அவள் மனம் ரணமாகி இருந்ததை வசுமதியால் புரிந்து கொள்ள முடிந்தது. நர்மதாவை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் வசுமதி. உதட்டில் இருந்து உதிரத் துடித்த வார்த்தைகள் அனைத்துமே அக்கணம் அர்த்தமற்றதாய்ப் பட்டது அவளுக்கு, அதனால் மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டாள் வசுமதி. சிறிது நேரம் மூவரும் ஒன்றுமே பேசவில்லை. காற்று மட்டுமே அவர்களின் மௌனத்தைக் கலைக்க முயன்று கொண்டிருந்தது.
“உங்களுக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும் அண்ணி, இன்னைக்கு மழை வந்தது போல நாளைக்கு வெயிலும் வரத் தான் செய்யும். நாம அது வரைக்கும் காத்திருக்கனும். அவ்வளவு தான்” என்றாள் வசுமதி ஆறுதலாக, அதில் நர்மதாவின் முகம் சற்றே தெளிந்தது.
“கல்யாணம் ஆனதும் வசு குட்டி, எவ்வளவு அழகா, தெளிவா பேசுது பாரு” புருவம் உயர்த்திக் குறும்பாகச் சொன்னாள் நர்மதா.
“உண்மை தான் அண்ணி, கல்யாணம் சில விஷயங்களை மனம் திறந்து பேச, பல விஷயங்களில் கருத்து சொல்ல நமக்கு வாய்ப்புக் கொடுக்கத் தான் செய்யுது” என்றாள் வசுமதி கண்ணடித்து, கிளுக்கி சிரித்தனர் மற்ற இருவரும்.
“சரி, இப்போ சொல்லுங்க அண்ணி. எப்போ ஊருக்கு வர்றீங்க? நரேன் அண்ணா பாவம்” என்றாள் வசுமதி.
“ம்ம்ம் வரணும் வசு மா, ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒரு தெளிவான முடிவுக்கு வரணும்.” என்று கண்களை மூடியபடி சொன்னவள்,
“நரேன் இனி எந்த ட்ரீட்மெண்ட்டும் வேணாம்னு சொல்லிட்டார். இதுக்கு மேல உன் உடம்பை புண்ணாக்கிக்க நான் அனுமதிக்க மாட்டேன்னு சொல்லிட்டார். மாத்திரை, மருந்து, இன்ஜெக்சன்ஸ், ஃப்ளட் டெஸ்ட்ஸ், ஸ்கேன்ஸ்… அவர் சொல்றதும் சரி தான் இல்ல? எத்தனையைத் தான் பார்க்கறது. என் உடம்பு எவ்வளவு தான் தாங்கும்? ரொம்ப வலிக்குது டா வசு.”
நர்மதாவின் வார்த்தைகளில் வசுமதியின் கண்கள் மளுக்கென்று குளம் கட்டியது. அண்ணாந்து வானத்தைப் பார்த்து, கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள். ஆனால், லாவண்யா அப்படி எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. அவள் கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென வழிந்து, கன்னம் நனைத்துக் கொண்டிருந்தது.
இத்தனைக்கு நடுவிலும் நர்மதா தன்னிடம் எதையோ சொல்லாமல் மறைப்பதாக வசுமதிக்குப் பட்டது. ஆனால் இவ்வளவு வெளிப்படையாக அவள் இதற்கு முன்பு, மனம் திறந்து பேசியது கிடையாது என்பதால், எதை மறைக்க முயற்சிக்கிறாள் என்று வசுமதியால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாதி உண்மை மிக ஆபத்தானது என்ற எண்ணம் அவள் மனதில் வந்து போனது.
“ஒரு குழந்தை பெத்துக்க முடியாத பொண்ணை எங்க தலையில கட்டி, எங்களை ஏமாத்திட்டீங்கன்னு, அம்மா கிட்ட எங்க அத்தை போனில் சண்டை போட்டு இருக்காங்க” என்று மெல்லிய குரலில் சொன்னாள் நர்மதா. நம்ப முடியாத அதிர்ச்சியில் வேகமாக மூச்சை உள்ளிழுத்தாள் வசுமதி.
“என்னக்கா சொல்றீங்க? எவ்வளவு வாய் கொழுப்பு பார்த்தீங்களா? என்ன திமிரு இருக்கும் அப்படிக் கேட்க?” அழுகையின் ஊடே படபடவெனப் பொரிந்தாள் லாவண்யா.
“வேணாம் லாவண். என்ன இருந்தாலும் அவங்க என் அத்தை. வயசுல பெரியவங்க, மரியாதை கொடுத்து பேசுடா.” என்று அவளைக் கண்டித்தாள் நர்மதா. அவளின் இந்தக் குணம் தான் வசுமதியை எப்போதும் கவர்வது, அது தான் அவர்களை நெருங்கி பழகவும், நெருக்கமாகப் பிணைக்கவும் செய்திருந்தது.
“போங்க கா, என்னால உங்களை மாதிரி இருக்க முடியாது. நிச்சயம் முடியாது” தலையை மறுப்பாக ஆட்டிக் கொண்டே, சொன்னாள் லாவண்யா.
“பெரியம்மா என்கிட்ட சொல்லி அழுதாங்க கா, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? வயசுல பெரியவங்கன்னா என்ன வேணாலும் பேசலாமா?
குழந்தை பெத்துக்க முடியுமா, இல்லையான்னு கல்யாணத்துக்கு முன்னாடி எப்படிக் கா கண்டுபிடிக்கறது? எல்லாம் நார்மலா இருக்கான்னு ஸ்கேன் பண்ணி பார்த்து, ட்ரையல் பார்த்தா கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும். பெருசா பேசுறாங்க” அவள் வார்த்தைகளில் வசுமதியும், நர்மதாவும் பலமாக அதிர்ந்து போனார்கள்.
பட்டென்று ஓங்கி அவளை முதுகில் அறைந்த நர்மதா,
“பேச்சைக் குறை லாவண்யா, என்ன பேச்சு இது?” அதட்டினாள்.
எந்தச் சூழ்நிலை லாவண்யாவை இப்படிப் பேச வைத்தது என்ற எண்ணம் அவளை ஆக்கிரமிக்க, மனதில் எழுந்த கலவையான உணர்வுகளை, வார்த்தையாக்க முடியாமல், வசுமதி கண்ணை மூடி சுவரில் சாய்ந்தாள்.
அவரவர் ஏமாற்றம் அவரவர்க்கு என்று தான் நினைத்தாள் நர்மதா. இத்தனை வருடங்களில் தன் அத்தையை அவள் நன்றாகப் புரிந்து வைத்திருந்தாள்.
அதனால், என்ன மாதிரியான மன நிலையில், அந்தக் கேள்வி அவர்களிடம் இருந்து வெளிப்பட்டிருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. அதனால் தான் அவளுக்குக் கோபம் வரவில்லை. ஆனால், லாவண்யாவின் கேள்வியும் கூட அவள் மேலுள்ள அன்பினால் விழைந்தது தான் என்று உணர்ந்து கொண்ட நர்மதா, லாவண்யாவை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
“ஷ்ஷ்ஷ், இப்படிலாம் பேசாத லாவண். ரொம்பக் கஷ்டமா இருக்கு.
எதையும் பேசுறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சு பேசணும், கோபத்தில் வார்த்தைகளை விட்டுட்டு பின்னாடி வருத்தப்படக் கூடாது. சரியா?” என்றவள்,
“அடிச்சதுக்குச் சாரி டா லாவண். எங்க அத்தையைப் பத்தி எனக்குத் தானே டா தெரியும். அவங்க ரொம்ப ரொம்ப நல்ல மனுஷி. இப்ப தான் இப்படி எல்லாம் பேசுறாங்க டா, ஆனா இதுக்கு முன்னாடி என்னை எப்படிப் பார்த்துகிட்டாங்க தெரியுமா? என்ன பண்ண? எங்க சூழ்நிலை தான் அவங்களை இப்படிப் பேச வைக்குதே தவிர அவங்க கெட்டவங்க இல்ல லாவண்.
அவங்களுக்கு நரேனையும், என்னையும் சந்தோசமா பார்க்கணும் டா, எங்க வாழ்க்கையில் எல்லாமே இருக்கு. குழந்தையும் வந்துட்டா… நிறைவா இருக்கும்னு அவங்க நினைக்கிறாங்க. நாம அதைத் தப்பு சொல்ல முடியாது, இல்லடா?” என்று அவளுக்குப் பொறுமையாக விளக்கினாள் அவள். ஆனாலும் லாவண்யா சமாதானம் ஆகவில்லை. கண்கள் கலங்கி இருக்க, முகத்தைத் தொங்கப் போட்டபடி அமர்ந்திருந்தாள் அவள்.
“சாரி கா, நான் அப்படிச் சொல்லிக் இருக்கக் கூடாது தான். சாரி” பார்வையைக் கையில் இருந்த பூக்களில் பதித்தபடி சொன்னாள் லாவண்யா.
“கடவுள் எல்லாத்தையும் காரணத்தோடு தான் தாமதிப்பார் லாவண். வசு சொன்ன மாதிரி மழை வந்த மாதிரி, வெயிலும் வரத் தானே செய்யும். அதுக்காக வெயிட் பண்ணுவோம்” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு பேசினாள் நர்மதா.
“இலையுதிர் காலத்தில் இலைகள் உதிர்வது இயற்கை தானே அண்ணி, அதுக்காக வசந்த காலம் வராமயா இருக்கப் போகுது? இல்ல புது இலைகள் தான் துளிர் விடாம இருக்கப் போகுதா? எல்லாம் குறித்த நேரத்தில் நடக்கும் அண்ணி. நமக்கான நேரம் சீக்கிரம் வரும். செடியை நட்டாச்சு, அது நல்லா வளர்ந்தும் வந்திடுச்சு. இனி அரும்புகள் அரும்பும் காலம் வராமலா போய்டும்?” என்றாள் வசுமதி. மென்மையாகப் புன்னகைத்தாள் நர்மதா.
“நான் தான் அப்பவே சொன்னேனே வசு, கல்யாணம் ஆனதும் நீ ரொம்ப அறிவாளி ஆகிட்ட.” என்று நர்மதா கேலியாகச் சிரித்துக் கொண்டே சொல்ல,
“இல்ல அண்ணி, அறிவு கூடினதா தெரியல. ஆனா, அஞ்சே நாள்ல, அஞ்சு வயசு கூடின மாதிரி இருக்கு எனக்கு.”
“ரெண்டும் ஒன்னு தான் வசு, யூ ஆர் கெட்டிங் மெச்சூர்ட். காரணம் யார்? வாசுதேவனா?” கண் சிமிட்டி நர்மதா கேட்க,
“போங்க அண்ணி, நீங்க வேற..” என்று முகத்தைச் சுருக்கி கொண்டு சொன்ன வசுமதியின் கண்கள் கணவனைத் தேடியது.
மாடியின் ஓரமாக, சுவரில் சாய்ந்து அமர்ந்து, நல்ல உறக்கத்தில் இருந்தான் அவன். கணவனை அப்படிப் பார்த்ததும் சட்டென்று பதறினாள் வசுமதி. மறு கணமே அவனருகில் போய் நின்றிருந்தாள்.
அவனை எழுப்புவதா, வேண்டாமா என்ற தயக்கத்துடன் அவள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“நான் போய்க் காபி போடுறேன் வசு.” என்றபடி, நர்மதா கீழிறங்கி போக, அவளைப் பின் தொடர்ந்து லாவண்யாவும் கீழிறங்கி சென்றாள்.
“வாசு…” மெல்ல அவன் கன்னம் தொட்டாள். அந்தத் தொடுகையில் கலைந்து, உடனே விழித்து விட்டான் அவன்.
“வசும்மா, என்னடா அப்படிப் பார்க்கற?” என்றான் கண்களைத் தேய்த்து விட்டபடி,
“என்ன, இப்படி உட்கார்ந்துட்டே தூங்கறீங்க? கீழ போய்ப் படுத்து இருக்கலாம் இல்ல? உங்களை இப்படிப் பார்க்க எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. நான் உங்களைச் சரியா கவனிக்கறதே இல்ல” என்றாள் அவன் முகம் பார்த்து,
“அச்சோ வசும்மா, சும்மா சாய்ஞ்சு உட்கார்ந்தேன். சிலுசிலுன்னு காத்தடிக்கவும் கண்ணு சொருகிடுச்சு. அதுக்குப் போய்… என்னடா நீ..” என்றவன், “எனக்கு வேற கொஞ்ச நாளா சரியா தூக்கமே இல்ல, தெரியுமா வசும்மா? அதான் இப்படி உட்கார்ந்த இடத்திலேயே தூங்கறேன் போல..” கடைசி வாக்கியத்தை அவளை அருகில் இழுத்து, அவளது காதில் சரசமாகச் சொன்னான் அவன்.
“உங்களை…” என்று அவனின் மார்பில் லேசாக அடித்து, அவனிடம் இருந்து அவள் விலக முயல, அதற்கு இடம் கொடாமல் அவளைத் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான் வாசு.
“வீட்டுக்கு போகலாமா வசும்மா? நேரமாச்சு பாரு. அங்க போய் என்னை நல்லா கவனிப்பியாம்” குரலில் சிரிப்பு வழிய சொன்னான் அவன், “ம்ம்ம்” என்றாள் பதிலாக, சுவரில் கைப் பதித்து எழுந்தவன், அவளின் கைப் பற்றி அவளையும் எழுப்பி விட்டான். இருவரும் ஒன்றாகக் கீழிறங்கினர்.
பகலும், இரவும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் நர்மதா குடும்பத்தினரிடம் விடை பெற்று, தங்கள் வீட்டிற்குத் திரும்பினார்கள் இருவரும்.
வசுமதி சென்றதும் நர்மதாவிற்கு வீடே வெறுமையாகி, வெறிச்சோடி காட்சி அளித்தது. ஏனோ அவளின் அண்மைக்காக மனது ஏங்கியது. வசுமதியை பார்க்கும் போதெல்லாம் நரேனின் முகம் நினைவில் வந்து சென்றது தான் அதற்குக் காரணம். நரேன், அவளின் கைகளைப் பிடித்துக் கெஞ்சியது கண் முன் படமாக ஓடி அவளை வதைத்தது.
முதலில் கொஞ்சி, பின்னர்க் கெஞ்சி.. அதுவும் வேலை செய்யவில்லை என்றதும் அவள் கரம் பற்றி மன்றாடினான் நரேன். ஆனால், நர்மதா மனம் இறங்கவில்லை. கடைசியில் அவன் மனமொடிந்து விரக்தியில் கத்தி விட்டுப் போனான்.
“நீ ஒரு முட்டாள் நர்மதா. உனக்கு, உன் கையில இருக்கச் சொர்க்கம் கண்ணுக்கு தெரியல. அவ்வளவு தான். நீ ஒரு முட்டாள், உன் கால்ல விழுந்து கிடக்கற நான், உன்னை விடப் பெரிய முட்டாள்.” கோபத்தில் வார்த்தைகளை அள்ளி, வீசி விட்டு, இரண்டெட்டு பின்னோக்கி வைத்தான். சட்டென்று அறைக் கதவை திறந்து, அவளைத் திரும்பியும் பாராமல் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான். ஏற்கனவே முடிவு செய்திருந்த படி அன்றிரவே துபாய் பறந்து விட்டான் அவன்.
மொட்டை மாடியின் இருளில் அமர்ந்து வானில், மின்னி மறைந்து கொண்டிருந்த விமானத்தை வெறித்தாள் நர்மதா.
‘அடுத்தென்ன செய்யப் போகிறாய்?’. என்ற மனசாட்சியின் குரலுக்குப் பதில் இல்லை அவளிடம், மனம் பல்வேறு எண்ணங்களில் ஆழ்ந்திருக்க, எதிரே பிரகாசமாய் வீற்றிருந்த நிலவை கண்ணசைக்காது பார்த்திருந்தாள் அவள்.