அந்த டாக்டர் கிட்ட போகச் சொன்னேன், என் பேச்சை கேட்டா தானே? லீவ் போட்டு அந்தக் கோவிலுக்கு வேண்டிக்கச் சொன்னேன். என்னை யாரு மதிக்கறா?
லட்சம், லட்சமாகச் சம்பாதிச்சா ஆச்சா? புருஷனும், பொண்டாட்டியும் வேலைக்குப் போனா போதுமா? கோடி, கோடியா சேர்த்து யாருக்குக் கொடுக்கப் போறீங்க? வயசு இருக்கும் போதே ஒரு வாரிசை பெத்துக்கிட்டா தான் உண்டு. அவளுக்கு இப்பவே முப்பது ஆகப் போகுது… என் தெய்வமே, என்னை ஏன் இப்படிச் சோதிக்கற…” நார்மதாவின் மாமியார், மூச்சு விடாமல் புலம்பியதை, சூனியத்தை வெறித்தவாரு சொன்ன நர்மதாவிற்கு மூச்சு வாங்கியது. பாதியில் நிறுத்தி நீண்டதொரு பெருமூச்சை வெளியிட்டுத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள முனைந்தாள்.
வசுமதியின் கற்பனையில் அக்காட்சி கண் முன் ஓட, அவள் உடல் தானாக உதறியது.
நர்மதாவின் மாமியார் இயல்பில் மிகவும் பாசமானவர், வசுமதியையும் கூடப் பாரபட்சம் பார்க்காமல் அன்புடன் கவனித்துக் கொள்வார். தனக்கு ஓர் பெண் குழந்தை இல்லாத குறையை வசுமதியிடம் அன்பு செலுத்தி தீர்த்து கொள்வார். சில வருடங்களுக்கு முன் நர்மதாவை கூட மகளைப் போலத் தான் நடத்தியதாகச் சொல்வாள் அவள். ஆனால், இப்போது நிலைமை மாறி இருந்தது.
இந்தக் குழந்தை விஷயத்தில் தான் அவர்களுக்குள் எப்போதும் முட்டிக் கொள்வது. அவரது ஏக்கமும், எதிர்பார்ப்பும் நர்மதாவிற்குப் புரியவே செய்தது. ஆனால், அவள் வேண்டும் வரம் கைக்கெட்டாமல் அவளைத் துன்பத்தில் ஆழ்த்தி சோதித்தது.
“எனக்கு அங்க மூச்சு முட்டுது வசு மா, இரவும், பகலும் குழந்தை நினைப்பிலேயே போகுது. ஒவ்வொரு மாசமும், ஏங்கி, தவிச்சு, ஏமாந்து… மனசளவில ரொம்பவே உடைந்து போறேன். இதென்ன வாழ்க்கை வசு? நாங்க என்ன தப்பு பண்ணினோம்? கடவுள் ஏன் இப்படி எங்களைச் சோதிக்கறான்? இப்போல்லாம் நரேன் முகத்தில வர்ற நிராசையை என்னால ஜீரணிக்கவே முடியலை. அவர்…. அவர் நான் சொல்றதை கொஞ்ச நாளா கேட்கறதே இல்ல. ம்ப்ச், என்னை நானே வெறுக்க ஆரம்பிச்சுட்டேன் வசு”
நர்மதாவின் தொண்டையடைத்து, கண்கள் கலங்கியது. அதே பாதிப்பு தான் வசுமதியிடமும். எங்கே வாசு பார்த்து விடுவானோ, என்று வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். வசுமதி திரும்பி வாசுதேவனைப் பார்த்ததைக் கவனித்த நர்மதா, நிலைமையைப் புரிந்து கொண்டு, தன்னைச் சமன்படுத்த வெகுவாக முயற்சித்தாள்.
“நர்மதா…” என்று அந்நேரம் உள்ளிருந்து அவளின் அம்மா சத்தமாக அழைத்தார். கூடவே குழந்தை அழும் சத்தமும் கேட்க, குழப்பமாகப் புருவங்களைச் சுருக்கினாள் வசுமதி.
“இதோ, வரேன் மா” என்று உரக்க குரல் கொடுத்தாள் நர்மதா.
“என்ன அண்ணி, குழந்தை சத்தம் கேட்குது?” என்று வசுமதி ஆச்சரியப்பட,
“என் தங்கச்சி வந்திருக்கா, அவ குழந்தை தான். ரெண்டும் பேரும் நீங்க வரும் போது தூங்கிட்டு இருந்தாங்க. இரு போய்க் குழந்தையைத் தூக்கிட்டு வரேன்” என்று கலங்கி இருந்த கண்களைத் துடைத்துக் கொண்டே சொன்னாள் நர்மதா.
அவளது பதில் வசுமதியை மேலும் குழப்பியது. ஏனென்றால் நர்மதா ஒற்றைப் பெண், அவளுக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் தான், அவனும் திருமணமாகி மனைவியுடன் மும்பையில் வசிக்கிறான். இப்போது தங்கை என்று நர்மதா சொல்லவும், யாரைச் செல்கிறாள் என்று புரியாமல் பார்த்தாள் வசுமதி
வசுமதியின் முகத்தைப் பார்த்து, அவளின் கேள்வியைப் புரிந்து கொண்ட நர்மதா,
“சித்தி பொண்ணு வசு மா. சித்தி இறந்து நாலு வருஷம் ஆச்சு. அதான் முதல் பிரசவம் நம்ம வீட்ல பார்த்தோம். அம்மாவோட ஆசை” என்று சொன்னவள், “தங்கை பேரனை சீராட்டினா, சீக்கிரமே தனக்கும் பேரன், பேத்தி வந்திடுவாங்கனு அம்மாக்கு ஒரு நப்பாசை. யூ நோ… தட், ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா கான்செப்ட்” என்று சிரித்துக் கொண்டே, வசுமதியின் காதில் கிசுகிசுத்தாள் அவள்.
அதைக் கேட்டதும் வசுமதிக்குக் கண் மண் தெரியாத கோபம் வந்தது, நர்மதாவை காரமாக முறைத்தாள் அவள்.
“இப்படித் தான் வசு, எல்லாத்துக்கும்… ஏட்டிக்கு போட்டியா யோசிக்கச் சொல்லுது என் மூளை. நான் என்ன பண்றது சொல்லு?” என்று பெருமூச்சு விட்டாள் நர்மதா.
“நர்மதா…” திரும்பவும் உள்ளிருந்து அழைப்பு வந்தது. அப்போது தான் நினைவு வந்தவளாகத் தலையில் தட்டிக் கொண்டு அவசரமாக எழுந்தாள் அவள். வசுமதி அவளைக் கேள்வியுடன் ஏறிட, “வீட்டுக்கு வந்த உங்களுக்குக் குடிக்க, சாப்பிட ஒன்னுமே குடுக்காம பேசிக்கிட்டே இருந்திருக்கேன். அச்சோ, மறந்தே போய்ட்டேன் பாரு வசு. அம்மா திட்டப் போறாங்க” என்று மீண்டும் நெற்றியில் அறைந்து கொண்டாள் நர்மதா.
“இட்ஸ் ஓகே அண்ணி” என்று அவளைச் சமாதானப்படுத்தினாள் வசுமதி.
“காபி, டீ, ஜூஸ்.. என்ன சாப்பிடுறீங்க வாசு?” வாசுவைப் பார்த்துச் சத்தமாகக் கேட்டு, உபசரிப்பில் இறங்கினாள் நர்மதா. வேலையில் மும்முராக இருந்தான் அவன்.
வசுவை கேட்டுக்கோங்க அண்ணி, அவளுக்கு என்ன கொடுக்கறீங்களோ, அதுவே எனக்கும்” என்றான் புன்னகைத்து,
“ம்க்கும், சரி தான். உனக்கு ரெண்டு அடி கொடுக்கலாம்னு இருக்கேன். உன் வாசுவுக்கு என்ன வேணும்னு கேட்டு வை வசு, அதுக்குள்ள வந்திடுறேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னவள், வசுமதியை பார்த்து, தலையாட்டிய படியே எழுந்து உள்ளே சென்றாள்.
நர்மதா சொல்லிச் சென்ற விதத்தில் வசுமதி பக்கென்று சிரித்து விட்டாள். அந்தச் சத்தத்தில் கலைந்து, பார்த்துக் கொண்டிருந்த வேலையைப் பாதியில் விட்டு விட்டு அவளிடம் வந்து அமர்ந்தான் வாசுதேவன்.
“ஹாய், வசும்மா” என்றான், அவள் தோளை உரசியபடி,
“என்ன ஹாய்? என்னமோ பார்த்து பல நாள் ஆன மாதிரி?” என்று அவள் கிண்டலாகக் கேட்க,
“ஆமா வசும்மா. ஆனா, பல நாள் இல்ல, பல வருஷம் ஆன மாதிரி இருக்கு. வாயேன் நம்ம வீட்டுக்குப் போகலாம்” மிகத் தீவிரமான குரலில் சொன்னான் அவன், ஆனால், அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது. அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவனை நன்றாக முறைத்தாள் அவள்.
“சரி விடு வசும்மா. உங்க அண்ணி கூட நீ நல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணதுக்கு அப்புறமா நாம வீட்டுக்குப் போகலாம்” என்று சடுதியில் இறங்கி வந்தான்.
“ரொம்ப நேரமா என்ன ரகசியம் பேசிட்டு இருந்தீங்க” என்றான் புருவம் உயர்த்தி,
“ஒன்னுமில்லையே, சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” என்றாள் அவள் உதடு பிதுக்கி, அவன் பார்வை அவள் இதழ்களின் மேல் நிலைத்தது.
“ஹலோ மிஸ்டர் வாசுதேவன், லூக் அப், ஒழுங்கா என் கண்ணைப் பார்த்து பேசுங்க” என்று அவனை மிரட்டினாள் வசுமதி.
“போ வசும்மா..” என்று அலுத்தவன், “எனக்கு ரொம்பப் போர் அடிக்குது வசு, நான் என் ப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வரவா?, அவனும் இந்த ஏரியா தான். நீ கிளம்புறதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் பண்ணு, நான் உடனே ஓடி வந்துடுறேன்” என்றான் வாசு, முகத்தைப் பாவம் போல வைத்துக் கொண்டு,
“லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்திட்டு இருந்தீங்களே?”
“ம்ப்ச், அந்த வேலை எப்பவோ முடிச்சுட்டேன் வசும்மா. இப்போ சும்மா பிரவுஸ் பண்ணிட்டு தான் இருந்தேன். சும்மா உட்கார்ந்து, நீங்க ரெண்டு பேரும் பேசுறதை எவ்வளவு நேரம் பார்த்திட்டு இருக்க? பிளீஸ் நான் வெளிய போய்ட்டு வரவா?” கெஞ்சினான் அவன்.
“ஹலோ, என்ன கொழுப்பா?” என்று எகிறிய வசுமதி, “வீட்டுக்கு வந்திட்டு பாதில கிளம்பி போனா, அண்ணி கோவிச்சுக்கப் போறாங்க. பேசாம, ஒழுங்கா உட்காருங்க” என்றாள் அவள் சிறு குரலில் அழுத்தமாக. முகத்தைச் சுருக்கிக் கொண்டு நகர்ந்து அமர்ந்தான் அவன்.
“நான் மட்டும் அன்னைக்கு உங்க கூட, உங்க ப்ரெண்ட் வீட்டுக்கு வந்தேன் இல்ல. உங்களை மாதிரியா அழுதேன் நான்? லஞ்ச் சாப்பிட்டுட்டுச் சாயங்காலம் போலத் தான் வீட்டுக்கு போறோம். சோ, பேசாம உட்காருங்க” என்றாள் கண்களை உருட்டி,
“என் ப்ரெண்ட் வீடு, அது ஜஸ்ட் டூ ஹவர்ஸ், ஆனா இப்போ… சரி அதை விடு வசும்மா.” என்றவன், “ஆமா, உங்க அண்ணி எங்க போனாங்க? இன்னும் ஆளைக் காணோம்” என்றான் கழுத்தை திருப்பி, அறைக்கு வெளியில் பார்த்தபடி,
“இப்ப வரேன்னு சொல்லிட்டு தானே போனாங்க? குடிக்க ஏதாவது எடுத்துட்டு வருவாங்க. நீங்க துள்ளாம உட்காருங்க” என்றாள் கறாராக,
“சரி, வெளில போகக் கூடாது சொல்லிட்ட. வாயேன் வசும்மா, நாம உங்க அண்ணி வர்ற வரைக்கும் பக்கத்து ரூம்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்கலாம்” என்றான் அப்பாவியாக முகத்தை வைத்து,
“என்னது?” என்று அதிர்ந்தாள் வசுமதி.
“பின்ன, உங்க அண்ணி போய்க் கிட்டத்தட்ட பத்து நிமிஷத்துக்கு மேல ஆச்சு, இன்னும் ஆளை காணோம். இப்படிச் சும்மா உட்கார்ந்து இருக்கறதுக்கு, நாம ஏதாவது பேசிட்டாவது இருக்கலாம்னு தான் சொன்னேன்” என்றான் தோள்களைக் குலுக்கி,
“வாசு, இது அண்ணி வீடு” பல்லைக் கடித்தபடி முணுமுணுத்தாள்.
“நான் மட்டும் என்ன, நம்ம வீடுனா சொன்னேன் வசும்மா” என்று இழுத்தான் அவன்.
“அச்சோ, உங்களோட ஒன்னும் முடியல. ஒழுங்கா வாயாடாம உட்காருங்க. இப்படி அடுத்தவங்க வீட்ல உட்கார்ந்துட்டு, தனியா போவோமானு விவஸ்தையே இல்லாம கேட்டுட்டு இருக்கீங்க. உங்களை…” என்று அவள் மீண்டும் பல்லைக் கடிக்க,
“யார் வீடா இருந்தா என்ன? நான் என் பொண்டாட்டியை தானே பேச கூப்பிட்டேன்” என்றான் அவன்.
“எதுக்கு?”
“அதான் சொன்னேனே, தனியா பேச வசும்மா..” என்றான் கண்ணைச் சிமிட்டி,
“தனியா போய்ப் பேசுற ஆளு, யாரு? நீங்க தானே?” என்றாள் கோபமாக,
“ம்ம்ம்” என்று வேகமாகத் தலையை அசைத்தான் வாசுதேவன்.
“ஆமா, ஆமா..” என்று ராகம் இழுத்தவள், “முதல்ல கண்ணால பேசுவீங்க, அப்புறம் உங்க கை பேசும்.. ஆனா வார்த்தைகள் மட்டும் வராது. அப்படித் தானே?” என்றவளின் குரலில் கேலியும், சிரிப்பும் வழிந்தது.
“கைக்கு அப்புறம் வாய் பேசும் வசும்மா. அதை மறந்துட்ட பாரு” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் வாசுதேவன். அத்தோடு நிற்காமல் உதடுகளைக் குவித்து முத்தமிடுவது போலப் பாவனைச் செய்தான். உடல் சிலிர்க்க, மனம் தடுமாற, வார்த்தைகள் அற்று மௌனமானாள் அவள்.
“பாரு, வாய் பேசினா, இப்படித் தான் நீயும் வார்த்தைகளை மறந்து முழுச்சிட்டு இருப்ப” அவள் காதை உரசியது அவன் இதழ்கள். மருண்டு விழித்தாள் வசுமதி. அவள் கன்னத்தில் மீசை உரச, அழுத்தமாய் இதழ் பதித்து விலகி அமர்ந்தான் வாசுதேவன்.
பூஜை வேளை கரடியை போல, சரியாய் அந்நேரம் அறைக்குள் வந்தாள் நர்மதா.
“தாங்க்ஸ் கா, உங்களுக்கு எடுத்துட்டு வரலியா?” என்று கேட்டுக் கொண்டே, நர்மதா நீட்டிய ஜூஸை வெகு இயல்பாகக் கையில் வாங்கினான் வாசு. எதுவும் நடவாதது போல ஜூசை குடிக்கவும் ஆரம்பித்திருந்தான்.
வசுமதி தான் திணறி கொண்டிருந்தாள். நர்மதாவின் முன் வெட்கப்பட்டுச் சிரித்து விடாமலிருக்க, அவள் வெகுவாகத் தன்னைச் சமாளிக்க வேண்டி இருந்தது. கணவனை அவள் செல்லமாகக் கண்களாலேயே முறைக்க, பதிலுக்கு அவனோ கண்ணடித்து வைத்தான். கன்னச் சதை கடித்து, சிரிப்பை விழுங்கி கண்களால் சிரித்தாள் வசுமதி.