பூமரப் பாவைகள் – 25 (1)

அன்று ஏழு மணிக்கெல்லாம் அலுவகத்தில் இருந்து கீழிறங்கி விட்டாள் வசுமதி. மிகுந்த சோர்வுடன் கதவைத் திறந்து வீடு நுழைந்தவள், மறுகணம் அப்படியே திகைத்து நின்று விட்டாள். வீடெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது அவள் குரல்.

“மழை இல்லை… நனைகிறேன்

நம் காதலின் சாரலா?

உன்னைக் கண்டு… உறைகிறேன்

உன் பார்வை மின்சாரமா?

என்னைத் தந்தேன்

உன்னைக் கொடு

மனசே…”

இருவரின் குரலும் இணைந்து ஒலித்து, வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது. வரிகளில் இருந்த காதல், அவர்களின் வாழ்விலும் நிறந்திருந்த நாட்கள் அது.

வாசுவும், அவளும் காரில் பாடியதை, அவர்களுக்குத் தெரியாமல் நர்மதா ரெக்கார்ட் செய்து சர்ப்ரைஸாகக் கொடுத்தது. ஆனால், இன்று அந்த நர்மதாவே அருகில் இல்லை. என்ன காரணத்திற்காக ஊருக்குப் போனால் என்றும் அவளுக்குத் தெரியவில்லை. நரேனிடம் கேட்டால், சரியான பதிலில்லை. நர்மதாவிற்கு அழைத்தால், அவள் போனை எடுக்கவேயில்லை.

என்னவோ வசுமதிக்கு வாழ்க்கையே ரசிக்கவில்லை.

“நீ சுவாசம்

நான் தேகம்

நான்..உன்னை மட்டும்

உயிர் தொட அனுமதிப்பேன்

நீ காற்று

நான் மரம் என்ன

சொன்னாலும்

தலையாட்டுவேன்”

நீ பேசாவிட்டால் என்ன, உன் குரல் கேட்க எனக்கு வழியா இல்லை என்பது போல, அவனது லேப்டாப்பில் இருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது அவள் குரல்.

ஏதோ ஒரு விதத்தில் அது அவளது மனதைத் தொட கணவனைத் தேடினாள் வசுமதி. வீட்டினுள் எங்கும் அவனைக் காணாது பால்கனியை பார்த்தாள்.

அங்கிருந்த பீன் பேகில் அமர்ந்த வாக்கில் உறங்கியிருந்தான் வாசு. அவனை நெருங்கி குனிந்து அவன் முகம் பார்த்தாள். ஒரு வாரமாக வேலை விஷயமாகத் தினமும் அபுதாபி சென்று வந்து கொண்டிருந்தான். அந்தக் களைப்பு அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

தலை ஒரு புறமாகச் சரிந்திருக்க, அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான் வாசு. கணவனை அவ்வாறு காண்கையில் அவளுக்கு அப்படியே உருகி விட்டது. அவன் உச்சியில் அழுத்தமாய்த் தன் இதழ்களைப் பதித்து, அவனது தலையை நேராக்கி வைத்து விட்டு உள்ளே சென்றாள்.

லேப்டாப்பில் ஓடிக் கொண்டிருந்த பாடலை நிறுத்த போனாள். திரையில் தெரிந்த காட்சி அவளை அப்படியே பிடித்து நிறுத்தியது.

வாசுவின் கணக்கு, வழக்குகள் அடங்கிய ஃபைல் தான் அவள் கவனத்தைப் பிடித்திழுத்தது. என்னவென்று பார்க்கும் சுவாரசியத்தில் தான் அவள் அமர்ந்தது. ஆனால், அப்படி ஒரு அதிர்ச்சியை அவள் எதிர்ப்பார்க்கவில்லை.

கண்கள் அதிர்ச்சியில் விரிய, கைகள் தானாக வாயை மூடியது.

அவன் லோன், கடன் என்று புலம்பிய போதெல்லாம் அவள் என்ன, ஏதென்று பெரிதாக விசாரித்தது இல்லை. அவள் கவலை மட்டுமே அவளுக்குப் பிரதானமாக இருந்தது.

லோன் தானே? ஐந்து, பத்து லட்சங்களுக்குள் இருக்கும். இருவரின் மூன்று அல்லது நான்கு மாத சம்பளம் போதுமே அதைக் கட்டி முடிக்க என்று தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால், கண் முன் இருந்த தொகை அவளை வாயடைக்க வைத்தது. அறுபது, எழுபது லட்சங்களை அவள் எதிர்பார்க்கவில்லை.

வாசு சொன்னது போலவே புது வீடு கட்ட மற்றும் அவன் அப்பாவின் மருத்துவச் செலவு தான் அதிகமாக இருந்தது. ஆனால், அதற்கு முன்பும் அண்ணன், அக்கா மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு என்று அதிகமாகச் செலவு செய்திருந்தான். மாதவனுக்கு வீடு வாங்க பெரிய தொகையைக் கொடுத்திருந்தான். மகாவின் இரு குழந்தைகளுக்கும் வருடாவருடம் பள்ளிக் கட்டணத்தை அவனே கட்டியிருந்தான். அண்ணன், அக்கா இருவரின் குழந்தைகள் பெயரிலும் ஃபிக்ஸட் டெபாசிட்டாகப் பெரிய தொகையைப் போட்டிருந்தான். அது போக, மாதாமாதம் பெற்றோருக்காகத் தனியாக ஒரு தொகையை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான்.

வசுமதியும் அவள் குடும்பத்துக்குச் செய்வாள் தான். ஆனால், நிச்சயமாக இவ்வளவு இல்லை.

“பேங்க்ல போட்டு வைடா வசு. அப்பாக்கு அனுப்பாத. நாளைக்கு உனக்கு உதவியா இருக்கும். அப்பா வேணும்னா கேட்டு வாங்கிக்கறேன்” என்று தந்தை இரண்டு முறை அழுத்தி சொல்லவும் அவளது சம்பளம் மொத்தமும் அவளிடம் தான் சேமிப்பாகத் தங்கி இருந்தது. பண்டிகை, விஷேச நாட்களுக்குப் பணம் அனுப்புவாள். ஊருக்குச் செல்கையில் நகை, பரிசுகள் வாங்கிச் செல்வாள், மற்றபடி பெரிதாகச் செலவு செய்ததில்லை.

ஆனால், இன்று கணவனின் செலவு கணக்குகள் ஒவ்வொன்றாகப் பார்க்க, பார்க்க அவன் மேல் அவளுக்கு மரியாதை அதிகரித்துக் கொண்டே போனது. இவனைப் போய், என்னவெல்லாம் பேசி விட்டோம் என்று பெரும் குற்ற உணர்ச்சி அவளைத் தாக்கியது.

உடையைக் கூட மாற்றாமல், சட்டையின் மேலிரு பட்டன்களைக் கழட்டி விட்டு லேப்டாப் சகிதம் சென்று படுக்கையில் அமர்ந்தாள். இப்போது லேப்டாப்பில் ஒலித்த இருவரின் குரலும் அவளைத் தொந்தரவு செய்யாமல், ரசித்துக் கேட்க வைத்தது.

பல இரவுகளாக அவன் மண்டையை உடைத்து வேலை செய்து கொண்டிருந்த கணக்கு, வழக்குகளைச் சீர் செய்யத் தொடங்கினாள்.

அவனது சம்பளத்தை மட்டுமே வைத்து எப்படிச் சமாளிப்பது என்று அவன் திணறி, திண்டாடிக் கொண்டிருப்பது புரிய, “ஊருக்கெல்லாம் பைனான்ஸியல் கன்சல்டன்ட் நான். ஆனா, இந்தப் புருஷன் என்னை மதிக்கறானா பார்” புலம்பிக் கொண்டே, அவளது சம்பளத்தையும் சேர்த்து பதிய ஆரம்பித்தாள் வசுமதி.

அன்று, “இந்த அக்கவுண்ட்ஸ் கொஞ்சம் பார்” என்று அவன் கெஞ்சியதை வசதியாக மறந்திருந்தாள் அவள்.

இரண்டு வருடம் அவன் டைம் கேட்டதின் காரணம் இப்போது அவளுக்கு நன்றாக விளங்கியது. எத்தனை மன உளைச்சலில் இருந்திருப்பான் என்று நினைக்கையில் அவன் மேலிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது.

ஒரு மணி நேரம் முழுதாகச் செலவழித்து எவ்வளவு பணம் எந்த லோனிற்கு ஒதுக்குவது, எந்த லோனை முதலில் அடைப்பது என அனைத்தையும் கணக்கிட்டு, அவனது ஃபைலில் அதைப் பதிந்து வைத்தாள்.

அவளது வங்கிக் கணக்கில் இருந்த சேமிப்பில் இருந்து கணிசமான தொகையை அவனுக்கு மாற்றி விட்டாள். அவளது பதவி உயர்வு, சம்பள உயர்வு கடிதத்தை அவனுக்கு மெயிலில் அனுப்பி வைத்தாள்.

அவளது இன்சூரன்ஸ் காப்பியை, “பிரசவ செலவு மொத்தத்தையும் இன்சூரன்ஸ் கம்பெனியே ஏற்கும்” என்ற குறிப்புடன் அவன் கண்ணில் படுமாறு லேப்டாப்பில் ஒட்டி வைத்தாள்.

இதையெல்லாம் முன்னரே செய்திருக்க வேண்டுமோ என்ற குற்ற உணர்ச்சி அவள் மனதை அறுத்தது. வீணாக அவனையும் வாட்டி, தானும் மனம் நொந்து.. மானசீகமாகத் தலையில் அடித்துக் கொண்டாள் வசுமதி.

அவளது சம்பளமும் சேர்கையில் இரண்டு வருடத்தில் முழுதாக நிமிர்ந்து விடுவார்கள் என்ற நிம்மதி அவளைப் பல நாட்களுக்குப் பின் புன்னகைக்க வைத்தது. இனி கணவன் குழந்தையை மறுக்கக் காரணமே இல்லை என்ற எண்ணம் மனதில் ஓட, மகிழ்ச்சியில் துள்ளி கொண்டு எழுந்தாள் வசுமதி.

அதே மகிழ்வான மன நிலையுடன் உணவை சமைத்து விட்டு, கணவனை எழுப்பினாள்.

“ஹாய் வசு. சாரி டா.. எப்போ வந்த? சும்மா வேடிக்கை பார்த்திட்டு உட்கார்ந்திருந்தேன். தூங்கிட்டேன் போல.. வா, ஏதாவது சமைப்போம்” என்றான் வாசு. கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்துக் கொண்டே,

“நான் சமைச்சுட்டேன். வாங்க சாப்பிடலாம்”

“அச்சோ சாரி மா. வெளில ஆர்டர் பண்ணி இருக்கலாம்ல” என்றான் அக்கறையாக,

“ஏன் நான் சமைச்சா, சாப்பிட மாட்டீங்களா?” என்று அவள் கோபமாகப் புருவம் உயர்த்த, “நீ சமைச்சு நான் வேணாம்னு சொல்லி இருக்கேனா வசு? டையர்டா தெரியறியேன்னு சொன்னேன். வா” என்று அவளைத் தோளோடு அணைத்தபடி நடந்தான் வாசு.

உணவை உண்டு கொண்டிருக்கும் போதே, “வாசு, உங்களைக் கேட்காம உங்க லேப்டாப் யூஸ் பண்ணிட்டேன் சாரி” என்றாள்.

“அட, அதெக்கென்ன வசும்மா. என்னோடது எல்லாமே உன்னோடது தான். நானே முழுசா உனக்குத் தான் சொந்தம்” பழைய வாசு திரும்பி இருந்ததில், வசுமதியின் புன்னகையும் மீண்டிருந்தது.

“உங்க, உங்க.. அக்கவுண்ட் ஃபைல் கொஞ்சம் அப்டேட் பண்ணியிருக்கேன். நேரம் கிடைக்கும் போது பார்த்துட்டு சொல்லுங்க.” என்றாள்.

“நீ எப்படி, அதை எதுக்குப் பார்த்த இப்போ? நானே சரி பண்ணி…” முகம் இறுக சொன்னான்.

“நானும் சரி பண்ணலாம் வாசு. ரெண்டு பேரும் சம்பாதிக்கறோம். ரெண்டு பேரும் செலவு பண்றது தானே சரி. குடும்பம்னா அது நீங்க மட்டுமா? நானும் தானே?” என்றாள் மெல்லிய குரலில்,

“இல்ல அந்தச் செலவெல்லாம்… கல்யாணத்துக்கு முன்னாடி, என் குடும்பத்துக்கு…”

“இனி, அது என் குடும்பமும் தான்” என்று அவள் சொல்ல, வாசுவின் இதழ்களில் தானாக வந்தமர்ந்தது புன்னகை.

“ஆனாலும்…” என்று அவன் ஆரம்பிக்க,

“பிளீஸ், மேல எதுவும் பேசாதீங்க. ஒருமுறை ஃபைல் பார்த்திட்டு அப்புறம் பேசலாம்” என்று அவள் கெஞ்சல் குரலில் கேட்க, மறுக்கத் தோன்றாமல் தலையசைத்தான் வாசு.

உணவை முடித்து விட்டு, உறங்க சென்று விட்டாள் வசுமதி.

error: Content is protected !!
Scroll to Top