இரண்டடுக்கில் கம்பீரமாக நின்ற அந்த வீட்டை பார்த்ததுமே வசுமதிக்கு மிகவும் பிடித்துப் போனது. இந்தப் புது வீடு குறித்து முன்னரே அவளிடம் சொல்லி இருக்கிறான் தான், ஆனால் அவள் இன்று தான் நேரில் பார்க்கிறாள். பழமையும், புதுமையும் கலந்து பிரம்மாண்டமாகக் கட்டியிருந்தனர். வீட்டின் நிறமும் கண்ணைப் பறிக்கும் விதமாக இல்லாமல், அவளுக்கு மிகப் பிடித்த இளவர்ணங்களே பூசப் பட்டிருந்தது,
வீட்டை சுற்றிலும் அரணாக நின்றிருந்தன பல வகையான மரங்கள். வீட்டின் முன் பகுதியை ஆக்கிரமித்திருந்தது பெரிய பூந்தோட்டம். பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த தோட்டத்தைப் பார்க்கவே கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது.
“என்ன பேச்சையே காணோம் வசும்மா?” என்றான் வாசு.
“எனக்கு அந்த வீடு தான் பிடிச்சிருக்கு” கண்களால் அதே தெருவில் இருந்த அவர்களின் மற்றொரு வீட்டைக் காட்டியபடி சொன்னாள் வசுமதி.
“எனக்கும் தான் வசும்மா, ஆனா என்ன பண்றது. இனி, இது தான் நம்ம வீடு” என்றான் உதடு மடித்து, சிரிப்பை மறைத்தபடி,
“அந்த வீடு தான்…” என்று அவள் சொல்லத் தொடங்க,
“ஐ கெட் இட் வசு. எனக்குப் புரிஞ்சுது. உங்க அப்பா வீடு போல, எங்கப்பா வீடும் உனக்குப் பிடிச்சிருக்கு. அப்படித் தானே?” என்றான் அவன்.
“இல்லையே, நான் அப்படிச் சொல்லலையே”
“ஆனா, நான் அப்படித் தான் புரிஞ்சுக்கிட்டேன்” என்றான் கண்களில் குறும்பு மின்ன,
“ச்சே, கோபப்பட மாட்டீங்களா? திட்ட மாட்டீங்களா?, சண்டை போட மாட்டீங்களா?, எல்லாக் கேள்விக்கும் பதில் ரெடியா, பாக்கெட்டிலேயே வச்சுருப்பீங்களா?” என்று அவள் அலுத்துக் கொள்ள, பக்கென்று சிரித்து விட்டான் அவன்.
“சண்டை தானே, கொஞ்ச நேரம் கழிச்சு நல்லா சண்டை போடலாம். இப்ப என் கூட வா” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றான் அவன். ஹாலை அடுத்து இருந்த படுக்கையறை கதவை திறந்தான். அடுத்தக் கணம் பூக்களின் மணமும், செண்டட் கேண்டிலின் வாசமும் அழுத்தமாய் அவர்கள் முகத்தில் மோதியது. அந்த அறையின் அதீத அலங்காரத்தைப் பார்த்து, தடுமாறி காலை மீண்டும் பின்னே வைத்தாள் வசுமதி.
“இதெல்லாம்..” கேள்வியை முடிக்க முடியாமல், பாதியில் நிறுத்தினாள் அவள்.
“எங்க அண்ணனோட வேலை தான், அண்ணி ஹெல்ப் பண்ணி இருப்பாங்க. வேற யாரு இதெல்லாம் செய்வா?” என்றான் அவன்.
“அவரா? அப்போ நாம வரும் போது ஏன், அப்படி வழியை மறிச்சுக்கிட்டு நின்னார்?” என்றாள் புருவம் சுருக்கி குழப்பத்துடன்,
“அது சும்மா, விளையாட்டுக்கு பண்ணான் வசு.” என்றவன், “சரி, நீ போய் ஃப்ரெஷாகிட்டு வா. நான் இந்த ரூமை சரி பண்ணி வைக்கறேன்” என்று அவளைப் பாத்ரூமை நோக்கி நகர்த்தி விட்டு, வேலையில் இறங்கினான் அவன்.
ஒரு பையில் இருவருக்குமான உடைகள் தாயாராக எடுத்து வந்திருந்தான். தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற வசுமதி, பத்து நிமிடம் கழித்து, குளித்து, உடை மாற்றி, வெளியில் வந்த போது, அறையில் இருந்த பூக்கள் எல்லாம் காணாமல் போயிருந்தது. ஆனால், அவற்றின் வாசம் மட்டும் அறையை நிறைத்திருந்தது.
“இப்படி உட்காரு வசும்மா” என்று அவளைத் தரையில் விரித்திருந்த படுக்கையில் அமரச் செய்தான்.
“எனக்குப் பசிக்கல வசும்மா, அதனால இப்போ நீ மட்டும் சாப்பிடு. என்ன?” எனச் சொல்லியபடியே, அருகில் இருந்த டேபிளில் இருந்து இரண்டு ஹாட் ஹாட் பாக்ஸை திறந்தான்.
இட்டிலியும், சாம்பாரும் இருந்தது. அதில் கூடவே வைக்கப் பட்டிருந்த, தட்டை எடுத்து அவளுக்கு உணவைப் பரிமாறி அவள் முன் நீட்டினான்.
“இல்ல. நீங்க சாப்பிடும் போது நானும்…” அவள் மறுக்கத் தொடங்கும் போதே, அவளை இடைவெட்டினான் அவன்.
“சாப்பிடு வசு. நீ மதியமும் ஒழுங்கா சாப்பிடலை. தலை வலிக்கு அதுவும் கூட ஒரு காரணமா இருக்கும்” என்றபடி தட்டை அவளின் கையில் வைத்து அழுத்தினான்.
வேறு வழியின்றி, மூன்று இட்டிலிகளை அமைதியாக உண்டு முடித்தவளின் கையில் தலைவலிக்கான மாத்திரையைக் கொடுத்து விழுங்கச் செய்தான்.
“ஃபிளாஷ்க்கில் காஃபி இருக்கு வசும்மா, இப்போ சூடா குடிக்கறியா? இல்ல தூங்கி எழுந்ததுக்கு அப்புறம் குடிக்கறியா?”
“இப்போ வேண்டாம் வாசு. அப்புறமா, நீங்க சாப்பிடும் போது குடிக்கறேனே” என்றாள் அவள். உணவும், மாத்திரையும் உள்ளே செல்லவும் தான், அவளுக்கு உயிர் மீண்டது போலிருந்தது.
“ஓகே, ரைட்” என்றவன், அவளுக்குத் தலையணையைச் சரி செய்து கொடுத்தான்.
மனதுக்குள் மிக மென்மையான, சற்றே இதமான வெம்மையுடனான உணர்வு பரவுவதை அந்தக் குளிரிலும் அவளால் நன்கு உணர முடிந்தது.
“சரி, நீ தூங்கு வசு” என்றவன், எழுந்து கப்போர்டை திறந்து அவளுக்குக் கம்போர்டர் எடுத்துக் கொடுத்தான்.
வாசு வெகு இயல்பாக நடந்து கொண்டாலும் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. ஏனோ இனம் புரியாத படபடப்பு இதயத்தில்… அவன் நீட்டிய கம்போர்ட்டரை அவன் முகம் பார்க்காமல் வாங்கியவள், கழுத்து வரை இழுத்துப் போர்த்தி, கண்களை மூடினாள் வசுமதி.
ஆனால், தூக்கம் வருவேனா என்று விலகியே நின்று அவளுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. அப்போது தான் திடீரென்று நினைவு வந்தவளாக, “அச்சோ வாசு, வீட்ல யார்கிட்டேயும் சொல்லிக்காம இங்க வந்துட்டோம். எங்க அப்பா, அம்மா… அத்தை, மாமாலாம் என்ன நினைப்பாங்க? நம்மைத் தேடப் போறாங்க” என்று பதறினாள் வசுமதி.
படுக்கைக்கு அருகில் இருந்த டேபிளில் தனது லேப்டாப்பை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் வாசு. அவளது கேள்வியில் திரும்பி அவளைப் பார்த்துச் சன்னமாகச் சிரித்தவன்,
“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க, நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன்” என்றான் சாதாரணமாக,
“என்ன சொன்னீங்க?” என்றாள் அவள் பதட்டத்துடன்,
“என்ன சொல்லி இருப்பேன்னு நினைக்கற வசும்மா?” என்றான் புருவம் உயர்த்திக் குறும்பாக,
“ம்ப்ச், சொல்லுங்க வாசு” சிணுங்கினாள்.
“காலைல இருந்து நீங்க எல்லாம் சேர்ந்து படுத்தின பாட்டில, என் பொண்டாட்டிக்கு தாங்க முடியாத தலை வலி. அதுவும் இல்லாம, உங்க வீட்ல ஒரே கூட்டமா வேற இருக்குது. அதனால நான் அவளை, என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வந்தேன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் அவன். ஆனால் அவளுக்குத் தான் பதறியது.
“ஐயோ வாசு, பெரியவங்க கிட்ட அப்படியா சொல்வாங்க? அத்தை தப்பா எடுத்துக்கப் போறாங்க. நான் வேற அவங்ககிட்ட சொல்லிக்காம வந்துட்டேன்” மிரண்டாள் அவள்.
“அடடே வசும்மா, கூல் டவுன். எல்லோரும் நம்ம வீட்டு ஆளுங்க தான். யாரும், யாரையும் தப்பா நினைக்க மாட்டாங்க. ரொம்ப யோசிச்சு குழப்பிக்காம தூங்கு. இப்படிப் பேசிட்டே இருந்தா, தலைவலி இன்னைக்குள்ள குறையாது” என்றான் அவன்.
“நிஜமா அத்தை, மாமா கோவிச்சுக்க மாட்டாங்க தானே வாசு?” என்று அவள் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க,
“என் டியூப் லைட் பொண்டாட்டி வசும்மா. அம்மாவும், அக்காவும் தான் இட்லி, காஃபி எல்லாம் பேக் பண்ணி கொடுத்தாங்க. உங்கம்மாவும் அங்க தான் இருந்தாங்க. அவங்க கிட்டயும் சொல்லியாச்சு. வெயிட், வெயிட்.. நான் சொல்லலை, அக்கா தான் சொன்னா…சோ, கண்ணை உருட்டாத…” அவளது முகத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தவன், சிரித்துக் கொண்டே சொன்னான்.
“அப்புறம் எங்க அண்ணன் தான் நமக்காக வீட்டை ரெடி பண்ணான். அண்ணியும் அவன் கூட இருந்தாங்க. சோ, அவங்க ரெண்டு பேருக்கும் தெரியும். ஹ்ம்ம், வேற யாரையாவது விட்டுட்டேனா?” என்று அவன் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள் வசுமதி.
“நம்ம வீட்ல பெருசா பார்மலிட்டி எல்லாம் பார்க்க மாட்டோம் வசும்மா. உனக்கு ஆசிர்வாதம் வாங்கணும்னா சொல்லு, இப்பவே கூட்டிட்டு போறேன். போய், தேடிப் பிடிச்சு எல்லார் கிட்டயும், ஆசிர்வாதம் வாங்கிட்டு பொறுமையா வா” என்று அவன் சொல்ல, வசுமதி சத்தமாகச் சிரித்து விட்டாள். அதில் அவனது முகம் தானாக மலர்ந்தது.
“இங்க என்ன போருக்கா போறாங்க?” என்று அவன் முணுமுணுக்க, அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த வசுமதியின் காதில் அது தெளிவாக விழுந்தது. வெடித்து வெளி வரவிருந்த சிரிப்பை, மிகவும் சிரமப்பட்டுத் தடுத்து நிறுத்தினாள் அவள்.
“ஊரையே கூப்பிட்டு நடுவீட்ல உட்கார வச்சுருக்கானுங்க, அங்க நாம எப்படி இயல்பா இருக்க முடியும்?” என்று கடுப்பாகச் சொன்னான் அவன். அவளால், அவனது மனநிலையை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது. வருண் திருமணத்தின் போது தன் வீடும் அப்படித் தான் இருந்தது என்பதும் அவளின் நினைவில் வந்து சென்றது.
ஆனால், இன்று அத்தனை புது முகங்கள் நிறைந்திருந்த வீட்டில், தன்னாலுமே இயல்பாக இருந்திருக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது. கண்கள் அடக்கப்பட்ட சிரிப்பில் மின்ன அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.