மழையோடு ஒரு நாள் – 2 (1)

மெல்ல சோம்பலாய் தொடங்கிய மழை சற்று நேரத்தில் எல்லாம், ஸ்ருதியும், லயமும் சேர்ந்தது போல இடியுடன் கூடிய கனமழையாக மாறி கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.

இரவு அப்போதுதான் மெல்ல கவிழத் தொடங்கியிருந்தது. ஆனால், மழை அப்பொழுதை நள்ளிரவு போல மாற்றியிருந்தது.

செல்லும் வழியை மறைத்துக் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த மழையுடன் போராடி வண்டியை கவனமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் தேவா. மழையில் நனைய முடியா ஏக்கத்துடன் ஜன்னல் வழியே மழை நனைத்த ஊரை ரசித்துக் கொண்டிருந்தாள் பல்லவி. காரில் ஏசியைப் போடாமலேயே குளுமையை உணர முடிந்தது அவளால்.

அலைபேசியை எடுத்து அம்மாவிற்கு அழைத்தாள். மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டு, அவள் “அம்மா” என்ற நொடி, அவள் கையோடு சேர்த்து அலைபேசியைத் தன் காதிற்குக் கொடுத்த தேவா, கழுத்தில் அவள் கையை அலைபேசியோடு சேர்த்து இறுக்கியபடி, ஒற்றைக் கையால் காரை செலுத்திக் கொண்டே பேசத் தொடங்கியிருந்தான்.

“அத்த, வேலையா இருக்கீங்களா?” என்று அவன் பல்லவியின் அம்மா கஸ்தூரியிடம் கேட்க, அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை.

“சரிங்க அத்த. பல்லவியும், சூர்யாவும் என் கூடதான் இருக்காங்க. நம்ம வீட்டுக்குதான் போறோம். மழை விட்டதும் அங்க வர்றோம் அத்த” என்று அவன் சொல்ல, “சரி தேவா. இதைச் சொல்லவா கூப்பிட்ட?” என்ற அவரின் குரல் பல்லவிக்கும் கேட்டது. பின்னே ஒரே தெருவில் இருக்கும் வீட்டிற்குச் செல்ல எதற்குத் தகவல் என்று நினைத்தாரோ என்னவோ.

அலைபேசியை முழுப் பலத்துடன் அவனிடம் இருந்து பிடுங்கி, “அம்மா” என்றாள் பல்லவி.

“அங்க ரொம்ப நேரம் அத்தை கிட்ட வாய் அடிக்காம வீட்டுக்கு வந்து சேரு பல்லவி” என்று அவர் சொல்ல, “சரிம்மா” என்றாள் சமர்த்தாக,

“சரி, நைட்டுக்கு சாப்பிட என்னடா செய்யட்டும் பல்லவி? மழைக்கு ஸ்பெஷலா ஏதாவது கேட்பியே” என்று அவர் மகளை அறிந்தவராகக் கேட்க,

“மா, என்ன கேள்வி இது? அத்த சாப்பிடாம எங்களை அனுப்ப மாட்டாங்க. நீங்க உங்களுக்கும், அப்பாக்கும் ஏதாவது செஞ்சுக்கோங்க. வெளில வராதீங்க மா. நல்ல மழையா இருக்கு. அப்பா வந்ததும் கால் பண்ணுங்க மா. நான் சீக்கிரம் வந்திடுவேன். இப்போ போனை வைக்கறேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

கார் அவர்களது தெருவை நெருங்கியிருந்தது. முழுதாக வேகத்தைக் குறைத்து நேராகக் காரை அவன் வீட்டின் பார்க்கிங்கில் போய் நிறுத்தினான் தேவா.

பல்லவி திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்க்க, புருவம் உயர்த்தி, “என்ன?” என்றான் கண்களால். பட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டாள் பல்லவி.

“மழையில ஆட்டம் போடுற ஐடியா இருந்தா, அப்படியே மறந்திடு பல்லவி. ஒழுங்கா இந்த ரெயின் கோட்டை போட்டுட்டு, நனையாம வீட்டுக்குள்ள போ” என்று எச்சரித்தவனை, கண்ணைச் சுருக்கி பார்வையாலேயே எரித்தாள் பல்லவி. எட்டிப் பின்னிருந்து எடுத்து அவன் நீட்டிய ரெயின் கோட்டையும் வெடுக்கென்று வாங்கிக் கொண்டாள்.

“இந்தா சாவி, சத்தம் இல்லாம திற. அப்படியே வீட்டுக்குள்ள போய் உங்க அத்தை கிட்ட பேச்சு கொடு. நான் இந்தத் தடியனை….” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் முறைக்க,

“சரி, சரி. உங்க அண்ணனை, உள்ள தூக்கிட்டு வரேன்.” என்று முடித்தான்.

சாவியை மட்டும் கைகளில் வாங்கிக் கொண்டு, பதில் ஒன்றும் சொல்லாமல் கீழே இறங்கி, கவனமாக மழையில் நனையாமல் வீட்டிற்குள் நுழைந்தாள் பல்லவி. நேராக அடுப்படிக்கு சென்று தேவாவின் அம்மா கனிமொழியின் பின்னே போய் நின்று, “அத்த…” என்று கிசுகிசுப்பான குரலில் அழைத்தாள் பல்லவி.

அதில் பதறி திரும்பியவர், கையில் இருந்த கரண்டியை தவற விட்டிருந்தார். “பல்லவி, நீதான்னு எனக்குத் தெரியும். எத்தனை முறை உன்னை, இப்படிப் பண்ணாதன்னு சொல்லியிருக்கேன். தேவா பார்த்தா திட்டப் போறான்” என்று அவர் சொல்ல,

“இல்லைனாலும், தேவா என்னைத் திட்டவே மாட்டான் பாருங்க. போங்கத்த…” என்று சலித்துக் கொண்டவள், “பசிக்குது. சாப்பிட ஏதாவது குடுங்க அத்த” என்று கேட்க,

“மதிய வச்ச சோறு இருக்கு, பயறு குழம்பு இருக்கு. சூடு பண்ணவா? தொட்டுக்க ஆம்லெட் போட்டுத் தரேன். சாப்பிடுறியா? இல்ல, சூடா பொடி தோசை ஊத்தித் தரவா?” என்று அவர் வரிசையாக அடுக்க, மறுப்பாகத் தலையை அசைத்தாள் பல்லவி.

மழைக்கு இதமாகச் சூடான டீயும், கூடவே காரமாக, மொறுமொறுப்பாக நொறுக்குத் தீனியும் கேட்டது அவளது நாக்கு.

“வெங்காயப் பக்கோடா போட்டுத் தாங்க அத்த. மழைக்கு நல்லா இருக்கும். வெங்காயம் நீங்க சொல்ற மாதிரி நான் வெட்டித் தரேன்” என்றவளின் தலையைக் கலைத்து விட்டவர், கூடையில் இருந்து நான்கைந்து வெங்காயங்களை எடுத்து அவளிடம் நீட்டினார்.

சமையல் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டு, தனக்கு வாகாகக் கட்டிங் ஃபோர்ட், கத்தியை வைத்து, வெங்காயத்தை நீளவாக்கில் வெட்ட ஆரம்பித்தாள் பல்லவி.

அடுத்தப் பதினைந்தாம் நிமிடம், மழை கிளப்பி விட்ட மண் வாசத்தையும் மீறி வீட்டை நிறைத்தது வெங்காயப் பக்கோடாவின் வாசம்.

தன் முன் ஆவி பறக்க நீட்டப்பட்ட பக்கோடாவை, ஒவ்வொன்றாக ஊதி, ஊதி வாயில் இட்டுக் கொண்டிருந்தாள் பல்லவி.

“நல்லா இருக்குத்தே. இந்தாங்க, நீங்களும் சாப்பிடுங்க” என்று அவருக்கும் ஒன்றை ஊட்டி விட்டாள். சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டார் கனிமொழி. அவர் பெற்ற பிள்ளைகள் கூட இதெல்லாம் அவருக்குச் செய்தது கிடையாது, செய்வதும் கிடையாது. பல்லவி மட்டுமே இத்தனை பிரியமாக இருப்பாள் அவரிடம்.

அவரின் மகள் வித்யா கூட அவர் கையில் ஊட்டிக் கொள்வாளே தவிர, அம்மாவிற்கு ஊட்டி விட்டது எல்லாம் கிடையாது.

பல்லவி அவருக்கு என்றுமே தனிதான், அவள் மேல் அவருக்கும் தனிப் பிரியம்தான்.

ஆறு மாத குழந்தையாக, முதன்முறையாக அந்த வீட்டில் அடியெடுத்து வைத்த பல்லவி, அதன் பின் அவ்வீட்டில் முக்கியமானவளாகி இருந்தாள்.

வித்யா, தேவா பள்ளிக்குச் செல்ல, கதிர்வேலன் காலையில் டிராவல்ஸ் ஆஃபீஸ் சென்றால், நான்கு பேருந்துகளும் கிளம்பிய பின்தான் வீடு வருவார். அதற்குப் பதினொன்று, பனிரெண்டு மணியாகி விடும். பண்டிகை நேரங்களில் இன்னுமே தாமதமாகி விடும்.

நாள் முழுவதும் தனிமையில் தவித்து இருந்த கனிமொழிக்குத் துணையாக வந்தவள்தான் பல்லவி.

பல்லவியின் அம்மா கஸ்தூரி அவளுக்கு ஆறு மாதம் ஆகையில் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் அமர வேண்டிய சூழலில், மகன், மகள், கணவர் மூவரையும் முறையே பள்ளிக்கும், வேலைக்கும் அனுப்பி விட்டு, ஒரு கையில் கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு, மறுகையில் குடை, லஞ்ச் பேக், கைப்பை என்று சமாளிக்க முடியாமல் நடக்க, சரியாகத் தேவா வீட்டை கடக்கையில் ஈரத் தரை வழுக்கி அவர் தடுமாற, அச்சமயம் ஓடிப் போய் உதவினார் கனிமொழி.

முதலில் சில நாள்கள் மட்டும் குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன், அதற்குள் குழந்தையைப் பார்க்க வேறு ஆள் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார் கனிமொழி. ஆனால், பின்னாளில் அதற்கு அவர் அனுமதிக்கவே இல்லை. கஸ்தூரியும் வேறு வழியின்றி ஒத்துக் கொள்ளதான் வேண்டியிருந்தது.

முதலில் மகள் குறித்துப் பயந்த கஸ்தூரி பின்னர் மகள் அங்கே ஓட்டிக் கொண்டதைப் பார்த்து சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டார்.

தன் பிள்ளைகளை விட அதிகச் செல்லம் கொடுத்து, அதிகக் கவனம் செலுத்தி அவளை வளர்த்தார் கனிமொழி. இத்தனைக்கும் காலை எட்டில் இருந்து மாலை ஆறு மணி வரைதான் அங்கே இருப்பாள். ஆனால், நாள் முழுக்கப் பார்க்கும் முகமான கனிமொழியிடம் தானாக ஒரு பிணைப்பு வந்திருந்தது அவளுக்கு.

“சூடா இஞ்சி டீ இருந்தா நல்லா இருக்கும் இல்லத்த. ஆனா, தேவா போட்டு தரணுமே..” என்று அவள் புலம்பிய நொடி தேவாவே அங்கு வந்து நின்றான். கனிமொழி அவளைப் பார்த்து புன்னகைத்து தலை அசைத்தார்.

வீட்டில் அணியும் லகுவான உடைக்கு மாறி இருந்தான் தேவா. சரியாகத் துடைக்கப் படாத தலைமுடி ஈரத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது.

அவன் எப்படி நனைந்திருப்பான் என்பது அப்போதுதான் அவளுக்கு உரைக்க, அண்ணனை மறந்ததற்காகத் தன்னையே நொந்து கொண்டாள் பல்லவி.

“தள்ளுங்க மா, நான் டீ போடுறேன். நீங்க ஹால்ல போய் உட்காருங்க” என்று அவன் கனிமொழியிடம் சொல்ல,

“இதோ டா, ஒரு நிமிஷம்” என்று எண்ணெய் சட்டி இருந்த அடுப்பை அணைத்து, அதைக் கீழிறக்கி வைத்து விட்டு, மகனை நோக்கித் திரும்பினார்.

“சூர்யாக்குக் கொஞ்சம் உடம்பு முடியல மா. லேசா ஃபீவர் போல இருக்கு. என் ரூம்ல தூங்கறான். இப்ப போய்ப் பார்க்க வேண்டாம் நீங்க, அவன் எழுந்ததும் பேசுங்க மா” என்று சொல்ல,

“அச்சோ. நேத்து மழையில நனைஞ்சு இருப்பானா இருக்கும். அவனுக்குத்தான் மழை சேராதே” என்று அங்கலாய்த்தவர், “இந்தக் குட்டி, வந்ததும் சொன்னாளா பாரு” என்று அவர் திரும்பி பல்லவியைப் பார்க்க,

“சும்மா, லேசான காய்ச்சல்தான் அத்த. அதான் உங்களைப் பயமுறுத்த வேணாம்னு நான் சொல்லலை” என்று அவள் சமாளிக்க,

“சரி, சரி. அவன் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று விட்டு, ஹாலை நோக்கி நகர்ந்தார் கனிமொழி.

“அத்த…” என்று பக்கோடா தட்டுடன் அவரைப் பின் தொடரப் போன பல்லவியைப் பட்டென்று கைப் பிடித்து நிறுத்தினான் தேவா.

“அண்ணன் மேல எவ்வளவு பாசம் உனக்கு” என்றான் போலி ஆச்சரியத்துடன், அவளையும் தட்டையும் மாறி, மாறிப் பார்த்து.

“அதான், அண்ணா கூடவே நீ இருக்க இல்ல தேவா? நீ இருக்கும் போது நான் ஏன் அவனைப் பத்தி கவலைப்படணும்?” என்ற அவளின் வார்த்தைகளில் பளிச்சென்று புன்னகைத்தவன், அதைப் பட்டென்று அவளிடம் இருந்து மறைக்கவும் செய்தான். அடுப்பில் இருந்த தேநீரில் கவனம் போலக் காட்டிக் கொண்டான்.

Scroll to Top