பூமரப் பாவைகள் – 9 (1)

“எப்போ ஊருக்கு கிளம்பறீங்க வசு? ஃப்ளைட் டிக்கெட்ஸ் புக் பண்ணியாச்சா வாசு?” என்று இருவரிடமும் மாற்றி மாற்றிக் கேள்விகளை முன் வைத்தாள் நர்மதா.

வாசு, வசுமதி, நர்மதாவின் பெற்றோர் மற்றும் அவளின் தங்கை லாவண்யா என அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

“எஸ், டிக்கெட் புக் பண்ணியாச்சு கா. வர்ற வியாழக்கிழமை நைட் ஃப்ளைட்” என்றான் வாசு.

“ஓ, ஏன் இவ்ளோ சீக்கிரமா கிளம்பறீங்க? இப்போ தானே கல்யாணம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்துட்டு அப்புறம் வேலைக்குப் போகலாம் இல்ல?” என்று இருவரையும் பொதுவாகப் பார்த்து கேட்டாள் நர்மதா.

“இல்ல கா, எனக்கு ஆல்ரெடி லீவ் முடிஞ்சுடுச்சு. கல்யாணத்துக்காக லீவ் எக்ஸ்டென் பண்ணி இருக்கேன். இனி, ஒரு நாள் கூடுதலா லீவ் கேட்டா கூடக் கொடுக்க மாட்டானுங்க” என்று அலுத்துக் கொண்டான் வாசு. நர்மதாவிற்கு அவனது நிலை புரிந்தது.

“மேரேஜ் சர்டிஃபிகேட் வாங்க வேண்டி இருந்தது. அப்புறம் எங்க ரெண்டு பேர் பாஸ்போர்ட்லயும் ஸ்பவுஸ் பேர் சேர்க்கணும் இல்லையா?. அதுக்காகத் தான் வெயிட் பண்ணோம். நேத்து தான் அந்த வேலை முடிந்தது. இனி ஊருக்கு கிளம்ப வேண்டியது தான் கா” என்று அவளுக்கு விளக்கினான் அவன்.

“ஓ, இன்னும் நாலு நாள் தானே இருக்கு, எல்லாம் பேக் பண்ணியாச்சா வசு?” என்று அவள் வசுமதியை பார்த்துக் கேட்க,

“ம்ம், இன்னும் இல்லண்ணி. இனிமே தான் எல்லாத்தையும் தேடி எடுத்து பேக் பண்ணணும்.” என்ற வசுமதி,

“நீங்க எப்போ ஊருக்கு வர்றீங்க அண்ணி?” என்று நர்மதாவைப் பார்த்து கேட்க, உணவை விட்டு தன் பார்வையை அகற்றவில்லை அவள். சிறிது நேரம் அங்கே மௌனம் மட்டுமே நிறைந்திருந்தது.

நர்மதாவிற்குத் தெரியும், வசுமதி மட்டும் அல்ல தன் பெற்றோரும் அக்கேள்விக்குப் பதில் அறிய காத்திருக்கிறார்கள் என்று, கைகள் நடுங்க தண்ணீரை எடுத்து பருகினாள். தலையை நிமிர்த்தி வசுமதியின் முகம் பார்த்து,

“தெரியல வசு, ஆனா வரணும் தான். வந்து தானே ஆகனும்? வேற வழியில்ல, இல்லையா?” என்றாள் விரக்தியாக, வசுமதியின் கண்கள் நர்மதாவின் பெற்றோரின் பக்கமாகத் திரும்பியது. அவர்கள் இருவரும் வெளியில் மிக இயல்பாகக் காட்டிக் கொண்டு, தங்களுக்குள் பேசிக் கொண்டு, அவர்களையும் கவனித்து, உணவை உண்டு கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு மகளின் மனநிலை புரிந்திருக்கும், அல்லது அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள அவர்கள் பழகி இருப்பார்கள், அல்லது தாங்களும் எதையாவது சொல்லி மகளின் மனதை வருத்த வேண்டாம் என்று நினைத்திருக்கலாம் என்று தான் நினைத்தாள் வசுமதி. ஆனாலும் அவர்களின் கண்களில் அவர்களையும் மீறி வெளிப்பட்ட வலியை அவளால் அப்பட்டமாகக் கண்டு கொள்ள முடிந்தது. அது அவளுக்கு வலி தருவதாக இருந்தது.

இந்த வயதிலும் மகளுக்காகத் தங்களின் வலியை, வேதனையை வெளிக் காட்டிக் கொள்ளாமல், திடமாக நின்று மகளுக்கு உறுதுணையாக நிற்கும் அவர்களின் மேலான மரியாதை பன்மடங்கு அதிகரித்தது.

“இந்த முறை என்ன ட்ரீட்மெண்ட் அண்ணி?” மனதில் ஓடிய எண்ணத்தை, சத்தமாகக் கேட்டு விட்ட பின்னரே தன் தவறை உணர்ந்து நாக்கை கடித்தாள் வசுமதி.

அவளுக்குத் தெரிந்து நர்மதா, ஒரு முறை விடுமுறை எடுத்து, நரேனுடன் ஊருக்கு வந்து சில மாதங்கள் தங்கி இருந்து, செயற்கை கருத்தரிப்பு முறையான ஐவிஎப் சிகிச்சை எடுத்துக் கொண்டாள். ஆனால், துரதிஷ்டவசமாக அச்சிகிச்சை முறை அவர்களுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதற்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து ஐயூஐ முறையிலும் முயற்சி செய்தார்கள் தான், ஆனால் அதுவுமே பலனளிக்கவில்லை.

இருவருக்கும் எவ்வித குறையும் இருக்கவில்லை, அதே நேரம் வயதும் முப்பத்தைக் கடக்கவில்லை என்பதால் மருத்துவர்கள் பொறுமையாக இருக்கும் படி அறிவுறுத்தினார்கள். இயற்கையிலேயே கருவுறும் வாய்ப்பு நூறு சதவீதம் இருக்கிறது என்ற நம்பிக்கையும் அளித்தனர். நர்மதாவும் காத்திருக்கத் தயாராகத் தான் இருந்தாள். ஆனால், உற்றமும், சுற்றமும் தான் பொறுமை இழந்து தவித்தது. அவர்களுக்கு முன் அவர்களது குழந்தையைக் காண துடித்தது சமூகம்.

அந்தத் தம்பதிகளுக்குத் தங்களின் கேள்விகளின் மூலமாகவும், விசாரிப்பின் வாயிலாகவும் அந்த அழுத்தத்தை அவர்களுக்குக் கடத்த முன்றனர், அதில் வெற்றியும் பெற்றனர். அதன் விளைவாகத் தான் இன்று நர்மதா பிறந்தகத்தில் வந்து மனம் குழம்பிப் போய் அமர்ந்திருக்கிறாள்.

கடந்த ஆண்டு நரேன் முப்பத்தி இரண்டை தொட்டிருந்தான். நர்மதா இருபத்தி ஏழாம் அகவையில் அடி எடுத்து வைத்திருந்தாள்.

ஆண்டுகளோடு வயதும் கூடிக் கொண்டே போக, அவர்களின் மனக் கலக்கமும் இப்போது ஏறிக் கொண்டே போனது. ஒருவித நெருக்கடிக்கு தள்ளப் பட்டிருந்தனர் இருவரும்.

இத்தனை வருடங்களாக அவர்களுக்கு நடுவில் இருந்த புரிதலும், நெருக்கமும் கடந்த சில மாதங்களாகச் சண்டைகளில், வார்த்தைப் போரில் கொதித்து, ஆவியாகத் தொடங்கி இருந்தது.

இருவருமே கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தனர்.

அவர்களுக்காக வசுமதியின் மனம் மானசீகமாக இறைவனிடம் மன்றாடியது.

“ட்ரீட்மெண்ட்லாம் எதுவுமில்ல வசும்மா. முன்னாடியே சொன்னேனே. உங்க கல்யாணம் அட்டெண்ட் பண்ண தான் வந்தோம். அவருக்கு லீவ் இல்ல, அதான் உடனே கிளம்பிட்டார். நான் வேலையை விட்டுட்டேன். சோ, ஊருக்கு வந்ததுக்கு, வாய்ப்பை வீணாக்காம ஒரு நாலு நாள், அம்மா, அப்பா கூட இருந்துட்டு போகலாம்னு…” வசுமதியின் கேள்வியைச் சகஜமாக எடுத்துக் கொண்டு பதில் சொன்னாள் நர்மதா. ஆனாலும், வசுமதிக்கு தான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது. தன் முட்டாள் தனத்தினை எண்ணுகையில் தன் தலையில் தானே அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

“என்ன, வேலையை விட்டுட்டீங்களா?” அதிர்ந்தாள் வசுமதி. ஆனால், நர்மதா அலட்டிக் கொள்ளவில்லை.

“ஏய், ஷாக்கை குறை வசு. இதென்ன நமக்குப் புதுசா?” என்று அவள் கிண்டலாகச் சிரிக்க, வசுமதியும் சிரித்து விட்டாள். நர்மதாவின் பெற்றோர் சாப்பிட்டு முடித்திருக்க, சிரித்துக் கொண்டே எழுந்தனர்.

“நீங்க பொறுமையா சாப்பிடுங்க பசங்களா, நான் போய்க் கொஞ்சம் நேரம் படுக்கறேன்” என்றபடி நகர்ந்தார் நர்மதாவின் தந்தை.

“நான் குழந்தை கூட இருக்கேன் லாவண்யா மா, நீங்க ஃப்ரீயா இருங்க” என்றபடி நகர்ந்தார் நர்மதாவின் அம்மா.

“இது எத்தனாவது வேலை கா?” நர்மதாவின் தங்கை லாவண்யா கேட்க, “யாருக்கும் தெரியும்?” என்று அலட்சியமாகப் பதில் சொன்னாள் நர்மதா.

நர்மதா அவளின் கணவன் நரேனின் விசாவில் இருந்ததால் அவளுக்கு வேலை கிடைப்பதும், அந்த வேலையை விட்டு வெளியேறுவதும் வெகு எளிதாக இருந்தது. மற்றபடி வேலை செய்யும் நிறுவனத்தின் எம்பிளாய்மெண்ட் விசாவில் இருப்பவர்கள், வேலையை விடுவதும், புதிய வேலையில் அமர்வதும் அத்தனை எளிதான காரியமல்ல.

பேச்சுச் சுவாரசியத்தில் கணவனை மறந்தே போனாள் வசுமதி. ஆனால் அவளைக் கவனித்து, அவளுக்குத் தேவையானதை பார்த்துப் பரிமாறிக் கொண்டிருந்தான் வாசுதேவன்.

அவர்கள் உணவை முடித்து விட்டு, மொட்டை மாடியில் போய்த் தஞ்சமடைந்தனர். லாவண்யாவின் குழந்தை நல்ல உறக்கத்தில் இருக்க, அறையினுள் சென்று பார்த்து விட்டு வந்து, அவளும் அவர்களோடு இணைந்து கொண்டாள்.

பெண்கள் மூவரும் மொட்டை மாடி சுவரில் படர்ந்திருந்த ஜாதிமல்லி மொட்டுகளைப் பறிக்க ஆரம்பித்தனர், கூடவே பேச்சும் சரளமாக ஓடியது.

வாசுதேவன் ஒற்றைக் காலை சுவரில் ஊன்றி, சாய்ந்து நின்றிருந்தான். அவன் விழிகள் கையில் இருந்த கைப்பேசியில் மூழ்கி இருந்தது.

“இந்த முறையும் ஐவிஎப் டிரை பண்ண சொல்லி, பிரைன் வாஷ் பண்ணி தான் அனுப்பினாங்க, எங்க அத்தை” என்று நர்மதா சொல்ல,

“யார் கிட்ட? உங்க கிட்டயா?”

“இல்ல வசு, எப்பவும் போல அவங்க பையன் கிட்ட தான். ஆனா நானும் அங்க தானே இருந்தேன். அவங்க சொன்னதை எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன். நரேன் மண்டையை, மண்டையை ஆட்டிட்டு இருந்தார்.”

“ஓ…” என்றாள் வசுமதி.

“மதுரையில கை ராசியான டாக்டர் இருக்காங்க. அங்க போங்க, இவங்க சொன்னாங்க, அவங்க சொன்னாங்கன்னு அதே புராணம் தான். நான் பெருசா எதையும் காதில வாங்கிக்கலை” என்றாள் தோளை குலுக்கி,

“இந்த 2010த்துல கூட உங்க மாமியார் மாதிரி ஆளுங்க, அப்படியே மாறாம தான் இருக்காங்க இல்ல கா?. கல்யாணம் ஆகிடுச்சா, அடுத்து குழந்தை தான். இன்னும் பழங்காலம் போல, எப்படி இவங்களால மாறாமல் இருக்க முடியுது?” கோபமாகப் பொரிந்தாள் லாவண்யா.

“எங்க மாமியார்னு இல்ல டா லாவண். இது பொதுவா எல்லோருக்கும் இருக்கற, நம் ஆழ்மனசில் ஊறிப் போன ஒரு எண்ணம் டா. யோசிச்சு பாரு.. நாமளே அப்படித் தான். புதுசா கல்யாணம் ஆனவங்களைப் பார்த்தா என்ன கேட்கிறோம்? எதுவும் விசேஷமான்னு தானே? நம்ம மைண்ட்செட் அப்படி. அதை மாத்த முடியாது. நம்ம ஊர்ன்னு இல்லைடா, உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் இதே கதையா தான் இருக்கும்னு தோணுது.

ஏன்னா, அகிலமே அதை நம்பி தானே இயங்குது. அதுக்கு நாம மட்டும் விதிவிலக்கா என்ன? என்ன ஒன்னு, எத்தனையோ செயற்கை கருத்தரிப்பு முறைகள் வந்திடுச்சு, வாடகைத் தாய், தத்தெடுத்தல்னு எவ்வளவோ இருக்கு. ஆனா, நாம அது நம்மளோட நேரடி வாரிசா இருக்கணும்னு நினைக்கிறோம். அதுக்காகக் கோவில், குளம்னு ஏறி, இறங்கி வேண்டிக்கறோம். போராடி பெத்துக்கறோம். அவ்வளவு தான்” என்றாள் நர்மதா.

“இன்னைக்கு நம்ம மாமியார்கள், நாளைக்கு நாம… அவ்வளவு தான் லாவண்யா கா. ஆனா கேள்வியும், சூழலும் மாறப் போறதேயில்ல. நாளைக்கு நாம மட்டும் நம்ம மருமகள் கிட்ட இதே கேள்வியைக் கேட்காம இருக்கப் போறதுக்கு என்ன உத்திரவாதம்? இந்தச் சமூகம் நம்மையும் விட்டு வைக்காது கா” என்று வருத்தத்துடன் சொன்னாள் வசுமதி.

“நான் கண்டிப்பா கேட்க மாட்டேன் வசு.” என்றாள் தீர்மானமாக நர்மதா,

“சந்தோசம் அண்ணி” என்றாள் வசுமதி.

“குழந்தைகள் முக்கியம் தான், அவங்க தான் நம்ம வாழ்க்கையை அர்த்தமுள்ளதா மாத்துறாங்க, வண்ணமயமா ஆக்குறாங்க. வாழ்க்கையின் மேல பிடிப்பை வர வைக்கறாங்க. எல்லாம் சரி தான், நூத்துக்கு நூறு உண்மை தான். நான் அதை ஒத்துக்கறேன். அதுல மாற்றுக் கருத்தே இல்ல. ஆனா…

எனக்கு ஒரு குழந்தை பிறக்கலைன்னா? அதுக்கு அப்புறம் எனக்கு, நரேனுக்கு, எங்களுக்கு வாழ்க்கையே இல்லையா?” என்றாள் நர்மதா, அடக்கப்பட்ட வலியுடன் வார்த்தைகள் வந்து விழுந்தன.

error: Content is protected !!
Scroll to Top