பூமரப் பாவைகள் – 25 (2)

நள்ளிரவில் ஃபைலை முழுதாக ஆராய்ந்து விட்டு நிமிர்ந்தவனுக்கு, அது நாள் வரை கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த பெரியதொரு கவலை நீங்கியதில் அப்படி ஒரு நிம்மதி.

வார்த்தையில் வடிக்க முடியா உணர்வுகள் அவனைத் தாக்க, அத்தனைக்கும் காரணமான மனைவியை நெருங்கி இறுக்கமாக அணைத்துக் கொண்டான் வாசு.

கணவனை உணர்ந்து அவள் மெல்ல அசைய, “வாழ்த்துகள் பொண்டாட்டி. புரோமோஷன் கிடைச்சிருக்கு. சொல்லவே இல்ல நீ.” காதில் கிசுகிசுத்து, அழுத்தமாய் முத்தமிட்டான்.

“பைனான்ஸியலா ஹெல்ப் பண்ணதுக்கு ரொம்ப ரொம்பத் தேங்க்ஸ் வசும்மா. நானே சமாளிச்சிட்டேன் தான். ஆனாலும்..” என்றவனின் மார்பில் குத்தினாள்.

“ஆ… லவ் யூ பொண்டாட்டி.. இனி எல்லாம் சரியாகிடும். தூங்கு” என்றான். அவன் வார்த்தைகள் நெஞ்சில் இதம் பரப்ப, உறக்கத்தில் அமிழ்ந்து போனாள் வசுமதி.

காலை எழுந்ததும் கணவனிடம் தெளிவாக அனைத்தையும் பேசி விட வேண்டும் என்று நினைத்தாள் வசுமதி. ஆனால், அவனோ பரபரப்பாக அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

“வாசு, உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்”

“எனக்கும் தான் வசும்மா. ஆனா, ஒரு வாரமா எங்க அபுதாபி பிராஞ்ச் போனேன் இல்ல, அது சம்பந்தமா

இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. ஈவேனிங் சீக்கிரம் வந்திடுறேன். அப்ப பேசலாம்” என்றான் அவன்.

‘எத்தனையோ தடவை அவன் பேச வந்த போதெல்லாம் ஒதுங்கி ஓடி இருக்கிறேன். எனக்கு இது தேவை தான்’ தன்னைத் தானே நொந்து கொண்டு அவனோடு காரில் ஏறினாள் வசுமதி.

அந்நேரம் அவனது மொபைலில் அழைப்பு வர, “சொல்லுண்ணா” என்று அழைப்பை எடுத்தான் வாசு.

“ஷாலினி அண்ணி எப்படி இருக்காங்க. குட்டீஸ் நலமா?” என்றதில், மாதவனிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்துக் கொண்டாள் அவள்.

“ஓ, நானே ஊருக்கு வரேன் ண்ணா. ம்ம்ம், வசுவையும் கூட்டிட்டு தான் வர்றேன். எப்போவா? அடுத்த வீக் எண்ட் சரியா இருக்கும்” என்று பேசிக் கொண்டே போனான் அவன். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்குத் தான் உள்ளுக்குள் பகீரென்றது.

இரவு தான் அனைத்தும் சரியாகி விட்டது என்று நினைத்தாளே, அத்தனையும் கனவா?

ஊருக்கு போக வேண்டும் என்றால், எதற்காக? இப்போது என்ன அவசியம் வந்தது? கணவனின் மனம் மாறவே இல்லையோ? அவன் முடிவில் உறுதியாக இருக்கிறானோ? ஐயோ, மாறி விட்டான் என்று நினைத்து எத்தனை மகிழ்ந்தாள். அவளை விடப் பெரிய முட்டாள் இந்த உலகில் யாருமே இருந்து விட முடியாது.

அவளது அலுவலகம் நெருங்கி இருக்க, “சரி, நான் அப்புறம் பேசறேன்” என்று போனை வைத்து விட்டு, மனைவியின் பக்கம் திரும்பினான். “பை வசு. எனக்கு லேட்டாகுது” என்று வேகமாக அவன் காரை நகர்த்த போக, “இந்தியா போறோமா?” சத்தமாகக் கேட்டாள்.

“ஆமா வசு. நேரமாகுது, பை” என்று அவசரமாகக் காரை நகர்த்தினான்.

கணவன் சென்று பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் கூடத் தான் நின்ற இடத்தில் இருந்து நகரவில்லை வசுமதி.

“ஹாய் வசுமதி” என்று அவளுடன் வேலை பார்க்கும் ஓமர் அழைக்கவும் தான் சுற்றுப்புறம் உணர்ந்து, தன்னுணர்வு பெற்று அவனுடன் அலுவலகம் நோக்கி நடந்தாள் அவள். பரபரப்பான காலை வேலைகளுக்கு நடுவில் அவளால் கணவனை அழைத்துப் பேச முடியவில்லை.

அத்தனை வேலைகளுக்கு நடுவிலும், “ஏன் இந்தியா செல்ல வேண்டும்? கருக்கலைப்பு செய்யவா?” என்ற யோசனையே மனதில் ஓடிக் கொண்டிருக்க, வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை அவளால்.

அதற்கு மேலும் காத்திருக்க முடியாமல், உடனடியாகக் கணவனை மொபைலில் அழைத்தாள். “எதுவும் முக்கியமான விஷயமா வசு, மீட்டிங்கில் இருக்கேன். முடிஞ்சதும் கூப்பிடவா?” மெல்லிய குரலில் கேட்டான்.

அவளுக்குத் தலைப் போகும் காரியம், மிக முக்கியமான விஷயம் தான் என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, “இந்தியா போறோமா?” என்று கேட்டாள். மறுநொடி அந்தப் பக்கம் ஒன்றுமே பேசவில்லை வாசு. காலையில் தானே சொன்னோம், என்று நினைத்தானோ, என்னமோ.

“ஆமா வசு. ஐ வில் கால் யூ பேக்” என்று வைத்து விட்டான் அவன்.

“நீங்க ஒன்னும் கால் பண்ண வேண்டாம்” என்றபடி இருக்கையில் இருந்து எழுந்து கொண்டாள் வசுமதி.

இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. கணவன் வாய் வார்த்தையாகச் சொன்ன போதெல்லாம் வராத பயமும், நடுக்கமும் இந்தியா செல்ல வேண்டும் என்றதும் வந்திருந்தது. கண்களை இருட்டிக் கொண்டு மயக்கம் வரும் போலிருந்தது.

டேபிளில் இருந்த தண்ணிரை எடுத்து, வறண்டிருந்த தொண்டையில் கவிழ்த்தாள். மனம் பல விதமான சிந்தனைகளில் தறிக்கெட்டு ஓடியது.

“இனி எல்லாம் சரியாகிடும்”

இரவு கணவன் உதிர்த்த வார்த்தைகளை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டாள். ஆனாலும், மனது ஒரு நிலைக்கு வர மறுத்தது.

அதற்கு மேல் அலுவலகத்தில் அமர்ந்திருக்க முடியாமல், பெர்மிஷன் போட்டு வீட்டிற்கு வந்து விட்டாள் வசுமதி.

தன் ஸ்டுடியோ ஃபிளாட்டைக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே அளந்து கொண்டிருந்தாள். “என்ன செய்வது, என்ன செய்வது?” என்ற எண்ணம் மட்டுமே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், கணவனிடம் மனம் விட்டு பேசிட வேண்டும். அவனிடமே என்னவென்று கேட்டிட வேண்டும் என்ற எண்ணமே உதிக்கவில்லை அவளுக்கு.

அவன், “குழந்தை வேண்டாம்” என்று சொன்ன நொடியில் இருந்து தனக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் முதல் வில்லனாகக் கணவனைப் பார்க்கத் தொடங்கி இருந்ததின் விளைவு அது. தன்னைச் சுற்றி இருந்த அனைவரையும் ஆலோசிக்க யோசித்தாளே ஒழிய, கணவனிடம் கலந்தாலோசிக்க வேண்டும், கேள்வி கேட்க வேண்டும், அவன் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற நினைப்பே அவளுக்கு வரவில்லை.

இத்தனை நாள் கணவனை லேசாக எடுத்துக் கொண்டு, அலட்சியமாக இருந்து விட்டோமோ? என்று அப்போதும் தப்பும், தவறுமாகவே யோசித்தாள் அவள்.

அந்நேரம் அவளது மொபைல் சத்தம் எழுப்ப, உடல் அதிர அதைக் கையில் எடுத்தாள் வசுமதி.

“என்னை மன்னிச்சுடு வசு. உன்கிட்ட சொல்லாம வந்ததுக்குச் சாரி டா. எப்படி இருக்க? டாக்டர் பார்த்தியா?” என்று அவளின் நலம் விசாரித்து, மன்னிப்பு கேட்டுப் பெரிதாக மெஸேஜ் அனுப்பி இருந்தாள் நர்மதா. அவ்வளவு தான். வசுமதியின் மண்டையில் உடனே பல்ப் எரிந்து விட்டது.

“இந்தியா கிளம்புவது” என்று முடிவெடுத்து விட்டாள் அவள்.

“அங்கே, நீ என்னை ஒன்றும் செய்ய முடியாதபடி, சூழ்நிலையை உருவாக்குகிறேன். பார்” என்று சூளுரைத்துக் கொண்டு பெட்டியை அடுக்கினாள் வசுமதி.

ஒரு முடிவுக்கு வந்த பின் அதைச் செயல் படுத்துவது ஒன்றும் அவளுக்குப் பெரிய காரியமாக இருக்கவில்லை.

அவள் வேக வேகமாகத் தனது ட்ராலியை இழுத்துக் கொண்டு லிஃப்ட்டை நோக்கி நகர, அந்நேரம் சரியாக அவர்களின் தளத்தில் நின்ற லிஃப்ட்டில் இருந்து வெளியில் வந்தான் நரேன்.

அவள் நின்ற கோலத்தைப் புருவம் சுருக்கி கேள்வியாகப் பார்த்தவன், “எங்க கிளம்பிட்ட வசு?” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கேட்டான்.

“வந்து அண்ணா..” என்று அவள் தடுமாற,

“எங்கன்னு கேட்டேன்” என்றான் கறார் குரலில்,

“ஊருக்கு..” என்றாள் சின்னதாகி போன குரலில்.

“வாசு எங்க?”

“வரல…”

“ஏன் வரல?” என்று அடுத்தக் கேள்வியை வீசினான். பதட்டத்தில் கைகள் வியர்க்க, டிராலியை இறுகப் பற்றினாள் வசுமதி.

அவள் மௌனமாய் நிற்பதை ஒரு புருவ சுளிப்புடன் பார்த்தவன்,

“நீ ஊருக்கு போறதாவது அவனுக்குத் தெரியுமா?”

மெல்ல தலையை இட வலமாக அசைத்தாள்.

“வீட்டுக்கு நட…” என்றான். எப்போதும் பாசமாகப் பேசுபவன் திடீரென்று கடுமை காட்ட, அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“இல்ல அண்ணா, அவர்…”

“காரிடாரில் இருக்கோம். இங்க நின்னு என்ன பேச சொல்ற? வீட்டுக்கு நட…” என்றான்.

அப்போது தான் அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்தாள் அவள். ஏர்போர்ட்டில் இருந்து நேராக வந்திருக்கிறான் என்று அவனைப் பார்த்ததும் புரிந்தது. தளர்ந்து போன தோள்களுடன் அமைதியாய் திரும்பி வீட்டுக்கு நடந்தாள் வசுமதி.

“என்ன பிரச்சினை உங்க ரெண்டு பேருக்கும்? இதென்ன புதுப் பழக்கம் வசு? வாசு உன்கிட்ட சொல்லாம, இப்படி ஊருக்கு கிளம்பி போனா சும்மா இருப்பியா நீ? அதுவும் நீ இருக்க நிலைமைல தனியா போனா.. வாசுவை பத்தி யோசிச்சியா? உன்னைத் தேடி அவனை அலைய விடனும்னு நினைக்கறியா?” அவள் மனதை படித்ததைப் போல வந்த கேள்வியில் திடுக்கிட்டு போனாள் வசுமதி.

“இல்ல அண்ணா, அவருக்கு மெஸேஜ் அனுப்பிட்டேன்”

“அது போதுமா?” என்று அவன் கேட்க, திடீரென்று முளைத்த குற்ற உணர்ச்சியில் தலை கவிழ்ந்தாள் வசுமதி.

“அவனுக்குக் கால் பண்ணு” என்றான், அவனது ட்ராலியை ஓரமாக வைத்து விட்டு, கையைக் கட்டிக் கொண்டு நின்றான்.

கைகள் நடுங்க போனை எடுத்து கணவனை அழைத்தாள். ஆனால், அவனோ அழைப்பை ஏற்கவேயில்லை.

“எடுக்கலையா?” என்று அவன் கேட்க, கண் கலங்க, “ம்ம்ம்” என்றாள்.

“இங்க வந்து உட்காரு வசு” என்று அவ்வளவு நேரமும் நின்றுக் கொண்டிருந்தவளை அழைத்துச் சோஃபாவில் அமர்த்தினான். கிட்சனுக்குள் நுழைந்து, பிரிட்ஜை திறந்து ஆராய்ந்து, ஜுஸ் பாட்டிலை கையில் எடுத்து வந்து அவளிடம் நீட்டினான்.

“முதல்ல இதைக் குடி” என்றான். மறுக்காமல் வாங்கி அருந்தினாள். அது அவளுக்கு அப்போது தேவையாகவும் இருந்தது.

“அவர், அவர்..” என்று அவள் வார்த்தைகளைக் கோர்க்க முடியாமல் தடுமாற,

“என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம் வசு. நீ வாசு கிட்ட மனசு விட்டுப் பேசினா போதும். நர்மதா கூடப் பழகி, அவளோட பிடிவாதம் உனக்கும் வருது போல இருக்கு. அவளும் இப்படித் தான். ஆயிரம் தடவை சொன்னாலும், தனக்குச் சரின்னு தோணினதை தான் செய்வா. நாம சொல்ல வர்றதை காது கொடுத்து கேட்கவே மாட்டா. ஒவ்வொரு தடவையும் என்னை ட்ரீட்மெண்ட்க்கு டார்ச்சர் பண்ண மாதிரி..” தேவையில்லாத பேச்சை பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சட்டெனச் சுதாரித்துப் பேச்சை மாற்றினான் நரேன்.

திருமணமான புதிதில் நர்மதா எதையோ மறைப்பதாகத் தோன்றியதின் காரணம் இப்போது விளங்கியது வசுமதிக்கு. ஆக, நர்மதா தான் பிடிவாதம் பிடித்து இருக்கிறாள் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க அதைக் கலைத்தது நரேனின் குரல்.

“இங்க பாரு வசு. வாழ்க்கைன்னா இன்பம், துன்பம் இரண்டுமே தான் இருக்கும். எனக்குப் பிடிச்சா உன்னைத் தூக்கி வச்சு கொண்டாடுவேன், பிடிக்கலையா, தூக்கி எறிவேன்னு இருக்கக் கூடாது. ரெண்டையும் ஒரே மாதிரி ஹேண்டில் பண்ண பழகனும். முதல்ல கஷ்டமா தான் இருக்கும். ஆனா, இதையெல்லாம் யாருக்காகச் செய்யறோம்னு யோசிச்சு பார்த்தா எல்லாமே ஈஸி தான்.” என்றான்.

“எல்லாத்துக்கும் உடனடி தீர்வு கிடையாது வசு. ஆனா, சம்மந்தப்பட்ட ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசாம எதுவுமே முடிவுக்கு வராது. பிரச்சனை நாலு பேரு காதுக்குப் போனா, நாலாயிரம் ஐடியா சொல்லுவாங்க. அதுல, நமக்குத் தேவையானது இருக்குமான்னு கேட்டா, சந்தேகம் தான் வசு மா. நீ புத்திசாலி பொண்ணு. சரியான முடிவா எடு. அது உனக்கு மட்டுமில்ல, உன்னை நேசிக்கிறவங்களுக்கும் சந்தோசம் கொடுக்கும் முடிவா இருக்கட்டும்”

சிலைப் போல அமர்ந்திருந்தாள் வசுமதி. அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டதற்கு அடையாளமாக, “சரிங்க அண்ணா” என்றாள்.

“கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு. நான் ஈவ்னிங் வரேன்” அவளது ட்ராலியை கட்டிலுக்கு அடியில் காலால் நகர்த்தித் தள்ளி விட்டு, தனது டிராலியை இழுத்துக் கொண்டு, கதவை நோக்கி நடந்தான் நரேன்.

சோஃபாவில் சரிந்து கண்களை மூடியவள், அப்படியே உறங்கி இருந்தாள்.

“வசும்மா…” என்று அலறிக் கொண்டு அவளை எழுப்பினான் வாசு. அவனது அலறலில் அரண்டு அவள் விழிக்க, அவளருகில் மண்டியிட்டு, படுத்திருந்தவளின் வயிற்றில் அழுத்தமாய்க் கைப் பதித்து, “குழந்தை, எனக்கு நம்ம குழந்தை வேணும் வசும்மா” என்று அவள் அத்தனை நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வார்த்தைகளைத் தெளிவாகச் சொன்னான் வாசுதேவன். வசுமதியின் முகம் பளீரென்ற புன்னகையில் மலர்ந்தது.

ஆனந்த மிகுதியில் அவள் கண்கள் தளும்ப, அவனது விழிகளை இமைக்காமல் பார்த்திருந்தாள் வசுமதி.

அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்து, “என்னை மன்னச்சிடு வசும்மா. உன்னை ரொம்பப் படுத்திட்டேன். இல்ல?” என்று குரல் கரகரக்க கேட்டான் வாசு.

error: Content is protected !!
Scroll to Top