பூமரப் பாவைகள் – 6 (1)

ஆளுயர கண்ணாடியின் முன் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து, அதில் தெரிந்த பிம்பத்தை மீண்டும் ஒரு முறை விழிகள் விரித்துப் பார்த்தாள் வசுமதி.

சரிகை வேலைப்பாடுகள் மிகுந்த, இளஞ்சிவப்பு நிற கனமான காஞ்சிபுரப் பட்டு அவளின் உடலை தழுவியிருந்தது. அந்தப் பட்டிற்குப் பொருத்தமாக அவள் அணிந்திருந்த பொன் நகைகள், சேலையின் பொன் சரிகையுடன் போட்டி போட்டுக் கொண்டு மின்னியது.

மல்லியும், ரோஜாவும் இடை வரை நீண்ட அவளின் கூந்தலை அலங்காரமாகச் சுற்றியிருந்தது. ஆனால், இவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியது புத்தம் புதிதாக, அன்று காலை அவள் கழுத்தில் குடியேறி இருந்த திருமாங்கல்யம். நெற்றிக் குங்குமம் முகத்திற்குத் தனிச் சோபையைத் தர, மணப் பெண்ணுக்கே உரிய பொலிவுடன் இருந்தாள் அவள்.

சரியாகப் பதினைந்து நாட்களுக்கு முன்பு, வசுமதியிடம் மிக விரைவில் உனக்குத் திருமணமாகி விடும் என்று யாரேனும் சொல்லி இருந்தால், அவர்களைக் கேலி செய்து சத்தமாகச் சிரித்திருப்பாள். ஆனால், இதோ இன்று காலை அவர்களின் திருமணம் உற்றம், சுற்றம் சூழ விமரிசையாக நடந்து முடிந்திருந்தது.

கண்ணாடியில் தெரிந்த அழகு பிம்பத்தில் லயித்திருந்தவளின் பின்னால் நிழலாடியது. அதில் கலைந்தவள், கண்ணாடியை உற்றுக் நோக்க, அவள் முகம் மறைந்து கணவன் வாசுதேவனின் முகம் தெரிந்தது. அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.

பட்டு வேட்டி, சட்டையில் உயரமாகத் தெரிந்தான். கழுத்தில் மெல்லிய தங்கச் சங்கிலி மின்ன, இடது கையில் கடிகாரம், வலது கையில் கனமான கைச் சங்கிலி எனப் பார்க்க புது மாப்பிள்ளைக்கே உரிய கவர்ச்சியுடன் வெகு கம்பீரமாக இருந்தான் அவன்.

மெல்ல அவனை நோக்கித் திரும்பினாள் வசுமதி.

“உன்னைப் பார்க்க, உங்க அண்ணா, அண்ணி வந்திருக்காங்க வசு” அவளை நெருங்கி நின்று சொன்னான் அவன்.

சடங்கு, சம்பிரதாயங்கள் எனக் கல்யாண பரபரப்பு எல்லாம் முடிந்து அப்போது தான், அவர்கள் வீடு வந்திருந்தனர். அவளது வீட்டில் இருந்து திரும்ப அழைத்து வருகையில், வருண் தான் கார் ஓட்டிக் கொண்டு வந்தான். அதனால் கணவன் யாரை சொல்கிறான் என்ற கேள்வி கண்ணில் தொக்கி நிற்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“ஓ, சாரி வசும்மா. நர்மதா, நரேன்னு பேர் சொன்னாங்க” என்றான் விளக்கமாக, மகிழ்ச்சியில் மனம் துள்ள, பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் வசுமதி.

“அண்ணி, அண்ணா…வாங்க, வாங்க…” என்று அடுத்த நிமிடம் அறைக்குள் நுழைந்தவர்களை முகம் நிறைந்த புன்னகையுடன் ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள் வசுமதி. பட்டுப் புடவை தடுத்ததையும் மீறி வேகமாக நடந்து, அவர்கள் அருகில் சென்றாள். நர்மதா அவளைத் தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

வசுமதிக்கு அவர்களைப் பார்க்கவே அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் தனக்காக விடுமுறை எடுத்துத் துபாயில் இருந்து வருவார்கள் என்று அவள் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. நிச்சயம் அவளுக்கு இது இன்ப அதிர்ச்சி தான்.

“வாவ், வாழ்த்துகள் வசும்மா. குட்டிப் பொண்ணே, எவ்வளவு அழகா இருக்கத் தெரியுமா?” என்றாள் நர்மதா, வசுமதியின் கன்னத்தில் இதழ் பதித்து.

“சாரி வசு, காலையில முகூர்த்ததிற்கு வர முடியல. காலைல தான் அங்கருந்து கிளம்பினோம்.” என்றான் நரேன் வருத்தத்துடன்,

“என்ன அண்ணா, சாரி எல்லாம் கேட்கறீங்க. நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் மெனக்கெட்டு எனக்காக வந்ததே, எவ்வளவு சந்தோசமா இருக்கு, தெரியுமா?” என்று மெய்யான மகிழ்ச்சியுடன் சொன்னாள் வசுமதி.

“ரெண்டு, மூனு நாள் லீவ் எடுக்கறது பெரிய விஷயமா டா வசு? என் தங்கச்சி கல்யாணத்தை எப்படி மிஸ் பண்ணுவேன் நான்?” அவள் முகம் பார்த்து மென்மையாகக் கேட்டான் நரேன்.

“உனக்குச் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு தான், உன்கிட்ட நாங்க வர்றதை சொல்லலை டா” என்றாள் நர்மதா.

“தாங்க்ஸ் அண்ணி, ஐ லவ்டு யுவர் சர்ப்ரைஸ்” கண்கள் மின்ன சொன்னாள் வசுமதி.

“வாசு, இது நரேன் அண்ணா, நர்மதா அண்ணி. துபாயில் நம்ம குடும்பம்” என்றாள் கணவனிடம், அவர்களை அறிமுகப்படுத்தி,

“ஹலோ வாசு, வாழ்த்துகள். எங்க வசுமதியை….” என்று நரேனும், வாசுவும் பேசத் தொடங்க, வசுமதி நர்மதாவின் பக்கம் திரும்பினாள்.

“எப்படி இருக்கீங்க அண்ணி?” என்றாள் நர்மதாவின் கையைப் பிடித்து,

“நல்லா இருக்கேன் வசு.” என்று அவளின் கண்களைப் பார்க்காமல் பதில் அளித்த நர்மதா,

“வாழ்த்துக்கள் வசு குட்டி, இந்தக் கல்யாணம் உனக்கு மகிழ்ச்சியை மட்டுமே தரணும்னு நான் வேண்டிக்கறேன். இந்தா வாங்கிக்கோ, எங்களின் கல்யாண பரிசு. அண்ணன் சீர்” என்று பெரிய பையை வசுமதியின் கைகளில் வலுக்கட்டாயமாகத் திணித்தாள்.

“அச்சோ அண்ணி, எதுக்கு இதெல்லாம்? நீங்க கல்யாணத்துக்கு வந்ததே போதும் எனக்கு. அதை விடப் பெரிய கிஃப்ட் எதுவும் இல்ல” என்று வசுமதி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இடை மறித்த நர்மதா,

“பிளீஸ், வேண்டாம்னு சொல்லாத வசு. உனக்காக எல்லாம் பார்த்து, பார்த்து வாங்கினேன் நான். எனக்கு ஒரு தங்கை இருந்தா அவளுக்குச் செஞ்சுருக்க மாட்டேனா சொல்லு? நீயும் எனக்கு அப்படித் தான் வசு. அது நான் சொல்லித் தான் உனக்குத் தெரியனுமா, என்ன?” என்றாள் நர்மதா கோபம் போல, வசுமதிக்குக் கண்கள் கலங்கி தொண்டையடைத்தது.

“அச்சோ, கல்யாண பொண்ணை அழ வைக்காத நம்மு” என்றான் நரேன் அவர்கள் பக்கம் திரும்பி, வாசுவின் கண்கள் அவளைக் கலவரத்துடன் பார்த்தன. அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள் வசுமதி. அதன் பிரதிபலிப்பு அவனது கண்களுக்கும் பரவியது.

“ம்க்கும், நடக்கட்டும் நடக்கட்டும்” என்று கேலி செய்த நர்மதா, “வெரி ஹேப்பி ஃபோர் யூ வசு.” என்றாள் உண்மையான அன்புடன், “நானும் ஹாப்பித் தான் அண்ணி” சொன்ன வசுமதியின் குரலில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

நரேனும், நர்மதாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பத் தயாராகினர். கார் வரை சென்று அவர்களை வழியப்பினார்கள் இருவரும்.

மெல்ல நர்மதாவின் பக்கமாகச் சரிந்து காரின் கண்ணாடியில் முகம் வைத்து, “நான் எத்தனை மெசேஜ் பண்ணேன், ஏன் ரிப்ளை பண்ணலை அண்ணி? என்னோட கால்ஸ் கூட நீங்க எடுக்கலை” என்று மனத் தாங்கலோடு வினவினாள் வசுமதி. நர்மதாவின் கண்கள் சட்டெனக் கலங்கியது போல இருந்தது அவளுக்கு, ஆனால் அவளின் கேள்விக்குப் பதில் ஏதும் வரவில்லை.

“உங்களுக்கு எத்தனை நாள் லீவ் அண்ணி?” என்றாள் மீண்டும்,

“நரேன் ரெண்டு, மூனு நாள்ல கிளம்பிடுவார். சண்டே ஃப்ளைட் அவருக்கு. நான் இங்க தான்… நான் கொஞ்ச நாள் இங்க தான் இருப்பேன் வசு” என்றாள் நர்மதா. வசுமதிக்கு அவளின் பதிலில் ஏதோ முரண்பாடாகத் தோன்றியது, ஆனால் என்னவென்று கண்டறிய முடியவில்லை.

“நீங்க ரெண்டு பேரும் நம்ம வீட்டுக்கு ஒரு நாள் கண்டிப்பா வரணும்” என்று வாசுவிடம் சொல்லிக் கொண்டிருந்தான் நரேன்.

“அடுத்த வாரத்தில ஒரு நாள் கண்டிப்பா வர்றோம்” என்று அவளைப் பார்த்துக் கொண்டே சொன்னான் வாசு.

“ஒரு நாள் முழுக்க எங்க கூட இருக்கற மாதிரி பிளான் பண்ணி வாங்க, என்ன?” என்று சொன்ன நர்மதா, வசுமதியின் பக்கம் திரும்பி,

“வாசுவை கூட்டிட்டு வர வேண்டியது உன் பொறுப்பு, வசு” என்றாள் உத்தரவு போல, சரியென்று தலையசைத்தாள் வசுமதி.

இவர்களை விட்டு பிரியவே மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர் அவர்கள் இருவரும்.

“ஹே பரவாயில்லையே வசு. உனக்கு ரொம்ப நல்ல ப்ரெண்ட்ஸ் கிடைச்சு இருக்காங்க. எனக்கு அவங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. தே ஆர் வெரி ஸ்வீட். அவங்க, உன்னோட சொந்த அண்ணா, அண்ணி இல்லைன்னு சத்தியம் பண்ணா கூட யாரும் நம்ப மாட்டாங்க. உங்க குடும்பத்துல எல்லோரையும் நல்லா தெரிஞ்சிருக்கு அவங்களுக்கு” அவளை மெச்சுதலாகப் பார்த்துச் சொன்னான் வாசுதேவன்.

வீடு முழுவதும் நிறைந்திருந்த உறவினர் கூட்டத்தை வெகு கவனமாகத் தவிர்த்து விட்டு, மாடிப் படிகளில் ஏறி கொண்டிருந்தவள் தலையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தாள்.

“அவங்க ரெண்டு பேர் மட்டும் இல்லனா, நான் எப்பவோ துபாயை விட்டு ஓடி வந்திருப்பேன்” என்றாள் வசுமதி சிரித்துக் கொண்டே, ஒரு நொடி அவள் முகம் கசங்கி பின் நேராகியது.

“அப்பா, அம்மா ஒரு முறை விசிட் விசால துபாய் வந்தாங்க. வருண் அண்ணாவும், அண்ணியும் அவங்க வெட்டிங் அனிவர்சரி கொண்டாட அங்க வந்திருந்தாங்க. அப்போ ரெண்டு குடும்பமும் பேசி, பழகினது. என்னைப் போலவே என் குடும்பமும் அவங்க கூட நல்லா க்ளோஸ் ஆகிட்டாங்க” என்று அவனுக்கு விளக்கினாள் வசுமதி.

இருவரும் பேசியபடி அவர்களின் அறைக்கு வந்திருந்தனர். அறையின் கதவை மெல்ல திறந்து உள்ளே நுழைந்தாள். திடுமென்று முன்னோக்கி நீண்ட அவன் கரம் அவளை அழுத்தமாய்ப் பற்றி நிறுத்தியது. பதறி, என்னவென்று அவள் திரும்பி பார்க்க,

“உடம்பு முடியலையா வசும்மா? என்ன பண்ணுது?” என்றான் அவள் கண்களைப் பார்த்து கனிவாக,

“இல்லயே, ஒன்னுமில்லையே” என்று சமாளித்தாள் வசுமதி.

“பசிக்குதா?, தூக்கம் வருதா? இல்ல குளிக்கனுமா?” அவன் வழக்கம் போலக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் வாசுதேவன். வசுமதிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு பீறிட்டது. ஆனால், சிரிக்க முடியாத படி தலை விண்விண்னென்று வலியில் தெறித்தது. எங்கே சிரித்தால் வலி கூடி விடுமோ எனும் அச்சத்தில் சிரிப்பை அடக்கினாள் அவள்.

மதியம் தொடங்கிய தலைவலி, இத்தனை நேரம் அவள் சமாளித்ததே பெரிய காரியமாக அவளுக்குப் பட்டது. ஆனால் இதற்கு மேல் ஒரு நொடி கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை. கண்களை இறுக மூடித் திறந்தாள். நடு நெற்றியில் யாரோ சம்மட்டியை கொண்டு அடிப்பது போல் தாங்க முடியாததாக இருந்தது வலி. சில மணி நேரத்திற்கு முன் உண்ட பாலும், பழமும் வெளியில் வந்து விடும் போலிருந்தது.

“வசு மா” என்று அவளின் தோள்களைப் பற்றி அழுத்தி, முன்னர் அவள் அமர்ந்திருந்த டிரெஸ்ஸிங் டேபிளின் இருக்கையில் வலுக்கட்டாயமாக அவளை அமர்த்தினான் அவன்.

“தலை வலிக்குதா வசு?” அவள் கண்களை மூடி, மூடித் திறப்பதைப் பார்த்து கேட்டான் அவன்.

“ம்ம்ம்..” என்று தலையை மேலும், கீழுமாக அசைத்தாள் அவள்.

“காலையில எத்தனை மணிக்கு எழுந்த வசும்மா?” என்றான் கேள்வியாக,

“நாலு மணிக்கு எழுந்து, குளிச்சு, சேலை கட்டி, மேக் அப் போட்டு…” வாக்கியத்தை முடிக்கக் கூட முடியவில்லை அவளால், அத்தனை சோர்வாக உணர்ந்தாள்.

“ஓ, அவ்வளவு சீக்கிரமா எழுப்பி விட்டாங்க? கொடுமை போ” என்றவன்,

“சரி விடு, ஒன்னு பண்ணலாம். நீ முதல்ல இந்தப் புடவையை மாத்திட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு. பெட்டரா ஃபீல் பண்ணுவ” என்றான், அவளின் உச்சியில் தலைப் பதித்து, அந்த நெருக்கம் அவளை என்னவோ செய்தது. அருகருகே இருந்த இருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள். இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் பொருத்தமாக இருந்தது போலிருந்தது அவளுக்கு.

“வசும்மா..” என்று அவன் அழைக்க, அவன் தன் பதிலுக்காகக் காத்திருப்பது புரிந்து,

“இந்தப் புடவையை மாத்தவா? அச்சோ வேணாம். அத்தை சேலையில தான் இருக்கச் சொன்னாங்க. யாராவது பார்க்க வருவாங்கன்னு..” என்று அவள் பதறியபடி சொல்லிக் கொண்டே போக, அதைக் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல்,

“முதல்ல உன் தலையில இருக்கப் பூவை எடு வசு. இவ்வளவு பூவா சுத்தி விடுவாங்க? இந்த வாசத்தில் எனக்கே தலைவலி வரும் போல இருக்கு. அப்புறம் உனக்கு வராம என்ன செய்யும்” என்று கோபமாகப் பொரிந்தவன்,

“ஒரு கூடை பூ இருக்கும் போலயே? அப்புறம் தலை வலிக்காம, வேற என்ன செய்யும்?” என்று அவளைக் கடிந்து கொண்டே,

அவளது தலையில் இருந்த மல்லி, ரோஜாக்களை மெல்ல நீக்கி, கனமான தலை அலங்காரத்தை எடுக்க ஆரம்பித்தான்.

“அச்சோ, நீங்க ஏன் இதெல்லாம் செய்யறீங்க? அண்ணி வரேன்னு சொன்னாங்க. உங்களை, உங்க அண்ணா கூடத் தானே இருக்கச் சொன்னாங்க. நீங்க அங்க போய் இருங்க” அவள் வேகமாக மறுப்பு தெரிவிக்க, அவன் அதைக் கொஞ்சம் கூடக் கண்டு கொள்வதாக இல்லை.

“உன் ரெண்டு அண்ணியையும் காணோம். அவங்க எப்ப வந்து.. உன்னை எப்ப கவனிச்சு.. ஹ்ம்ம்..” அவனது அக்கா மற்றும் அவளின் அண்ணன் மனைவி என இருவரையும் சேர்த்து சொன்னவன், தானே வேலையில் இறங்கினான். அதற்கு மேல் அவளால், அவனைத் தடுக்க முடியவில்லை. சிலை போலச் சமைந்து, கண்ணாடியில் அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“என்ன வசு, தலை இவ்வளவு ஈரமா இருக்கு? முடி காயறதுக்கு முன்னாடியே அலங்கரிக்க ஆரம்பிச்சுட்டாங்களா?” என்றான் கோபமாக, மௌனமாக அமர்ந்திருந்தாள் வசுமதி. பூக்களை நீக்கி விட்டு, பின்னலை அவிழ்த்து விட்டான். தலையில் இருந்து ஏதோ பெரிய பாரத்தை இறக்கி வைத்ததைப் போலிருந்தது அவளுக்கு.

வசுமதிக்குச் சைனஸ் பிரச்சனை இருந்தது, அத்துடன் காலையில் இருந்து ஈரத் தலையுடன் இருந்தது தான் தலை வலிக்கான காரணம் என்பது அவளுக்கு விளங்கியது.

error: Content is protected !!
Scroll to Top