பூமரப் பாவைகள் – 23 (2)

“உள்ள வாங்கண்ணி” மௌனமாய் உள்ளே நுழைந்து, கையில் இருந்த பையை அடுப்படிக்குள் சென்று வைத்தாள் நர்மதா.

“அத்தை உனக்காக ஏதேதோ செய்து வச்சுருக்காங்க. சூடு ஆறுறதுக்கு முன்னாடி சாப்பிட சொன்னாங்க” சுவரைப் பார்த்து சொன்னாள்.

“எதுக்கு அண்ணி, அவங்களுக்குச் சிரமம்? நாங்க சமைச்சுட்டோம்” என்ற வசுமதியை உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் திரும்பி பார்த்தாள் நர்மதா.

“மாசமா இருக்கப் பொண்ணுக்கு, வாய்க்கு ருசியா சமைச்சு கொடுக்க ஆசைப்படுறாங்க. நான் எப்படித் தடுக்க முடியும்?”

“அண்ணி..” என்றாள் வசுமதி. அவள் குரல் நடுங்கியது.

“ஏன் வசு? ஏன்? என்கிட்ட ஏன் சொல்லலை?” என்றவளின் குரல் தழுதழுத்தது. வார்த்தைகளுக்கு முன் கண்ணீர் போட்டி போட்டுக் கொண்டு முதலில் வெளியில் வந்தது.

இதற்கு வசுமதி என்ன பதில் சொல்வாள்.

“உனக்காக நான் சந்தோஷப்பட மாட்டேன்னு நினைச்சியா வசு? கண்ணு போட்டுடுவேன்னு நினைச்சியா? இல்ல… எல்லோரையும் போல எனக்குத் தகுதி இல்லைன்னு நினைச்சு சொல்லலையா?”

“என்ன அண்ணி பேசறீங்க? நான் போய் உங்களை…”

“பேசாத வசு. பேசாத. என்கிட்ட சொல்லலை இல்ல நீ. உனக்காகச் சந்தோசப்படாம, அப்புறம் வேற யாருக்காகச் சந்தோசப்படப் போறேன் நான்? ஆனாலும், நீ என்னை இப்படி ஒதுக்கி தள்ளி இருக்க வேணாம்..” கண்ணீரோடு கதறுபவளை பார்க்க பார்க்க வசுமதியின் நெஞ்சில் பாரமேறியது.

“இல்ல அண்ணி. பிளீஸ்..”

“அப்படிக் கூப்பிடாத வசு. உன்ன என் சொந்த தங்கை போலத் தான் நடத்தினேன். ரத்த உறவுகளே பொய்ச்சு போற இந்தக் காலத்துல…நீயும்… ம்ப்ச்.. உனக்குப் புரோமோஷன் கிடைச்சதை கூட நீ என்கிட்ட சொல்லலை. நான் ராசி இல்லாதவள்னு என்னை ஒரேடியா ஒதுக்கிட்டியா? ஏன் இப்படிப் பண்ண? ஏன் என்கிட்ட சொல்லலை வசு. காரணம் சொல்லு?” நர்மதாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

நாம் அளவற்ற நேசம் வைத்தவர்கள் தான், எப்போதும் நம்மைக் காயப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். அன்பு பொய்த்து போகும் தருணங்கள், வாழ்வின் சபிக்கப்பட்ட கணங்கள்.

வசுமதி வார்த்தை அற்றுப் போய் மௌனமாய் உறைந்து நின்றாள். அவள் என்னவென்று நர்மதாவிற்கு விளக்குவாள்? விதி அவர்களை இப்படி ஒரு நிலையில் வந்து நிறுத்தியிருக்க வேண்டாம்.

கிட்சன் மேடையில் சாய்ந்து நின்றிருந்த நர்மதா, அப்படியே சரிந்து அமர்ந்து, உடைந்து அழ ஆரம்பித்தாள். வசுமதிக்கு மிகவும் சங்கடமாகப் போனது. இந்த அழுகைக்கு அவள் தான் காரணம் என்ற எண்ணமே அவளை நொறுக்கியது.

இத்தனை நாட்கள் தன்னைத் திடமாகக் காட்டிக் கொண்டு, பொழுதை கடத்திய வசுமதியாலும் அதற்கு மேல் தொடர முடியவில்லை.

நர்மதாவை நெருங்கி அமர்ந்து, அவளின் கைப் பிடித்தாள்.

“கையை விடு வசு” என்று கத்தினாள் நர்மதா.

“சாரி அண்ணி” என்ற வசுமதியும், உடைந்து அழ ஆரம்பித்தாள். சட்டென்று நர்மதாவின் அழுகை நின்றது.

“அழாத வசு. சாரி டா. உனக்கு ஏதாவது காரணம் இருந்திருக்கும். நான் தான்… வேணாம் விடு” அவளுக்குக் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கும் வசுமதி கண்ணீர் உகுக்கவும் தாங்கிக் கொள்ள முடியாது போனது. தனது மனக் கவலையைத் தூர எறிந்து விட்டு, அவளைச் சமாதானப்படுத்த முற்பட்டாள்.

“மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுக்கறீயா? ஸ்கேன் எடுத்தீங்களா? அடுத்து டாக்டர் கிட்ட எப்போ போகணும்?” கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் அவள். வசுமதியிடம் பதிலில்லை. பெயருக்கு எதையோ சொல்லி சமாளித்தாள் அவள்.

அவளைத் தோள் பற்றி இழுத்து, நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள் நர்மதா.

“நேரத்துக்குச் சாப்பிடு. உடம்பை பார்த்துக்கோ வசு. நான் அப்புறமா வர்றேன்” என்று எழுந்து கொண்டாள்.

“சாரி அண்ணி” என்றாள் மீண்டும், பதிலுக்குப் புன்னகையைப் பரிசளித்து விட்டு போனாள் நர்மதா.

அவளால் எத்தனை முயன்றும் வசுமதி தன்னை ஒதுக்கியதை, புறக்கணித்ததைச் சாதாரணமாக எடுத்து கடக்க இயலவில்லை. மனம் வலியில் துடித்து, தவித்தது.

வசுமதி வேண்டும் என்று நர்மதாவிடம் சொல்லாமல் இருக்கவில்லை. குழந்தை நாளை அவளிடம் இருக்குமா, இருக்காதா என்ற நிச்சயமே இல்லாமல் அவள் சுமந்து கொண்டிருக்கையில், எப்படி நர்மதாவிடம் சொல்வாள் அவள்? என்னவென்று சொல்வாள் அவள்? அவளிடம் வாசுவின் பிடிவாதத்தைச் சொன்னால், அவளால் தாங்கிக் கொள்ள முடியுமா?

அவளுக்குச் சரியான காரணங்கள் இருந்தது. ஆனால், இன்று அதனால் நர்மதா காயப்பட்டுப் போனதை அவளால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே இயலவில்லை. அத்தனையும் சேர்ந்து வாசுவின் மேல் கோபமாகத் திரும்பியது.

“சாப்பிடலாம். வா, வசும்மா” என்ற கணவனின் குரலில் கலைந்து நிமிர்ந்தாள் வசுமதி. அவன் வீட்டிற்குள் வந்ததைக் கூட அவள் கவனித்திருக்கவில்லை.

“ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?” என்று அவன் வினவ, அவனை எரித்து விடுவதைப் போல் முறைத்தாள் அவள்.

வேதனை, கோபம், வெறுப்பு என நொடியில் அத்தனை உணர்ச்சிகளையும் மாறி மாறிப் பிரதிபலித்தது அவள் முகம்.

மெல்ல எழுந்து அவனருகில் சென்றவள், கொத்தாக அவனது சட்டையைப் பிடித்தாள்.

“அண்ணிக்கு விஷயம் எப்படித் தெரியும்?” என்று அவன் கண்களைப் பார்த்து கேட்டாள்.

“என்ன கேட்கற? புரியல?” என்றவன், “மேல இருந்து கையை எடு முதல்ல, இதென்ன புதுப் பழக்கம்” அவனுக்கும் கோபம் துளிர்க்க ஆரம்பித்தது.

“நான் கர்ப்பமா இருக்கறது அண்ணிக்கு எப்படித் தெரியும்? என்கிட்ட சண்டை போட்டுட்டு போறாங்க. எல்லாம் உங்களால…” கத்தினாள்.

“நரேன் மாம்ஸ், அம்மாவை பார்த்தேன். அப்போ பேச்சு வாக்குல சொல்லிட்டேன்” சாதாரணமாகச் சொன்னான்.

நரேன் மெஸேஜ் செய்து அழைத்த பின்னரும் அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை வசுமதி. சரஸ்வதி அம்மாவையும் முடிந்த வரை தவிர்த்தாள். ஆனால், கணவனோ நான் அவர்களிடம் சொல்லி விட்டேன் என்று வெகு இயல்பாகக் கூற, அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“அவங்களோட ஏன் நிறுத்தினீங்க? போய் ஊரெல்லாம் சொல்ல வேண்டியது தானே? என் பொண்டாட்டி மாசமா இருக்கா. ஆனா, அதை நான் அழிக்கப் போறேன்னு… என்ன மனுஷன் நீங்க?”

“இல்ல வசும்மா.. குழந்தை..”

“வாயை மூடுங்க. நீங்க என் வாழ்க்கையில் வர்றதுக்கு முன்னாடி எனக்கு இந்த ஊரில் எல்லாமா இருந்தது அவங்க தான். அவங்க தினம் தினம் ஏங்கின ஒரு விஷயம்னா, அது குழந்தை தான். அவங்க கிட்ட போய் நான் எப்படிச் சொல்வேன். கருவை கலைக்கப் போறேன்னு. சொல்லுங்க” அவனது சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

“இல்ல டா, நான் மனசை…”

“உங்க மனசு மண்ணாங்கட்டி…”

“என்னைப் பேச விடேன் வசு..” கெஞ்சினான்.

“நீங்க பேசினது எல்லாம் போதும். இனி ஒரு வார்த்தை கூட நீங்க பேசக் கூடாது”

“என்ன தான் சொல்ல வர்றேன்னு கேளேன்…”

“முடியாது. முடியவே முடியாது. என்னை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க பாருங்க. சந்தோசமா உங்களுக்கு? என் வாழ்க்கையே தலைகீழாக மாத்தி, நரகமாக்கீட்டீங்க.” அவளையும் மீறி வழிந்த கண்ணீர் கன்னம் தொட்டது.

“இல்லடா வசு. என்ன மன்னிச்சிடு, ஏதோ தெரியாம அப்படிச் சொல்லிட்டேன். எனக்குப் புத்தி கெட்டுப் போச்சு. நம்ம குழந்தை இருக்கட்….” அவனை முடிக்க விடவில்லை அவள்.

“உங்களை இதுக்கு நான் என்னைக்கும் மன்னிக்க மாட்டேன். குழந்தையை அழிக்க நினைச்ச உங்களுக்கு அதைப் பத்தி பேச எந்த அருகதையும் கிடையாது. நம்ம குழந்தையாம் இதுல. பெருசா சொல்ல வந்திட்டார்”

அவன் விழிகளை நேராகப் பார்த்து சொன்னாள்.

கண்ணைச் சுருக்கி அவளைப் பார்த்த வாசு, “என்னைப் பேசவே விட மாட்டியா நீ? என்ன சொல்ல வர்றேன்னு முழுசா கேட்டுட்டு…” இம்முறையும் அவனை முடிக்க விடவில்லை அவள்.

“உங்களை முதல் முதலில் சந்திச்ச அந்த மழை நாளை நான் முழுதாக வெறுக்கறேன் வாசு. நீங்க பேசுறதை கேட்க விரும்பாத நாள் விரைவில் வரும்னு நான் நினைச்சு கூடப் பார்த்தது இல்ல. பிளீஸ் பேசாதீங்க. என்னால இதுக்கு மேல எதையும் தாங்கிக்க முடியாது” அந்த வார்த்தைகள் அவனது மனதை உடைக்க, பட்டென்று கண்களை மூடினான் வாசு. அவனாலும் அதற்கு மேல் மனைவியுடன் போராட முடியவில்லை.

கணவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்கவே தயாராக இல்லாதவளிடம், அவன் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வீண் என்று அவனுக்குப் புரிந்தது. அவளாகப் புரிந்து கொண்டு தன்னிடம் வரட்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.

“சாரி..” என்றான். அனைத்திற்கும் சேர்த்து மன்னிப்பை ஒற்றை வார்த்தையில் வைத்தான்.

“யா, யூ ஷூட் ஃபீல் சாரி. உட்கார்ந்து அழுங்க” என்று அவனது சட்டையை உதறியவள், தேடிப் பிடித்து அவளது கார் கீயை எடுத்தாள்.

கண்ணை மூடித் திறப்பதற்குள் வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள். பார்க்கிங்கில் அவளது காரை தேடி அமர்ந்தாள். அவள் கார் என்ன அவள் கார்? அது நரேனின் கார். புதிதாக ஒன்றை வாங்கவும், பழைய காரை அவளுக்குக் கொடுத்திருந்தான். அவளுக்காக எல்லாம் செய்தவர்களுக்கு, அவள் பதிலாக என்ன செய்து விட்டாள்? மிக மோசமாக அவர்களது மனதை உடைத்ததைத் தவிர…

இரண்டு மாதங்களாக வாசுவின் காரையே எல்லாவற்றிக்கும் எடுத்து, அவளது கார் தொடப்படாமலேயே இருந்தது. காரை ஆன் செய்து சிறிது நேரம் ஓட விட்டாள்.

அடித்துப் பிடித்து ஓடி வந்து, அவள் முன் மூச்சு வாங்க நின்றிருந்தான் வாசு.

“ஓபன் தே டோர் வசு. நானும் வர்றேன்” என்று காரின் கண்ணாடியை தட்டினான்.

“உங்ககிட்ட இருந்து விலகி போகனும்னு தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். இதுல உங்களையும் கூட்டிட்டு போகணுமா?” பல்லைக் கடித்தபடி கத்தினாள்.

அவன் கண்கள் தன்னிச்சையாகக் கலங்கியது.

“உன்னால இந்நேரம் காரை சரியா ஓட்ட முடியாது வசும்மா. வேணாம், வீட்டுக்கு வா” அவனது கெஞ்சலை பொருட்படுத்தாமல் பார்வையை நேராகப் பதித்து எதிரில் இருந்த கார்களை வெறித்திருந்தாள் அவள்.

“வசு.. பிளீஸ்.. வசும்மா.. கதவைத் திற.. கீழ இறங்கு”

“நான் போகத் தான் போறேன். முடிஞ்சா தடுத்து பாருங்க”

“ஓகே, சரி. கவனமா ஓட்டு. ஸ்பீட் லிமிட்ஸ் பார்த்து போ” என்று கவலையுடன் எச்சரித்தான் அவன்.

“ஓ, யூ டோண்ட் வொர்ரி. ஸ்பீட் லிமிட் தாண்டினா என்ன? பைன் தானே போடுவாங்க?. கட்டுறதுக்கு என்கிட்ட காசு இருக்கு. சிலரைப் போல.. சொந்த புள்ளைக்குச் செலவு பண்ண காசு இல்லாதது போல் இல்ல. பை” அவன் அதிர்ந்து நிற்கையிலயே சக்கரங்கள் சத்தம் எழுப்ப, அவனைச் சுற்றி ஒரு வட்டமடித்து, காரை வேகமாக ஓட்டிக் கொண்டு போனாள் வசுமதி.

அவமானத்தில், அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான் வாசுதேவன். வசுமதியிடம் இப்படி ஒரு முகத்தை எதிர்பார்க்கவில்லை அவன். ஆனால், அவளை இந்நிலைக்குத் தள்ளியதும் தான், தான் என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது.

error: Content is protected !!
Scroll to Top