பூமரப் பாவைகள் – 27 (1)

“வசு, வசும்மா” என்ற கணவனின் குரலில் மெல்ல கண்களைப் பிரிக்க முயன்றாள் வசுமதி.

மனதில் இருந்த கலக்கங்கள் அனைத்தும் நீங்கியதும், அப்படி ஒரு நிம்மதியான தூக்கம் அவளுக்கு.

வாசுவுக்கும் அவளது தூக்கத்தைக் கலைக்க மனமில்லை தான். ஆனாலும், ஒன்றும் உண்ணாமல் உறங்குகிறாளே, நள்ளிரவில் பசித்தால் என்ன செய்வது எனும் அக்கறையில் அவளை எழுப்பிக் கொண்டிருந்தான் அவன்.

“ம்ப்ச், தூக்கமா வருது வாசு” சிணுங்கினாள்.

“ஜஸ்ட் எழுந்து, முகம் மட்டும் கழுவிட்டு வா, வசும்மா.” என்று அவன் கெஞ்ச, மெல்ல எழுந்து அவன் சொன்னதைச் செய்தாள் அவள்.

வெளியில் சென்று வாங்கி வந்திருந்த இட்லியை ஊட்டி விட ஆரம்பித்தான்.

“நீங்களும் சாப்பிடுங்க” என்றாள்.

அவளுக்குக் கொடுத்தபடி, தானும் உணவை முடித்தான்.

பல நாட்கள் கழித்து மனைவி அவன் மார்பில் கிடந்து கதைப் பேசியபடி இருந்ததை அவனால் இன்னும் நம்பவே முடியவில்லை. லேசாகத் தன் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.

“என்ன வாசு?” என்று கேள்வியாகப் புருவம் உயர்த்தினாள் வசுமதி.

“உன்னோட கோபம் எல்லாம் போச்சா பொண்டாட்டி? இவ்வளவு சீக்கிரம் என்னை மன்னிச்சுட்டீயா?” என்றான்.

“நான் பேசினதுக்கு நீங்க என்னை மன்னிச்ச மாதிரி, நானும் உங்களை மன்னிச்சுட்டேன்.” என்றாள் புன்னகையுடன்,

“தாங்க்ஸ் பொண்டாட்டி. என் வாழ்க்கையை ரொம்பவே அழகாக மாற்றினதுக்கு. சீக்கிரமே உன்னைப் போல ஒரு குட்டி தேவதையைக் கொடுக்கப் போறதுக்கு.. லட்சம், கோடி தேங்க்ஸ்” என்றான் அவன் நெற்றியில் இதழ் பதித்து.

“இத்தனை நாள் விழுவதில் அழகு, மழை மட்டும் தான்னு நினைச்சிட்டு இருந்தேன் வசும்மா. ஆனா, உன்னில்.. உன் அன்பில் விழுந்து, தொலைந்து போவதை காட்டிலும் எதுவுமே உயர்ந்தது இல்லைன்னு இன்னைக்குத் தான் உணர்ந்தேன்.” முத்தமிட்டவன், மொத்தமாய் மயங்கி இருந்தான்.

“ஹி ஹி ஹி.. உங்களுக்கு இந்த வாய் மட்டும் இல்லன்னு வச்சுக்கோங்க…”

“உன்னை இப்படி முத்தமிட முடியாது” என்று அழுத்தமாய் அவளிதழ்களில் முத்தமிட்டான் வாசு.

அறையில் கிடைத்த இடைவெளியில் எல்லாம் சூரியன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து ஒலித்த அழைப்பு மணியோசையில் உறக்கம் கலைந்து எழுந்தாள் வசுமதி.

“வாசு, யாரோ பெல் அடிக்கறாங்க. எழுந்திருங்க” என்று அவனை உலுக்கினாள்.

“லீவ் நாள் அதுவுமா, தூங்க விடாம, யாரா இருக்கும்?” என்றவனின் கரங்கள் மனைவியைத் தன்னோடு இழுத்து இறுக்கியது.

“அச்சோ வாசு. அண்ணாவா இருக்கப் போறாங்க. என்ன நினைப்பாங்க? போய்க் கதவை திறங்க. நான் குளிக்கப் போறேன்” என்றாள்.

“இங்க யாரும், எதுவும் முக்கியமில்ல வசும்மா. நீயும், நானும், இந்த நொடியும், எனை சிலிர்க்க வைக்கும் நீயும், உனை..”

கிளுக்கி சிரித்துக் கொண்டே,

“என்னைச் சிலிர்க்க வைக்க, இங்க தான் மழை இல்லையே?” என்றாள் அவள்.

திருமணமான புதிதில் அவன் சொன்ன வார்த்தைகளை அவள் நினைவில் வைத்திருந்து பதில் கொடுத்தது, அவனது புன்னகையைப் பெரிதாக்கியது.

“உன்னைச் சிலிர்க்க வைக்க… அதான் நான் இருக்கேனே. அப்புறம் என்ன? அது போதும்” என்றான் மந்தகாசமாக. அவள் புன்னகையுடன் எழுந்து குளிக்கச் சென்றாள், வாசு போய்க் கதவை திறந்தான்.

பத்து நிமிடத்தில் குளித்து விட்டு வந்த வசுமதி, “யார் வந்தா வாசு?” என்றாள்.

“யாருமில்லை வசு. வெயிட் பண்ணி பார்த்துட்டு, நாம கதவை திறக்க லேட் ஆனதும், திரும்பி போய்ட்டாங்க போல” என்று தோள் குலுக்கி விட்டுக் குளிக்கச் சென்றான் அவன்.

அரை மணி நேரம் கழித்து மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க, வீட்டிற்குள் நுழைந்தனர் நரேன், நர்மதா தம்பதிகள்.

“வாங்க அண்ணி, வாங்க அண்ணா” வாழ்க்கை எவ்வித மாற்றமும் இல்லாமல் பழையபடி மாறியதில் வசுமதியின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

நர்மதா நேராக வசுமதியின் முன் வந்து நின்றாள்.

“நரேன் தான் சொன்னார். நீ எங்ககிட்ட இருந்து விஷயத்தை மறைச்ச மாதிரி, நாங்களும் உன்கிட்ட சொல்லாம மறைச்சு பழி வாங்கணும்னு. அது போலவே நடந்திடுச்சு” என்றாள் தன் ஒட்டு மொத்த பற்களையும் காட்டி சிரித்தபடி, என்ன சொல்ல வருகிறாள் என்ற குழப்பத்துடன் கண்களைச் சுருக்கி நர்மதாவைப் பார்த்தாள் வசுமதி.

“வாழ்த்துகள் வசு. நீ அத்தையாகப் போற” என்று வாங்கி வந்திருந்த பரிசு பொருளை அவள் கைகளில் திணித்தாள் நர்மதா.

“நிஜமாவா அண்ணி?” நொடியில் அவளை இறுக்கி அணைத்துக் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் வசுமதி.

“கங்கிராட்ஸ் அண்ணி. எப்போ, எப்படி? சொல்லவே இல்ல நீங்க?” உரிமையுடன் கோபப்பட்டாள்.

“தாங்க்ஸ் வசு. மூனு மாசம் ஆச்சு. எப்படி நடந்ததுன்னு இன்னும் எனக்கும் புரியல டா. அதிசயம் போலத் தான் இருக்கு. இதுக்கு முன்னாடியும் இப்படி நாள் தள்ளிப் போய், அப்புறம் ஒன்னுமில்லாம போயிருக்கு. அதான் நான் பெருசா எடுத்துக்கலை. ஆனா,…”

“கடைசியில் எல்லாம் நல்லபடியா நடந்திடுச்சு” என்று அவள் சொல்ல வந்ததை, தான் சொல்லி முடித்தாள் வசுமதி.

“ஆமா வசு” என்று வெட்கப் புன்னகை பூத்தாள் நர்மதா.

“இந்த நேரத்துல நீங்க இந்தியால இருந்து கிளம்பி வந்திருக்க வேண்டாம்” என்று நரேனை போலவே வசுமதியும் தொடங்க,

“நீ அவர்கிட்ட ட்ரெயினிங் போறியா? இல்ல அவர் உன்கிட்ட ட்ரெயினிங் வர்றாரா? எனக்குத் தெரியல. ஆனா, ரெண்டு பேரும் ஒன்னு போலவே பேசுங்க” உதடு சுழித்தாள் நர்மதா.

“பார்த்து, அப்படியே சுளுக்கிக்கப் போகுது” என்றான் நரேன் கிண்டலாக.

நால்வரின் முகமும், புன்னகையில் மலர்ந்து விகசித்தது.

நரேனின் கைப் பற்றிக் குலுக்கி, “வாழ்த்துகள் மாம்ஸ்” என்றான் வாசு.

“தாங்க்ஸ் வாசு.” என்றான் நரேன்.

“எங்க கல்யாணத்துக்கு வர்ற சாக்குல செகண்ட் ஹனி மூன் வந்திருக்கீங்க ரெண்டு பேரும். அப்படித் தானே?” என்று கேலியாக அவன் கேட்க,

“ஆரம்பிச்சிட்டியா டா நீ?” என்று அலறினான் நரேன்.

“அப்புறம் எனக்குப் பொழுது போக வேண்டாமா?” என்று தோள் குலுக்கினான் வாசு.

அவனது கரத்தை அழுத்தமாய்ப் பற்றி, “உங்க ரெண்டு பேரையும் பழையபடி சிரிச்ச முகத்தோட, அதே அன்போட பார்க்க, அவ்வளவு சந்தோசமா இருக்கு வாசு. எப்பவும் இப்படியே இருங்க” என்றான் நரேன் குரல் தழுதழுக்க.

“தேங்க்ஸ் மாம்ஸ். உங்க நல்ல மனசுக்கு நீங்களும், ரொம்ப நல்லா இருப்பீங்க” என்றான் வாசு ஆத்மார்த்தமாக.

“ஓகே, இன்னைக்கு லீவ் தானே. வெளில எங்கேயாவது போகலாமா?” என்றாள் நர்மதா.

“எப்பா, ஆளை விடுங்க டா சாமிகளா. எனக்குக் கல்யாணமாகி மூனு மாசம் தான் ஆகுது. எனக்கு என் பொண்டாட்டி கூட இருக்கணும்” பட்டென்று வாசு தனது வழக்கமான வசனத்தைச் சொல்ல, பக்கென்று சிரித்து விட்டனர் நால்வரும்.

error: Content is protected !!
Scroll to Top