வசுமதிக்குக் கண்ணை மறைக்கும் அளவுக்குக் கோபம் இருந்தாலும் கூட, நிதானத்தைக் கைவிடவில்லை அவள். துபாயின் சாலை விதிகளை நன்கு அறிவாள் அவள். இந்தச் சாலையில் இவ்வளவு வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று அறிவிப்புப் பலகைகள் சாலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும். அதை மீறினால் அபராத தொகை கட்ட வேண்டியதிருக்கும்.
அவள் இருக்கும் ஏரியாவின் ஸ்பீட் லிமிட்ஸ் அவளுக்கு அத்துபடி. மிகக் கவனமாகவே வாகனத்தைச் செலுத்தினாள்.
கியரை மாற்றுவதற்குக் கை வைக்கப் போனாள், அங்கே கணவனின் கையைக் காணாது உதடு துடிக்க, கண்கள் மீண்டும் கலங்கியது. கடந்த இரண்டரை மாத பழக்கம், அவன் காரை செலுத்துகையில் அவள் கியர் மாற்றுவதும், அவள் கார் ஓட்டும் போது, அவள் கைப் பிடித்து அவன் மாற்றுவதும் வாடிக்கையாகி இருந்தது. ஆனால், இன்று… பெருமூச்சுடன் சாலையில் பார்வையைப் பதித்தாள்.
கார் தேரா துபாய்க்குள் நுழைந்திருந்தது. கரையை ஓடி வந்து தொடுவதும், பயந்து பின்னோக்கி செல்வதுமாக இருந்த கடலை வெறித்தபடி, கடற்கரையின் முன் காரை நிறுத்தினாள்.
அலைகளை விடப் பலமாக அலைமோதிக் கொண்டிருந்தது அவள் மனது.
மனது கலங்கி தவிக்கும் போதெல்லாம் அவள் கடலிடம் தஞ்சமடைந்து விடுவாள். மனதில் எழும் சலன அலைகளைக் கடல் அலைகள் சாந்தப்படுத்தி விடுவது போல அவளுக்குத் தோன்றும்.
சில நிமிடங்களில் மனம் ஒரு நிலைக்கு வர, எழுந்து கொள்ள முயன்றாள். கரமொன்று நீண்டு அவளைப் பிடித்து அமர்த்தியது. அருகில் அமர்ந்திருந்த கணவனை மனதில் பரவிய அதிர்ச்சியுடன் விழி விரித்துப் பார்த்தாள் வசுமதி.
அவன் எப்படி அங்கு வந்தான் என்று அவளும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை. அவன் தனக்காக இவ்வளவு தூரம் தேடி வந்ததே அவள் மனதை இளக்கி இருந்தது.
முன்பு எப்போதோ அவள் சொன்னதை வைத்து அவளை டாக்ஸியில் பின் தொடர்ந்திருந்தான் வாசு. அவனது ஊகம் சரியாகக் கடலை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் வசுமதி.
கணவன் தன்னைத் தேடி வந்ததில் மனம் நெகிழ்ந்தவள் வார்த்தைகளால் இருவரையும் வதைக்காமல், “சாரி, இனி இப்படிப் பண்ண மாட்டேன். மன்னிச்சிடுங்க” என்று அவன் கண்களைப் பார்த்து மன்னிப்பை வைத்து விட்டு, மௌனமாய் அவனுடன் வீடு சென்றாள் வசுமதி.
“என்ன நம்மு, இவ்ளோ சீக்கிரம் படுத்துட்ட? உடம்புக்கு எதுவும் முடியலையா?” கேட்டபடியே மனைவியின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான் நரேன். பட்டென்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் நர்மதா.
“என்கிட்ட இருந்து ஏன் மறைச்சீங்க? உங்களுக்கும் விஷயம் தெரியும் தானே? நீங்க கூடவா நரேன்?” உதடுகள் துடிக்க, கண்கள் கலங்க, உடைந்த குரலில் கேள்வி கேட்கும் மனைவியை விநோதமாய்ப் பார்த்த நரேன்,
“என்னடா ஆச்சு? என்ன மறைச்சேன்? இப்போ ஏன் அழுற?”
“தெரியாத மாதிரி நடிக்காதீங்க. உங்களுக்குத் தெரியும்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா, என்கிட்ட தான் யாரும் சொல்லலை.”
“அச்சோ, நிஜமா நீ எதைப் பத்தி பேசறன்னு எனக்குப் புரியல டா..” அவன் மார்பில் கைகளால் அறைந்தாள். நரேன் அவள் கைப் பிடித்துத் தடுத்ததும் அவன் மார்பிலேயே சாய்ந்து கதறத் தொடங்கினாள்.
“உங்க தங்கச்சி வசுமதி பிரக்னன்ட்டா இருக்கறதை ஏன் என்கிட்ட சொல்லலை? நீங்களும் அவளைப் போல… எனக்கு அதைக் கேட்க தகுதி இல்லைன்னு நினைச்சீங்களா?”
அதைக் கேட்டதும் நரேன் ஒரு நொடி அதிர்ந்து போனான். செய்தி மூளைக்குள் சரியாய் பதிவானதும் அவனையறியாமல் உதடுகளில் சிறு புன்னகை வந்து போனது.
“ம்ப்ச், என்ன பேசுற நம்மு? தகுதி, அது, இதுன்னு. வசு அப்படி எல்லாம் நினைச்சு இருக்க மாட்டா. அவளுக்குச் சொல்லாம இருந்ததுக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும் மா” என்றவனைக் கடுப்புடன் ஏறிட்ட நர்மதா.
“அதானே, சும்மாவே தங்கச்சியை விட்டுக் கொடுக்க மாட்டீங்க. இதுல, இப்ப புள்ளத்தாச்சி வேற. கேட்கவா வேணும்” சலித்துக் கொண்டாள்.
“விடு டா நம்மு, ஃபீல் பண்ணாத. சீக்கிரம் நாமளும் பிரக்னன்ட் ஆகுறோம். அவகிட்ட சொல்லாம பழி வாங்கறோம்” என்று அவன் தீவிரமாகச் சொல்ல, சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வந்தது அவளுக்கு.
“நாம நேசிக்கறவங்க, நமக்குப் பிரியமானவங்க நம்மைக் காயப்படுத்தினா மட்டும் ஏன் இவ்வளவு வலிக்குது நரேன்? ஏன் அதைச் சாதாரணமா எடுத்துக் கடக்க முடியலை?” கேள்வியோடு அவன் முகம் பார்த்தாள்.
“ஏன்னா, அவங்க நமக்கு ஸ்பெஷல். அவங்ககிட்ட இருந்து எதிர்பார்க்காத நேரத்தில் கிடைக்கிற அடிக்கு வலி அதிகம்” அவனது நெஞ்சில் முகத்தை ஆழமாய்ப் புதைத்து விசும்பினாள் நர்மதா.
“சரி. வசுவுக்கு எத்தனை மாசம்? எப்படி இருக்கா?” விசுக்கென்று தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள் நர்மதா.
‘அப்போ உனக்கும் தெரியாதா?’ என்றது அவள் பார்வை.
“மூனு தொடங்கிடுச்சு. ஆள் மெலிஞ்சு, டல்லடிக்கறா. ஆனா, ரொம்ப அழகா இருக்கா. கொள்ளை அழகு. வயித்துல இருக்கறது பெண் குழந்தையா இருக்குமோ? இல்ல ஆண் குழந்தையா? நாளைக்கு அத்தைக் கிட்ட கேட்கணும்”
“ஹ்ம்ம், கேட்கலாம். நாளைக்கு அவளைப் போய்ப் பார்க்கலாம். இப்போ படு. எனக்கும் நாளைக்கு ஆபீஸ் இருக்கு” என்றவன், எழுந்து உடை மாற்ற சென்றான். கண்களை மூடி படுக்கையில் சரிந்தாள் நர்மதா.
நரேன் சொன்ன சொல் தவறாமல் மறுநாள் வசுமதியை காண, மனைவியை அழைத்தான். ஆனால், நர்மதா அங்கிருந்து நகரவில்லை. அவளுக்கு வசுமதியின் முகம் பார்த்து பேச முடியும் என்று தோன்றவில்லை.
அவள் தன்னை ஒதுக்கியது, தன்னிடம் விஷயத்தை மறைத்தது, பச்சை ரணமாய் உள்ளுக்குள் இன்னும் வலிக்கையில் அவளால் எப்படி முடியும்?
நாம் வாழ்வில் கடந்து விட்டதாக நினைக்கும் பல விஷயங்கள் சமயம் சந்தர்ப்பமில்லாமல் எட்டிப் பார்த்து, அந்தச் சூழ்நிலையையே மாற்றிப் போட்டு விடுகின்றன. தற்சமயம் நர்மதாவின் நிலையும் அது தான். கடந்த சில வருடங்களில் தான் சந்தித்த அவமானங்களை, புறக்கணிப்புகளை மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு வந்து தன்னைத் தானே நிந்திந்துக் கொண்டாள் அவள்.
நரேன் அவளுடன் போராடி ஓய்ந்து போய், இறுதியில் அவளை அவள் போக்கில் விட்டு விட்டான்.
அன்றைய சண்டைக்கு, பின் வந்த நாட்களில் வாசு மனைவியிடம் பேச எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எப்போதும் போல இயல்பாக இருந்தான். இரவெல்லாம் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
வசுமதி நிரந்தர மௌனத்தைத் தத்தெடுத்துக் கொண்டாள். நர்மதா, அவளிடம் பேசி விட்டு சென்று நான்கு நாட்கள் ஆகியிருந்தது.
அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நினைப்பே இரு நாட்களாக வசுமதியின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. வார்த்தைகளைத் தேடி தடுமாறிக் கொண்டிருந்தாள் அவள்.
அன்றிரவும் அவளது புது வழக்கமாகத் தாமதமாகத் தான் அலுவகத்தில் இருந்து கீழிறங்கி வந்தாள். எப்போதும் போலக் காரில் சாய்ந்து நின்றிருந்தான் வாசு.
அவளுக்கு மிகப் பிடித்த கறுப்பு நிற பிசினஸ் சூட்டில் இருந்தான். அவனது உடலுக்குக் கச்சிதமாகப் பொருந்தி இருந்தது உடை. கம்பீரமாக, கவர்ச்சியாக, தெரிந்தான் வாசு. கணவனை இமைக்காமல் பார்த்திருந்தாள் வசுமதி. அவளது பார்வையைக் கண்டு கொண்டவனின் உதடுகள் புன்னகையில் பிரிந்தன. அனிச்சையாய் விரிந்த தன் இதழ்களைக் கடித்துப் புன்னகையை விழுங்கினாள் வசுமதி.
“சைட் அடிக்கலாம் தப்பில்ல. யூ ஹவ் ஆல் தே ரைட்ஸ்.” மெலிதாகச் சிரித்துக் கொண்டே சொன்னான் வாசு.
ஒற்றைப் பார்வையுடன் அவனைத் தவிர்த்துக் காரில் ஏறி அமர்ந்தாள்.
“நீ படிகளில் இறங்கி, என்கிட்ட நெருங்கி வர்ற வரைக்கும்.. உன்னைப் பார்வையால் முழுங்கிட்டு தான் இருந்தேன் நான்” கண்ணடித்தான். ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து, “ஆ, என் பொண்டாட்டி வாசம். லாவண்டர் மணம்” என்று கிறக்கமாகச் சொன்னான்.
“உனக்குப் பெர்ஃப்யூம் வாங்கவே சீக்கிரமா பிரான்ஸ் போறோம் வசு. ஊரையே வாங்கிட்டு வந்து குமிக்கறோம்”
அன்று ஏனோ, வித்தியாசமாக, உல்லாசமான மனநிலையில் இருந்தான் அவன்.
மெல்ல கணவனைத் திரும்பிப் பார்த்தாள் வசுமதி. அவனது பிசினஸ் சூட்டை அவன் உடலில் இருந்து பிடுங்கி தூர எறிய வேண்டும் போல வெறி வந்தது. இத்தனை வலிமையும், வனப்பும், கம்பீரமும், அவளையும், அவள் வயிற்று குழந்தையையும் காக்கப் போவதில்லை எனும் போது இருந்தென்ன பயன்? மனம் கனத்து போக இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
அவனும் அமைதியாகக் காரை செலுத்தினான். மனம் அமைதியின்றித் தவிக்க, வீட்டை அடைந்ததும் உடை மாற்றிக் கொண்டு, படுக்கையில் சரிந்தாள் வசுமதி.
அவளை அலேக்காகத் தூக்கி தன் மடியில் கிடத்தி, அவள் முகம் நிமிர்த்தினான்.
“அழகா இருக்கப் பொண்டாட்டி, அப்படியே கடிச்சி முழுங்கிடனும் போல இருக்கு” மென்மையாய் அவள் கன்னம் கடித்து, பின் அழுத்தமாய் முத்தமிட்டான்.
“விடுங்க என்னை, தூக்கம் வருது” திமிறினாள்.
“ம்ப்ச், சாரி டா வசும்மா. நீ என் மேல கோபமா இருக்கன்னு தெரியும். ஆனா, இனி அதுக்கு…” அவன் எதிர்பாரா நொடியில் அவன் கைகளில் இருந்து குதித்து இறங்கினாள். கையில் போர்வையை அள்ளிக் கொண்டு பால்கனிக்கு சென்றவள், கதவடைத்து கொண்டாள்.
வாசுவுக்கு முகத்தில் அறை வாங்கியது போலாகி விட்டது. அப்படியே விக்கித்துப் போய் அவளைப் பார்த்தான். அவனுக்கு இது ஒன்றும் புதிதல்ல தான். ஆனாலும், ஒவ்வொரு முறை மனைவி உதாசீனப்படுத்தும் போதும் அவனுக்கு அதிகம் வலித்தது.
“ஏய் பொண்டாட்டி, உனக்கு இருக்கு..” கத்தினான்.
திருமணமான மறுநாளே, “கல்யாண வாழ்க்கை இத்தனை இனிமையானதா?” என்று வியந்தவனுக்கு, இன்று அவ்வாழ்வின் அத்தனை கோணங்களையும் காட்டினாள் வசுமதி.
சரி, தன்னிடம் தான் பேச மறுக்கிறாள். அதனால் வேறு என்ன செய்து அவளைப் பேச வைக்கலாம் என்றவனுள் சட்டென்று ஒரு யோசனை உதயமாக, உடனே அதைச் செயல்படுத்த விரும்பி வீட்டை விட்டு வெளியேறினான். அரை நிமிடத்தில் நர்மதாவின் வீட்டின் முன் இருந்தான்.
கதவை புன்னகையுடன் திறந்த நர்மதா, “வாங்க வாசு, எப்படி இருக்கீங்க?” என்றாள்.
“அக்கா, கொஞ்சம் வீடு வரைக்கும் வர்றீங்களா?”
“என்னாச்சு?” என்று பதட்டமானாள் நர்மதா.
“நான் அபார்ஷன் பண்ணிடலாம்னு சொன்னது உண்மை தான் கா, ஆனா..”
“என்னது?” அதிர்ச்சியில் கத்தினாள் நர்மதா.
“இல்லக்கா, நான் முதல்ல கருவை கலைச்சுடலாம்னு சொன்னேன்…” மேலே அவனைப் பேச விடாமல் படாரென்று கதவை அவன் முகத்தில் அறைந்து சாத்தினாள் நர்மதா.
வாசுவின் குரல் மீண்டும் மீண்டும் அவள் காதில் எதிரொலிக்க, அவளுடல் நடுங்கியது. உடல் பலமிழந்ததைப் போலச் சரியத் தொடங்க, எதையேனும் பற்றிக் கொள்ள முயன்றாள். கைக்கு ஒன்றும் கிட்டாமல், அப்படியே மயங்கி சரிந்தாள் நர்மதா.
“ஐயோ வாசு, உனக்கு வாய்ல தான்டா சனி. பொண்டாட்டி பேச மாட்டேங்கறானு புகார் கொடுக்கத் தானேடா வந்த? அதை விட்டுட்டு எதை முதலில் உளறி, இப்போ அக்கா வேற கோபத்துல இருப்பாங்களே. என்ன பண்றது?” என்று வாய் விட்டுச் சத்தமாகப் புலம்பியவன், திரும்பவும் அழைப்பு மணியை அழுத்தினான்.
“அக்கா, நான் சொல்ல வந்ததே வேற. கொஞ்சம் கதவை திறங்க கா” கத்தினான். மயங்கி சரிந்திருந்தவள் எங்கிருந்து வந்து கதவைத் திறக்க போகிறாள். ஐந்து நிமிடங்கள் நின்று பார்த்து விட்டு, திரும்பி வீட்டை நோக்கி நடந்தான் வாசு.
அவனது ஒட்டு மொத்த கோபமும் இப்போது மனைவியின் மேல் திரும்பியது. என்ன சொல்ல வருகிறேன் என்று முழுதாக நின்று கேட்காமல், இதென்ன பிடிவாதம்.
‘சரி. என் மேல் தான் தவறு. அவளது கோபமும், பயமும் சரி தான். ஆனாலும், இன்னுமா என்னை உணரவில்லை இவள்? என்ன நடந்தாலும் எங்களுக்குள் பேசித் தீர்த்திருக்க வேண்டுமோ? நர்மதாவிடம் போனது தவறோ?’ மனதில் புலம்பிக் கொண்டே போய் வீட்டினுள் நுழைந்தான்.
இப்போது படுக்கையில் நல்ல உறக்கத்தில் இருந்தாள் வசுமதி. சத்தமின்றித் தன் வேலைகளைக் கவனித்தவன், நள்ளிரவை கடந்தே உறங்க சென்றான். அவனுக்கிருந்த குழப்பத்தில் நர்மதாவை அத்தோடு மறந்தே போனான் அவன்.
அதற்கடுத்து வந்த நாட்களில் இருவரும் ஆளுக்கொரு பக்கமாகத் திருப்பிக் கொண்டார்கள்.
இது தான் சாக்கென்று இன்னும் அதிகமாகத் தன் ஒட்டுக்குள் சுருங்கினாள் வசுமதி.
இருவரும் மௌனத்தை மிக நேர்த்தியாகக் கையாண்டார்கள். அவர்களுக்கு இடையில் வார்த்தைகள் தான் பரிதவித்துக் கிடந்தன.
“எனக்கு வீட்டுக்கு போகனும். டிக்கெட் போட்டு கொடுங்க. இல்ல நானே போட்டுக்கறேன். ஐ வாண்ட் டு கோ ஹோம்” பத்து நிமிடங்களுக்கு மேலாக இதையே திரும்ப, திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் மனைவியை எரிச்சலுடன் பார்த்தான் நரேன்.
“நர்மதா, என்னாச்சு மா? சொன்னா தானே புரியும்? அதை விட்டுட்டு வீட்டுக்கு போகனும்னா. இது தான் மா, நம்ம வீடு” பொறுமையாகக் குழந்தைக்குச் சொல்வது போலச் சொன்னான் நரேன்.
மருமகள் மயங்கி கிடந்ததைக் கண்டதும், படபடப்புடன் மகனுக்கு அழைத்துத் தெரிவித்திருந்தார் சரஸ்வதி. முகத்தில் தண்ணீர் தெளித்து, அவளுக்குக் குடிக்க ஜுஸ் கொடுத்தார். கீழே காரை பார்க் செய்து கொண்டிருந்த நரேன், அடுத்த நிமிடம் வீட்டில் இருந்தான்.
“என்னாச்சு மா?” என்று அவன் பதற,
நர்மதா கண் விழித்ததில் இருந்து உடைந்து போன டேப் ரெக்கார்டர் போல ஒன்றையே சொல்லிக் கொண்டிருந்தாளே தவிர, என்ன நடந்தது என்று சொல்லவேயில்லை.
“மயக்கமாகற அளவுக்கு என்ன நடந்தது நம்மு? வா, டாக்டர் கிட்ட போகலாம்” அவள் கைப் பிடித்து எழுப்ப முயன்றான்.
“நோ, நான் எங்கேயும் வரல. எனக்கு எங்கம்மா கிட்ட போகனும். என்னை எங்க வீட்ல கொண்டு விடுறீங்களா நரேன்? இல்ல நானே போய்க்கறேன். டிக்கெட் மட்டும் போட்டு கொடுங்க”
கிளிப் பிள்ளை போல அவள் அதையே சொல்லிக் கொண்டிருக்க, “சரி, நாளைக்கு டிக்கெட் போடுறேன். இப்போ தூங்கு மா” என்றான்.
“இப்பவே போடுங்க. நான் உங்களை நம்ப மாட்டேன். யாரையும் நம்ப மாட்டேன்”
‘இவளுக்கு என்னவாயிற்று?’ என்று அவள் முகத்தை ஆராய்ந்தான் அவன். ஆனால், அவள் கண்களில் கலக்கம் மட்டுமே மிச்சமிருந்தது.
“என்ன நடந்தது மா?” என்று அம்மாவின் முன் போய் நின்றான் நரேன்.
“காலிங் பெல் சத்தம் கேட்டது பா, நான் குளிச்சிட்டு இருந்தேன். அப்புறம் வெளில வந்து பார்த்தா, மயங்கி விழுந்து கிடக்கறா” என்றார் சரஸ்வதி. அவருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
அவனுக்குத் தலையை எதிலாவது முட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. அவர்களுக்குள் பல வருடங்கள் கழித்து இப்போது தான், எல்லாம் சரியாகி இருக்கிறது. அதற்குள், இது என்ன புதுச் சோதனை என்று எரிச்சலாக வந்தது அவனுக்கு.
நர்மதாவின் அருகில் நெருங்கி அமர்ந்து, அவள் தலையை ஆறுதலாக வருடிக் கொடுத்தான். “என்னடா ஆச்சு நம்மு?” என்றான்.
“பெண்ணுக்கும், ஆணுக்குமான உறவில்… ஏன் எப்போதும் இழப்புகள் பெண்களுக்கு மட்டுமானதா இருக்கு நரேன்?” எதனால் வந்தது இக்கேள்வி என்று புரியாமல் விழித்தான் அவன்.
“என்ன பேச்சு இது நம்மு?”
“வாசு.. வாசுக்கு குழந்தை வேண்டாமாம். வசு… வசு இதை எப்படித் தாங்குவா?” உடைந்து அழத் தொடங்கினாள்.
“பைத்தியம் மாதிரி பேசாத. என்ன பேசறோம்னு தெரியுதா உனக்கு?” குரலுயர்த்தி அதட்டினான் நரேன்.
“ஆமா, சீக்கிரம் நான் லூசாகிடுவேன் போல, என்னால இதையெல்லாம் பார்த்திட்டு, இங்க இருக்க முடியாது நரேன்” என்று அவள் தொடங்க,
“நர்மதா…” கத்தினான்.
“என்கிட்ட ஏன் கத்தறீங்க? தைரியம் இருந்தா போய் வாசுவை கேள்வி கேளுங்க. உங்க தங்கச்சி தானே…” என்றவள், உதடு துடிக்க,
“நீங்க அவ அண்ணன் இல்லைல? நாம அவளுக்கு உறவில்லைல நரேன். நாம அவளுக்காக எதுவும் பண்ண முடியாது இல்ல? அப்புறம் எதுக்கு நான் இங்க இருக்கணும். என்னால முடியல நரேன்” அவன் தோள் சாய்ந்து கண்ணீரில் கரைந்தாள் அவள்.
“உனக்கு யார் சொன்னது?”
“வாசு தான்”
“நாம வாசுகிட்ட பேசி பார்ப்போம். இந்த நேரத்தில தான், நாம வசுமதிக்குத் துணையாக இருக்கணும் நம்மு”
“இல்ல, உங்களுக்குத் தெரியாது. இது அவங்க கல்யாணத்துக்கு முன்னாடியே எடுத்த முடிவு.”
“என்ன சொல்ற நீ?”
முன்னர் அவளிடம் வசுமதி கருத்தடை மாத்திரை குறித்துச் சொன்னதை, இப்போது நரேனிடம் விளக்கினாள் நர்மதா.
“ஆனாலும், நாம பேசி பார்ப்போம் நம்மு”
“இதெல்லாம் அவங்க பெர்சனல் விஷயம். நாம எப்படித் தலையிடுறது.? நீங்க வேணா பேசிப் பாருங்க. எனக்கு அம்மாகிட்ட போகணும்”
நரேனுக்கு அவளது மனநிலை புரிந்தது. இப்படியே விட்டால் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுவாள். பின்னர் அவளை மீட்பது கடினம் என்று அறிந்த அவன், மறுநாளே அவளை இந்தியா அனுப்பி வைத்தான்.
தன்னை அறியாமலேயே பிரச்சனையை மேலும் பெரிதாக்கி இருந்தான் வாசு.
முதல் வேலையாக வாசுவிடம் இது குறித்துப் பேச வேண்டும் என்று நினைத்தான் நரேன். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று இல்லாமல் நிதானமாகக் கையாள நினைத்தான் அவன். ஆனால், நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.
அலுவலக வேலையாக அவசரமாகக் குவைத் அனுப்பப்பட்டான் நரேன். ஏர்போர்ட்டில் இருந்து, “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் வாசு. குவைத் போறேன், ஒரு வாரத்தில் வந்துடுவேன். ஒருவேளை நீங்க இந்தியா போறதா இருந்தா, எனக்குத் தெரியப்படுத்தவும்” என்று மெஸேஜ் செய்து விட்டே கிளம்பினான்.
ஆனால், அவன் ஒரு வாரம் கழித்து ஊர் திரும்பிய போது, அவனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இந்தியா செல்ல பெட்டியுடன் தனியாக நின்ற வசுமதியை தான் காண நேர்ந்தது.