“நான் காரை வெளில எடுக்கறேன். நீ சீக்கிரம் வந்திடு வசும்மா” என்றபடி அறையின் வாயிலை நோக்கி நகர்ந்தான் வாசு. கையை நீட்டி, எட்டி அவனது சட்டையைப் பிடித்து, இழுத்து அவனை மேலே நகர விடாமல் நிறுத்தினாள் வசுமதி.
“எங்க போறீங்க? ஒழுங்கு மரியாதையா, நான் ரெடியாகற வரைக்கும் வெயிட் பண்ணுங்க. இல்ல பிச்சிடுவேன், பிச்சு” என்று அவனை மிரட்டிக் கொண்டே, சேலையைக் கட்டிக் கொண்டிருந்தாள் வசுமதி.
“லேட் ஆகப் போகுது வசும்மா” என்று அவன் தயக்கத்துடன் இழுக்க,
“ஆஹான், யாரால லேட்டாச்சு? உங்களால தானே?. சோ, பேசாம உட்காருங்க” என்று அவள் எகிற,
“ஓகே, வித் பிளசர் வசும்மா” அறையில் இருந்த ஒற்றைச் சோஃபாவில் கால்களை நீட்டி, நன்றாகச் சாய்ந்து அமர்ந்தான். பார்வை வசுமதியை தலை முதல் கால் வரை ரசனையாய் வருடிக் கொண்டிருந்தது.
அதைக் கண்டு கொண்டவள், “பார்வையைப் பாரு. கண்ணைக் குத்த போறேன்” என்று முணுமுணுக்க,
“இப்படி என்னைத் திட்டுறதுக்குப் பதிலாக, அந்தப் புடவையைச் சீக்கிரம் கட்டி முடிக்கலாம் இல்ல?. மனுஷனை சோதிக்கற வசும்மா, நீ” சலித்துக் கொண்டான் வாசு.
“ஹலோ, எல்லாம் உங்களால தான். எத்தனை முறை சேலை கட்டுறது?. முன்னாடி கட்டியிருந்தது எவ்வளவு அழகாக இருந்தது, தெரியுமா? இப்ப பாருங்க, இதுல பிளீட்ஸ் ஒழுங்காவே வர மாட்டேனுது” அவள் அலுத்துக் கொண்டாள்.
ஆனால் அவனோ, “ஆமா வசும்மா, நானும் அதையே தானே சொன்னேன். அந்தச் சேலை உனக்கு அவ்வளோ அழகா இருந்தது.” கிறங்கியது அவன் குரல்.
அத்தோடு நிற்காமல், எழுந்து அவளை நெருங்கியவன், புடவைக்குப் போட்டியாய் பளபளத்த அவளின் இடையில் கரம் பதித்து, “சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா?” கன்னம் உரசி, அவளின் காதோரமாய்ச் சன்னக் குரலில் பாடினான் வாசு. சடுதியில் அவனிடம் நழுவத் துடித்த மனதையும், சேலையையும் இறுகப் பற்றினாள் அவள்.
“ஏற்கனவே லேட் ஆகிடுச்சு வாசு. நீங்க மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதீங்க” என்று பொய்யாகக் கோபப்பட்ட வசுமதி, சேலையை விரைந்து கட்டி முடித்திருந்தாள்.
ஒரு முறை முன்னும், பின்னுமாகத் திரும்பி கண்ணாடியில் அவள் தன்னைச் சரி பார்க்க, அவளைத் தோள் பற்றி நிறுத்தினான் வாசு. டேபிளில் இருந்த மல்லிகைப் பந்தை எடுத்து, அவளது பின்னலில் அழகாக வைத்து விட்டான். அவளை மெல்லத் திருப்பி, அழுத்தமாய் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.
இருவரும் கைகள் கோர்த்தபடி, அறையில் இருந்து வெளியில் வந்தனர்.
அங்கே வாசுவின் மொத்த குடும்பமும் ஹாலில் அமர்ந்து கலகலத்துக் கொண்டிருந்தது. அம்மா, அப்பா, அக்கா, அண்ணன் மற்றும் அவர்களின் குழந்தைகள் என்று வீடே நிறைந்திருந்தது.
வாசுவின் அக்கா மகாலக்ஷ்மி இல்லத்தரசி, முன்னர் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர் தான், ஆனால் இரண்டாவது பிரசவத்தின் போது சற்றே சிக்கலாகி போக, உடல்நிலையை முன்னிறுத்தி வேலையை விட்டிருந்தார்.
ஆண், பெண் என்று இரு குழந்தைகள் அவளுக்கு, அவர்களும் சென்னை வாசிகள் தான். அவர்களின் அப்பாவை கவனித்துக் கொள்வதற்காகத் தான் முதலில் குடும்பத்துடன் அம்மா வீட்டிற்கு வந்தாள் மகா.
அவள் எதிர்பாராத விதமாக, அப்பாவின் ஆசைப்படி வாசுவின் திருமணம் சட்டென நிச்சயிக்கப் பட, அந்த வேலைகளையும், வீட்டின் மற்ற பொறுப்புகளையும் சேர்த்து கவனிக்க இப்போது அம்மா வீட்டில் தற்காலிகமாகத் தங்கிக் கொண்டாள் அவள். அவளது கணவரும், பிள்ளைகளும் பணி மற்றும் பள்ளிக்கு இங்கிருந்தே சென்று வந்தனர்.
வாசுவின் அண்ணன் மாதவன் கல்கத்தாவின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிகிறான். அவன் மனைவி ஷாலினியும் அங்கேயே உதவி பேராசிரியராக இருக்கிறாள். அவர்களுக்கும் இரு குழந்தைகள். முன்னர் அப்பாவின் ஆபரேஷன் சமயம் ஒரு வார விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர். அச்சமயம் அதற்கு மேல் அவர்களுக்கு விடுமுறை எடுக்க முடியாத சூழல். ஆனால், தற்போது குழந்தைகளுக்குப் பள்ளி விடுமுறை என்பதால், தம்பியின் திருமணத்திற்காக இரு வார விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர்.
வசுமதி, வாசுதேவனின் திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் கடந்திருந்தது. இத்தனை நாட்கள், தான் சேர்த்து வைத்திருந்த மொத்த அன்பையும் அவள் மேல் செலுத்தி, அவளைத் திக்கு முக்காட செய்தான் வாசுதேவன். வசுமதியும் அவனது அன்பினை விரும்பியே ஏற்றாள். அவர்களுக்குள் நேசம் மெல்ல தன் கிளைகளைப் பரப்ப, புரிதலும், நெருக்கமும் அதிகரித்திருந்தது. இருவருக்குமே மனம் நிறைந்து இருந்தது.
கடந்த ஐந்து நாட்களும் கோவிலுக்குச் செல்வது, வாசுவின் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது, வெளிவேலைகள் என நாட்கள் ரெக்கை கட்டி பறந்தன. நேரம் அவர்களின் கையில் நிற்காமல் நழுவி ஓடிக் கொண்டிருந்தது.
இதோ இன்றும் கூட நர்மதாவின் வீட்டிற்குத் தான் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
ஹாலில் அமர்ந்திருந்த மாமனார், மாமியார் உள்ளிட்ட வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு காரை நோக்கிச் சென்றனர்.
அடுத்த முப்பதாம் நிமிடம் முகப்பேரில் இருந்த நர்மதாவின் வீட்டை அடைந்திருந்தனர்.
“வாங்க, வாங்க, புது மாப்பிள்ளை, பொண்ணு… வசு மா.. வாடா வா, வா.. வெல்கம் ஹோம்” வாசலில் காத்திருந்த நர்மதா, அவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள். அவளது பெற்றோர், அவள் அருகில் புன்னகையுடன் நின்றனர்.
“அண்ணி..” என்று கத்தியபடி ஓடி, நர்மதாவின் கையைப் பிடித்தபடி, வீட்டினுள் நுழைந்தாள் வசுமதி. கணவன் வருகிறானா, என்று அவள் திரும்பிப் பார்க்க, கண்ணை உருட்டி மிரட்டினான் வாசு. பதிலுக்குக் கண் சிமிட்டி புன்னகைத்தாள் வசுமதி, இப்போது அவன் முகத்திலும் பரவியது அவளது புன்னகை.
“உட்காருங்க வாசு, நீயும் உட்காரு வசு.” என்ற நர்மதா, “அப்புறம் சொல்லு வசு, எப்படி இருக்க? கல்யாண வாழ்க்கை எப்படிப் போகுது?” என்று வசுமதியின் பக்கம் சாய்ந்து மெல்லிய குரலில் விசாரித்தாள். அதற்கு வெட்கச் சிரிப்பை அவளுக்குப் பதிலாகத் தந்தாள் வசுமதி.
“என்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்கற?” என்று உதடு சுழித்தவள், “ஊட்டி, கொடைக்கானல்னு ஒரு நாலு நாளைக்கு ஹனிமூன் மாதிரி போய்ட்டு வரலாம் இல்ல?” என்றாள்.
“இல்லண்ணி, அப்படி எதுவும் ஐடியா இல்ல. எங்க வீட்டுக்கு போய் ரெண்டு நாள் இருந்தோம். இப்ப அவர் வீட்ல இருக்கோம். விருந்துக்குக் கூட எங்கேயும் போகல, எங்களை யாரும் போகச் சொல்லி வற்புறுத்தவும் இல்ல. அவங்க அப்பாக்கு… மாமாக்கு உடம்பு முடியாத நேரத்துல…” வசுமதி பேசிக் கொண்டே போனாள், அவளைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள் நர்மதா.
அவர்களுக்குள் பேச்சுச் சரளமாக ஓடியது. நர்மதா தங்கள் திருமணம் முடிந்து உறவினர் வீடுகளுக்கு விருந்துக்குப் போன கதைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தாள், நடுநடுவில் கமெண்ட் அடித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் வசுமதி. மொபைலில் ஏதோ செய்து கொண்டிருந்தான் வாசு.
“ஆமா, அண்ணா எங்கே அண்ணி?” வீட்டை கண்களால் சுழற்றி, நரேனை காணாமல் விசாரித்தாள் வசுமதி.
“அவர் ஊருக்கு கிளம்பி மூனு நாள் ஆச்சு வசு” என்றாள் நர்மதா.
“ஓ, ஏற்கனவே சொன்னீங்க இல்ல. சாரி, மறந்துட்டேன் அண்ணி” என்று நாக்கைக் கடித்தாள் வசுமதி.
“மறக்கும், மறக்கும். மறக்காம என்ன செய்யும்? இப்போ வாசுவை தவிர வேற எதுவுமே வசுமதியின் ஞாபகத்தில் இருக்காதே. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்” வசுமதிக்கு மட்டும் கேட்கும் விதமாக ரகசிய குரலில் கேலி செய்து, கண் சிமிட்டினாள் நர்மதா.
“ம்ப்ச், அண்ணி…” சிணுங்கினாள் வசுமதி.
“ஆமா, நீங்க ஏன் அண்ணா கூட ஊருக்கு போகலை?” என்று அவள் கேட்க, நர்மதா பதில் சொல்ல சங்கடப்பட்டாள்.
“உங்க லேப்டாப் கொஞ்சம் யூஸ் பண்ணிக்கவா அக்கா?” என்று வாசு கேட்க, அவனுக்கு லேப்டாப் எடுத்துக் கொடுத்து, இன்டர்நெட் கனெக்ட் செய்து கொடுத்தாள் நர்மதா. அவர்கள் பேசுவதற்கு இடம் கொடுத்து, வாசு அங்கிருந்து இங்கிதத்துடன் நகர்ந்து கொள்ள, பெண்கள் தங்கள் பேச்சில் மூழ்கினர்.
“இப்போ சொல்லுங்க, அண்ணி” என்றாள் வசுமதி.
“அது வந்து வசு..” என்று அவள் தடுமாற,
“அண்ணா கூடச் சண்டையா? அதான் நீங்க போகலையா?” வசுமதி சரியாகக் கணித்துக் கேட்டதில், அதிர்ந்து அவளைப் பார்த்தாள் நர்மதா.
“என்ன அண்ணி? இப்போ என்னவாம்? என்ன பிரச்சினை?” என்று அவள் மேலும் கிளற,
“புதுசா என்ன பிரச்சினை வந்துடப் போகுது. எல்லாம் பழசு தான். ப்ச், ஐம் டையர்ட் வசு மா, என்னால இதுக்கு மேல சமாளிக்க முடியல டா. வாழ்க்கையே வெறுத்துப் போகுது” அவள் குரலில் விரக்தி மிகுந்திருந்தது. நர்மதாவை நெருங்கி அமர்ந்து, ஆறுதலாக அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டாள் வசுமதி.
“அப்போ என் கல்யாணத்துக்காக நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு வரலையா?” சந்தேகமாகக் கேட்டாள் வசுமதி.
“ம்ப்ச், நீ வேற.. என்கிட்ட அடி வாங்கப் போற பாரு” என்று அவளைப் பொய்யாக மிரட்டினாள் நர்மதா.
“அப்போ, என்ன சண்டைன்னு சொல்லுங்க, அண்ணி” என்று வசுமதி தன் பிடியில் நிற்க,
நர்மதா சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பமும், தயக்கமும் மனதை சூழ தவிப்புடன் அமர்ந்திருந்தாள். வசுமதி இப்படி எல்லாம் தோண்டி, துருவி விசாரிப்பவள் இல்லை. நர்மதாவாகச் சொல்லாமல், அவர்கள் விஷயத்தில் அவள் எப்போதும் தலையிட்டதில்லை. ஆனால், இன்றைக்கு ஏனோ அவளுக்கு மனது கேட்கவில்லை.
“உன் கல்யாணத்துக்காகத் தான் வந்தோம் வசு. உனக்கு அதுல எந்தச் சந்தேகமும் வேண்டாம். நீ எனக்கு… எங்களுக்கு ரொம்ப முக்கியமான ஆள் டா.” என்றவள்,
“அவர் லீவ் எடுத்தது உன் கல்யாணத்துக்காகத் தான். ஆனா, கிளம்பறதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே வீட்ல புயல் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு.” கண்களைச் சிமிட்டி, சிரமப்பட்டுக் கண்ணீரை உள்ளிழுக்க முயற்சித்தாள் நர்மதா. வசுமதி அவளின் கரத்தை அழுத்திக் கொடுத்தபடி அமைதியாய் இருக்க, அவள் தொடர்ந்தாள்.
“நரேனோட தம்பி சூர்யா இருக்கார் இல்ல, அவங்க வீட்டுக்கு அத்தையைக் கூப்பிட்டு இருக்காங்க”
“ஓ, அதுல என்ன இருக்கு? அண்ணா அவங்களை அனுப்பி இருக்கலாமே” என்றாள் வசுமதி.
“சூர்யா வைஃப் பிரக்னன்ட்டா இருக்கா வசு, நாலு மாசம். அதான், அவன் அத்தையை அபுதாபி அனுப்ப சொல்லி கேட்ருக்கான்” எதனால் சண்டை வந்திருக்கும், நர்மதாவை எது காயப்படுத்தி இருக்கும் என்று இப்போது வசுமதியால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
“அத்தை சும்மாவே ஆடுவாங்க, அவங்க காலில் சலங்கை கட்டி விட்டா… கேட்கவா வேணும்?” அலுப்பும், சலிப்புமாகச் சொன்னாள் நர்மதா.
“அந்த நியூஸ் கேட்டு நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா வசு? ஆனா ஒரே நிமிசத்தில எல்லாத்தையும்… ஒன்னுமே இல்லாம பண்ணிட்டாங்க அத்தை.”
வசுமதி மௌனமாய் அமர்ந்திருந்தாள்.
“அங்க ஒருத்தன் கல்யாணமாகி மூனே வருஷத்துல, ரெண்டாவது புள்ளை பெத்துக்கப் போறான். ஆனா இங்க முழுசா அஞ்சு வருஷம் ஆகியும் ஒரு புழு, பூச்சியையும் காணோம்.