பூமரப் பாவைகள் – 26 (2)

ஏர்போர்ட் வாயிலில் மனைவிக்காகக் காத்திருந்த நரேனின் முகம் கோபத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.

“இவ மனசுல என்ன தான், நினைச்சிட்டு இருக்கா? வரட்டும் இருக்கு” பல்லைக் கடித்தபடி வாய்க்குள்ளே முணுமுணுத்தான். ஆனால், அத்தனையும் மனைவியின் முகம் பார்க்கும் வரை தான். ஆளைப் பார்த்ததும் அப்படியே தலைகீழாக மாறிப் போனான்.

“ஏன் இப்படி இருக்க? என்னாச்சு உனக்கு?” என்றான்.

“டிராவல் பண்ண அசதி” என்றாள் நர்மதா.

“அசதி தானே? மத்தவங்களுக்கு இருக்கும், சரி. உனக்கு எப்படி வந்தது?” என்று போலியாய் வியந்தான் அவன்.

“துபாய், சென்னை ரெண்டும் பக்கத்து, பக்கத்து தெரு. இல்ல, நம்மு? மேடம் நினைச்சா ப்ளைட் பிடிச்சு கிளம்பிடுவாங்க.” என்றான் நக்கலாக.

அவள் முகம் வாடிப் போக,

“அப்போ உங்களுக்கு என்னைப் பார்த்ததில் சந்தோசம் இல்லையா?” என்றாள் வருத்தமாக,

“ஓ, சந்தோசம் தானே? இருக்கே. ரொம்ப ரொம்ப.. காரை நிப்பாட்டிட்டு இறங்கி ஆடவா?” என்று கிண்டலாகக் கேட்டு, புருவம் உயர்த்தினான் அவன். அதைக் கற்பனையில் காட்சிப்படுத்திப் பார்த்த நர்மதா, சத்தமாகச் சிரித்து விட்டாள்.

“நல்லா இருக்கும் நரேன், ஆடுங்களேன்” என்று அவள் சொல்லும் போதே, அவன் விரல்கள் ஸ்டியரிங்கை அழுத்தமாகப் பற்றியது.

“நக்கலு? வீட்டுக்கு வா, ஆடுறேன்”

ஏனோ, அவன் கோபத்தை எப்போதும் அவளால் தாங்கிக் கொள்ள முடிந்ததேயில்லை.

“சாரி நரேன்” என்றாள், அவன் கரம் பற்றி, அதை உதறி விட்டு காரை செலுத்தினான் அவன்.

“உனக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ஊருக்கு போகனும்னு அடம் பிடிச்ச, அனுப்பி வச்சேன். இப்போ, திடுதிப்புன்னு சொல்லாம, கொள்ளாம கிளம்பி வந்து நிக்கற.. உங்கம்மா மட்டும் போன் பண்ணி சொல்லலைனா.. எனக்குத் தெரிஞ்சே இருக்காது”

அவன் கத்தியதை பொருட்படுத்தாமல், “ஆத்தா, துரோகி” என்று முணுமுணுத்தாள் அவள்.

“என்ன?” என்றான் எரிச்சலுடன்,

“எனக்குத் துபாய் வர வழி தெரியாதா என்ன? நான் என்ன ஊருக்கு புதுசா?”

“ஓ, மேடமுக்கு வழி தெரியும்னா நடந்தே வந்திருக்க வேண்டியது தானே. எதுக்கு ப்ளைட் செலவு?” என்றான் கிண்டலாக, நர்மதா பதில் ஏதும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். உடனே இறங்கி வந்தான் நரேன்.

“வாசு மேல கோபமா தானே போன? கோபம் எப்படிப் போச்சு?” என்று மெல்லக் கேட்டான்.

“வாசு மெசேஜ் பண்ணார். நான் தான் அன்னைக்கு, அவர் சொல்ல வந்ததை… முழுசா கேட்காம…”

“அவசர குடுக்கை. உன்னால தான் அத்தனை பிரச்சனையும்…” எரிந்து விழுந்தான்.

“என்ன?” என்றாள் அதிர்ச்சியுடன், “ஒன்னுமில்ல. அப்போ புருஷன் மேல அக்கறையோட வரலை நீ? வசுவை சீராட்ட தான் வந்திருக்க?” என்று அவன் புருவம் உயர்த்திக் கேட்க,

“நான் தானே கோவிச்சிட்டு போனேன். அதான் நானே திரும்பியும் வந்துட்டேன்.” என்றாள்.

“ஓஹோ, இருக்கட்டும்” என்று விட்டு, பார்வையைச் சாலையில் பதித்தான் நரேன். அவனது கோபம் அவளை அதிகமாகத் தாக்கியது. அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாமல், பார்வையை வெளியில் பதித்து, மிச்ச தூரத்தை கடந்தாள் நர்மதா.

வீட்டினுள் நுழைந்ததும் மீண்டும் தொடங்கினான் நரேன், அவனுக்கு மனைவி தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கோபம் என்று புரிந்து கொண்ட நர்மதா, அவன் அமைதியாகும் வரை பொறுமையாய் காத்திருந்தாள்.

“என் பொண்டாட்டி தான் எனக்கு முக்கியம்னு சொன்ன, என் புருஷனை காணோம். நீங்க பார்த்தீங்களா அவரை?” என்று அவள் கேட்க,

“உன் நக்கலுக்கு ஒரு அளவில்லாமல் போச்சு. அந்த லூசு பய இங்க தான் எங்கேயாவது…”

“எனக்கு உங்களைப் பார்க்கணும் போல இருந்தது. உங்ககிட்ட தான் முதல்ல சொல்லனும்னு தோணுச்சு. அதான் எதைப் பத்தியும் கவலைப்படாம கிளம்பி வந்துட்டேன்” என்றாள், மெல்லிய குரலில் தயங்கியபடி,

“ஆமா, உனக்கென்ன கவலை. நான் தானே கவலைப்பட…” என்றவனின் குரல் தேய்ந்து அப்படியே நிற்க, “நீ என்ன சொன்ன இப்ப?” என்றான் பரபரப்புடன் அவள் கண்களைப் பார்த்து, அவள் அசையாமல் சிலையென நிற்க, “நம்மு..” மென்மையாக அழைத்தான்.

“ம்ம்ம்” என்றாள். ஒரே எட்டில் அவளை நெருங்கி இருந்தான்.

“நரேனோட நர்மதாவோ இல்ல, நர்மதாவோட நரேனோ வரப் போறாங்க” வார்த்தைக்குக் கூட வலித்து விடாத படி, அப்படி ஒரு மென்மை அவள் குரலில். அவனை நெருங்கி நின்றிருந்தவளின் வயிறு அவன் மேல் உரச, கண்களை இறுக மூடிக் கொண்டான் நரேன். அவனால் தான் கேட்பதை நம்பவே முடியாத அதிர்ச்சி.

அவன் முகம் பற்றி, அழுத்தமாய் முத்தமிட்டாள் நர்மதா.

“கனவு இல்ல நரேன். நான் நிஜமா உங்க பக்கத்தில தான் இருக்கேன்” என்றவள், அவன் கரத்தை எடுத்து தன் வயிற்றில் வைத்து அழுத்தினாள்.

“திரும்பச் சொல்லு நம்மு” என்று கெஞ்சினான் நரேன்.

“இனி, நீங்க என்ன திட்டவே முடியாது, மூஞ்சுக் காட்ட முடியாது. என்ன நீங்க என்ன பண்ணாலும், உங்களைக் கேள்விக் கேட்க சீக்கிரம் ஒரு குட்டி பையன்… உங்களைப் போலவே ஒருத்தன் வந்து உங்களை உதைக்கப் போறான்” என்று கிளுக்கி சிரித்தாள் நர்மதா.

காதலுடன் அவள் முகம் பற்றி முத்தத்தால் நிரப்பினான் நரேன்.

“இப்படிக் கிஸ் பண்ணா, சண்டைக்கு வருவான். பார்த்துக்கோங்க” என்று நாக்கை துருத்தி காட்டினாள் நர்மதா.

“வரப் போறது பொண்ணு. அவ எனக்குத் தான் சப்போர்ட் பண்ணுவா” என்று உறுதியாகச் சொன்னான் நரேன்.

“ஐயோ, ஆசையைப் பாரு. பையன் தான்”

“யாரா இருந்தாலும் சமாளிச்சு என் பொண்டாட்டியை ரொமான்ஸ் பண்ணுவேன் நான்” என்று விட்டுக் கண்ணடித்தான் நரேன்.

அவளைத் தோளோடு அணைத்தபடி அழைத்துச் சென்று சோஃபாவில் அமர வைத்தான்.

“எப்படி நம்மு? என்னால இன்னமும் நம்பவே முடியலை” என்று ஆச்சரியத்துடன் அவன் வினவ, அவளது கைப் பையை எடுத்து தரச் சொல்லி, அதிலிருந்த ரிப்போர்ட்டை எடுத்து நீட்டினாள். அதைப் பார்த்ததும் புன்னகையும், கண்ணீரும் போட்டி போட்டுக் கொண்டு வந்தது அவனுக்கு.

மெதுவாக ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து காண்பித்தாள்.

“ஃபைனலி, நம்மு” அவளால் அவனது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“என்கிட்ட சொல்லி இருந்தா நான் வந்திருப்பேன் இல்ல மா”

“இந்த முறை நிச்சயமா தெரியாம யார்கிட்டேயும், ஏன் உங்ககிட்டயும் கூடச் சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன் நரேன்” என்றாள், மன்னிப்பை வேண்டும் பார்வையுடன்,

“ம்ப்ச், தனியா எப்படிச் சமாளிச்ச?”

“ரிசல்ட் வர்ற வரைக்கும் தான் பயம், பதட்டம் எல்லாம். அதுக்கப்பறம் மனசு குத்தாட்டம் போட ஆரம்பிச்சுடுச்சு. அதுக்கு மேல அங்க ஒரு நிமிஷம் கூட என்னால இருக்க முடியல. சரியா அந்நேரம் பார்த்து வாசு மெஸேஜ் செய்யவும், உடனே டிக்கெட் புக் பண்ணிட்டேன். இன்னும் அம்மாக்கு கூடச் சொல்லலை” என்றாள்.

“அடிப்பாவி…” என்று அவன் வாய் பிளக்க,

“ஆமா, அவங்களுக்குத் தெரியாது. உங்களைச் சர்ப்ரைஸ் பண்ண போறேன்னு மட்டும் தான் சொன்னேன். அதையே உங்ககிட்ட போட்டுக் கொடுத்துட்டாங்க. இதுல விஷயத்தைச் சொல்லி இருந்தா அவ்வளவு தான். அவங்களுக்குக் காலையில போன் பண்ணி சொல்லிக்கலாம். முதல்ல கோபப்படுவாங்க. ஆனா, குழந்தை வரப் போற சந்தோஷத்தில் சீக்கிரம் சமாதானமாகிடுவாங்க” பெற்றோரை நன்கு அறிந்தவளாகச் சிரித்துக் கொண்டே சொன்னாள் நர்மதா.

“அப்போ சரி. நானும் அம்மாக்கு கால் பண்றேன். அபுதாபியில் இருந்து உடனே ஓடி வந்திடுவாங்க, பாரு” என்று அவன் சொல்ல, இருவருக்குமே சிரிப்பு வந்தது.

“எப்படி மூனு மாசம் ஆகுற வரை கவனிக்காம விட்ட நம்மு?” அதுவரை மனதில் உறுத்திய சந்தேகத்தை நிவர்த்திச் செய்யும் பொருட்டுக் கேட்டான் அவன்.

“நல்லா யோசிச்சு பாருங்க. நான் இதுக்கு முன்னாடி சொல்லலை?” என்று மறுகேள்வி கேட்டாள் அவள்.

“எனக்கும் நாள் தள்ளிப் போச்சு நரேன். ஆனா, அடிக்கடி நடக்கறது தானேனு நான் பெருசா எடுத்துக்கலை. அப்புறம் வசு, வாந்தி எடுக்கும் போதெல்லாம் எனக்கும் வாந்தி வந்தது. டாக்டர் பார்க்கணும்னு உங்ககிட்ட கூடச் சொன்னேன்…”

“அன்னைக்கு மயக்கம் வேற போட்டு விழுந்த…” அவள் தொடங்கியதை முடித்தான் நரேன்.

“ம்ம்ம். ஆனா, நான் அதுக்காக ஹாஸ்பிடல் போகலை. ப்ரெண்ட்க்கு குழந்தை பிறந்திருக்குன்னு பார்க்கப் போன இடத்தில் மயங்கிட்டேன். அப்போ என்னைச் செக் பண்ண டாக்டர் சந்தேகப்பட்டு ப்ரெக்னன்சி டெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க. அப்புறம் எல்லாம் சுபம், சுபம் தான்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்.

“ஓ மை காட்” என்று தலையை உலுக்கி கொண்டான் நரேன்.

“ஆனாலும், நீ இப்போ டிராவல் பண்ணி வந்திருக்கக் கூடாது. அடுத்த மாசம்..” என்று அவன் சொல்லிக் கொண்டே போக,

“ஆரம்பிச்சுட்டீங்களா? இப்பவேவா?” என்று அலறியவள், “எனக்கு மட்டும் அக்கறை இருக்காதா நரேன். டாக்டர் கிட்ட ஒரு தடவை இல்ல, பத்து தடவை கேட்டு, அவங்க டிராவல் பண்ணலாம்னு நிச்சயமா சொல்லவும் தான், கிளம்பினேன்” என்றாள்.

“சரி, நம்மு” என்றவன், தான் காண்பது கனவல்ல நிஜம் தான் என்று நிச்சயித்துக் கொள்ள, மனைவியை இறுக அணைத்துக் கொண்டான். விரிந்த புன்னகையுடன் அவனது மார்பில் முகம் புதைத்தாள் நர்மதா.

“பரிசு எதுவும் கிடையாதா?” என்று ரகசிய குரலில் கேட்டாள் அவள்.

“எனக்கு, நானே எதுக்குப் பரிசு கொடுத்துக்கனும்?” என்று தெளிவாகப் பதில் கேள்வி கேட்டான் நரேன். அவன் சொன்ன விதத்தில் இருவருக்குமே சிரிப்புப் பொங்கியது.

அச்சிரிப்பு அவர்களின் வீட்டில் நிறைந்து சுவரெங்கும் எதிரொலித்தது. இனி, அது அவர்களின் வாழ்வையும் நிறைக்கும்.

error: Content is protected !!
Scroll to Top