பூமரப் பாவைகள் – 7 (2)

“எனக்குக் கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்கு வசும்மா. ரெண்டு, மூனு மெயிலிற்குப் பதில் அனுப்பணும்.” என்று அவள் முகம் பார்த்து, அவன் தயக்கத்துடன் சொல்ல,

“நீங்க லீவில் தானே இருக்கீங்க? அப்புறமும் என்ன ஆபீஸ் வேலை?” கேட்டாள் அவள்.

“என் அறிவாளி பொண்டாட்டியே, என் கல்யாணத்துக்கு எனக்கு மட்டும் தான் லீவ் கொடுப்பாங்க. ஒட்டு மொத்த பேங்குக்கும் லீவ் கிடையாது.” என்று அவன் கேலியாகச் சொல்ல, அவள் முகம் சிவந்தது.

“என் ஒருத்தனால எல்லாரோட வேலையும் பாதிக்கப்படக் கூடாது இல்லயா வசும்மா? ரெண்டே ரெண்டு மெயில், அப்புறம் ஒரு ஃபார்ம் சரி பார்த்து, சைன் பண்ணி அனுப்பணும்.”

“இப்பவே அனுப்பியாகனுமா?” என்று மட்டும் கேட்டாள். மனதிற்குள் வரிசையாய் நின்ற கேள்விகளைக் கேட்க அவளுக்கு நா எழுவில்லை.

“கட்டாயம் இல்ல தான், ஆனா எனக்கு இப்பவே அனுப்பத் தோணுதே, என்ன பண்ண?” என்று குறுஞ் சிரிப்புடன், புருவங்களை உயர்த்தினான் அவன். அவள் பதில் பேசாது அமைதியாய் படுத்திருந்தாள்.

“சின்ன வேலை தான் வசும்மா. ஆனா, அதை முடிச்சுட்டு நான் தூங்க டைம் எடுக்கும். அது வரை முழிச்சிருந்தா, உன் தலைவலி தான் அதிகமாகும். நீ தூங்கு டா, குட் நைட்” என்று சொல்லி விட்டு, அவள் புறம் திரும்பி கூடப் பார்க்காமல், இன்டர்நெட் கனெக்ட் செய்து, தன் வேலையில் கவனத்தைப் பதித்தான் அவன்.

வசுமதிக்கு கணவனின் அன்பும், அக்கறையும் மனதிற்கு இதமாக இருந்தது. அவளின் தலைவலி சற்றே குறைந்திருக்க, தூங்கத் தான் விரும்பினாள் அவள். ஆனால் புது இடத்தில் தூக்கம் வர மறுத்தது.

வெளியில் மழை வேறு அடித்து வெளுத்துக் கொண்டிருந்தது. இடியும், மின்னலும் போட்டி போட்டுக் கொண்டு அவ்விரவை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்தன.

அவள் போர்த்தி இருந்த கனமான கம்போர்ட்டையும் மீறி, மழையும், குளிருமாக இணைந்து அவளை நடுங்கச் செய்தது. தூங்க முடியாமல் அவள் புரண்டு கொண்டே இருப்பதைப் பார்த்த வாசு, லேப்டாப் சகிதமாக அவளருகில் வந்தவன், ஒரு தலையணையை எடுத்து, முதுகில் வைத்து, வசுமதியை ஓட்டிக் கொண்டு, சாய்ந்து அமர்ந்தான்.

அவனது ஒரு கை தன் போக்கில் லேப்டாப்பில் வேலை பார்க்க, மறு கை அவளின் நெற்றியை மெல்ல வருடிக் கொடுத்தது. நன்றாகக் குனிந்து, மென்மையாக அவள் உச்சியில் இதழ் பதித்து விலகினான் வாசுதேவன்.

மழை முத்தமிட, முத்தமிட மண் குளிர்வது போல, வசுமதியும் அவனது மென்மையான முத்தத்தில் குளிர்ந்து தான் போனாள்.

அவளுக்குப் பிடித்த இளையராஜாவை லேப்டாப்பில் இசைக்கத் செய்தான். அறையெங்கும் இசையும், மழையின் லயமும் நிறைந்து, அவளது உடலையும், மனதையும் தளரச் செய்தது.

அன்றைய நாளின் களைப்பும், தலைவலி மாத்திரையும் சேர்ந்து வேலை செய்ய, அவள் சிறிது நேரத்தில் எல்லாம் உலகம் மறந்து ஆழ்ந்த உறங்கத்திற்குச் சென்றிருந்தாள்.

மழைக்கு இதமாய்ப் போர்வைக்குள் சுருண்டு கொண்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை, அறைக்குள் தொடர்ந்து ஒலித்த மெல்லிய சத்தம் தொல்லை செய்ய, இமைகளைப் பிரிக்க முயற்சித்தாள் வசுமதி. அறை கண்ணைக் கூசச் செய்யும் இருளில் மூழ்கி இருந்தது. ஓரிரு முறை கண்ணை மூடி மூடித் திறந்து இருட்டுக்குக் கண்களைப் பழக்கினாள்.

“குட் மார்னிங் வசும்மா” என்றான் வாசுதேவன், கரகரத்த குரலில்,

“குட் மார்னிங்” என்று பதிலுக்குச் சொல்லியவள், மெல்ல கண்களைப் விட்டு உறக்கத்தைப் பிரிக்க முயன்றாள்.

“சாரி, எழுப்பி விட்டுட்டேனா?” என்றான் கண்கள் சுருங்க, லேசாகப் புன்னகைத்து.

காஃபி மேக்கரில் காபி போட்டுக் கொண்டிருந்தான், அந்தச் சத்தம் தான் அவளை எழுப்பி இருந்தது.

“ஆமா, ம்ஹூம்… இல்ல” என்றவள், படுக்கையில் லேசாகச் சாய்ந்து அமர்ந்து அவனை அண்ணாந்து பார்த்தாள். அந்த அதிகாலையிலும் எழுந்து, குளித்திருந்தான். புதிதாகப் பட்டு வேட்டி அதற்குப் பொருத்தமாக இளநீல வண்ண சட்டையும் அணிந்திருந்தான்.

“டைம் என்ன வாசு? எங்க கிளம்பிட்டீங்க? நான் தான் லேட்டா?” ஒரு கையால் போர்வையை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு, மறு கையால் கண்களைத் தேய்த்து விட்டாள். உறக்கம் சுமந்திருந்த அவளின் விழிகளும், மூளையும் வேலை செய்ய மறுத்தது.

“டைம் என்னவா? ஏழாகப் போகுது வசும்மா. நான் எங்கேயும் போகல. பழக்க தோஷத்தில் எழுந்ததும் குளிச்சேன். காஃபி போட போனேன், நீ எழுந்துட்ட… சாரி டா. நீ வேணா, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கேன். யூ லுக் டயர்ட்” என்றவனின் பார்வை அவளைக் கனிவுடன் வருடியது.

“அச்சோ, ஏழு மணியாகப் போகுதா? அப்போ நீங்க எப்ப எழுந்தீங்க? என்னையும் முன்னாடியே எழுப்பி இருக்கலாம் இல்ல..” என்று அவள் படபடக்க,

“ம்ம்ம், அதுவா வசும்மா, நான் எழுந்திருக்கும் போது… அப்போ ஒரு ரெண்டு மணி இருக்கும்.” அவன் குறும்பாய் சிரித்தபடி சொன்னான். வசுமதியின் முகச் சிவப்பு அவளது விரல்களின் மருதாணியுடன் போட்டிப் போட்டது.

“ஐயோ, காலையில எப்போ எழுந்தீங்க?” என்று அவள் மீண்டும் கேட்க,

“அதுவும் காலையில தான் வசும்மா” என்று அவன் ஒற்றைக் கண்ணடித்துப் புன்னகைக்க, வசுமதிக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கியது. அவள் முகம் பார்த்து அவன் மேலும் சிரிக்க, நொடியில் தன்னை மீட்டுக் கொண்டாள் வசுமதி.

“டவல் எங்க இருக்கு? கொஞ்சம் பார்த்து எடுத்துக் கொடுங்க வாசு, நானும் குளிச்சுட்டு வரேன்” என்றாள் அவள்.

“ம்ம்ம், என்ன கேட்ட வசும்மா?” என்றபடி அவளை நோக்கி வந்தான் அவன்.

“அது, அது.. குளிக்கணும்.. டவல்…” திக்கினாள்.

“எதுக்கு இப்படிப் பதறுற வசும்மா, ரிலாக்ஸ்” என்றபடி அவளை அவன் நெருங்க, போர்த்தி இருந்த கம்போர்ட்டரை அவளின் கை இறுக்கமாகப் பற்றியது. சட்டென்று உரக்கச் சிரித்தான் அவன்.

அவள் விழிகள் அவனை மிரட்சியுடன் நோக்க, தரையில் விரித்திருந்த மெத்தையில், அவளுக்கு மிக அருகில் மண்டியிட்டு அமர்ந்தான் வாசுதேவன்.

பொழுது புலர்ந்தும் கூட மழை விடாமல், தன் கச்சேரியை தொடர்ந்து கொண்டிருந்தது. மழையின் லயத்தை ஒத்திருந்தது, அவளின் இதயத் துடிப்பு.

“கல்யாணம், காதல் இதெல்லாம் இவ்வளவு இனிமையாக இருக்கும்னு எனக்குத் தெரியவே தெரியாது வசும்மா.” என்று அவன் கிறக்கமாய்ச் சொல்ல, விழிகள் வியப்பில் விரிய, கண்ணெடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் வசுமதி.

“நீயில்லாம எப்படி இத்தனை வருஷம் வாழ்ந்தேன்னே, எனக்குத் தெரியல வசும்மா” என்று வாசு, அவள் முகம் பற்றிக் கிசுகிசுக்க,

“ஹவ் சீஸ்ஸி வாசு. கல்யாணம் முடிஞ்சதும், அதுவும் மறுநாளே… இப்படித் தான் வசனம் பேசுவாங்களா?” என்றாள் அவள், லேசாகச் சிரித்து,

“தெரியலையே வசும்மா, நான் இப்படி எல்லாம் பேசுவேன்னு எனக்கே இப்ப தான் தெரியும்” என்று அவன் அப்பாவியாகச் சொல்ல, இருவரின் சிரிப்பும் அறையை நிறைத்தது.

“பிளீஸ், டவல் மட்டும் எடுத்துக் கொடுங்க வாசு. குளிச்சு, கிளம்பனும். அங்க வீட்ல எல்லோரும் நம்மைத் தேடப் போறாங்க” படபடத்தாள் வசுமதி. அவள் குரலில் இருந்த அவசரத்தை அவன் கண்டு கொள்ளவேயில்லை.

“ம்ப்ச், எப்பப் பாரு. அவங்க என்ன சொல்லுவாங்க, இவங்க என்ன நினைப்பாங்க. இதே கவலை தானா உனக்கு? எல்லோரையும் விட்டுத் தள்ளு. எதுவும் முக்கியமில்லை இங்கே. நீயும், நானும், இந்த நொடியும்…

உன்னைச் சிலிர்க்க வைக்கும் இந்த மழையும், என்னைச் சிலிர்க்க வைக்கும் நீயும் தான் முக்கியம் வசும்மா. மத்த எல்லாம் வெயிட் பண்ணட்டும். லெட்ஸ் லிவ்.. இல்ல, லெட்ஸ் லவ் இன் திஸ் மோமெண்ட்” என்றபடியே அவள் தலைக் கோதி, முகம் வருடின அவன் விரல்கள்.

மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, சிலிர்ப்பு என அனைத்து உணர்ச்சிகளும் அவளை ஒரு சேரத் தாக்க, தப்பிக்கும் வழி தெரியாமல் அவனை வெறித்தாள் அவள்.

“நான், நான்..” என்று அவள் படபடக்க,

“நீ வசுமதி. என் வசும்மா. இந்த வாசுதேவனின், வசுமதி.” என்றவன் தொடர்ந்து,

“இந்த அழகான வசுவின், வாசு நான்” என்று இருவரையும் தொட்டுக் காண்பித்துக் கிசுகிசுப்பாகச் சொன்னான். அந்த வார்த்தைகளும், குரலும் அவளுள் ஏதேதோ மாயங்கள் செய்து அவளை மயக்கியது.

தன் வாழ்க்கையின் புதியதொரு அத்தியாயத்தின் தொடக்கம், இத்தனை இனிமையானதாய் இருக்கும் என்று வசுமதி எதிர்பார்க்கவே இல்லை. பெரிதாகக் கல்யாண கனவுகள் ஏதும் இன்றித் தான், அவள் ஊருக்கு வந்தது. ஆனால், வாசு அவளின் கனவுகளுக்கு எல்லாம் அப்பாற் பட்டவனாக இருந்தான்.

மழையில் நனைந்து அதன் ஆதிக்கம் தாங்காமல், மெல்ல தரையில் விழும் மலரைப் போல, வசுமதியின் மனம் வாசுவின் பக்கமாக நழுவப் பார்த்தது.

அவனருகில் துளித்துளியாய் உயிர் பெற்றுக் கொண்டிருந்தாள் வசுமதி.

“வாசு…” என்று மெல்லிய குரலில் அழைத்தாள்.

“உனக்கு நான் சொல்றது புரியுதா வசும்மா?”

“ஹ்ம்ம் கொஞ்சம்…”

“கொஞ்சமா? சுத்தம்” என்று சலித்துக் கொண்டவன், “உனக்குப் புரியலை இல்ல வசும்மா. நீ எனக்கு…” என்று நிறுத்தியவன், பின் நிதானமாகச் சொன்னான்.

“என்ன தான் வானம் முழுக்க லட்சம், கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் கூட ஒற்றை நிலா தானே ஸ்பெஷல்? நீ என் வானம் மட்டுமில்ல, என் ஒற்றை நிலவும் நீ தான் வசும்மா.” அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டுச் சொன்னான் அவன்.

வசுமதிக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தவனின் கழுத்தை பூ மாலையெனச் சுற்றியது அவள் கரங்கள். அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் வாசு.

அதுவரை அவர்களுக்கு நடுவில் கசங்கிக் கொண்டிருந்த போர்வை காணாமல் போக, அடை மழைக்கு இதமாய் அவளின் போர்வையானான் அவன்.

அவனிடம் ஓயாது பேசிக் கொண்டிருந்த அவள் விழிகளில் மென்மையாக இதழ் பதித்தான், அவளது இமைகள் தானாக மூடியது.

“வசும்மா..” கனிவும், காதலும் மிகுந்த குரலில் மெல்ல அழைத்தான். அதில் முழுதாக அவனிடம் சரணடைந்தாள் அவள்.

அவன் கைகளில் பாகாய் கரைந்து, மெழுகாய் உருகி, அவனானாள் வசுமதி.

மொழிகள் அனைத்தும் மறந்து, வார்த்தைகளுக்குப் பஞ்சமாகி போக இதழ்களால் அவளைப் புகழ்ந்து, கொண்டாடினான் அவன். முத்தத்தில் தொடங்கிய தாம்பத்யத்தை முத்தத்தால் முடித்து வைத்தான் வாசுதேவன்.

error: Content is protected !!
Scroll to Top