அன்றைய இரவிற்குப் பின் சற்றே மாறுதலைக் கண்டிருந்தது அவர்களது உறவு. முன்பு போலக் கணவனிடம் முகம் திருப்பவில்லை அவள். ஆனாலும், மனம் விட்டு பேசவும் இல்லை. அவனைப் பேச விடவுமில்லை.
இன்னும் அவளுக்குச் சாதகமான எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை வாசு. இருவரும் பல நாட்கள் கழித்து இப்போது தான், கொஞ்சம் நெருங்கி வந்திருந்தார்கள்.
வசுமதி நேரம் செட் செய்யப்பட வெடிக் குண்டில் அமர்ந்திருப்பது போன்றே நாட்களைப் பயத்துடனே கடத்தினாள். மூன்றாம் மாதத்தை வெற்றிகரமாகக் கடந்து விட்டால், அதன் பின் கணவனால் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம் அவளுக்கு. அதனால், அவனிடம் பேசுவதை அறவே தவிர்த்தாள் அவள்.
அலுவகத்தில் இருந்து வந்ததும் சோர்வாக உணர்ந்தவள், நேராகச் சென்று படுக்கையில் விழுந்தாள்.
நல்ல உறக்கத்தில் இருந்தவளை எழுப்ப மனம் வரவில்லை வாசுவிற்கு, ஆனாலும் தவிர்க்க இயலாமல், “வசும்மா..” என்று அவள் தோள் தொட்டு உலுக்கினான்.
“சூப்பர் மார்க்கெட் வரைக்கும் போறேன். பத்திருபது நிமிஷத்தில் வந்திடுவேன். எழுந்து குளியேன். நான் வந்ததும் சாப்பிடலாம்” என்றான்.
“ஹ்ம்ம் ஓகே” என்று எழுந்துக் கொண்டாள் வசுமதி.
“இந்தா ஆ-காட்டு” என்ற மாமியாரை விநோதமாகப் பார்த்தாள் நர்மதா. அவரின் கையில் இருந்த ஸ்பூனில் வசுமதிக்கு மிகவும் பிடித்த காசி அல்வா.
“என்ன விசேஷம் அத்த?” கேட்டவளின் வாயில் அல்வாவை திணித்தார் அவர்.
“எல்லாம் நல்ல செய்தி தான். நீ சொல்லாட்டி எனக்குத் தெரிய வராதுன்னு நினைச்சியா? உனக்கு என் மேல இன்னும் கோபம் போகலையா நர்மதா?” என்றபடி, கையில் இருந்த கிண்ணத்தை அவளின் கையில் திணித்தார் அவர்.
வசுமதியும், நர்மதாவும் வேறுபடும் ஒரே விஷயம் இந்த இனிப்பு தான். வசுமதிக்கு இனிப்பு என்றால் பெரிதாகப் பிடித்தம் இல்லை. அவளுக்கு இனிப்பு வகைகள் சூடாக, தித்திப்பு குறைவாக இருக்க வேண்டும். ஆனால், நர்மதா எப்படி இருந்தாலும் விழுங்கி விடுவாள். இனிப்பு வகை என்றால் அத்தனை பிரியம். கையில் இருந்த அல்வாவும் வசுமதிக்குப் பிடித்தது போல, இளம் சூட்டில், மிதமான இனிப்புச் சுவையுடன் இருந்தது.
ஆனால், நர்மதாவிற்கு அத்தை ஊட்டிய அல்வாவே திகட்டுவது போலிருந்தது. ஏனோ, உண்ண பிடிக்காமல் கிண்ணத்தை ஓரமாக வைத்தவள், “எனக்கு உங்க மேல கோபம் எல்லாம் இல்லத்த. ஆமா, நான் என்ன சொல்லாம மறைச்சேன்?” என்று குழப்பத்துடன் கேட்டாள்.
“பாரேன். இப்பவும் எப்படி மறைக்கிற. என்கிட்ட சொல்லலாம் டா. என் புள்ளையை நானே கண்ணு வைப்பனா?” என்று அங்கலாய்த்தவர், “சூர்யா வீட்டுக்கு போகாம இங்கேயே இருந்து புள்ளைய கவனிச்சு இருப்பேன். தலைப் பிள்ளை. நாம பார்க்காட்டி யார் பார்ப்பா? இந்த ஊரில் அவங்களுக்கும் வேற யார் இருக்கா? அவங்க வீட்ல இருந்து துணைக்கு யாராவது வர்ற வரைக்கும் நாம தானே பார்த்துக்கணும்” சொல்லிக் கொண்டே போனார் சரஸ்வதி.
நர்மதாவிற்கு அவர் சொல்வதில் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.
“இந்தா, இதைக் கொண்டு போய் வசுமதிக்கு கொடுத்துட்டு வா. நான் காலையில போய்ப் பார்க்கறேன். இப்போ போனா சரியா இருக்காது. இப்பவே சூடா சாப்பிட சொல்லு.” என்றார்.
“என்ன திடீர்னு அவளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு?” என்று புருவங்களைச் சுருக்கினாள் நர்மதா.
“வசுமதி மாசமா இருக்கா, ரெண்டு மாசம் முடிஞ்சு போச்சுன்னு நீ சொல்லாததுக்கே உன்னை உதைக்கணும் நான். இதுல நின்னு கேள்வியா கேட்டுட்டு இருக்க? ஓடிப் போய்க் குடுத்துட்டு வா. வந்து நீயும் சூடா சாப்பிடுவ” என்று அவளின் கன்னத்தில் தட்டி விட்டு கிட்சனிற்குள் சென்று மறைந்தார் அவர்.
காதில் விழுந்த செய்தியின் அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள இயலாமல், பொத்தென்று சோஃபாவில் அமர்ந்தாள் நர்மதா.
‘வசுமதி இஸ் பிரக்னன்ட்.’ ஆனந்தப் பெருக்கில் மனம் நிறைந்து போக, கண்கள் தாமாகக் கண்ணீரை சுரக்கத் தொடங்கின. உடனே ஓடிப் போய் அவளை இறுக்கி கொள்ள வேண்டும் போலிருந்தது. பட்டென்று எழுந்து நின்றவள் நிதானித்தாள்.
‘வசுமதி… அத்தையின் காதுக்கு வந்த விஷயம். அவளுக்கு ஏன் சொல்லப்படவில்லை?’ கேள்விகள் முளைத்துச் சஞ்சலத்தை எழுப்பின.
‘ஏன், என்னிடம் இருந்து மறைத்தாள்? ரெண்டு மாசம் முடிந்ததா? இருக்கும். முழுதாக இரண்டு வாரங்கள் என்னிடம் சொல்லாமல், ஒருவேளை சொல்ல விரும்பவில்லையோ?’
அவளுக்குக் கண்கள் மளுக்கென்று குளம் கட்டியது. வசுமதியிடம் அவள் இதை எதிர்பார்க்கவில்லை. அவள் வாழ்வின் மிக முக்கியமான, மகிழ்ச்சிகரமான செய்தியை தன்னிடம் பகிர முடியாத அளவிற்கா நான் தாழ்ந்து போனேன்? வார்த்தைகளில் வடிக்க முடியா உணர்ச்சிகள் அவளை அலைக்கழித்தது.
“நர்மதா இன்னும் போகலையா நீ? தூங்கிட போறாங்க மா” அறைக்குள் இருந்து சத்தம் மட்டும் வந்தது.
முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு வசுமதியின் ஃபிளாட்டை நோக்கி நடந்தாள் நர்மதா. கால்கள் காரணமற்று பின்னியது.
அழைப்பு மணியை அழுத்தினாள். உறக்கம் சுமந்த விழிகளுடன் கதவைத் திறந்தாள் வசுமதி.
“வாங்க அண்ணி. எப்படி இருக்கீங்க?”
அவள் முகத்தை ஆராய்ச்சியாய் பார்த்தாள் நர்மதா. உடல் மெலிந்து, முகம் சோர்ந்து இருந்தது. ஆனால், அத்தனையும் மீறி முகத்தில் தனியொரு பளபளப்பு. அழகு கூடி தெரிந்தாள் வசுமதி.
ஆக, அன்றைக்கு என் கணிப்புச் சரியாகத் தான் இருந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் நர்மதா.