“ஆமா. ஆனா, நானும் உங்களை ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன் தானே? ஐ அம் சாரி” என்று மனதார வருந்தி, உணர்ந்து சொன்னாள் வசுமதி.
“எல்லாம் என் தப்பு தான் வசும்மா. என்னோட முட்டாள்தனமான முடிவு தான். இதெல்லாத்துக்கும் காரணம். பிளீஸ், நீ சாரி சொல்லாத.” என்றவன் சற்றே தயங்கி விட்டு,
“நான் உனக்கு.. என்னை, என் மன மாற்றத்தை உணர்த்திட்டேன்னு நினைச்சேன் டா. அதனால் தான், கொஞ்சம் டிரை பண்ணிட்டு.. உனக்கே புரியும் போது புரியட்டும்னு விட்டுட்டேன். ஆனா, நீ இவ்வளவு தூரம், என்னை விட்டுப் போகுற அளவுக்கு முடிவெடுப்பன்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல வசும்மா” என்றவனின் குரலில் வருத்தம் மேலோங்கி இருந்தது.
“வாசு உங்களுக்கு எப்படி…”
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் வசு. நரேன் மாம்ஸ் என்னோட ஆபீஸிக்கு வந்திருந்தார். மனுஷன் என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டார்” மெலிதாகச் சிரித்துக் கொண்டே சொன்னான். அவனுக்கு நரேன் வந்து கத்தியது, கண் முன் வந்து சென்றது. மனைவியிடமும் அதைப் பகிர்ந்து கொண்டான்.
“உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க வாசு நீ? ஊருக்கு போறதா இருந்தா எனக்குச் சொல்ல சொன்னேன் இல்ல?”
“இல்ல மாம்ஸ்..”
“என்ன இல்ல மாம்ஸ்? என் உயிர், என் உலகம்னு அவளை வார்த்தையில் மட்டும் கொண்டாடினா போதாது. அதை நடைமுறையிலும் காட்டணும் வாசு. அவளுக்குப் பிடிக்காததைச் செய்ய வச்சுட்டு, அவளுக்கு ரொம்பப் பிடிச்சதை அவக்கிட்ட இருந்து பிடுங்கிட்டு, அவ உடைந்து போறதை பார்த்து, நீ மட்டும் நிம்மதியா இருந்துடுவியா வாசு?” என்று பொட்டில் அடித்தார் போல் கேட்டான் நரேன்.
“அவளுக்கு வலிச்சா, உனக்கும் வலிக்காதா?”
“அட, என்னைக் கொஞ்சம் பேச விடுங்க மாம்ஸ். உங்க தங்கச்சியும் சரி, நீங்களும் சரி. உங்க பொண்டாட்டியும் சரி. யாருமே என்னை முழுசா பேச விடுறதே இல்ல. நல்ல குடும்பம் தான்” கோபத்தில் கத்தினான் வாசு.
“சாரி. ஏதோ வேகத்தில் பேசிட்டேன். நீ சொல்லு” சட்டென இறங்கி வந்தான் நரேன்.
“அன்னைக்குச் சொன்னது தான் இன்னைக்கும் சொல்றேன். நாளைக்கும் அதே தான் சொல்லுவேன். நான், என்னைக்கும் மாறப் போறதேயில்ல, வசுவை விட எதுவுமே எனக்கு முக்கியம் இல்ல.” என்றான் அழுத்தமாக,
“அதை அவக்கிட்ட சொன்னியா?”
“எங்க மாம்ஸ்? அவளைப் பார்த்தாலே உளறுறேன். நான் ஆரம்பிச்சு, சொல்லி முடிக்கறதுக்கு முன்ன அவளுக்குக் கோபம் வந்துடுது. காணாம போய்டுறா…” புலம்பினான். அந்நிலையிலும் அவன் சொன்ன விதத்தில் நரேனுக்குச் சிரிப்பு வந்தது.
“இந்த முறை சுத்தி, வளைக்காம, விஷயத்தைப் பட்டுனு போட்டு உடை.” என்றான்.
“தாங்க்ஸ் மாம்ஸ்” என்றான் வாசு ஆத்மார்த்தமாக.
“என் கூடப் பிறக்காட்டியும் அவ எனக்குத் தங்கச்சி தான் வாசு. அவளுக்கு நீ முக்கியம். அப்போ எங்களுக்கும்..” நரேன் சொல்ல, இருவருமே புன்னகைத்துக் கொண்டனர்.
“அண்ணா கிட்ட அப்படியா சொன்னீங்க? என்ன நினைச்சு இருப்பாங்க?” முகம் சுளித்தாள் வசுமதி.
“எதைச் சொல்ற?” என்றான் புரியாமல்,
“அதான் என்னைப் பார்த்ததும் உளர்றது..”
“பின்ன.. உண்மையைத் தானே சொன்னேன்.. நல்லா யோசிச்சு பாரு. உன்னைப் பார்த்த முதல் நாள்ல இருந்து, இன்னைக்கு வரைக்கும் டீன் ஏஜ் பையன் மாதிரி அப்படி உளறி இருப்பேன்” என்றான் சீரியஸாக, சட்டெனச் சத்தமாகச் சிரித்து விட்டாள் வசுமதி. அதில் அவன் முகமும் இளகியது. அவள் எழுந்து அமர்ந்து, அவனுக்கு அமர இடம் கொடுத்தாள்.
“உனக்கு ஞாபகம் இருக்கா? ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்த மறுநாள் மதியம் அக்கவுண்ட்ஸ் பார்க்கச் சொன்னேனே?”
“ம்ம்ம்..”
“அப்பவே என் முடிவு மாறிடுச்சு. அதை உன்கிட்ட சொல்லவும் செஞ்சேன். உனக்குத் தான் புரியல போல…”
“இப்பவும் புரியல. சரியா சொல்லுங்க” என்றாள் குழப்பத்துடன்.
“இது நாள் வரை, உன் விருப்பத்துக்குத் தான் ஆடினேன், இனியும் ஆடுவேன்னு சொன்னேனே” அவனைக் கண்கள் சுருக்கி, பல்லைக் கடித்தபடி நன்றாக முறைத்தாள் அவள்.
“அடப்பாவி வாசு. அப்பவே வாயை திறந்து ஒழுங்கா சொல்லி இருந்தா…” வலிக்காமல் அவன் மார்பில் குத்தினாள்.
“அதான் சொன்னேன் இல்ல. உன்னைப் பார்த்தாலே பேச்சு வரல. அதான் செயலில் காட்டலாம்னு… அது மட்டுமில்ல, உன்ன உள்ளங்கையில் வச்சு தாங்கு, தாங்குன்னு தாங்கினேன். அப்பவுமா உனக்குப் புரியல?” என்றான் குரல் உயர்த்தி,
“ஐயோ, கோபத்தைப் பாரேன். அது ஒன்னும் நீங்க புதுசா பண்ணலையே. கல்யாணம் ஆன நாள்ல இருந்து அப்படித் தான் இருந்தீங்க. புதுசா மாறி இருக்கீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?”
“ஓ, அப்படியா?” என்றவன், “ஆனா, நான் உன்கிட்ட சொல்ல பல தடவை முயற்சி பண்ணேன் வசும்மா.”
“நீங்க பேச ஆரம்பிச்சாலே… ரொம்பப் பயந்தேன் வாசு. வெளில காட்டிக்கலை, அவ்வளவு தான். ஆனா, உள்ளுக்குள்ள அவ்வளவு பயமா இருந்தது. இன்டர்நெட்டில் கருக்கலைப்பு பத்தி தேடிப் படிச்சேன். அதோட பாதிப்புகள் ஓவர் பிளீடிங், கர்ப்பப்பை புண்ணாகுறது தொடங்கி, இறந்து போகவும் வாய்ப்பு…” அவளை மேலே பேச விடாமல், அவள் முகத்தைத் தன் மார்பில் அழுத்தினான் வாசு.
“சாரி, சாரி வசும்மா.” என்றான் கலங்கிய குரலில். அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தினான்.
“உங்க கூடப் பேசாம இருக்க அவ்வளவு கஷ்டமா இருந்தது. ஆனா, வேணும்னு தான் உங்களை அவோய்ட் பண்ணேன். சாரி” என்றவள், “இந்தக் குழந்தையை இழந்தா, உங்களை முழுசா வெறுத்திடுவேனோன்னு பயமா இருந்தது வாசு.” சொல்லும் போதே அவள் குரல் உடைந்தது. அவள் முதுகை ஆறுதலாக வருடியது அவன் விரல்கள்.
“இதுக்கு அப்புறம், ஒருவேளை நமக்குக் குழந்தையே பிறக்காது போனா? என்னால, என்னை மன்னிக்கவே முடியாது வாசு. உங்களையும்…” ஒற்றைக் கோடாக இறங்கியது கண்ணீர்.
அதைத் துடைத்து விட்டவன்,
“நரேன் மாம்ஸ் கூட என்னை நம்பறார். ஆனா, நீ என்னை நம்பலை இல்ல வசு?” என்றான் வேதனையுடன்,
“என்ன பேசறீங்க வாசு? அவருக்கு என்ன தெரியும்?” என்று கோபமாகத் தொடங்கியவள், குரலை தணித்து,
“நீங்க என்கிட்ட டாக்டர் பார்த்த கையோட அபார்ஷன் பத்தி பேசி இருக்கீங்க? அவ்வளவு பெரிய குண்டை தூக்கிப் போட்டவர் நீங்க. அப்போ, நீங்களே தானே என்கிட்ட வந்து, “இல்லம்மா, இந்தக் குழந்தையை நாம பெத்துக்கலாம்னு” சொல்லனும். நீங்க அப்படிச் சொல்லவேயில்ல. இதுல நான் உங்களை நம்பலைன்னு வேற சொல்ல வந்துட்டீங்க” படபடவெனப் பொரிந்தாள்.
“தப்பு தான் வசு. என்ன பண்றது, எனக்கும் ரொம்பக் கில்டியா இருந்தது.
முதல்ல உன் முகம் பார்த்து பேசவே தயக்கமா இருந்தது. சரின்னு தைரியமா பேச வந்தா, நீ விலகி ஓடின. நீ இறங்கி வரும் போது, டக்குனு குழந்தை வேணும்னு சொல்லாம, நான் மன்னிப்பு கேட்கறேன்னு தொடங்கி… இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தேவையில்லாம காயப் படுத்திக்கிட்டது தான் மிச்சம்”
“உண்மையைச் சொல்லவா? எனக்கு நீங்க எப்படியும் எனக்காக மனசு மாறிடுவீங்கன்னு தெரியும். ஆனா, என்னை அழ விட்ட உங்களைக் கொஞ்சமாவது கதற விடனும்னு தான்..”
அவன் மடியில், அவன் மேல் கால் நீட்டி சட்டமாக அமர்ந்து கொண்டு, “உன்னைக் கதற விட நினைத்தேன்” என்று சொன்ன மனைவியின் இடையில் கரம் கோர்த்து இறுக அணைத்தான் வாசு. கிளுக்கி சிரித்தாள் வசுமதி.
“அச்சோ, அதுக்குள்ள குழந்தையா? கையில காசே இல்லையே, அப்படினு முதல்ல பயம் தான் வந்தது வசும்மா. அந்த அவசரத்துல தான் கொஞ்சம் கூட யோசிக்காம பேசிட்டேன். ஆனா, நிதானமா உட்கார்ந்து யோசிக்கும் போது.. உன்னை விட எதுவுமே எனக்கு முக்கியம் இல்லைன்னு பட்டது. உன்னோட, நம்மோட.. மறு உருவமாக வரப் போற குழந்தையை… என்னால அதுக்கு அப்புறம் அதைப் பத்தி நினைச்சு பார்க்க கூட முடியல. அவ்வளவு கொடூரமாக இருந்தது.”
அதுவரை விளையாட்டாகப் பேசிக் கொண்டிருந்தவன் இப்போது சீரியஸாகச் சொல்ல ஆரம்பித்தான்.
“நீ என்கிட்ட பேசாம முகம் திருப்பிட்டு போனப்ப எல்லாம், விளக்கமா, பெருசா உனக்கு மெயில் அனுப்பிடலாமா? மெசேஜில் சொல்லிடலாமா? சர்ப்ரைஸ் ஏதாவது அரேஞ்ச் பண்ணி அங்க வச்சு சொல்லலாமான்னு.. எல்லா வழிகளையும் யோசிச்சேன். ஆனா, உன் கண்களைப் பார்த்து சொல்ற சந்தோசமும், நிம்மதியும் வேறேதிலும் வராதுன்னு புரிஞ்சுது. உன் கண்களில் இருந்த வெறுப்பு காணாம போய், மீண்டும் எனக்கான காதல் தெரியனும்னு தான் அவ்வளவு முயற்சி பண்ணேன்.”
“சாரி. உங்க நிலைமை தெரியாம, உங்களை ரொம்பத் தப்பா, குத்தி காட்டி பேசிட்டேன். சாரி வாசு” என்றாள்.
“பணப் பிரச்சினை, நீ சரி பண்றதுக்கு முன்னாடியே நான் சரி பண்ணிட்டேன் டா. ஞாபகம் இருக்கா? அன்னைக்குச் சூட் போட்டு இருந்தேனே?” அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.
“ம்ம்ம், பிளாக் கலர்” என்றாள்.
“மாதவன் அண்ணா கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். இங்க வந்த முதல் வருஷமே சென்னை சிட்டிக்கு வெளில இடம் வாங்கிப் போட்டிருந்தேன். அண்ணா பேர்ல தான் வாங்கி இருந்தேன். அதை வித்துட்டேன்” என்றான்.
“என்ன?” என்றாள் அதிர்ந்து,
“அன்னைக்குத் தான் ரெஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சு கைக்குப் பணம் வந்தது. பெரிய தொகை தான். ஊர்ல இருந்த லோன் எல்லாம் க்ளோஸ் பண்ணிடலாம்னு முடிவு பண்ணி, பேங்கில் பேசியும் முடிச்சுட்டேன். அப்பாடா, எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சதுன்னு நிமிர்ந்தா. நீ அதுவரை என்னைச் சைட் அடிச்சவ, திரும்பவும் முறுக்கிக்கிட்ட… சரின்னு நர்மதா அக்கா கிட்ட போனேன். அங்கேயும் உளறி, அவங்க கோபப்பட்டு…”
“இது எப்போ நடந்தது? எனக்குத் தெரியவே தெரியாது? அப்போ அண்ணி நம்ம மேல இருக்கக் கோபத்துல தான் ஊருக்கு போய்ட்டாங்களா?”
“அச்சோ, இருக்குமோ?” என்றான் அவன். அவனை முறைக்க மட்டுமே முடிந்தது அவளால்.
அவளின் கன்னத்தில் மீசை உரச முத்தமிட்டு, அவள் கவனத்தைத் தன் மேல் திருப்பினான் வாசு.
“நான் ஏற்கனவே பணப் பிரச்சினையை முடிச்சிருந்தாலும், நீ எனக்காக உட்கார்ந்து சரி பண்ணது, அவ்வளவு சந்தோசமா இருந்தது வசு. ஒவ்வொரு கணக்கையும் சரி பண்ணி.. அதுக்கு வேறொரு வழி கண்டுபிடிச்சு, உன்னோட சேவிங்ஸ் மொத்தத்தையும் கொஞ்சம் கூட யோசிக்காம என் அக்கவுண்ட்க்கு மாத்தி… இதெல்லாம் நீ குழந்தைக்காக மட்டும் இல்ல, நமக்காகவும் தான் செய்து இருக்கன்னு எனக்குப் புரிஞ்சுது டா. ஐ லவ் யூ பொண்டாட்டி” என்றான் நெகிழ்ந்த குரலில்,
“அப்புறம் ஏன் இந்தியா போகனும்னு..” தயக்கத்துடன் கேட்டாள் வசுமதி.
“என் அறிவாளி பொண்டாட்டி, பேங்க் லோன் க்ளோஸ் பண்ண போக வேண்டியிருந்தது. வீட்ல நம்பப் பிரெக்னன்ட்னு இன்னும் சொல்லைல..”
“நம்ப இல்ல, நானு” என்றாள். அந்த, “நானு” வில் அழுத்தம் கொடுத்து,
“நீ புள்ளையைச் சுமக்கற, நான் உன்ன சுமக்கறேன். ஆக, நான் சொன்னது சரி தான்” என்றான், கண்களால் அவள், அவன் மடியில் அமர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டி.
“பேசியே ஆளை கவுத்திடுங்க”
“நீ கவுந்தா போதும். மத்தவங்களைப் பத்தி நமக்கென்ன கவலை” என்று அசட்டையாகத் தோள் குலுக்கினான் வாசு.
“வீட்டுக்கு விஷயம் தெரியாது இல்லையா? அதனால, நீயும் வரன்னு அப்போதைக்குச் சொன்னேன். சரி, போன தடவை துபாய் திரும்பி வரும் போது அவ்வளவு ஃபீல் பண்ணியே. இப்ப போக ஆசைப்படுவன்னு… நீ என்னை நிறுத்தி கேட்கவும், நீயும் இந்தியா வர ஆசைப்படுறன்னு புரிஞ்சுக்கிட்டு, இப்ப உங்க வீட்டு ஆளுங்களைப் பார்க்க கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள என்னை நீ வில்லனாக்கிட்ட. இனி நான் மட்டும் போகிற ஐடியா தான்.”
‘ச்சே, இதற்குப் போயா இத்தனை பயந்து, தப்பித்து ஓட முயன்றோம்” என்று அவளுக்குச் சிரிப்பாக வந்தது.
அவளது சிரிப்பை, புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு.
“குழந்தையை அழிக்கணும்னு நினைச்சிருந்தா சரஸ்வதி அம்மா கிட்டப் போய், நீ கர்ப்பமா இருக்கச் செய்தியை நானே சொல்லி இருப்பேனா? அதைக் கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா நீ?” என்றான்.
“ஆமா, இல்ல?”
“ஆமா, தான்” அவளின் நெற்றியில் செல்லமாக முட்டினான்.
அவனையும் பேச விடாமல், தானும் கேள்விகளைக் கேட்காமல், எவ்வளவு பெரிய பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறோம். எல்லாமே தவறான புரிதலின் காரணமாக, என்ற எண்ணம் தோன்ற, “சாரி வாசு. இனி உங்கக்கிட்ட பேசிட்டு தான் எல்லா முடிவையும் எடுப்பேன்.” என்றாள் உறுதியாக.
“நான் உளறுவேன், சொதப்புவேன், உன்னைக் கோபப்பட வைப்பேன். ஆனா, உன்னை விட எனக்கு எதுவுமே முக்கியமில்ல வசு. நீ, என் நிலவு மட்டும் இல்ல, என் வானமும் நீ தான் வசும்மா” என்றான் அவளை இறுக அணைத்து, “அதை என்னைக்கும் மறந்திடாத” என்றான் அவள் முகம் நிமிர்த்தி, அவள் கண்களை நேராகப் பார்த்து.
அவனது தாடையில் இதழ் பதித்து, “லவ் யூ வாசு” என்று அவன் காதில் கிசுகிசுத்தாள். அவளை அப்படியே அழுத்தமாகத் தன்னோடு இறுக்கி அணைத்து, கண்களை மூடினான் வாசுதேவன்.
“கல்யாணமாகி, குழந்தை கூட வந்திடுச்சு. என் பொண்டாட்டி இப்ப தான், லவ் யூ சொல்லி இருக்கா” என்றவன், “லவ் யூ வெரி மச் பொண்டாட்டி” என்றபடி அவளைத் தூக்கிக் கொண்டு எழுந்தான்.
அறையின் விளக்கை கூடப் போடாமல் தங்கள் பேச்சில் மூழ்கி இருந்தனர் இருவரும்.
அவர்களைச் சுற்றி இருள் பரவி இருந்தாலும், அவர்களின் வாழ்வில் வெளிச்சம் மீண்டிருந்தது.