பூமரப் பாவைகள் – 5 (1)

அந்த விமான நிலையத்தில் அவளைத் தவிர வேறு ஒருவருமே இல்லை என்பது போல அவன் பார்வை அவளை ஊடுருவியது. அந்தக் கண்களைச் சந்தித்த கணமே அவளையும் அறியாமல் பளீரென்று புன்னகையில் விரிந்தது அவளது இதழ்கள்.

மழையைக் கண்ட மயிலென அவன் மனம் உற்சாகமாய்த் தோகை விரித்தது. அவளின் கால்கள் அவனைக் நோக்கி அவளை நகர்த்தியது.

அங்கே காத்திருந்தோர் கூட்டத்தில் தனித்துத் தெரிந்தான் வாசுதேவன்.

அடர்நீல நிற ஜீன்சும், இளமஞ்சள் நிற டீ சர்ட்டும் அணிந்திருந்தான், ஒரு கையில் சிவப்பு நிற ஒற்றை ரோஜா. மறுகையில் மழைக்கான குடை. அவன் வந்து சிறிது நேரமாவது ஆகி இருக்க வேண்டும், மழையில் லேசாக நனைந்திருந்தான். கண்களில் தூக்கம் இன்னும் மிச்சமிருந்தது, அதுவே அவனைக் கூடுதல் கவர்ச்சியோடு காட்டியது.

மழைச் சாரலும், குளிர் காற்றும் போட்டிப் போட்டு அவனின் முன்னுச்சி முடியை கலைத்து விளையாட, அதைக் கண்டு கொள்ளாமல் வசுமதியை பார்த்து, கையசைத்து நன்றாக இதழ் பிரித்துச் சிரித்தான் வாசுதேவன். போட்டோவில் பார்த்ததை விட நேரில் நன்றாக இருந்தான், நேரில் அவனது சிரிப்பு அவளை அதிகமாக வசீகரித்தது.

அவசர எட்டுக்கள் வைத்து அவள் முன் வந்திருந்தான், அவள் கைகளில் இருந்த ட்ராலியை வெகு லாவகமாகத் தன் கைக்கு மாற்றினான்.

அவளது வலக் கரம் பற்றி, “வெல்கம் ஹோம் வசு” என்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அவள் திகைத்து நிற்க, இப்போது அவளது கரத்தில் மென்மையாக அழுத்தி, ரோஜாவை கொடுத்திருந்தான். அவளுக்கு உடல் சிலிர்த்தது, அது நிச்சயமாக மழையினால் அல்ல, குளிரினாலும் அல்ல.

“தாங்க்ஸ்” என்றாள் மெல்லிய குரலில் வசுமதி.

“மல்லி இல்லனா பிச்சிப்பூ தான் வாங்கிட்டு வரணும்னு நினைச்சேன்.” என்று விட்டு அவன் மெலிதாகச் சிரிக்க, தலையைப் பின்னுக்கு இழுத்து விழி விரித்து அவனைப் பார்த்தாள் வசுமதி.

“பாரு, நீ இப்படி ஷாக் ஆகக் கூடாது இல்ல வசு. அதான், அதை வாங்கிட்டு வரல” என்றான் கண்களைச் சுருக்கி, அவளிடம் பேசிக் கொண்டே மெல்ல அவளைப் பாதையில் இருந்து விலக்கி, மழை நீர் அவளின் மேல் தெறித்து விடாமல், அவனுக்கு நெருக்கமாக நிறுத்தி இருந்தான். மழையும், அவனது நெருக்கமும் அவளை என்னன்னவோ செய்தது.

வசுமதிக்கு நடப்பதெல்லாம் கனவு போல இருந்தது. மீண்டும், மீண்டும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“டிராவல் எப்படி இருந்தது வசு?”

என்று நடந்தப்படியே கேட்டான் அவன்.

“இட் வாஸ் ஓகே, எப்பவும் போலத் தான்” என்றாள் அவள்.

“ம்ம், தூக்கம் வருதா வசு? குளிருதா? காபி சாப்பிடலாமா?” கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் வாசுதேவன்.

“ஹ்ம்ம், ஓகே” என்று மட்டும் பதிலளித்தாள் வசுமதி.

“மழை அழகு, மழையைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு…” என்று மழையை ரசித்தபடி முணுமுணுத்தாள் அவள்.

“ஆமா, ரொம்ப ரொம்ப அழகு” என்றான் அருகில் நடந்து கொண்டிருந்தவளை நன்றாகத் திரும்பிப் பார்த்து, அவனது டிரேட் மார்க் சிரிப்புடன்.

“ம்ம்ம் ஆமா” என்று ஆமோதித்தவள், உதடு கடித்துச் சிரிப்பை அடக்க முயன்றாள்.

விமானப் பயணம் தானே என்று கருநீல நிற கேப்ரியும், கண்ணை உறுத்தாத லாவெண்டர் நிற டாப்சும் அணிந்திருந்தாள் வசுமதி. இடை வரை நீண்ட கூந்தலை சிறிய கிளிப்பிற்கிற்குள் அடைத்திருந்தாள். பெரிதாக ஆபரணங்கள் எதுவும் அணியவில்லை. அவளது தோற்றத்தின் எளிமையில் நளினம் மிகுந்திருந்தது.

வாசுதேவனின் விழிகள் அவளை ரசனையாய் வருடியது. அவனுக்குக் காட்டப்பட்ட புகைப்படத்தில் அவள், மெல்லிய சரிகை ஓடிய நீல வண்ண பட்டு புடவையில் கம்பீரமாக, அழகாக, பெரிய பெண் போல இருந்தாள். ஆனால், இப்போது நேரில் பார்க்கையில் சிறு பெண்ணாகத் தோன்றியது அவனுக்கு. ஆனாலும்

அவளின் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு அவனை அசரடிக்கவே செய்தது. நொடியில் அவள் புறம் சரிந்தது அவன் மனது.

விமான நிலையத்தை விட்டு வெளியில் வரும் முன்னே ரெஸ்ட் ரூம் சென்று முகம் கழுவி, தலையைச் சரி செய்திருந்தாள் வசுமதி. நல்லவேளை செய்தோம் என்று இப்போது ஆசுவாசப்பட்டுக் கொண்டாள் அவள்.

இருவரும் பேசிக் கொண்டே விமான நிலைய வளாகத்தில் அமைந்திருந்த உணவகத்திற்குள் நுழைந்தனர்.

“உட்காரு வசு” என்று இயல்பாக அவளின் கைப் பிடித்து, அவனது அருகில் இருந்த இருக்கையில் அமரச் செய்தான் வாசுதேவன்.

இன்று தான் முதல் முறை சந்திக்கும் ஒருவனோடு, நெருக்கமாக அமர்ந்து, தன்னால் மிக இயல்பாகப் பேசி, சிரிக்க முடிவதை நினைத்து அவளால் அதிசயிக்காமல்‌ இருக்க முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவம் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள் வசுமதி.

“வாசு – வசு, பேர் பொருத்தம் கூட நல்லா இருக்கு இல்ல?” என்றான் சிறு பிள்ளை போல, இம்முறை அவளால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளின் மொத்த பல் வரிசையும் தெரியும் அளவிற்குப் பெரிதாகப் புன்னகைத்தாள் வசுமதி.

“அழகு” என்றான் முணுமுணுப்பாக, ஆனால் அவனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்த அவளுக்குத் தெளிவாகவே கேட்டது. அந்த மழையிலும் அவளுக்குக் குப்பென்று வியர்த்து, அவள் முகத்தில் வெட்கப் பூக்கள் பூத்தது.

இருவருக்கும் காஃபி மற்றும் சாண்ட்விச் ஆர்டர் செய்தான் வாசு. நன்றாகத் திரும்பி வசுமதியை பார்த்து அமர்ந்தான்.

“வருண் அண்ணா, வருவாங்கன்னு நினைச்சேன்” என்றாள் வசுமதி. அதாவது, உன்னை எதிர்பார்க்கவில்லை என்று மறைமுகமாகச் சொன்னாள் அவள்.

“உங்க அண்ணா தான் வர்றதா இருந்தது. ஆனா, உன்ன பார்க்கணும், உன் கூடப் பேசணும்னு நான் காத்திட்டு இருந்தேன், வசு.” என்றவன்,

“சாரி, அன்னைக்கு நீ போன் பண்ணப்போ என்னால சரியா பேச முடியலை. அப்போ ஹாஸ்பிட்டலில் இருந்தோம். அப்பாக்கு செக் அப் இருந்தது. வீட்டுக்கு வந்ததும் உனக்குக் கூப்பிடனும்னு தான் நினைச்சேன். ஆனா, போன்ல என்ன பேச, எப்படிப் பேசன்னு தெரியல. அதான். சாரி வசு” என்றான். புரிந்து கொண்டதற்கு அடையாளமாக மெலிதாகப் புன்னகைத்தாள் வசுமதி.

“நேத்து நைட் உங்க அண்ணன் கிட்ட பேசினேன். நீ இன்னைக்குக் காலையில் ஊருக்கு வர்றதை முன்னமே சொல்லி இருந்தார். உன்னோட ஃப்ளைட் டீட்டெயில்ஸ் கேட்டுட்டு, நான் உன்னைப் பிக்-அப் பண்ணவானு கேட்டேன். உடனே சரின்னு சொல்லிட்டார். அப்புறம் என்ன, கிடைச்ச வாய்ப்பை கெட்டியா பிடிச்சுக்கிட்டேன் வசு. எனக்கும் உன்னை எப்படா பார்ப்போம்னு இருந்தது. உன் கிட்ட நேரில் பேச, உன் குரல் கேட்க வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” என்று அவன் சொல்ல, விழி விரித்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

“உன்னைப் பார்த்து, பேசி… அப்படியே உன்னைக் கூட்டிட்டுப் போய்ப் பத்திரமா உன் வீட்ல சேர்த்திடனும்னு தோணுச்சு.” என்று அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான். அவன் வார்த்தைகள் அவளை வசீகரித்தது. ஆனால், அதை வெளிக்காட்ட முயற்சிக்கவில்லை அவள்.

“வீட்ல இருந்து எப்போ கிளம்புனீங்க?” என்றாள் கேள்வியாக,

“மூனு மணி இருக்கும்” என்றான் அவன்.

“அச்சோ, அப்போ ரெண்டரை மணிக்கு எழுந்து இருப்பீங்க இல்ல?”

“ம்ம்ம், ரெண்டு மணிக்கு எழுந்தேன். நேத்து நைட்டு முழுக்கத் தூக்கமே வரலை. ஆனா, இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன்” என்றான் நன்றாக விரிந்த புன்னகையுடன்,

அவன் சொல்லாமல் சொல்லியது அவளுக்கு நன்றாகப் புரிந்தது. அவளை இன்று பார்த்ததினால் நிம்மதியாக உறங்குவேன் என்கிறான். வழிய துடித்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, பேச்சை மாற்றினாள் அவள்.

“மாமா, எப்படி இருக்காங்க?” என்று அவனின் தந்தையின் உடல்நிலை குறித்த விசாரணையில் இறங்கினாள்.

“ஆபரேஷன் முடிஞ்சு இருபது நாளுக்கு மேல ஆகுது வசு, இப்போ நல்லா இருக்கார். ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றான் மறையாத புன்னகையுடன்.

“ம்ம் ஓகே, அத்தை எப்படி இருக்காங்க?” என்றாள் தொடர்ந்து,

“அப்பாவுக்குத் தான் ஹார்ட் பிராப்ளம், அம்மாக்கு ஒன்னும் இல்ல வசு. அவங்க பெர்பெக்ட்லி ஆல் ரைட்” என்றான் அவன்,

“தெரியும், அப்பா சொன்னாங்க. ஆனா உடம்புக்கு முடியாதவங்களை விட அவங்களைப் பார்த்துக்கறவங்களுக்குத் தான் மனதளவில் அதிகத் தெம்பும், தைரியமும் தேவைப்படும். அதான், அத்தை எப்படிச் சமாளிக்கறாங்க, நல்லா இருக்காங்களான்னு கேட்டேன்” அவனுக்கு மெல்ல விளக்கினாள்.

“ஓ…” என்றவனின் விழிகள் வியப்பில் நிறைந்திருந்தது.

error: Content is protected !!
Scroll to Top