கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, தனது வாழ்வு தான் அதிவேகத்தில் செல்வதாகப் பட்டது வசுமதிக்கு. உண்மையும் அது தான்.
காரின் கண்ணாடியை இறக்கி, பார்வையை வெளியில் பதித்தாள். பர்துபாயையும், தேரா துபாயையும் இணைக்கும் சிண்டகா டனலை கடந்து கொண்டிருந்தனர். மறுநிமிடமே தேரா துபாயின் சாலையில் வழுக்கிக் கொண்டு பயணிக்க ஆரம்பித்தது கார்.
அவளின் இடப் பக்கம் பிரம்மாண்டமாக நின்றிருந்த ஹோட்டல் ஹயாத் ரிஜென்ஸியையும், அதனை ஒட்டி அமைந்திருந்த கேலரியா சினிமாவையும் கண்கள் தொட்ட கணமே அவளது இதழ்கள் புன்னகையில் மலர்ந்தன.
நர்மதா குடும்பத்தினருடன் அவர்கள் அனைவரும் தமிழ் படங்கள் பார்க்க இந்தத் தியேட்டருக்கு அடிக்கடி வருவது உண்டு. சட்டென்று திரும்பி அருகில் இருந்த நர்மதாவை பார்த்தாள். அவளின் கண்களும் அங்குத் தான் பதிந்திருந்தது. இனி, முன்பு போல இவர்களுடன் ஊர் சுற்ற முடியுமா? அது சாத்தியமா? என்ற கேள்வி முளைத்த நொடியே, ‘ஏன் சாத்தியம் இல்லை? அதெல்லாம் வரலாம், முடியும்’ என்று அவசரமாகப் பதிலளித்தது அவள் மனம்.
தனது விழிகளை அங்கிருந்து விலக்கி, நேரே பார்த்தாள். சாலையின் இருபுறமும் வரிசை கட்டி மலர்ந்திருந்த பல வண்ண மலர்கள் அவளின் கண்களை நிறைத்து, மனதை குளிர்வித்தது.
முதன்முதலாக அவள் துபாய் வந்து இறங்கிய போது, இந்நாட்டின் அழகு அவளை வாய் பிளக்க வைத்தது. கண்கள் விரிய கடப்பதை எல்லாம் ஆச்சரியமாய்ப் பார்த்தாள். சாலையில் கார் விரையும் போதே அச்சாலையின் இருபுறமும் நிறைந்திருந்த பல வண்ண மலர்கள் அவளைப் பிரமிப்பில் ஆழ்த்தின. அவற்றின் நேர்த்தியையும், பாராமரிப்பையும் பார்த்து அவள் பெரிதும் வியந்தது உண்டு.
ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு விண்ணை முட்ட முயற்சித்த கட்டிடங்களையும் தாண்டி அவளை அதிகம் கவர்ந்தது துபாயின் கடற்கரைகளும், பளிச்சிட நகரமும், தூய்மையான சாலைகளும், அந்தச் சாலையோரங்களில் வரிசைக் கட்டி மலர்ந்திருந்த வண்ண வண்ண மலர்களும் தான்.
அவை மட்டுமல்ல, சாலையின் நடுப்பகுதியில் ஆசிரியருக்கு கீழ்படிந்த மாணவர்களைப் போல வரிசையாக நிற்கும் பேரிட்சை மரங்கள் இன்றும் அவளை அண்ணாந்து பார்க்கச் செய்கின்றன தான். அதுவும் மஞ்சளும், சிவப்புமாகக் கொத்துக் கொத்தாகப் பேரிட்சை பழங்கள் காய்த்து குலுங்கும் நேரம் பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும். அதன் சுவையோ தேனை விடத் தித்திப்பாக இருக்கும்.
கடந்த இரண்டு வருடங்களில் அவளுக்கு இவையெல்லாம் சுவாரசியமற்றுப் போனது போல, இந்த அவசர திருமணமும் ஆகி விடுமோ? தொடங்கும் முன்னே, முடிவை குறித்து யோசித்து, தேவையற்ற சிந்தனைகளில் சோர்ந்தது அவள் மனம். இதென்ன தனக்கு இப்படி ஒரு எண்ணம் என்று எண்ணி திடுக்கிட்டாள் வசுமதி.
வெள்ளி கிழமை இரவே அவள் தன் முடிவை எடுத்திருந்தாலும் கூட, அதை வீட்டினரிடம் தெரிவிக்க முடியாமல், ஏதோ ஒன்று அவளைத் தடுத்துக் கொண்டே இருந்தது.
சனிக் கிழமை காலை, முதல் வேலையாக வாசுதேவனை அழைத்துப் பேசினாள். அவன் ஏதோ வேலையாக வெளியில் இருக்க அவனிடம் சரியாகப் பேச முடியவில்லை.
பின்னர் அவளின் அண்ணன் வருணை அழைத்துப் பேசினாள், அவனிடம் அனைத்தையும் கலந்தாலோசித்த பிறகே அவள் மனம் ஒரு நிலைக்கு வந்தது.
அதன் பிறகு வீட்டிற்கு அழைத்து, அம்மாவிடமும், அப்பாவிடம் திருமணத்திற்குத் தன் சம்மதத்தினைத் தெரிவித்தாள் அவள்.
அவளுக்குத் தற்போது திருமணம் செய்து கொள்ளப் பெரிதாக விருப்பமில்லை தான். ஆனால், அதே நேரம் திருமணத்தை மறுப்பதற்கும் அவளிடம் காரணம் ஏதும் இல்லை.
அவளின் தந்தை மகேந்திரன் இன்று வரை அவளை எதற்கும் வற்புறுத்தியது கிடையாது. அவள் கேட்டு எதையும் மறுத்ததும் கிடையாது. அதே போல் எப்போதும் அவளது விருப்பத்திற்குப் பெரிதாக மதிப்பளிப்பார் அவர். அவள் விருப்பத்தை மீறி எதுவும் அவள் வாழ்வில் நடந்தது கிடையாது.
அப்படி இருக்கையில், மகளுக்கு வாசுதேவன் தான், வாழ்க்கைத் துணைவன் என்று அவர் சொன்னால், கண்டிப்பாக அதன் பின்னால் சரியான காரணம் இருக்கும் என்று முழுதாக நம்பினாள் அவள். அதனால் முழுமனதாகவே திருமணத்திற்குச் சம்மதித்து இருந்தாள் வசுமதி.
மேலும், வாசுதேவனின் தந்தையின் நிலை அவளை, அவருக்குச் சாதகமான முடிவை எடுக்கச் செய்திருந்தது. ஒரு நொடி அவளது மனக் கண்ணில் அவளது தந்தை மகேந்திரனின் முகம் வந்து போனதே அதற்குக் காரணம். நாளை அவருக்கு ஒன்றென்றால்… ம்ஹூம் வேண்டாம் என்று அவளது எண்ணப் போக்கை தடுத்து நிறுத்தியது அவள் மனம்.
அதற்குப் பின் நடந்தவை எல்லாம், அவள் முன்னமே எதிர்பார்த்தது தான். ஆம், உடனடியாக அடுத்தடுத்த முடிவுகள் எடுக்கப்பட்டன. அன்றே இரு குடும்பத்தின் பெரியவர்களும் சந்தித்து, கலந்தாலோசித்துக் கல்யாண தேதியை குறித்திருந்தனர்.
திருமணத்திற்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருந்தன. இதோ இன்று, திங்கள் கிழமை இரவு எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை செல்கிறாள் அவள். கல்யாண கனவுகள் ஏதும் இன்றி.
“எமர்ஜென்சி லீவ்” எடுத்திருந்தாள். திருமணம் எப்போதில் இருந்து எமர்ஜென்சியில் சேர்ந்தது என்ற எண்ணம் அவள் மனதில் எழு, தன்னையறியாமல் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
நடுவானில், நள்ளிரவில் ஃப்ளைட்டில் பரிமாறப்பட்ட உணவை கண்களால் உண்டு கொண்டிருந்தாள் அவள். ஸ்பூன் உணவில் கோலமிட்டுக் கொண்டிருந்தது.
மேகங்களுக்கு நடுவில், மேகமாக வானில் பறந்து கொண்டிருக்கையில், சில மணி நேரங்களுக்கு முன்னர்த் தரையில் நடந்தவற்றை அசைப் போட ஆரம்பித்தாள் அவள்.
வசுமதியை வழி அனுப்ப வந்த நர்மதா சொன்ன செய்தி, இப்போதும் அவளது காதில் எதிரொலித்தது. அவளது இதழ்கள் தாமாகப் புன்னகைத்தன.
“வசு, ஒரு ஹாப்பி நியூஸ்” என்று கிசுகிசுத்தாள் நர்மதா, திரியை பற்ற வைத்தது போல் பிரகாசமானது வசுமதியின் முகம்.
“சொல்லுங்க அண்ணி” என்றாள் கண்கள் மின்ன,
“நீ கல்யாணம் முடிஞ்சு வரும் போது, இங்க உனக்காக நல்ல செய்தி காத்திருக்கும் வசு” என்றாள் கிசுகிசுப்பான குரலில் நர்மதா.
“அண்ணி, நிஜமாவா…” ஏர்போர்ட் என்பதையும் மறந்து கத்தினாள் வசுமதி.
“ம்ம்ம்.. நாள் தள்ளிப் போய் இருக்கு வசு” அழகாக வெட்கப்பட்டாள் நர்மதா.
இதுவும் அடிக்கடி வசுமதி கேட்டுப் பழகிய ஒன்று என்றாலும் கூட, இப்போதைக்கு இதுவே நல்ல செய்தி தான் என்று சமாதானமாகியது அவள் மனம்.
“நேத்து டாக்டர் கிட்ட பேசினேன் டா, நம்பிக்கையோட இருக்கச் சொல்லி இருக்காங்க. நீ கல்யாண ஷாப்பிங்கில் பிஸியா இருந்த, அதான் உன்கிட்ட சொல்ல முடியல” வெட்கமும், சிரிப்பும் நிறைந்திருந்த நர்மதாவின் முகம், கொள்ளை அழகாக இருந்தது.
“நாளைக்கு நைட் தான் டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வசு. ஸ்கேன், டெஸ்ட் எல்லாம் பார்த்திட்டு உனக்குச் சொல்றேன், என்ன?” என்றாள் குரலில் மகிழ்ச்சி பொங்க,
“ரொம்பச் சந்தோசம் அண்ணி, ஆல் த பெஸ்ட். கவனமா இருங்க, டாக்டர் பார்த்திட்டு எனக்கு மறக்காம சொல்லுங்க” என்றாள் வசுமதி, நர்மதாவின் தோளில் கைப் போட்டு அணைத்தபடி,
“தாங்க்ஸ் வசு, நீ காலையில் லேண்ட் ஆனதும் எனக்கு மெசேஜ் பண்ணு, சரியா?.” என்றாள் நர்மதா.
“கண்டிப்பா மெஸேஜ் பண்றேன். அப்புறம் சாரி அண்ணி, உங்களைச் சரியாவே இன்வைட் பண்ணல, ஊருக்குப் போய்ப் பத்திரிக்கை ரெடியானதும் உங்களுக்கு அனுப்பி வைக்கறேன். கல்யாணத்துக்கு நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும்.” என்றாள் வசுமதி.
“அடி பிச்சுடுவேன் பார்த்துக்க ராஸ்கல். என்ன ரொம்ப ஃபார்மலா பேசுற நீ?” என்று எகிறினாள் நர்மதா. அதுவரை அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல் தன் மொபைலில் கவனமாய் இருந்த நரேன், இப்போது கண்களை உயர்த்தி அவர்களைப் பார்த்தான். அவனைப் பார்த்து, “ஒன்னுமில்ல” என்று கண் காட்டினாள் நர்மதா.
“எங்களால கல்யாணத்துக்கு வர முடியுமா தெரியல வசு. தப்பா எடுத்துக்காத, பிளீஸ் கோவிச்சுக்காத என்ன?” என்று அவளது கன்னம் பற்றிக் கொஞ்சியவள்,
“இன்னும் பத்து நாள் தானே இருக்கு? எங்க ரெண்டு பேருக்கும் லீவ் கிடைக்கறது சந்தேகம் தான் வசு. ஆனா, என் பிரேயர்ஸ் உனக்கு எப்பவும் உண்டு. உனக்கு எப்பவும் நல்லது தான் நடக்கும். சந்தோசமா இருடா” என்று தழுதழுத்த நர்மதா, வசுமதியை இறுக்கி அவளின் நெற்றியில் இதழ் பதித்தாள். வசுமதி அந்த அன்பில் நெகிழ்ந்து போனாள்.
வசுமதி அக்கா, தங்கையுடன் வளர்ந்தவள் அல்ல. அவளுக்கு ஒரு அண்ணன் மட்டும் தான். அவனும் அவளை விட எட்டு வயது பெரியவன். அண்ணன் என்பதை விட, அவனை அவளது தந்தை என்று விடலாம். இன்னமும் அவளைச் சிறு குழந்தையைப் போலத் தான் நடத்துவான் அவளது அண்ணன் வருண். அப்படியே வளர்ந்தவளுக்கு நர்மதாவின் அன்பு புதிது, அவளுக்கு அது பிடித்தும் இருந்தது.
“கல்யாணத்துக்கு ரெடியா வசு?” வசுமதியின் முகம் பற்றிக் கேட்டாள் நர்மதா.
“நாட் ரியலி அண்ணி” என்று உதடு பிதுக்கினாள் வசுமதி.
“நானும் இப்படித் தான் இருந்தேன் டா. இட்ஸ் ஓகே. இது நார்மல் தான்” என்று அவள் கண்ணடிக்க,
“யார் கல்யாணத்துக்கோ போற மாதிரி இருக்கு அண்ணி. காய்ச்சல் வர போறது போல இருக்கு. இதயம் தாறுமாறா துடிக்குது. கை எல்லாம் வேர்க்குது. என்னமோ பண்ணுது. எல்லோரும் இப்படித் தான் ஃபீல் பண்ணுவாங்களா?” என்று வசுமதி தீவிரமான குரலில் கேட்க,
“உன்னோட முதல் பாய்ண்ட், கண்டிப்பா யாரும் அப்படி ஃபீல் பண்ண மாட்டாங்க. ஆனா, உனக்கு ரெண்டே நாள்ல கல்யாணம் முடிவானதினால, அப்படி இருக்கலாம். மத்தபடி நீ சொன்ன மத்த சிம்டம்ஸ்லாம் நார்மல் தான்” என்றாள் நர்மதா சிரித்துக் கொண்டே,
“ம்ம்ம்” என்றாள் வசுமதி.
மெல்ல நினைவுகளில் இருந்து மீண்டு, கண்களை மூடி உறங்க முயற்சித்தாள். சற்று நேரத்தில் உறங்கியும் விட்டாள் வசுமதி. சில மணி நேரம் கழித்து, விமானியின் அறிவிப்பு குரல் அவளைத் தட்டி எழுப்பியது.
விமானம் ஒரு தேர்ந்த பறவையின் லாவகத்துடன் தரையிறங்குவதற்கு ஆயத்தமாக, தானும் மனதளவில் திருமணத்திற்குத் தயாராகத் தொடங்கினாள் வசுமதி.
அதிகாலை நான்கு மணி என்றது அவளின் மொபைல் திரை. அந்த அதிகாலைப் பொழுதிலும் தனக்கே உரித்தான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது சென்னை விமான நிலையம். கஸ்டம், பேகேஜ் கிளைம் என்று சம்பிரதாயங்கள் முடித்து, தனது லக்கேஜ் நிறைந்த டிராலியை தள்ளியபடி விமான நிலையத்தின் வாயிலை நோக்கி நடந்தாள் அவள்.
அவளை வரவேற்பது போலப் பூஞ்சாரலாய் மழை பெய்து கொண்டிருந்தது. நுழைவாயிலை விட்டு வெளியில் வந்தவளை நனைய செய்தது மழைச் சாரல். பல மாதங்களுக்குப் பின்னான மழையின் தரிசனம் அவளை மெய் சிலிர்க்கச் செய்தது.
ஒருநொடி மழையை ரசித்தபடி அப்படியே அசையாமல் நின்றாள். தன் ரசிகை என்றும் பாராமல் மழையும், குளிருமாகச் சேர்ந்து அவளை நடுங்க செய்ய, எப்போது வீட்டுக்குச் சொல்வோம் என்று இருந்தது அவளுக்கு. கடந்த மூன்று நாட்களின் பரபரப்பும், அலைச்சலும் சேர்ந்து அவளைச் சோர்வுற செய்தது. உடல், உறக்கத்திற்குக் கெஞ்சியது. போதிய தூக்கம் இல்லாததால் எரிந்த கண்களை உள்ளங்கையால் மெதுவாகத் தேய்த்து விட்டாள்.
அவளது விழிகள் சுற்றி சுழன்று பயணிகளுக்காகக் காத்திருப்போர் கூட்டத்தில் அண்ணன் வருணை தேடியது.
எப்போதும் சரியான நேரத்திற்கு அவளை அழைத்துச் செல்ல வந்து விடுவான் தான். ஆனால், இன்றைக்கு அவளின் தூக்கம் சுமந்த விழிகளுக்குள் வருணின் முகம் விழவில்லை.
ஒருவேளை அவன் வரவில்லை என்றால் அவள் பிரீ – பெய்ட் டாக்ஸி எடுத்துக் கொண்டு வீடு செல்ல வேண்டும். சட்டென அண்ணனின் மேல் கோபம் எழுந்தது. சரி, அவனுக்குக் கால் செய்து எங்கிருக்கிறான் என்பது பற்றிக் கேட்கலாம் என்று நினைக்கையிலே கோபமும், எரிச்சலும் கூடிக் கொண்டே போனது.
அவனுக்காகக் காத்திருக்காமல் டாக்ஸி எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விடலாம் என்ற முடிவிற்கு நொடியில் வந்திருந்தாள்.
இடப்புறம் இருந்த பிரீ – பெய்ட் டாக்ஸி டேஸ்க்கை நோக்கி நகரப் போன அவளின் கால்கள், சட்டெனச் சடன் பிரேக் அடித்து நின்றன. கண்கள் மீண்டும் தான் கண்ட முகத்தை ஊர்ஜிதம் செய்ய, அத்திசை நோக்கி சென்றது.
இதயம் ஒரு நொடி நின்று, பின் அதன் இஷ்டத்திற்குத் துடிக்கத் தொடங்கியது.