ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு…
அலுவகத்தில் இருந்து அவசர அவசரமாகக் கீழிறங்கினாள் வசுமதி.
அங்கே அவளுக்காகக் காத்திருந்தனர் அவளுக்கு எல்லாமுமான இருவர்.
காரில் ஸ்டைலாகச் சாய்ந்து நின்றிருந்தான் வாதேவன். அவன் கரங்களில் இருந்த அவர்களின் ஒரு வயதேயான மகன் வசுமித்ரன், கைகளை ஆட்டி ஆட்டி அவன் மொழியில், அப்பாவிடம் சுவாரசியமாகக் கதைப் பேசிக் கொண்டிருந்தான்.
கவிதையாய் இருந்த அக்காட்சியைத் தனது மொபைலில் படமாகப் பதிந்து கொண்டாள் வசுமதி. புன்னகையில் மலர்ந்த முகத்துடன் அவர்களை நெருங்கினாள்.
“சாரி, லேட் பண்ணிட்டேனா?” என்றாள்.
“இல்லையே வசு. அப்படியே நீ லேட் பண்ணாலும், உனக்காக எவ்வளவு நேரம் வேணும்னாலும் காத்திருக்க நாங்க ரெடி. இல்லடா செல்லம்? ரெடியா” என்றான் மகனைப் பார்த்து, “ரெதி” என்றான் அவனும் வேகமாக.
இருவரையும் பார்த்து தலையை அசைத்துக் கொண்டே, காரில் ஏறி அமர்ந்தாள் வசுமதி.
அதற்காகவே காத்திருந்தது போல, அவளை இழுத்துக் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் வாசு.
“அச்சோ, பப்ளிக் வாசு” என்று பதறினாள் வசுமதி.
“என் கார், என் பொண்டாட்டி. நான் என்னவேனாலும் பண்ணுவேன். இதெல்லாம் ஒரு ஊரா வசு? ஒரு நாள் முழுக்க, என் பொண்டாட்டியை பிரிஞ்சு இருந்திருக்கேன். சின்னதா ஒரு முத்தம் கூடக் குடுக்கக் கூடாதுன்னா, எப்படி? மனுஷன் வாழ்வானா இந்த ஊரில?” எப்போதும் போல அவனது புலம்பலை புன்னகையுடன் பார்த்திருந்தாள்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், கணவன் இப்படியே தான் இருப்பான் என்று தோன்றியது அவளுக்கு.
“காலைல தானே, துபாய் இஸ் பெஸ்ட் கண்ட்ரி. க்ளோஸ் டு மை ஹார்ட்னு சொன்னீங்க?” என்று அவள் சிரித்துக் கொண்டே கேட்க, அவள் மடியில் அமர்ந்திருந்த வசுமித்ரன், அவர்களின் பேச்சில் இடைப் புகுந்து, “ப்பா என்கு..” என்று கன்னத்தைக் காட்டினான்.
அவனை வசுமதியின் மடியில் இருந்து தூக்கி, தன் மடியில் இருத்தி, “ஆமா டா. அப்பா உனக்கு. அம்மா எனக்கு. டீல் ஓகே?” என்று மகனிடம் பேரம் பேசினான் வாசு.
“ஆஆஆ…” என்று அவன் மழலையில் ஆட்சேபனை தெரிவிக்க, “இங்க பாருடா, அவ முதல்ல எனக்குப் பொண்டாட்டி, அப்புறம் தான் உனக்கு அம்மா. நான் தான், உனக்குப் பாவம் பார்த்து அவளை விட்டுக் கொடுத்து இருக்கேன்.” என்று அவன் மகனிடம் சொல்லிக் கொண்டிருக்க,
“குழந்தைக் கிட்ட என்ன பேசறீங்க வாசு” என்று அவனைக் கண்டித்தாள் வசுமதி.
“ஒழுங்கா ஒரு குட்டி தேவதையைப் பெத்துக் கொடுத்திருக்கலாம் நீ. அவ, என் கூடச் சேர்ந்து உன்னைக் கொஞ்சி இருப்பா. இவன் என்னடான்னா… உன்னை முழுக்க அவனுக்கேனு சொந்தம் கொண்டாடுறான். என்னைப் பக்கத்திலேயே வர விடாம.. ராஸ்கல்”
கணவனின் புலம்பலில் வசுமதிக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
வாசு, அவள் சிரிப்பை ரசித்தபடி குழந்தையிடம் மூக்கை சுருக்கி காட்டினான். பதிலுக்கு அவனும் அதே போல் செய்ய, சிரித்துக் கொண்டே அழுத்தமாய் மகனின் கன்னத்தில் முத்தமிட்டான்.
அடுத்தப் பத்தாம் நிமிடம் வீட்டில் இருந்தனர். வசுமதி கதவை திறந்து கொண்டிருக்கும் போதே, வாசுவின் கைகளில் இருந்து நழுவி, கீழிறங்கி பக்கத்து வீட்டை நோக்கி தளிர் நடை போட்டான் வசுமித்ரன்.
“அவனை நான் பார்த்துக்கறேன். நீங்க போய் ரெப்ரஷ் ஆகுங்க.” என்று கணவனிடம் சொல்லி விட்டு, குழந்தையைக் கைகளில் அள்ளினாள் வசுமதி.
அவன் கைப் பிடித்து, பக்கத்து வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள்.
“ஹேய் வா, வசு. செல்லக் குட்டி வாங்க” என்று இருவரையும் வரவேற்றாள் நர்மதா. அவள் இடுப்பில் அமர்ந்திருந்த அவர்களின் ஒரு வயது மகள் நந்தனா, வசுமதியை பார்த்ததும் தன் நான்கு பற்களையும் காட்டி சிரித்தபடி அவளிடம் தாவினாள்.
“அத்த, அத்த, அத்த” என்று ஏலமிட்டாள்.
“செல்லமே, அத்தையை மிஸ் பண்ணீங்களா?” என்று உதடு குவித்து வசுமதி கேட்க, தானும் அதே போல உதடு குவித்து, “ம்ம்ம்” என்றது குழந்தை.
ஆழ்ந்த மூச்சொன்றை உள்ளிழுத்து குழந்தையை வாசம் பிடித்த வசுமதி, மென்மையாக அவளின் பட்டுக் கன்னங்களில் முத்தமிட்டாள். பதிலுக்கு அவள் கன்னத்தை எச்சில் படுத்தினாள் நந்தனா.
நர்மதாவிற்கு நந்தனா பிறந்து பதினைந்து நாட்கள் கழித்து, வசுமதிக்கு வசுமித்ரன் பிறந்தான்.
வாசுவும், வசுமதியும் குழந்தை பிறக்கும் முன்னே, நர்மதாவின் பக்கத்து ஃபிளாட் காலியாகவும் அங்கே மாறி இருந்தனர். இரட்டை படுக்கையறை கொண்ட ஃபிளாட்.
குழந்தையைப் பார்க்க சென்னையில் இருந்து அடிக்கடி யாராவது வந்து கொண்டேயிருக்க, அவர்களுக்குப் புதிய ஃபிளாட் வசதியாகவும் இருந்தது.
பிரசவத்திற்காக மூன்று மாத விடுமுறை அலுவலகத்தில் இருந்தே வசுமதி கொடுக்கப்பட்டது. அது தான் அங்கு வாடிக்கையும் கூட. குழந்தைக்கு நான்கு மாதமாகையில் மீண்டும் வேலையில் சேர்ந்து விட்டாள் அவள்.
நர்மதா வேலைக்குச் செல்வது என்ற எண்ணத்தை எப்போதோ மூட்டை கட்டி பரணில் எறிந்து விட்டாள். அவளின் முழுக் கவனமும் குழந்தையிடம் மட்டும் தான்.
நரேனின் அம்மா சரஸ்வதி தான் இரு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். வசுமதி எவ்வளவோ மறுத்தும் வெளியில் பேபி சிட்டிங் அனுப்பவோ, கேர் டேக்கர் வைக்கவோ அனுமதிக்கவில்லை அவர்.
வாசுவின் அம்மாவும், வசுமதியின் அம்மாவும் மூன்று மாத விசிட் விசாவில் மாறி மாறி வந்து பேரனை பார்த்துக் கொண்டனர். அவர்கள் இல்லாத நாட்களில், அவனைச் சரஸ்வதி அம்மா தனது சொந்த பேரனை போலப் பார்த்துக் கொண்டார்.
“நீ போய்க் குளிச்சு, டிரஸ் மாத்திட்டு வா. நான் மித்ரனை பார்த்துக்கறேன். நரேன் இப்போ வந்திடுவார்” என்று வசுமதியிடம் சொன்னாள் நர்மதா. ஒருமுறை திரும்பி குழந்தையைப் பாத்தாள் வசுமதி. அவனும், நந்தனாவும் நரேனின் அப்பாவிடம் விழி விரித்துக் கதைக் கேட்டு கொண்டிருந்தனர்.
மெல்ல எழுந்து வீட்டை நோக்கி நடந்தாள் வசுமதி.
மருத்துவரின் அறையில் கையைப் பிசைந்து கொண்டு பதட்டமாக அமர்ந்திருந்தான் வாசு. முழுதாக இரண்டு நிமிடங்கள் அவனைக் காத்திருக்க வைத்து விட்டு, வந்தார் மருத்துவர்.
“சொல்லுங்க வாசுதேவன்.” என்றார்.
“நான், வசுமதியின்… ஹஸ்பெண்ட்” என்றான் தயக்கத்துடன்,
“எஸ், ஞாபகம் இருக்கு. சொல்லுங்க மிஸ்டர் வாசுதேவன்” என்றார் அவர் புன்னகைத்து,
“அது, நீங்க என்னைப் பார்க்கணும்னு சொன்னதா வைஃப் சொன்னா..” என்று அவன் இழுக்க,
“வசுமதி வரலையா?” என்று கேள்வியாக நிறுத்தினார் மருத்துவர்.
“இல்லையே டாக்டர். என்கிட்ட பேசணும்னு சொன்னீங்கன்னு நினைச்சு… என்னை மட்டும் போகச் சொன்னா.. நீங்க வர சொல்லி பதினைந்து நாளுக்கு மேல ஆச்சு. என்னால இப்ப தான் வர முடிஞ்சுது மேம். வேலையில் கொஞ்சம் பிஸியா இருந்தேன்” எதற்காக வரச் சொல்லி இருக்கிறார் என்ற கேள்வி உறுத்திக் கொண்டே இருக்க, பதட்டத்துடன் பேசினான் வாசு. வசுமதியிடம் இது குறித்துக் கேட்ட போது அவள் சரியாகப் பதிலளிக்கவில்லை.
“இட்ஸ் ஓகே” என்றார்.
“சொல்லுங்க டாக்டர்” என்று அவர் முகம் பார்த்தான்.
தொண்டையைச் செருமி சரி செய்து கொண்ட மருத்துவர், “ஹவ் இஸ் யுவர்… உங்க ரெண்டு பேரோட ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கு? நான் என்ன கேட்கறேன்னு..” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
அவர் முடிக்கும் முன்பே, “புரியுது டாக்டர்” என்றான் வாசு.
ஒரு பெண் மருத்துவரிடம் இதைப் பற்றிப் பேச அவனுக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும், அதை உதறி தள்ளி விட்டு, “எப்பவும் போல ரொம்ப ரொம்ப அன்பா தான் இருக்கா டாக்டர். ஆனா, என்னை அவோய்ட் பண்ற ஃபீல் எனக்கு. கர்ப்பமா இருக்கும் போது கூட நல்லா தான் இருந்தா.. ஆனா..” என்று அவன் தடுமாற, புரிந்ததற்கு அடையாளமாகத் தலையை அசைத்து புன்னகைத்தார் மருத்துவர்.
“அவங்க இந்த முறையும் ப்ரெக்னன்ட் ஆகிடுவோம்னு பயப்படுறாங்க”
“என்ன?” என்றான் அதிர்ந்து போய்,
“எஸ், போன தடவை ஆனது போல, ஆகிடும்னு அவங்களுக்குப் பயம். அதான், அடிக்கடி என்னை வந்து பார்க்கறாங்க. ஒரு நாள் தள்ளிப் போனாலும் ஹோம் பிரக்னன்சி டெஸ்ட் பண்ணி பார்க்கறாங்க” என்று அவர் சொல்லிக் கொண்டே போக, அதிர்ச்சியில் உறைந்து போனான் வாசு.
மருத்துவர் வர சொன்ன போது, இப்படி ஒரு செய்தி காத்திருக்கும் என்று அவன் நினைத்து கூடப் பார்த்திருக்கவில்லை.
“யூ சீ, மிஸ்டர் வாசுதேவன். அவங்க ஆழ் மனசின் பாதிப்பு தான் இந்தப் பயம். ரெண்டு பேரும் உட்கார்ந்து மனசு விட்டு பேசுங்க. நான் என்னோட ப்ரெண்ட் ஒரு டாக்டர் ரெகமெண்ட் பண்றேன். ரெண்டு பேரும் கவுன்சலிங் போய்ட்டு வாங்க.” என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசி, புன்னகைத்தார் மருத்துவர்.
வாசு அப்படியே அமர்ந்திருக்க, “வசுமதி பிரக்னன்சிக்கு பயப்படலை மிஸ்டர் வாசுதேவன். அவங்க வேற எதுக்கோ பயப்படுற மாதிரி இருக்கு. ரெண்டு பேரும் அடுத்த முறை சேர்ந்து வாங்களேன்” என்று மேலும் அவர் அழுத்திச் சொல்ல, அவளின் பயத்தின் காரணம் அறிந்தவனுக்கு வியர்த்தது. உணர்ச்சிகளை அடக்கியதில் வாசுவின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
“ஓகே டாக்டர். தேங்க்யூ” என்று முயன்று வரவழைத்த புன்னகையுடன் எழுந்து கொண்டான் வாசு.
மனைவி தனக்குத் தான் பயப்படுகிறாள் என்பது அவனுக்கு நன்றாக விளங்கியது. குழந்தையால் மீண்டும் அவர்களுக்கு இடையில் சண்டையும், பிரிவும் வந்திடுமோ என்று கலக்கமடைந்திருக்கிறாள் என்று நினைக்கையிலேயே அவனுக்கு மனம் கனத்துப் போனது. தன்னைத் தானே நொந்து கொண்டவனாக, வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
அவள் மனதில் அது இவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கும் என்று அவன் கொஞ்சம் கூட யூகித்திருக்கவில்லை.
நேராக வீட்டிற்குச் செல்லாமல், கோவிலுக்குச் சென்று விட்டு, மனைவி மற்றும் நந்தனாவிற்குப் பூ வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
“இந்த நரேனுக்கு இருக்கச் சேட்டையைப் பாரேன் வசு” என்று நர்மதா கடுப்புடன் சொல்ல, “என்னாச்சு அண்ணி?” என்றாள் வசுமதி.
“எப்பப் பாரு பொண்ணையே தூக்கிட்டு திரியறார். மக வந்ததும், பொண்டாட்டி ஒருத்தி இருக்கறதையே மறந்தாச்சு” என்று புகார் வாசித்தாள் நர்மதா. வெடித்து வெளிவர இருந்த சிரிப்பை கன்னச்சதை கடித்து அடக்கினாள் வசுமதி.
நரேனை திரும்பிப் பார்த்தாள். ஒரு கையில் நந்தனாவையும், மறுகையில் மித்ரனையும் தூக்கி வைத்துக் கொண்டு, விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தான்.
“மாமா, மாமா” என்று ஒரு பக்கம் மித்ரன், நரேனின் கன்னத்தைப் பிடித்துத் திருப்ப, மறுபக்கம், “ப்பா, ப்பா” என்று அவன் கவனத்தைத் தன் மேல் திருப்ப போராடிக் கொண்டிருந்தாள் நந்தனா. அதைக் கண்ணெடுக்காமல் ரசித்துக் கொண்டிருந்த வசுமதியை கலைத்தது நர்மதாவின் புலம்பல்.
“எப்பவும் இவர் வீட்டுக்குள்ள வந்ததும் அவளைத் தூக்கி நான் கொஞ்சுவேனா… கடுப்பாகி மனுஷன், குழந்தையை வாங்கிட்டு போய் அத்தைகிட்ட கொடுத்திட்டு, என்னைக் கவனிக்க ஆரம்பிச்சுடுவார்” என்று நர்மதா சிரித்துக் கொண்டே சொல்ல, வசுமதி தன் பார்வையை முன்னிருந்த டிவியில் பதித்தாள்.
“மித்ரனும், வாசுவும் ஒன்னு போல நடந்து வர்றதை பார்க்க, பார்க்க எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு வசு. அதனால் நானும் நரேனை போல ஒரு குட்டிப் பையனை பெத்துக்கலாம்னு இருக்கேன்” என்று அறிவித்தாள் அவள்.
“முதல் முறை நார்மலா கன்சீவானதால இனி எந்தப் பிரச்சனையும் இருக்காதுனு சொன்னாங்க டாக்டர். சோ,..” என்று அவள் சொல்லிக் கொண்டே போக, “ஆல் தே பெஸ்ட் அண்ணி” என்றாள் வசுமதி.
“தேங்க்யூ வசு” என்றாள் நர்மதா.
இரவு எட்டு மணி என்றது கடிகாரம், குழந்தையைத் தூக்கிக் கொண்டு தங்களின் வீட்டிற்குச் சென்றாள் வசுமதி.
கணவனை எங்கே காணோம் என்று எண்ணிக் கொண்டே குழந்தையைக் கவனித்துத் தூங்க வைக்க முயன்றாள்.
சிறிது நேரத்தில், “வசும்மா” என்று அழைத்த படியே படுக்கையறைக்குள் நுழைந்தான் வாசு.
“ஷ்ஷ், குட்டி தூங்கறான்” என்று குழந்தையைக் கைக் காட்டினாள். அவளிடம் இருந்து குழந்தையை வாங்கி, அவனது படுக்கையில் கிடத்தி, போர்த்தி விட்டான் வாசு.
“எங்க போய் இருந்தீங்க?” என்று உணவை எடுத்து வைத்துக் கொண்டே அவள் கேட்க,
“ப்ரெண்ட்டை பார்க்க, அப்படியே வர்ற வழில கோவிலுக்குப் போய்ட்டு வந்தேன் மா.” என்று விட்டு, பூவை எடுத்து அவளுக்கு வைத்து விட்டான். அன்றைய தினத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே இருவரும் உணவை முடித்தனர்.
அடுப்படியை ஒதுக்கி விட்டு, அறைக்குள் நுழைந்து, மறுநாள் அலுவலகத்துக்கு இருவருக்கும் தேவையான உடைகளை எடுத்து வைத்து விட்டு, வசுமதி படுக்கையில் விழுந்ததும், வாசுவின் கைகள் தானாக நீண்டு மனைவியைத் தன் புறமாக இழுத்தது.
“நாளைக்கு ஆபீஸ் இருக்கு வாசு” மென்மையாக மறுத்தாள்.
“எனக்கும் தான்” என்றவன், “ஏன் வசு, ரொம்ப நாளா ஒன்னு கேட்டுட்டே இருக்கேன். நீ தரவே மாட்டேங்கற” என்றவனின் மேல் சந்தேகமாய்ப் படிந்தது அவள் பார்வை.
“என்ன கேட்டீங்க?”
“உன்னைப் போலவே, அழகா, ஒரு குட்டி தேவதை.. உடனே கிடைச்சா நல்லா இருக்கும்” அவளது பயத்திற்கு, பிரச்னைக்கு, தன் வழியில் தீர்வு கண்டான் வாசு.
“பேச்சை பாரு. மித்ரனுக்கு ஒரு வயசு தான் ஆகுது. அதுக்குள்ள இன்னொரு குழந்தையா? ம்ஹூம். வேணாம்” என்றாள் அவள்.
“அவனுக்கும் தங்கச்சி ஆசை இருக்கும் பொண்டாட்டி” என்று அவள் காதில் வாசு கிசுகிசுக்க,
“உங்களுக்கு ஆசைன்னு சொல்லுங்க”
“ஆமா, நான் இல்லைன்னு சொல்லவே இல்லையே. ஆனா, நீ தான் கருணை காட்ட மாட்டேங்கற” என்று அவன் பாவம் போல முகத்தை வைக்க,
“ஐயோ, உங்க ரெண்டு பேரையே என்னால சமாளிக்க முடியல. இதுல.. இப்போதைக்கு இன்னொரு குழந்தை ஆசையை நீங்க மறந்திடுங்க. அதுக்கு வாய்ப்பேயில்ல” என்று அவள் முடிவாகச் சொல்ல,
“குழந்தை என்ன உடனேவா வரப் போகுது. நாலைஞ்சு மாசம் ஆகும். அப்புறம் உன் வயித்துக்குள்ள ஒரு பத்து மாசம். அதுக்குள்ள மித்ரன் வளர்ந்திடுவான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து உன்னைப் பார்த்துக்கற மாதிரியே பாப்பாவையும் நல்லா பார்த்துப்போம்” என்று அவன், அவள் நாடி பிடித்துக் கெஞ்சிக் கேட்க,
“ஐயோ, உங்க வேகத்துக்கு அடுத்த மாசமே குழந்தை வந்திடும். என்னை ஆளை விடுங்க வாசு” என்று அவனிடம் இருந்து திமிறி, விலகி படுத்தாள் வசுமதி.
“பிளீஸ், பொண்டாட்டி” கெஞ்சினான்.
“நோ வே” மிஞ்சினாள்.
“உன்னை மாதிரியே ஒரே ஒரு பொண்ணு மட்டும். அப்புறம் ஃபேமிலி பிளானிங் பண்ணிடலாம்” என்றான்.
“ம்ஹூம்… ம்ஹூம்” என்று மறுத்துக் கொண்டே இருந்தவளை நொடியில், தன் கையணைப்பிற்குள் கொண்டு
வந்து, “ம்ம்ம்ம்ம்” என்று சொல்ல வைத்திருந்தான் வாசுதேவன்.
கணவனின் காதல் மொழியில், அவள் மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் காணாமல் போக, கணவனின் கைகளில், அவன் காதலில் கரைந்து போனாள் வசுமதி.
அவர்களின் இனிமையான தாம்பத்தியத்திற்கு இத்தனை நாட்கள் சாட்சியாக இருந்த வெள்ளி நிலவும், இனி, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டும் நிலைத்திருக்க வேண்டும் என்று அவர்களை வாழ்த்தி தன்னோளி வீசியது.
சுபம்