்திருக்க, மழை தன் ஆக்ரோஷத்தை கொஞ்சமே கொஞ்சம் குறைத்திருந்தது.
மூன்று கோப்பைகளில் காய்கறி சூப்புடன் தேவாவின் அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தவள், அவன் வெளியில் இருந்து அப்போதுதான் வீட்டிற்குள் வருவதைப் புருவம் சுருக்கிப் பார்த்தாள்.
“டிடி இன்ஜெக்சன் வாங்க போனேன். சூர்யாக்குக் கை, கால், நெத்தின்னு அங்கங்க லேசா அடி பட்டிருக்கு. அப்படியே உங்க வீட்லயும் மாமா, அத்தை கிட்ட அவனுக்குக் காய்ச்சல்னு சொல்லிட்டு வந்தேன்” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னவன்,
குரலை உயர்த்தி, “மா, இந்தாங்க. நீங்க கேட்ட ப்ரெட்” என்று ஹாலில் இருந்த உணவு மேஜையில் வைத்து விட்டு, அவள் கைகளில் இருந்த கோப்பைகள் நிறைந்த ட்ரேயை வாங்கிக் கொண்டு முன்னே நடந்தான்.
இருவரும் கதவை திறந்து அவனது அறைக்குள் நுழைய, அங்கே தலையைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்திருந்தான் சூர்யா.