பெரும்பாலும் வெள்ளிக் கிழமைகளில் தடபுடலாகச் சமைத்து உண்பார்கள் அவர்கள். சில நாட்களில் நன்றாக ஊர் சுற்றி விட்டு, உணவையும் வெளியிலேயே முடித்து விட்டு நள்ளிரவில் வீடு வந்து சேர்வார்கள்.
இந்தியாவில் ஞாயிறு போல, துபாயில் அவர்களுக்கு வெள்ளிக் கிழமை தான் விடுமுறை தினம். ஆனால் இன்றைக்கு நர்மதா பெரிதாகச் சமைக்கும் மனநிலையில் இல்லை. தற்போது மாமியாரின் முன் போய் நிற்கவே அவள் பிரியப்படவில்லை. அதனால் வசுமதியுடனே அமர்ந்து கொண்டாள்.
இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்ததில் சமைக்க மறந்திருந்தனர். சமைப்பதற்குத் தேவையான பொருட்களும் வசுமதியின் வீட்டில் இல்லை என்பது வேறு விஷயம்.
சரியாக அந்நேரம் அழைப்பு மணியை அழுத்தி விட்டு, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் நரேன். அவன் கையில் உணவு பாத்திரங்கள் நிறைந்த பையைப் பார்த்ததும் நர்மதாவின் முகம் சூரியனை கண்ட தாமரையைப் போல மலர்ந்தது.
“தாங்க்ஸ் நரேன். இப்ப தான் பசிக்க ஆரம்பிச்சது. கரெக்ட்டா சாப்பாடு கொண்டு வந்துட்டீங்க. லவ் யூ” என்றாள் நர்மதா சிரித்துக் கொண்டே,
“எனக்கும் பசிக்குது, எல்லாத்தையும் எடுத்து வை நம்மு, சாப்பிடலாம்” என்றவாறே, மனைவியின் முகம் பார்த்துப் பெரிதாகப் புன்னகைத்தான் நரேன். அவர்களின் புன்னகை வசுமதியையும் தொற்றிக் கொண்டது.
மூவரும் தங்களுக்கு வேண்டியதை அவரவர் தட்டில் பரிமாறிக் கொண்டு, தரையில் அமர்ந்து உண்ணத் தொடங்கினர்.
வசுமதியினது ஸ்டுடியோ பிளாட், கதவை திறந்ததும் சிறிய, அடக்கமான கிட்சன், அதனுடன் இணைந்த ஹால் அதையொட்டி படுக்கையறை. அதன் முடிவில் சிறிய பால்கனி என்று சிறிய குடும்பத்திற்கு ஏற்ற வகையில் அடக்கமாக இருக்கும் அவளது பிளாட்.
முன்னர் அவளுடன் வேலைப் பார்த்த திருச்சியைச் சேர்ந்த பெண்ணுடன் ஃபிளாட்டைப் பகிர்ந்து கொண்டாள் வசுமதி. அந்தப் பெண் திருமணமாகி கணவனுடன் சென்று விட, பின்னர் ஒரு குஜராத்தி பெண் வந்து சேர்ந்தாள். அடுத்த ஆறாம் மாதம் அவளும் கிளம்பி விட, அதற்குப் பின் வசுமதி மட்டும் தனியே இருந்து கொண்டாள். அருகிலேயே நர்மதா குடும்பம் இருக்க, பெரிதாகத் துணை தேடவில்லை அவளின் மனது. நாளின் பெரும் பகுதியை வேலை இழுத்துக் கொள்ள, ஃபிளாட்டை உறங்குவதற்கான இடமாக மட்டுமே பாவித்தாள் அவள்.
“வாசுதேவனைப் பற்றி இங்க என் ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லி விசாரிச்சேன் வசுமா.” உணவில் மும்முரமாய் இருந்தவள், நரேனின் குரலிலும், அவன் சொன்ன செய்தியிலும் அதிர்ந்து, சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
‘எது, அதுக்குள்ள விசாரிச்சாச்சா?’ அலறியது அவள் மனம்.
“என் ப்ரெண்ட்ஸ் சொல்றதை வச்சு பார்த்தா, ரொம்ப நல்ல பையனா தான் தெரியறார். பெரிய பிரைவேட் பேங்கில் வேலை, லட்சங்களில் சம்பளம். எந்தவித கெட்டப் பழக்கமும் இல்ல. காதல்.. ஹ்ம்ம், இங்க வந்ததுக்கு அப்புறம் அப்படி எதுவும் இல்ல. ஆனா, இதுக்கு முன்னாடியும் இருந்தது போலத் தெரியல. ஏன்னா அவர் இங்க வந்தே அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு போல.
வேலை இடத்திலேயேயும் அவரைப் பத்தி நல்லவிதமா தான் பேசுறாங்க. வெரி டெடிக்கேட்டட் வொர்க்கர்னு பேர் வாங்கி இருக்கார். ஆபீஸில் அவரோட சீனியர் கிட்ட பேசினேன். அவரைப் பத்தி ரொம்ப மரியாதையா பேசினார். கேட்கவே சந்தோசமா இருந்தது நம்மு” என்றான் நரேன். மறு நொடி என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பி, வெறுமனே புன்னகைத்தாள் வசுமதி.
“அப்போ நம்ம வசு, அந்த வாசுதேவனுக்கு ஓகே சொல்லிடலாம், அப்படினு சொல்றீங்களா நரேன்?” என்றாள் நர்மதா.
“சும்மா இரு நம்மு. இது அவளோட வாழ்க்கை. சோ, லெட் ஹர் டிசைட்” என்ற நரேன் வசுமதியை பார்க்க, அவளோ தன் கவனம் முழுவதையும் பாயாசத்தின் மேல் காட்டிக் கொண்டிருந்தாள்.
“என் மேல மலையளவு கோபம் இருந்தா கூட, அதை எல்லாம் தூக்கி தூர போட்டுட்டு… நல்லா வகை, தொகையா சமைச்சு அனுப்பி இருக்காங்க பாரு என் மாமியார். என்ன சொல்லு, என் மேலயும் கொஞ்சம் பாசம் இருக்கத் தான் செய்யுது. இல்ல நரேன்?” கணவனைப் பார்த்துக் கண் சிமிட்டி சொன்னாள் நர்மதா, உதடு பிரியாமல் சிரித்தான் அவன்.
“உன் மேல அவங்களுக்கு என்ன கோபம் நம்மு? அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல…” என்று சொல்லிக் கொண்டே போனவன், மனைவியின் முறைப்பை கவனித்து விட்டு, சட்டென்று பேச்சை மாற்றினான்.
“அது வந்து அம்மாகிட்ட, வசு கல்யாண விஷயம் சொன்னேனா, உடனே பாயாசம் பண்ணிட்டாங்க அம்மா” என்றவனைப் பார்த்து, உதடு சுழித்தாள் நர்மதா. அவனோ, அவளைக் கண்டு கொள்ளாமல் வசுமதியின் பக்கம் திரும்பினான்.
அவள் முகம் அதிர்ச்சியில் நிறைந்திருந்தது. சில வினாடிகளுக்கு முன், அவளே முடிவெடுக்கட்டும், அது தான் சரியாக இருக்கும், இது அவள் வாழ்க்கை என்று மனைவியை அதட்டியவன், எதற்காகத் திருமணம் முடிவாகி விட்டது என்று தன் அம்மாவிடம் சொல்லி பாயாசம் செய்யச் சொன்னான்? முன்னுக்குப் பின் முரணாக இருந்தது அவனது நடவடிக்கை. எல்லோரும் ஏன் இப்படி என்னைக் குழப்புகிறார்கள்? அவளது அதிர்ச்சியைக் கவனிக்காமல் பேச ஆரம்பித்தான் நரேன்.
“இப்போ வாசுதேவன், அவரோட ப்ரெண்ட்ஸ் கூடச் சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட்டில் தங்கி இருக்கார் போல வசு. இங்க பக்கத்தில தான் அவரோட அபார்ட்மெண்ட். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க பெரிய பிளாட்டா பார்த்து மாறிக்கலாம். அவருக்கு ஹவுசிங் அலவன்ஸ் கண்டிப்பா இருக்கும், இங்க நம்ம பில்டிங்லயே கூட ஃபிளாட் எதுவும் காலியா இருக்கான்னு பார்க்கலாம். நான் சொல்லி வைக்கறேன். அப்படி இல்லைனா, இங்க உன் கூட மூவ் பண்ணிக்கலாம் அவர்.” என்றான் நரேன்.
வசுமதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. சட்டென்று நிலைமையைப் புரிந்து கொண்டு, சில மணி நேரங்களில் வாசுதேவனைப் பற்றி அனைத்தையும் விசாரித்து வந்தது முதல், திருமணத்திற்குப் பின் அவர்களின் வசிப்பிடம் குறித்தான அறிவுரை வரை எல்லாமே அவளின் நலனை கருத்தில் கொண்டே நரேன் செய்கிறான் என்பதை அவளால் நன்றாக விளங்கிக் கொள்ள முடிந்தது.
இதையெல்லாம் அவன் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், அவள் திருமணத்திற்குச் சம்மதித்தால், அதன் பின் வீடு மற்றும் இதர விஷயங்கள் வாசுதேவனின் கவலை.
ஆனால், இத்தனையும் நரேன் செய்வது தன் மேலிருக்கும் அன்பினால் என்று அவளுக்கு நன்றாக விளங்கியது.
அவள் மீதான அவனின் அக்கறையும் மனதிற்கு இதமாகவே இருந்தது. ஆனால், அவளுக்குப் புகைப்படத்தில் பார்த்த வாசுதேவனைப் பிடித்திருக்கிறது, அவ்வளவு தான். மற்றபடி எதையுமே அவளால் எளிதாக எடுத்துக் கொண்டு ஒரு முடிவிற்கு வர முடியவில்லை.
அவளே இன்னும் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பு, வேறு எந்த விஷயங்களிலும் அவளது சிந்தனை செல்ல மறுத்தது.
அவளின் அப்பாவின் சொல்படி பார்த்தால், அவள் சம்மதம் தெரிவித்த மறுகணமே கல்யாண தேதியை முடிவு செய்து விடுவார்கள் என்பது உறுதி. அப்படியென்றால் அவள் உடனே இந்தியா கிளம்பி செல்ல வேண்டும். நாளையே அலுவகத்தில் முறையாக நிலைமையை விளக்கி, விடுமுறைக்கு விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும்.
விமான டிக்கெட் எல்லாம் அலுவலகத்தில் ஏற்பாடு செய்து தந்து விடுவார்கள் தான். ஆனாலும், பயணத்திற்குத் தேவையானவற்றை வாங்குவது முதல், அனைத்தையும் பேக்கிங் செய்வது வரை அவள் தானே செய்ய வேண்டும். மேலும் என்ன வாங்க வேண்டும் என்றே அவளுக்குப் புரிபடவில்லை. அதெல்லாம் அப்பா, அம்மா சொல்வார்கள் என்பதே அவளது குழம்பிய மனதிற்கு உரைக்கவில்லை.
நரேனும், நர்மதாவும் காரசாரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருக்க, வசுமதியின் மனமோ, திருமணத்தைக் குறித்து என்ன முடிவெடுப்பது என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் திணறி, திண்டாடிக் கொண்டிருந்தது.
முதலில் அவளுக்கு வாசுதேவனை நேரில் பார்த்து பேச வேண்டும். இல்லை போனிலாவது பேச வேண்டும். அவனது விருப்பத்தை அறிய வேண்டும். அவர்களது எதிர்காலத்தைக் குறித்துப் பேச வேண்டும். இவை எதையும் செய்யாமல் எப்படிப் புகைப்படத்தை மட்டும் பார்த்து விட்டு முடிவெடுப்பது? திகைத்து, தடுமாறியது அவள் மனம்.
இதை விட, தனக்குக் கொஞ்சமும் பிடிக்காத பெண் பார்க்கும் படலமே மேல் என்று அவளுக்குத் தோன்றியது. மெலிதாகச் சிரித்துக் கொண்டாள். ஆனால், அவளிடம் பேசாமல், அவளைப் பார்க்காமல் இந்த வாசுதேவன் மட்டும் எப்படித் திருமணத்திற்குச் சம்மதித்தான்? அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர்கள் உணவை முடித்துப் பாத்திரங்களைக் கழுவி வைத்தனர், சோஃபாவில் அமர்ந்து அவர்களது கல்யாணம் எப்படி நடந்தது என்பதை மலரும் நினைவுகளாக அவளிடம் பகிர்ந்து கொண்டனர் இருவரும். அதில் நேரம் போனதே தெரியவில்லை அவர்களுக்கு, சிறிது நேரத்தில் நரேனின் அம்மாவிடம் இருந்து அழைப்பு வர, அதன் பின்னே அவர்களின் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றனர் இருவரும்.
“நிதானமா, நல்லா யோசிச்சு, நல்ல முடிவா எடு வசு மா. எல்லாம் நல்லபடியா நடக்கும். வரட்டா?” என்ற நர்மதா,
“அப்பாகிட்ட பேசினதும், மறக்காம எனக்குக் கால் பண்ணனும். சரியா? ஐ அம் அல்சோ வெயிட்டிங்” என்று வசுமதியின் கையைப் பற்றி அழுத்தி விட்டு, நரேன் பின் தொடர அதே தளத்தில் இருந்த அவர்களின் இரட்டை படுக்கையறை கொண்ட ஃபிளாட்டை நோக்கி நடந்தாள்.
சட்டெனத் தனித்து விடப்பட்டத்தைப் போல உணர்ந்தாள் வசுமதி.
மெல்லப் படுக்கையில் சரிந்து கண்களை மூடினாள். உண்ட மயக்கமும், மனதின் கலக்கமும் சேர்ந்து கொள்ள, உறக்கம் அவளை உற்சாகமாகத் தழுவி கொண்டது.
கால, நேரம் அனைத்தையும் மறந்து நன்றாக உறங்கி விட்டாள் அவள். நள்ளிரவில் முழிப்பு தட்ட, மெல்ல எழுந்து அமர்ந்தாள். அறை நன்றாக இருளில் மூழ்கி இருந்தது. மதிய உணவிற்குப் பின் படுத்தவள் தான், உலகம் மறந்து உறங்கி விட்டிருக்கிறாள். படுக்கையின் அருகில் இருந்த அறையின் விடிவிளக்கை போட்டு விட்டு, அருகே இருந்த அவளது மொபைலை கையில் எடுத்தாள்.
அப்பா, அண்ணன், நர்மதா என்று எல்லோரிடமும் இருந்து எக்கச்சக்க மிஸ்டு கால் காட்டியது. இப்படியா போன் அடித்தது கூடத் தெரியாமல் தூங்கினோம் என்று அவளுக்குச் சங்கடமாகப் போனது. நேரம் இரவு பதினொன்றே முக்கால் என்றது அவளது கைப்பேசி. இந்நேரம் இந்தியாவில் இரவு ஒரு மணிக்கு மேல் ஆகி இருக்கும் என்பதை அறிந்ததினால், அப்பா மற்றும் அண்ணனுக்கு அழைக்கவில்லை அவள். அவர்களை இந்நேரம் அழைத்துக் கலவரப்படுத்த வேண்டாம் என்ற முடிவுடன்,
“சாரி அண்ணா, நல்லா தூங்கிட்டேன். அதனால மொபைல் அடிச்சதை கவனிக்கலை. வேற ஒன்னும் இல்ல. பிளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க. ஐ அம் ஆல்ரைட். காலையில பேசறேன். அப்பா, அம்மா கிட்டயும் சொல்லிடுங்க.”
என்று அண்ணனுக்கு மட்டும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தாள்.
‘அப்பா எதுவும் தவறாக எண்ணி இருப்பாரோ? திருமணத்தில் விருப்பம் இல்லாமல், அதைத் தவிர்க்க, அவரது அழைப்பை எடுக்கவில்லை என்று நினைத்திருப்பாரோ?’ அவளது குழப்ப பட்டியலில் காரணங்கள் சேர்ந்து கொண்டே போனது.
நேரம், காலம் தெரியாமல், அந்நேரம் பார்த்து அவளுக்குப் பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. மெல்ல எழுந்து, முகம் கழுவி அடுப்படிக்குள் நுழைந்தாள். பாலை எடுக்கப் பிரிட்ஜை திறந்தவளின் கண்களில் பட்டது, நன்றாகப் பேக் செய்து உள்ளே வைக்கப் பட்டிருந்த பால் பாயாசம். நர்மதா தான் வைத்து விட்டுச் சென்றிருக்க வேண்டும். முகத்தில் மெலிதாகப் புன்னகை பரவ, அதை எடுத்து மைக்ரோவேவில் சூடுப்படுத்தி உண்ண ஆரம்பித்தாள் வசுமதி. மனம் மானசீகமாக நர்மதாவிற்கு நன்றி சொன்னது.
அவளது ஒரு கை உண்பதில் மும்முரமாய் இருக்க, மறு கை மொபைலை எடுத்தது. மீண்டும் அண்ணனின் மெயிலை திறந்து பார்க்கலானாள். மீண்டும், மீண்டும் வாசுதேவனின் மேல் தாவியது அவள் விழிகள். மனதை அடக்கி அண்ணனின் மெயிலை முழுதாக வாசிக்க ஆரம்பித்தாள். அவசரத்தில் காலையில் பார்க்க தவறிய விஷயங்கள் எல்லாம் இப்போது அவளின் கண்ணில் தெளிவாகப் பட்டது.
வாசுதேவனின் இந்திய தொடர்பு எண் அதில் இருந்தது. மேலும், அவனிடம் அவள் பேசி விட்டே அவளது முடிவை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தான் அவளின் அண்ணன் வருண். அப்படி ஒருவேளை அவனிடம் பேசிய பின்னரும் சரியான முடிவெடுக்க முடியவில்லை என்றால், இந்தியா வந்து நேரில் பார்த்து முடிவு செய் என்றிருந்தான் அவன்.
“நீ என்ன முடிவெடுத்தாலும் சரி தான், அண்ணா இருக்கேன் உன் கூட..” என்று சொல்லாமல் சொல்லியது அவனின் வார்த்தைகள். அது வரை அவளின் மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகப் பின்னுக்குச் சென்று மாயமாய் மறைய, அவள் மனம் மெல்ல அமைதியடைந்தது.