அவன் விரல்கள் தோகையென விரிந்திருந்த அவளின் கூந்தலில் நுழைந்து மெல்லக் கோதிக் கொடுத்தது. அச்சுகத்தில் வசுமதிக்குக் கண்கள் சொருகியது. மெல்ல நகர்ந்து அவன் விரல்கள், அவளது நெற்றிப் பொட்டை மென்மையாக அழுத்திக் கொடுத்தது. அது வரை தலைவலியால் துடித்துக் கொண்டிருந்தவளுக்கு அது பெரும் இதமாக இருந்தது.
காற்றின் வேகத்திற்கு அடிபணிந்து அனிச்சையாய் உதிர்ந்து விழும் மலரைப் போல, அவனது அன்பில் மகிழ்ந்து அவள் மனம், அவன் புறமாய்ச் சாயத் தொடங்கியது.
“நீ முகம் கழுவி, ரெப்ரஷ் பண்ணிக்கோ வசு. நான் இதோ அஞ்சு நிமிசத்தில வந்திடுறேன்” என்று விலகி, அறையை விட்டு வெளியேறினான் வாசு.
அவள் முகம் கழுவி, தளர்வாகப் பின்னலிட்டு தலை வாரி முடிப்பதற்கும், அவன் அறைக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
“பீலிங் பெட்டர்?” என்றான் அவள் முகம் பார்த்து,
“ம்ம்ம்..” என்றாள் வசுமதி. ஏனெனில் இன்னமும் அவளுக்குத் தலை வலிக்கத் தான் செய்தது.
அவளுக்கு அம்மாவை தேடியது. அவரின் மடியில் தலை வைத்து படுத்து, நன்றாக உறங்க வேண்டும் போலிருந்தது. புது வீடும், புது உறவுகளும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல அவளைக் கலவரமூட்டின. வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்க, கீழிறங்கி போகவே அவளுக்குச் சங்கடமாக இருந்தது.
“வா, வசு போகலாம்..” என்று அவன், வசுமதியின் கையைப் பிடித்து, அறையின் வாயிலை நோக்கி நகர,
‘எங்க போறோம்?’ என்று அவனிடம் கேட்க நினைத்தாள், ஆனால் தயக்கமாக இருந்தது அவளுக்கு.
“வாசு” என்று மெல்ல அழைத்தாள்.
“ம்ப்ச், கொஞ்ச நேரம் பேசாம வா. யார் கண்ணுலையும் படாம தப்பிச்சு போகணும்” என்று படிகளில் இறங்கிக் கொண்டே ரகசியம் பேசினான் அவன். இப்போது என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளுக்கு அதிகரித்தது. மாலை ஏழு மணி என்றது சுவர் கடிகாரம். வீடு வண்ண விளக்குகளால் பகல் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“வாசு” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழைத்தாள்.
“இதோ பக்கத்தில வந்தாச்சு வசு, இப்ப சொல்லு, என்ன கேட்கணும்?” என்றான், அவள் புறமாகத் திரும்பி, வீட்டின் முன் பக்கம் வந்திருந்தனர். அவளது பதிலுக்காகக் காத்திருக்காமல் கேட்டை திறந்து கொண்டிருந்தான் வாசு. அவனின் நல்ல நேரமாக வீட்டுக்கு வெளியில் அந்நேரம் யாரும் இல்லை.
“அது வந்து…” என்று அவள் தடுமாற,
“டேய் வாசு, வண்டி வேணுமா? கார் எடுத்துட்டு போறியா?” திடீரென்று பின் புறமிருந்து கேட்ட குரலில், திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர் இருவரும். வாசுவின் அண்ணன், மாதவன் நின்றிருந்தான்.
“என்னடா வேணும் உனக்கு?” எரிந்து விழுந்தான் வாசுதேவன்.
“டேய், எவ்வளவு அக்கறையா கேட்கறேன். அதுக்குப் போய்க் கோவிச்சுக்கற” என்றான் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டியபடி, ‘ஆமா, ஏன் கோபப்படுறான்?’ என்று காரணம் புரியாமல் கணவனை ஏறிட்டாள் வசுமதி.
“உன் அக்கறையை நீயே வச்சுக்கோ, இப்போ எங்களை ஆளை விடு, போதும்” என்று அவனிடம் மேலும் எகிறினான் வாசுதேவன்.
“அதெப்படி விட முடியும்? ஒழுங்கா வீட்டுக்குள்ள போடா, அம்மா தேடப் போறாங்க” என்றான் மாதவன் கண்டிப்பாக. அண்ணனும், தம்பியும் எதற்காக வார்த்தை போரில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது விளங்காமல் இருவரையும் குழப்பத்துடன் மாறி மாறி பார்த்தாள் அவள். ஆனால், இருவருமே அவளைக் கவனிக்கவில்லை.
இரண்டு எட்டுகள் எடுத்து வைத்து, கணவனின் அருகில் நெருங்கி நின்றாள் வசுமதி. முகம் கழுவும் போது பட்டுச் சேலையின் கனமும், இறுக்கமும் தாங்காமல், சேலையை லேசாக நெகிழ்த்தி விட்டிருந்தாள். அது நேரம் காலம் தெரியாமல், இப்போது நழுவ பார்த்தது. அவனது கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்ப, அவன் கைப் பற்றி மெல்ல சுரண்டினாள். இப்போது அவளைத் திரும்பி பார்த்து விட்டு, மீண்டும் தன் அண்ணனிடம் பாய்ந்தான் அவன்.
“அம்மா, அப்பா, அக்கானு எல்லோர் கிட்டயும் சொல்லியாச்சு. சொந்தக்காரங்க எவனாவது, அதுவும், முக்கியமா உன் மாமியார்… பார்க்கறதுக்கு முன்னாடி போகணும். உன் கேள்விக்கு எல்லாம் நாளைக்கு வந்து பொறுமையா, விளக்கமா பதில் சொல்றேன். இப்போ ஆளை விடு” என்று அங்கிருந்து நகர்வதிலேயே குறியாக இருந்தான் வாசு.
“என்னடா அவசரம் உனக்கு, நான் உன் அண்ணன் டா, கொஞ்சமாவது மரியாதை கொடுத்து பேசுறியா? இதுல என் மாமியாரை வேற இழுக்கற…” தம்பியின் அருகில் வந்து கோபமாகக் கேட்டான் மாதவன்.
வாசுதேவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. ஆனால், வசுமதிக்கு தான் சங்கடமாக இருந்தது. அவளின் தலைவலி இப்போது வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. எரிச்சலாக வேறு வந்தது, “ரெண்டு பேரும் வாயை மூடுங்க, சின்னப் புள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு..” என்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
அவளின் எண்ணவோட்டம் புரிந்தது போல, சட்டென்று திரும்பி அவள் முகம் பார்த்தான் வாசு.
“அண்ணா, எங்களை ஆசிர்வாதம் பண்ணு ண்ணா” என்றவன், மாதவன் எதிர்பார்க்காத நொடியில், வசுமதியின் கைப் பற்றி, அவளையும் சேர்த்து தன்னோடு இழுத்து, மாதவனின் காலில் விழப் போனான்.
“டேய், டேய், டேய், என்னடா பண்றா?” பதறி அடித்து விலகி நின்றான் மாதவன். அவன் முகம் பார்த்துச் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான் வாசு, வசுமதிக்கும் கூடச் சிரிப்பு வந்தது. ஏன், மாதவனே தம்பி அடித்த ஸ்டண்ட்டில் சிரித்து விட்டான் தான்.
“பின்ன என்ன? ஒரு அளவில்லாம, ரொம்ப ஓவரா போய்கிட்டு இருக்க நீ” என்ற வாசுவின் கண்கள் மாதவனை முறைத்துக் கொண்டிருந்தது.
“சாரி டா, சும்மா கலாட்டா பண்ணேன். நீ தப்பா எடுத்துக்காத வசுமதி” என்று அவளைப் பார்த்து சொன்னவன், தம்பியின் பக்கம் திரும்பி, “ஆனா, நான் சீரியஸா தான் கேட்டேன் டா. காரா, வண்டியா? எது வேணும்?” என்றான் சிரித்துக் கொண்டே,
“டேய் அண்ணா, ஏன் டா இப்படிக் கொடுமைப் படுத்தற? இந்தா இருக்க வீட்டுக்கு எங்களால நடந்தே போக முடியும் டா” என்றான் வாசு, சலித்துக் கொண்டே,
அவனை மேலும் சோதிக்க விரும்பாத மாதவன்,
“சரி சரி, போயிட்டு வா. பை டா வாசு, பை வசுமதி மா” என்றான் புன்னகையுடன், அவர்களுக்காகக் கேட்டை நன்றாகத் திறந்தும் வைத்தான்.
“பை மாமா” என்றாள் வசுமதி. தம்பியின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு, கேட்டில் சாய்ந்து நின்று அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.
“சாரி வசும்மா, அண்ணா எப்பவும் அப்படித் தான். பயந்துட்டியா?” என்றான் வாசு நடந்து கொண்டே, காலை தட்டிய சேலையை லேசாக உயர்த்திப் பிடித்தபடி நடந்தாள் வசுமதி.
அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முதலில் தன்னை எங்கே கூட்டிச் செல்கிறான், அதுவும் நடக்க வைத்து என்று யோசித்தது அவள் மனம். வீட்டில் என்ன சொன்னான்? எப்படிப் போக விட்டார்கள்? என்று பல கேள்விகள் குறுக்கும், நெடுக்குமாக அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. மூளையின் வேலை பளு அதிகரிக்க, தலைவலியும் அதிகரித்தது.
“இல்ல, பயப்படலை..” என்று இடவலமாகத் தலையசைத்தாள் வசுமதி.
“எங்க கூட்டிட்டு போறீங்க? இப்படி நாம தனியா போனா, பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க?” அவனுக்கு ஈடு கொடுத்து, கவனமாக நடந்தபடியே கேட்டாள் அவள்.
“ஹ்ம்ம், என்னவேனா நினைச்சிட்டு போறானுங்க, அதையெல்லாம் அப்படியே கண்டுக்காம விட்டுடனும்” என்றான் வாசு. அவன் சொன்ன தொனியே, அவளை மேற்கொண்டு கேள்வி கேட்க விடவில்லை.
“என்னை மாமான்னு எல்லாம் கூப்பிட்டு, எனக்கு நெஞ்சு வலி வர வச்சுடாத வசும்மா” என்றான் திடீரென்று அவள் முகம் பார்த்துத் தீவிரமான குரலில்,
“என்னது? என்ன சொன்னீங்க?”
“இப்போ எங்கண்ணனை சொன்னியே மாமான்னு, அது போல என்னைக் கூப்பிட்டுடாதன்னு சொன்னேன்” என்றான் மீண்டும்,
“அப்பாடா, தப்பிச்சேன்” என்றாள் வசுமதி, பெருமூச்சொன்றை வெளியிட்டபடி, “அது உறவு முறைக்குச் சொல்றது. பயப்படாதீங்க, உங்களை அப்படி எல்லாம் கூப்பிட மாட்டேன், வாசு” என்றாள் உதடு சுழித்து, அதைக் கண்டு உரக்கச் சிரித்தான் வாசுதேவன்.
அவ்வளவு நேரம் இருந்த வானிலை மாறி, சட்டென்று குளிர் காற்று வீசத் தொடங்கியது. மழை வரும் போலிருந்தது. அதே தெருவில் இருந்த வாசுவின் வீட்டிற்குத் தான் சென்று கொண்டிருந்தார்கள். புத்தம் புதிய வீடு, கிரகப் பிரவேசம் செய்திருந்தனர். ஆனாலும், சில உள்வேலைகள் மட்டும் முடிக்கப் படாமலிருக்க, இன்னும் குடி வரவில்லை அவர்கள்.
அடுத்த இரண்டாம் நிமிடம் அவர்கள் வீட்டை அடைய, கேட்டை திறந்து உள்ளே நுழைந்தனர்.
“வெல்கம் ஹோம் வசும்மா, நம்ம புது வீடு” என்று கையை விரித்துச் சொன்னவன், “ஒருவேளை பியூட்சர்ல நாம, இங்க வந்து செட்டிலானா, அது இந்த வீடா தான் இருக்கும். இப்போ நாம இருக்க, அந்த வீடு அண்ணாக்கு..” என்றான், வீட்டின் கதவை நன்றாக விரியத் திறந்து, அவள் உள்ளே வருவதற்கு வழி விட்டபடி, வலது காலை முதலில் வைத்து உள்ளே சென்றாள் வசுமதி.
புது வீட்டிற்கே உரிய பளபளப்புடன், பளிச்சென்று அழகாக இருந்தது வீடு. அவள் தோளில் கைப் போட்டு மென்மையாக அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி, வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் வாசுதேவன்.