வசுமதியின் ஸ்டுடியோ பிளாட்டிற்குள் நுழைந்தனர் பெண்கள் இருவரும். காலையில் கணவன் மற்றும் மாமியாருடன் நடைப் பயிற்சி மேற்கொண்டு விட்டு, அப்படியே வரும் வழியில், நர்மதா அவளது வீட்டிற்கு, அந்த வாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு சூப்பர் மார்கெட்டில் காத்திருக்க, அவர்களை அழைத்து வரச் சென்ற வசுமதி அவளுக்கென்று எதுவும் வாங்காமலே அவர்களோடு சேர்ந்து வீடு திரும்பி இருந்தாள்.
வசுமதி கிட்சனிற்குள் சென்று தனது பிரிட்ஜை திறந்து பார்க்க, அது துடைத்து வைக்கப்பட்டதைப் போலக் காலியாக இருந்தது.
நல்லவேளையாகப் பால் மட்டும் இருந்தது, கேனில் இருந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சினாள். இருவருக்கும் சேர்த்து காபி கலந்தாள். ஆளுக்கொரு கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டு போய்ச் சோபாவில் அமர்ந்தனர்.
“இப்போ சொல்லு வசு, வாட்ஸ் ஈட்டிங் யூ?” சோஃபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து, வசுமதியின் முகம் பார்த்து நிதானமாகக் கேட்டாள் நர்மதா.
“தெரியலை அண்ணி.” என்ற வசுமதி மெல்ல தொண்டையைச் செருமி, ஒரு மிடறு காபியை அருந்தி விட்டு,
“அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது, அவர், அதாவது வாசுதேவன் இங்க தான் வேலை பார்க்கறார்னு அப்பா சொன்னதும், என் நம்பர் கொடுத்து பேச சொல்லுங்கப்பான்னு சொன்னேன். நான் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல அண்ணி. அதுக்குக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அவங்க அப்பாக்கு உடம்பு சரியில்லை, அவர் ஊரில இருக்கார்னு அப்பா சொல்லி இருந்தாங்க. ஆனா, அதை மறந்துட்டு நான், ம்ப்ச்.. லூசு மாதிரி உளறி வச்சுருக்கேன்” கையில் இருந்த கோப்பையின் மேல் பார்வையைப் பதித்து, சலித்துக் கொண்டாள் வசுமதி.
“அப்பா என்ன நினைச்சு இருப்பாங்க?”
“அப்பா, தப்பா ஒன்னும் நினைச்சு இருக்க மாட்டாங்க வசு” என்று விட்டு சிரித்த நர்மதா, “சரி, இப்போ அதை விடு. நீ விஷயத்தைச் சொல்லு” என்றாள்.
“ம்ம்ம், அவர் சென்னையில் இருக்கார்னு அப்பா மறுபடியும் சிரிச்சிட்டே சொன்னாங்க. அந்த நேரம் அப்பா சொன்னது எதுவும் என் மைண்ட்ல சரியா ரெஜிஸ்டர் ஆகவே இல்லண்ணி. என்னமோ ஒரு படபடப்பு. அதான் அவர் எமர்ஜென்சி லீவ்ல போய் இருக்கார், அவங்க அப்பாக்கு உடம்பு முடியலை, இதெல்லாத்தையும் மறந்திட்டு என்கிட்ட பேச சொல்லி… ம்ப்ச்..” தர்மசங்கடமாகப் புன்னகைத்தாள் வசுமதி.
“ஹேய், இதெல்லாம் ரொம்ப நார்மல் வசு. பாரு, இப்ப கூடச் சொன்னதையே சொல்லிட்டு இருக்க. எல்லாம் ஒரு பதட்டத்தில் பண்றது தான், ஃப்ரீயா விடு” என்றாள் நர்மதா, வசுமதியின் தோளில் தட்டி,
“இன்னைக்கு முழுக்க யோசிச்சுட்டு பொறுமையா, என் முடிவை ஈவ்னிங் சொல்ல சொன்னார் அப்பா.”
“ஓ..” என்றதோடு நிறுத்தி கொண்டாள் நர்மதா.
“நான் சம்மதம் சொன்னா, உடனே கல்யாணம் இருக்கும் போல அண்ணி, ஐ மீன் இந்த வாரமே.. இல்லனா இந்த மாசமே… அப்பா சொன்னதை வச்சு நான் அப்படித் தான் புரிஞ்சுக்கிட்டேன். அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.” என்றாள் வசுமதி, அவள் குரலில் லேசாகப் பயம் எட்டிப் பார்க்கவே செய்தது. நர்மதா பேசாமல் அமர்ந்திருக்க, வசுமதியே தொடர்ந்தாள்.
“அவருக்கு அடுத்து எப்போ லாங் லீவ் கிடைக்கும்னு தெரியலையாம். அதான் இப்பவே… அவர் ஊரில் இருக்கும் போதே, இன்னும் கொஞ்ச நாள் சேர்த்து லீவ் எடுத்துட்டுக் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு யோசிக்கறாங்கப் போல…”
“ஆமா, அதுவும் சரி தானே? வருஷத்துல ஒரு மாசம் தானே லீவா இருக்கும்? அதுக்கு மேல எடுக்க முடியாது இல்ல? அவங்க யோசிக்கறதும் சரி தான் வசு.” என்றாள் நர்மதா ஏதோ சிந்தனையில் மூழ்கியவளாக, அவளைப் போலவே வசுமதியும் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள்.
‘வாழ்க்கை முழுவதுக்குமான திருமணம் குறித்து யோசித்து முடிவெடுக்கத் தனக்கு ஒரு நாள், ஓரே ஒரு நாள் போதுமா?’ என்ற சிந்தனையில் தத்தளித்தது அவள் மனம்.
“போட்டோல பையன் பார்க்க நல்லா தான் இருக்கார் வசு. வேலையும் நல்ல வேலை தான், குடும்பமும் நல்ல குடும்பம்னு சொல்ற, போதாததுக்கு உங்க தாய் மாமாவும் ஸ்ட்ராங்கா சர்டிஃபிகேட் கொடுத்து இருக்கார். உங்க வீட்லயும் பையனைப் பத்தி நல்லா விசாரிச்சு இருப்பாங்க. முழுசா விசாரிக்காம அவரைப் பத்தி, கல்யாணத்தைப் பத்தி, உன்கிட்ட பேசி இருக்க மாட்டாங்க. சோ, எங்கேயும் தப்பு நடக்க வாய்ப்பில்ல. அப்புறம் உனக்கு என்ன பயம்? ஒருவேளை உனக்கு அவரைப் பிடிக்கலையா? வேற நல்ல ஃபோட்டோவா அனுப்ப சொல்லுவோமா?” என்றாள் நர்மதா புருவம் சுருக்கி, வசுமதியின் அமைதி அவளைச் சந்தேகித்துக் கேள்விக் கேட்க வைத்தது.
“எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு அண்ணி” பட்டென்று வசுமதி பதில் கொடுக்க, அந்த வேகத்தைப் பார்த்து நர்மதாவிற்குச் சிரிப்பு வந்தது.
“ஃபோட்டோ பிரச்சனை இல்ல அண்ணி. எனக்கு அவரை நேர்ல பார்த்து, நாங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசி, அப்புறமா கல்யாணம்னா ஓகே. ஆனா, இவங்க, எங்க ரெண்டு குடும்பமும் போற வேகம் தான் என்னை ரொம்பவே தயங்க வைக்குது அண்ணி. ஒரு பக்கம் அப்பா பொறுமையா யோசிச்சு முடிவை சொல்லு வசு, அது சம்மதமா தான் இருக்கணும்னு அவசியம் இல்லனு சொல்றாங்க. அதே சமயம் இன்னொரு பக்கம், நீ சரின்னு சொன்னா உடனே கல்யாணம்னு சொல்றாங்க. இட்ஸ் கன்பியூஸிங் மீ. என்னை மறைமுகமா, சம்மதிக்க வற்புறுத்தற மாதிரி இருக்கு எனக்கு” என்றாள் வசுமதி, கலவரம் மிகுந்த குரலில்,
“அச்சோ, ரொம்ப அனலைஸ் பண்ணாத டா. தலைவலி தான் வரும். ஒன்னு பண்ணு, ஊருக்குப் போய்ப் பையனை நேர்ல பார்த்து பேசிடு வசு. அதுக்கு அப்புறம் உனக்கு அவரைப் பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கோ. பிடிக்கலையா, முகத்துக்கு நேரா முடியாது சொல்லிடு. வெரி சிம்பிள்.” என்று விட்டு, தோளை குலுக்கினாள் நர்மதா. ஆனால், சொன்ன அவளுக்கும் அது, அத்தனை எளிதான காரியம் இல்லை என்று நன்றாகவே தெரிந்திருந்தது.
“அப்படியா சொல்றீங்க அண்ணி?” என்றாள் வசுமதி கேள்வியாக,
“அப்படித் தான் சொல்றேன்” என்றாள் நர்மதா அழுத்தமாக, மெல்ல ஒப்புதலாகத் தலையசைத்தாள் வசுமதி. ஆனாலும் அவளின் மனதினுள் குழப்ப ரேகைகள் வளர்ந்து நீண்டு கொண்டே போனது.
“இப்போ நீங்க சொல்லுங்க அண்ணி. என்ன பிரச்சனை? எவ்ளோ நேரம் இங்கேயே இருப்பீங்க? வீட்டுக்கு போக வேண்டாமா? கிடைக்கிற ஒரு நாள் லீவையும் இப்படி வேஸ்ட் பண்றீங்களே. நரேன் அண்ணா தான் பாவம். இது மாதிரி சண்டை எல்லாம் சகஜம் தானே, இதுக்குப் போய்…” என்றாள் வசுமதி.
“ம்ப்ச், சும்மா உங்க அண்ணாக்குச் சப்போர்ட் பண்றதை நிறுத்து வசு. எனக்கு ஒரே எரிச்சலா வருது, இப்பல்லாம் அவர் மேல ரொம்பக் கோபமா வேற வருது” என்றாள் நர்மதா, பார்வையை விட்டத்தில் பதித்து,
“என்ன அண்ணி? என்ன பிரச்சினை? என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க” என்றாள் வசுமதி, அவளின் கையைப் பற்றித் தனது கைகளுக்குள் பொதிந்து கொண்டு,
“உன்கிட்ட சொல்றதுக்கு என்ன வசு, எல்லாம் அதே பழைய பஞ்சாயத்து தான், உன்கிட்ட முன்னாடி சொல்லி இருக்கேனே, எனக்கும் உன்னைப் போலத் தான் கல்யாணம் முடிவாச்சு. திடுதிப்புனு, அவசர அவசரமா… இவங்களுக்குத் தேவை ஏதோ ஒரு காரணம். கல்யாணம் பண்ணி வைக்கறதோடு அவங்க கடமை முடிஞ்சது. ஆனா காலத்துக்கும் வாழப் போறது நாம தானே?.
இதோ கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகப் போகுது. ரெண்டு, மூனு வருஷமா குழந்தை, குழந்தைன்னு பிடுங்கி எடுக்கறாங்க. நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன்? நாங்களும் முயற்சி பண்ணத் தான் செய்யறோம். எத்தனையோ டாக்டர்ஸ் பார்த்தாச்சு. எவ்வளவோ ட்ரீட்மெண்ட்ஸ் எடுத்தாச்சு. ஆனா, குழந்தை நின்னா தானே?
இதெல்லாம் நம்ம கையிலா இருக்கு? ஹ்ம்ம், அத்தைக்கு எங்க புரியப் போகுது. வர வர அவங்க பேச்சு ஒரு அளவில்லாமல் போய்கிட்டு இருக்கு டா. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அவங்களைப் பேசாம ஊருக்கு பார்சல் பண்ணி அனுப்பிடலாம் போல இருக்கு. இல்லனா நிரந்தரமாக அபுதாபிக்கு அனுப்பி விட்டுடனும். ஏன்னா, என்னை விட இதுல நரேன் தான் ரொம்ப மாட்டிக்கிட்டு முழிக்கறார். பாவம் மனுஷன், எங்க ரெண்டு பேருக்கும் நடுவில அவர் படுற பாடு இருக்கே.” வருத்தத்துடன் வந்து விழுந்தன நர்மதாவின் வார்த்தைகள்.
வசுமதிக்கு இது முன்னரே தெரிந்தது தான், ஆனாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘ஒரு குழந்தைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?’ என்ற கேள்வி தானாக எழுந்து நின்றது அவள் மனதில், ஆனால் விடை தேட முற்படவில்லை அவள்.
“இன்னைக்கு அத்தை எல்லார் முன்னாடியும் சூப்பர் மார்க்கெட்டில் வச்சு குழந்தை பத்தி பேசினது, ரொம்பக் கஷ்டமா போச்சு வசு. அங்கிருந்த யாருக்கும் நாம பேசுறது புரியப் போறதில்ல தான். ஆனாலும் பப்ளிக்ல வச்சு அவங்க கோபமா பேசினது, வருத்தமா இருக்கு டா. அதை விட நரேன் அவங்களை எதிர்த்துக் கேள்வி கேட்காம, அவங்க பக்கம் நின்னது தான் எரிச்சலா வந்தது.
என்னமோ தெரியல வசு, இப்பல்லாம் ரொம்பக் கடுப்பா இருக்கு. குழந்தை பத்தி நரேன் கிட்ட ஏன் யாருமே கேள்வி கேட்க மாட்டேங்கறாங்க?, அவங்க பையன் தானே, அவரைக் கேட்க வேண்டியது தானே? எங்க வீட்லயும் நான் தான் பதில் சொல்லணும். அவர் வீட்லயும் நான் தான் பதில் சொல்லணும்னா எப்படி வசு?” பொங்கினாள் நர்மதா.
பல நாட்களாக வசுமதியின் உதடுகள் உச்சரிக்கத் துடித்த வார்த்தைகளை நர்மதா இன்று அவளே சொல்லி விட, அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் வசுமதி.
“எனக்குத் தெரியும் வசு. இங்க எல்லாத்துக்கும் நாம தான் பதில் சொல்லி ஆகனும். எல்லாத்துக்கும் நாம தான் பொறுப்பாகணும். பெண் என்றைக்குமே இவங்களுக்குப் பலிகடா தான்”
“அப்படி இல்ல அண்ணி. இப்ப காலம் மாறிட்டு தானே இருக்கு?”
“என்ன மாறுச்சு? இங்க எதுவும் மாறலை. மாறாது, மாறவும் விட மாட்டாங்க. என் விஷயத்தையே எடுத்துக்கோ. எனக்கு மூனு வருஷத்துக்கு முன்னாடி, எல்லாவித டெஸ்ட்சும் எடுத்தாச்சு. ஆல் நார்மல். ஆனா நரேனுக்கு எப்போ டெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க? ஏன் யாருமே, ஏன் நானுமே கூட அவரை டெஸ்ட்ஸ் எடுக்கச் சொல்லலை?” கேள்வியாய் நிறுத்தினாள் நர்மதா.
‘ஹாஸ்பிடல் போகும் போது ரெண்டு பேரும் சேர்ந்து போகணும், அப்படி ஒன்னா டாக்டர் கிட்ட போய் இருந்தா, ரெண்டு பேருக்கும் டெஸ்ட் எடுக்கச் சொல்லி இருப்பாங்களே? நீங்க ஏன் அவரை, உங்க கூட ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகலை அண்ணி?’ மனதினுள் கேள்வி கேட்டுக் கொண்டாள் வசுமதி, அதைச் சத்தமாக நர்மதாவின் முகம் பார்த்து கேட்க முடியவில்லை அவளால்.
“எனக்கு எல்லோருக்கும் பதில் சொல்லி, சொல்லியே அலுத்து போச்சு வசு. ஆனா, இனி மேல் அப்படி நடக்காது. இனி ஒவ்வொரு முறையும், நரேனையும் கூடக் கூட்டிட்டு தான் ஹாஸ்பிடல் போகப் போறேன். இனி அவங்க அம்மாக்கும், ஊர், உலகத்துக்கும் அவரே பதில் சொல்லட்டும்” என்று அழுத்தமாகச் சொன்னாள் நர்மதா.
வசுமதிக்கு இந்தப் புலம்பல்கள் ஒன்றும் புதிதல்ல, பல முறை கேட்டு கேட்டு, நர்மதாவின் கதை அவளது மனதில் ஆழமாகப் பதிந்து போன ஒன்று தான். ஆனாலும், ஒவ்வொரு முறையும் புதிது போலவே கேட்டுக் கொண்டிருக்கிறாள் அவள்.
கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத ஒரு தெளிவு இன்றைக்கு நர்மதாவின் குரலில் இருந்ததை உணர்ந்தாள் அவள். அது தந்த நிம்மதியுடன் சோஃபாவில் சாய்ந்து கண்களை மூடினாள் வசுமதி. மூடிய கண்களுக்குள் வந்து சிரித்தான் வாசுதேவன். அவளின் இதழ்கள் தாமாகப் புன்னகையில் மலர்ந்தன.
கல்யாணம், குழந்தை, குடும்பம் பற்றிய பேச்சுச் சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை அவர்களுக்கு, மதிய உணவு நேரம் நெருங்கி இருந்தது. பசி அப்போது தான் தலைக் காட்ட ஆரம்பித்திருந்தது.