மழையோடு ஒரு நாள் – 1 (2)

பல்லவி பார்வையைத் தழைத்து, தன் அண்ணனின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து, அவன் தோள்களைப் பற்றி அவனைத் தூக்கி அமரச் செய்ய முயன்றாள்.

“என்ன பண்ற? நீ தனியா அவனைத் தூக்கிடுவியா பல்லவி? பெரிய பயில்வான். தள்ளு..” என்று அவளை, அவனது இடக்கையால் விலக்கி விட்டு, சூர்யாவை நெருங்கினான் தேவா.

“சூர்யா… சூர்யா… டேய்…” ஏதோ கெட்ட வார்த்தை சொல்லி திட்டப் போனவன் பல்லவியின் முகம் பார்த்து அடக்கிக் கொண்டான்.

“என்ன கையைக் கட்டிட்டு பார்த்திட்டு இருக்க? வந்து ஒரு கைப் பிடி. பொணம் கனம் கனக்கிறான், தடிமாடு” அந்தச் சூழலிலும் அண்ணனை திட்டியதற்காக அவனை முறைக்கவே செய்தாள் பல்லவி.

“எம்மா பாசமலர். இதென்ன சினிமாவா? நான் உன் அண்ணனை ஒரே கைல தூக்கி தோள்ல போட்டுட்டு நடக்க? வேடிக்கைப் பார்த்திட்டு இருக்க? என்னால முடியல. பார்த்தா தெரியல உனக்கு? வா, வந்து அவன் காலைப் பிடிச்சு தூக்கு” அவனது அதட்டலில் அது வரை இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென்று கலைந்து அண்ணனின் மறுகையைப் பற்றினாள்.

ஐந்து நிமிட முயற்சிக்குப் பின், ஆளுக்கொரு பக்கமாக அவளின் அண்ணனை பிடித்தபடி தேவாவின் காரை நோக்கி நடந்தனர்.

“சூர்யா ண்ணா, குடிப்பானா தேவா?” என்று அவள் கவலையுடன் கேட்க,

“பல்லவி…” என்றான் அழுத்தமாகத் தேவா, ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்து. பட்டென்று வாயை மூடிக் கொண்டாள் பல்லவி. அவளுக்குத் தெரிந்து கடுங்கோபத்தில் இருந்தால் மட்டும்தான் இப்படி அவள் பெயரை உச்சரிப்பான் தேவா.

அவனுக்கும் இது, அதாவது, இப்படிச் சூர்யாவை பார்ப்பது பெரும் அதிர்ச்சிதான் என்பது, அவனது கோபத்தில் அவளுக்கு நன்றாகப் புரிந்தது.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அவனோடு இணைந்து சூர்யாவை காரில் பின் புறத்தில் ஏற்றிப் படுக்க வைக்க உதவினாள். அண்ணன் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்து அமரப் போனவளை, “முன்னாடி வந்து உட்காரு பல்லவி” என்ற தேவாவின் குரல் கலைக்க, அண்ணனையே பாவமாகப் பார்த்து நின்றாள் அவள்.

“சார், நல்லா தூங்கிட்டுதான் இருக்கார். நீ எழுந்து வா” அதட்டினான்.

“அண்ணா தூங்குறான்னு ‍எப்படித் தெரியும்? அவனுக்கு அடிபட்டு இருக்கும் போலத் தேவா? ரத்தம் எல்லாம்…” மீண்டும் அவன் முறைப்பில் வாய் தானாக மூடியது.

மெல்ல இறங்கி முன் பக்க இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

காரை இயக்கி மெல்ல நகர்த்தினான் தேவா.

“தேவா…” தயக்கத்துடன் அழைத்தாள்.

“என்ன?” என்றான். இன்னும் கோபமாகதான் இருக்கிறானா என்று ஆராய்ச்சியாக அவன் முகத்தைப் பார்த்தாள் பல்லவி. அந்தப் பார்வை அவனை இளக்க, “என்ன?” என்றான் லேசாகப் புன்னகைத்து.

“என் ஸ்கூட்டி அங்க நிக்குது, அப்புறம் அண்ணா பைக் எங்கன்னு பார்… பார்க்க…?”

“எங்கன்னு இப்போ போய்த் தேடப் போறியா?” மீண்டும் கோபம் எட்டிப் பார்த்தது அவன் குரலில்,

“இல்ல தேவா..”

“உன் ஓட்ட வண்டியை எவனும் தொட மாட்டான். நாளைக்கு நானும், இந்தத் தடியனும் வந்து எடுத்துட்டு வர்றோம். இப்ப நீ பேசாம வா” என்று அதட்டினான்.

அவளுக்கு அதுவரை இருந்த கவலைகள் மறந்து அண்ணனின் மேல் அடங்கா கோபம் வந்தது.

அவனால்தானே இப்போது அவள் இந்தத் தேவாவிடம் பேச்சு வாங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அவனிடம் திட்டுதான் வாங்கிக் கொண்டிருக்கிறாள். எப்போது பார்த்தாலும் எள்ளும், கொள்ளுமாகதான் வெடிப்பான்.

இதோ, இன்றைக்கு அவளது அண்ணனால் அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறாள்.

அவன் சீரான வேகத்தில் வண்டியை செலுத்த, மெல்ல திரும்பி தன் அண்ணனை பார்த்தாள் பல்லவி. மயக்கமா, உறக்கமா என்று அவளால் கண்டு கொள்ள இயலவில்லை.

ஆனால், சீராக ஏறி இறங்கிய அவனது மூச்சை காண்கையில் மனம் சற்றே அமைதியடைந்தது.

மெல்ல முன் பக்கம் திரும்பி தேவாவைப் பார்த்தாள். அவளது பார்வையை உணர்ந்தவனாக, “என்ன?” என்றான்.

முகத்தை லேசாகத் திருப்பி அவளைப் பார்த்து விட்டு, மீண்டும் சாலையில் பார்வையைப் பதித்தான் தேவா.

“அண்ணா, குடிப்பானா தேவா?” கலங்கிய குரலில் கேட்டாள்.

“இல்ல. எனக்குத் தெரிஞ்சு குடிக்க மாட்டான்.” என்றான் நிச்சயமாக,

“அப்போ.. இப்ப எப்படி? இப்போ மட்டும் எப்படி?” என்று அவள் கேட்க,

“என்னைக் கேட்டா? எனக்கு எப்படித் தெரியும்?” குரலை உயர்த்தினான்.

“நீங்க ரெண்டு பேரும்தானே ஒன்னாவே இருப்பீங்க? நீதானே என் அண்ணாக்கு க்ளோஸ்?”

“அதனால?, என்ன சொல்ல வர்ற நீ? நான் அவனுக்கு ஊத்தி கொடுப்பேன்னா?” அவனது கோப வார்த்தைகளில் மிரண்டவள்,

“என்ன? அப்போ நீயும் குடிப்பியா தேவா?” என்று அப்பாவியாக, அதிர்ச்சியில் விழிகள் விரிய அவள் கேட்க, பட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன்.

மிகத் தீவிரமாகதான் கேட்கிறாள், விளையாடவில்லை என்பதை உணர்ந்து, சன்னச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான் தேவா.

“நான் குடிக்க மாட்டேன் பல்லவி. சூர்யாவும் குடிக்க மாட்டான். இதுவரை பேருக்கு கூடச் சரக்கை தொட்டுப் பார்த்தது இல்ல நாங்க ரெண்டு பேரும். அதான் ஃபர்ஸ்ட் டைம் குடிக்கவும், இப்படி மட்டையாகிட்டான் போல…” கண்களைச் சுழற்றி, சூர்யாவை பார்த்து, சிரித்துக் கொண்டே சொன்னான் அவன், பதிலுக்கு அவனைப் பலமாக முறைத்தாள் பல்லவி.

“ஏய், என்னை ஏன் முறைக்கற?”

“அண்ணா, ஏன் குடிச்சான்?”

“வேற எதுக்குக் குடிப்பாங்க. இந்தக் காதல் தோல்வியைத் தவிர… வேற என்ன காரணம் இருக்கப் போகுது இந்த வெட்டிப் பயலுகளுக்கு…”

“என்ன? அண்ணனுக்கு லவ் ஃபெயிலியரா?” அதிர்ந்து போய்ச் சத்தமாகக் கேட்டாள் அவள்.

“ஏன் உனக்குத் தெரியாதா?” என்றான் புருவம் உயர்த்திக் கேள்வியாக,

“ம்ஹூம் தெரியாதே” என்றவள், “உங்க லவ்… நீங்க எந்தப் பொண்ணைச் சைட் அடிக்கறீங்க, யாரைப் பார்க்கறீங்க, யாரை லவ் பண்றீங்க, இதெல்லாம் எங்ககிட்ட சொல்லிட்டா பண்றீங்க? எங்களுக்குத் தெரிய.. ஹ்ம்ம்” கோபமாகச் சலித்துக் கொண்டாள் பல்லவி.

“சரி, அப்படியே உன்கிட்ட சொன்னா என்ன பண்ணுவ? சேர்த்து வைப்பியா பல்லவி? என் காதலுக்கு ஹெல்ப் பண்ணுவியா?” மலர்ந்த முகத்துடன் ஆவலாகக் கேட்டான் தேவா.

சட்டென்று அதில் வெந்நீரை ஊற்றினாள் பல்லவி.

“நினைப்புதான். எதையாவது சொல்லி பிரிச்சு வேணா விடுவேன். உன் காதலுக்கு எல்லாம், என்னால அவ்ளோ ஹெல்ப்தான் பண்ண முடியும் தேவா” என்றாள் அவன் கண்களைப் பார்த்து, அதைக் கேட்டதும் அடக்க முடியாது சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான் அவன்.

சிரிப்பின் ஊடே, “ரொம்பச் சந்தோசம் பல்லவி” என்றான்.

அவனை விநோதமாகப் பார்த்தாள் பல்லவி.

‘இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படிச் சிரிக்கறான்?’ மெல்ல முணுமுணுத்தாள் அவள்.

அவளுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து அவளுக்கு வந்த அனைத்து காதல் கோரிக்கைகளையும் நிராகரிக்கக் காரணமாக இருந்தவன் இந்தத் தேவாதான்.

நிராகரிக்க எங்கே அவளுக்கு வாய்ப்புக் கிடைத்தது? முதலில் நெருங்கி வந்து கடிதத்தைக் கொடுக்க வேண்டுமே? காதலை சொல்ல வேண்டுமே? அதற்கெல்லாம் வாய்ப்புக் கொடுக்காமல், அவள் அருகில் யாரையும் நெருங்க விடாமல், ஒற்றைப் பார்வையிலேயே துரத்தி விடுவான் இந்தத் தேவா.

தேவராஜன், அவளின் அண்ணன் சூர்யாவின் உயிர் நண்பன்.

அவர்கள் வசிக்கும் அதே தெருவில், எதிர்வரிசையில் அவர்கள் வீட்டில் இருந்து நான்கு வீடு தள்ளி இருக்கிறது தேவாவின் வீடு. தேவாவின் அப்பாவிற்கு டிரான்ஸ்போர்ட் பிசினஸ். தேவா டிராவல்ஸ் உரிமையாளர் கதிர்வேலன் அவன் அப்பா.

பல்லவியைப் பொறுத்தவரை, “சுந்தரா டிராவல்ஸ்”. தேவாவுக்காக மட்டுமே அந்தப் பெயர். மற்றப்படி கதிர்வேலன் மீது மிகுந்த மரியாதையும், பாசமும் அவளுக்கு உண்டு.

சென்னை டூ சிவகாசி தினமும் நான்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவாவின் அம்மா கனிமொழி இல்லத்தரசி. அவர்களுக்குத் தேவாவை அடுத்து, ஒரு மகள். வித்யா.

பல்லவியின் அப்பா சேதுராமன் சில தனியார் நிறுவனங்களுக்கு ஆடிட்டராக இருக்கிறார். அவள் அம்மா கஸ்தூரி வங்கி அதிகாரி. சில வருடங்கள் முன்பு விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு, தற்போது வீட்டில் ஓய்வெடுக்கிறார். பல்லவியிடம் அம்மா குறித்துக் கேட்டால் அப்படித்தான் சொல்வாள். அவளுக்கு அம்மா விருப்ப ஓய்வு பெற்றதில் அத்தனை விருப்பமில்லை. அம்மாவை கம்பீரமாக வங்கி அதிகாரியாகப் பார்ப்பதில் அவளுக்கு அலாதி பிரியம்.

பல்லவிக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. அண்ணன் சூர்யநாராயணன். அவனுக்கும் அவளுக்கும் ஆறு ஆண்டுகள் வயது வித்தியாசம்.

அக்கா சங்கவி, அவளை விட ஐந்து வயது மூத்தவள். இரண்டு சகோதரிகளும் ஒன்றாக வீட்டில் இருந்தால் சத்தத்திற்குப் பஞ்சம் இருக்காது. அவர்களுக்குள் எப்போதும் வாய்க்கா தகராறுதான். ஆனால், அண்ணன் மேல் பல்லவிக்கு நிறையப் பாசம். சூர்யாவும் அப்படியே. பாசக்கார அண்ணன்.

பெற்றோர் எதிர்பாரா நேரத்தில் வந்து உதித்த மலர் அவள். அவர்கள் வீட்டின் கடைக்குட்டி, பல்லவி.

சிறு வயதில் இருந்தே சூர்யாவும், தேவாவும் ஒன்றாக ஒட்டிக் கொண்டு திரிந்தார்கள் என்றால், வித்யாவும், பல்லவியின் அக்கா சங்கவியும் உயிர் தோழிகளாக மாறுவார்கள் என்ற பெற்றோரின் ஆசையை மண்ணாக்கி விட்டு வெகு இயல்பாகப் பழகினார்கள் அவர்கள் இருவரும்.

வெப்பச்சலன மேகங்கள் முழுவதுமாக உருமாறி, நிறம் மாறி, மழைதனை பூந்தூறலாய் தூவ ஆரம்பித்தது. சட்டென்று நொடியும் யோசியாது கையை வெளியில் நீட்டி, மழைத் துளியினைக் கையில் ஏந்தி, அதன் குளிர்ச்சியைக் கண் மூடி ஸ்பரிசித்தாள் பல்லவி. அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது.

“ப்ச்” என்ற தேவா காரின் கண்ணாடியை எச்சரிக்காமலேயே உயர்த்த, “ஆஆஆ, அம்மா… தேவா…” என்ற சிறு கூச்சலுடன், கையை வேகமாக உள்ளிழுத்துக் கொண்டாள் பல்லவி. பல்லை கடித்துக் கொண்டு அவனைத் திரும்பி முறைத்தாள் அவள்.

அவள் தன்னை முறைப்பதைக் கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தான் தேவா. உதடு வரை வந்து விட்ட சிரிப்பை, மீசையுடன் மேலுதட்டை கடித்து அடக்குவதுதான் அவனுக்குப் பெரும்பாடாக இருந்தது.

மெலிதாக விசிலடித்தபடி ஸ்டியரிங் வீலில் ரசனையுடன் தாளமிட்டான் அவன். இம்முறை வெப்பச்சலனம் சூடாகக் காருக்குள்ளேயே அடித்தது.

மௌனமாய்ச் சில நிமிடங்கள் கரைய, பின் தேவாவே பேச்சை ஆரம்பிக்க நினைத்தான்.

“முதல்ல எங்க போலாம் சொல்லு பல்லவி?”

“யார் வீட்டுக்குப் போறது, தேவா?”

அவளும் அவனைப் போலேவே, அவன் ஆரம்பித்த கணத்தில் கேட்டாள்.

சட்டென்று இருவருக்கும் பொதுவில் வந்து அமர்ந்தது சத்தமான சிரிப்பு.

“வீட்ல அம்மா இருப்பாங்க. அண்ணாவை இப்படிப் பார்த்தா…” என்று அவள் இழுக்க, “நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று முடித்தான் தேவா.

அவர்களுக்கு முன்னமே சென்று வரவேற்பாகக் காத்திருந்தது இடியுடன் கூடிய பெருமழை.

மழை நனைக்கும்…

Scroll to Top