பூமரப் பாவைகள் – 5 (2)

“நான் அப்படி யோசிக்கவே இல்லை வசு. இனி அம்மாவையும் சேர்த்து கவனிச்சுக்கறேன்” என்றவன் தொடர்ந்து, “அக்கா, அண்ணா ரெண்டு பேர் குடும்பமும் நம்ம வீட்ல தான் இருக்காங்க. எல்லாமே அக்காவும், அண்ணியும் தான் பார்த்துக்கறாங்க. மத்த வேலைக்குலாம் ஆள் இருக்கு. அதனால ஒன்னும் பயம் இல்ல” என்றான் வாசு விளக்கமாக,

“ஓ, ஓகே” என்றாள் அவள்.

அவன் “நம்ம வீடு” என்றதில் அவளது மனம் படபடக்க, அதை மறைக்கக் காஃபியை எடுத்து குடிக்க ஆரம்பித்தாள் வசுமதி. அவள் தன் பெற்றோரை, “மாமா, அத்தை” என்று விளித்ததில் மனம் குளிர்ந்து போனான் அவன்.

இருவருமே இல்லாத கதைகளைத் தான் பேசிக் கொண்டிருந்தனரே தவிர, தங்களது திருமணம் குறித்துப் பேசவேயில்லை. அடுத்தவரின் விருப்பத்தை அறிய முற்படவுமில்லை.

சிறிய சிறிய செய்கைகளில் இருவரும் தங்களின் அபிப்பிராயங்களைப் பகிர்ந்து கொண்டதாகவே புரிந்து கொண்டனர். பிரியத்தைப் பரிமாறிக் கொள்ள, சிறு புன்னகையே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

வசுமதியை பார்க்க அந்த அதிகாலையில், மழையையும் பொருட்படுத்தாமல் அவன் சிரத்தை எடுத்து வந்ததே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. வசுமதியை நேரில் பார்க்கும் முன்னே அவளை மணக்கும் முடிவில் உறுதியாக இருந்தான் வாசுதேவன். இப்போது அவளை நேரில் பார்த்து, பேசிய பின், அவன் தங்களின் திருமண நாளை வெகு ஆவலாக எதிர்பார்க்க ஆரம்பித்தான்.

“கிளம்பலாமா வசு?” என்று அவன் கேட்க, சம்மதமாகத் தலையசைத்தாள் வசுமதி.

“உன் கூட நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு, ஆசையா தான் இருக்கு வசு. ஆனா, நீ ஃப்ளைட்ல நைட் எல்லாம் தூங்கி இருக்க மாட்ட, அதுவும் இல்லாம இந்த மழை வேற நிக்காம தூறிட்டே இருக்கு. அதனால இப்போ உன்னை வீட்ல கொண்டு போய் விடுறேன். நல்லா தூங்கி ரெஸ்ட் எடு. நாம சீக்கிரம் மீட் பண்ணலாம்” என்றான் சிரித்துக் கொண்டே, அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவனும் அதை எதிர்பார்த்தது போலத் தெரியவில்லை.

வசுமதியின் இரண்டு பெரிய பெட்டிகள் மட்டும் அல்லாது, அவளது கைப் பை முதற்கொண்டு அத்தனையையும் அவனே எடுத்துக் கொண்டு கார் பார்க்கிங் நோக்கி நடந்தான் வாசுதேவன்.

அவன் பின்னேயே கையில் ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடன் சேர்த்து குடையைப் பிடித்தபடி, மழையில் இருந்து தப்பித்து, குளிரினால் உடல் சிலிர்க்க நடந்து சென்றாள் அவள். அதுவும் நன்றாகத் தான் இருந்தது.

காரினுள் ஏறி அவனருகில் அமர்ந்தவளின் கைகளில் பின்னிருக்கையில் இருந்து எடுத்த டவலை நீட்டினான் வாசு. அதைக் கொண்டு கைகள் மற்றும் முகத்தைத் துடைத்தவள், கைப் பையில் இருந்து மொபைலை தேடி எடுத்து, பத்திரமாக வந்து சேர்ந்ததையும், வாசுவுடன் வீட்டுக்கு வருவதையும் தன் வீட்டினருக்கு தெரியப்படுத்தினாள். மணி பார்த்தாள், ஐந்தரை என்றது மொபைல் திரை.

சென்னையின் பரபரப்பற்ற அதிகாலை சாலையில், காரை லாவகமாகச் செலுத்தினான் வாசுதேவன். மழை நனைத்த சென்னையின் சாலைகள் அடர் கருமை நிறம் போர்த்தியிருந்தது.

அடுத்த முப்பதாம் நிமிடம் கோயம்பேட்டை கடந்து, சின்மயா நகரினுள் நுழைந்து அவளின் வீட்டின் முன் நின்றது கார். இருவரும் ஒன்றாக இறங்கினார்கள்.

மழைச் சாரலாய் பொழிந்து கொண்டிருந்தது, அதன் தாக்கத்தினால் அவள் வீட்டின் முன்னிருந்த முல்லைப் பந்தலில் இருந்து வரவேற்பாய் அவர்கள் மேல் உதிர்ந்தன முல்லைப் பூக்கள்.

அவளது வீட்டினுள்ளே விளக்கெரிந்தது. ஆனால், கதவு பூட்டியே இருந்தது. மழையின் சத்தத்தில் அவர்களின் கார் சத்தம் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள் வசுமதி.

காரில் இருந்து அவளது பெட்டியை வாசு வெளியில் எடுத்துக் கொண்டிருக்க, வசுமதி வீட்டின் கேட்டை திறந்தாள்.

அவளைச் சிறு வயதில் இருந்தே ஆண்களுடன் நெருங்கிப் பழக அனுமதித்ததில்லை வருண். அவளிடம் யாரையும் நெருங்கவும் விட்டதில்லை அவன். பெரிதாகக் கண்டிப்புக் காட்டுவான். அதுவே கல்லூரி வரையும் தொடர்ந்தது.

பின்னர் அவள் வேலைப் பார்க்கவெனத் துபாய் செல்ல விரும்பியதில், அவனுக்குக் கொஞ்சமும் பிடித்தமில்லை. அவளை வேலைக்கு அனுப்ப முடியாது, அதுவும் வெளிநாடு என்றால் கூடவே கூடாது என்று அத்தனை பிடிவாதம் பிடித்தான் அவன்.

அவர்களது பெற்றோர் கூடச் சம்மதித்து விட்டனர், இவ்வளவு ஏன் அவளது தந்தை அவளுக்கு முழு ஆதரவு கொடுத்தார். ஆனால், வருண் அவள் ஊருக்கு கிளம்பும் நாள் வரை அவன் பிடியில் இருந்து மாறவேயில்லை.

அவனைப் பகைத்துக் கொண்டு தான் அவள் வெளிநாடு சென்றது. ஆனால், சில மாதங்களில் எல்லாம் தங்கை மேல் இருந்த பாசத்தினால், தன் கோபத்தைத் தூக்கி தூர வீசி விட்டு, துபாய் வந்து அவளைச் சமாதானப்படுத்தி விட்டே சென்னை திரும்பினான். தங்கை அங்கே பாதுகாப்பாகத் தான் இருக்கிறாள் என்பதில் அவனுக்குக் கூடுதல் நிம்மதி.

அப்படிப்பட்ட வருணின் முன்பு, இன்று அவள் முதல் முறையாகச் சந்தித்த ஒருவனை வீடு வரை அழைத்து வந்திருக்கிறாள். என்ன செய்வான் அவளின் அண்ணன்? ஒன்றும் செய்ய முடியாது என்ற நினைப்பே அவளுக்குச் சிரிப்பை வரவழைத்தது.

பின்னால் திரும்பி வாசுதேவனைப் பார்த்தாள். அவளுக்கு நெருக்கமாக நின்றிருந்தான்.

வசுமதி நினைவு தெரிந்த நாளில் இருந்து இதே வீட்டில் தான் வசித்திருக்கிறாள். ஆனால், இத்தனை வருடங்கள் போல இல்லாது, இன்று முதல் முறையாக வீட்டிற்குள் நுழைய தடுமாறியது அவள் கால்கள். இப்போது அவனுடன் இணைந்து எடுத்து வைக்கப் போகும் இந்த முதல் அடி தான், தன் வாழ்வையே தீர்மானிக்கப் போகிறது என்ற எண்ணம் அவள் மனதில் மின்னலென மின்னி மறைந்தது.

தன் தடுமாற்றத்திற்கு அது தான் காரணமா என்று அவளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. சிந்தனையில் மூழ்கியவளாக நின்றாள். மாறாக அவனோ, “திஸ் ஃபீல்ஸ் ஹோம்” என்றான் வசுமதியின் கைப் பற்றி, அவள் கண்களைப் பார்த்து, விரிந்த புன்னகையுடன்.

அவனை விநோதமாகப் பார்த்தாள் அவள். அவனது வார்த்தைகள் அவளுக்கு அபத்தமாகப் பட்டது.

‘ஹவ் க்ளிசே’ என்று அவள் மனதில் நினைக்க, அதைப் புரிந்து கொண்டதை போலப் பளிச்சிட்டது வாசுவின் கண்கள்.

“கடவுளே, இப்படி எல்லாம் பேசி, என்னைத் தன் பக்கம் இழுக்கப் பார்க்கிறானா?” என்று அவள் நினைக்க, “ஆமாம், அப்படித் தான்” என்று சொல்வதைப் போலச் சிரித்தான் அவன்.

கேட் திறக்கும் சத்தம் கேட்டு, அடித்துப் பிடித்து வீட்டினுள் இருந்து பரபரப்பாக ஓடி வந்தான் அவளின் அண்ணன் வருண்.

“வாங்க மாப்பிள்ள, வாடா வசு குட்டி. ரொம்ப நேரமா நிக்கறீங்களா மாப்பிள்ளை? மழையில காலிங் பெல் சத்தமே கேட்கலை, அச்சோ மழையில நனையறீங்க பாருங்க, வீட்டுக்குள்ள வாங்க மாப்பிள்ள.” என்று படபடத்தபடியே வந்தான் வருண்.

அவனுக்குப் புன்னகையைப் பதிலாகக் கொடுத்து விட்டு வீட்டினுள் நுழைந்தான் வாசுதேவன்.

“ரொம்ப நேரம் எல்லாம் ஆகல, இப்ப தான் வந்தோம் அண்ணா” என்றாள் வசுமதி.

அவளின் மனமோ, “இங்க பாருடா அதிசயத்தை, எங்க அண்ணா தங்கச்சியை மறந்துட்டு, மாப்பிள்ளையைத் தான் முதல்ல வரவேற்கிறான்.” என்று முகத்தைச் சுளித்தது.

தன்னருகில் ஒன்றுமே பேசாமல் அமைதியாய் வரும் தங்கையைத் திரும்பி பார்த்து, ‘என்ன?’ என்று புருவம் உயர்த்திக் கேட்டான் வருண்.

“ஒன்னுமில்ல” என்று மறுப்பாகத் தலையசைத்தாள். அவர்களுக்கு முன் வீட்டினுள் செல்லும் வாசுவை பின் தொடர்ந்தது வருணின் கண்கள்.

“சாரி டா வசு, உன்னைக் கேட்காம அவரை உன்ன பிக் அப் பண்ண சொல்லி இருக்கக் கூடாது. உன்கிட்ட அவர் ஏர்போர்ட் வர்றதை நான் முன்னாடியே சொல்லி இருக்கணும். சாரி டா… பிளீஸ்” என்றான் புதிதாக முளைத்த குற்ற உணர்ச்சியுடன்.

தங்கைக்குச் சர்ப்ரைஸாக இருக்கட்டும் என்று தான் அவன் சொல்லவில்லை. ஆனால், இப்போது வாசுவை அவன் வீட்டு வாயிலில் தங்கையுடன் சேர்த்துப் பார்க்கையில், அவனை அனுப்பியது தவறோ என்று தோன்ற ஆரம்பித்தது. அதுவும் தங்கையிடம் தெரிவிக்காமல் செய்திருக்கக் கூடாதோ… அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை அவனால்.

“இட்ஸ் ஓகே ண்ணா, ஐ லவ்டு தே சர்ப்ரைஸ்” என்று அண்ணாந்து அவன் முகம் பார்த்து, புன்னகை முகமாகச் சொன்னாள் வசுமதி

அதில் தன் கலக்கம் நீங்கி, நிம்மதி அடைந்தவனாகப் பெருமூச்சொன்றை வெளியிட்டு, தங்கையின் கைப் பற்றி வீட்டுக்குள் நடந்தான் வருண்.

error: Content is protected !!
Scroll to Top