“நரேன்… இங்க பாருங்க” கிசுகிசுப்பாக அழைத்து, கிளுக்கி சிரித்தாள் நர்மதா.
“நம்மு, அம்மா கத்திக்கிட்டு இருக்காங்க. நீ என்னன்னா சிரிச்சுட்டு இருக்க, அவங்களைக் கடுப்பேத்தாத…” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கண்டித்தான். பதிலுக்கு நாக்கை துருத்தி காட்டினாள் நர்மதா.
“ம்ப்ச், நீங்க வேற… இதெல்லாம் நமக்கென்ன புதுசா? ஐயோ, இப்படிச் சொல்றாங்களேன்னு கண்ணைக் கசக்க… கேட்டு கேட்டு பழகிப் போச்சு..” உதடு சுளித்தாள். அவனது கண்கள் தன்னிச்சையாக அவளது இதழில் பதிய,
“ஹி.. ஹி நரேன், பார்வையை அந்தப் பக்கம் திருப்புங்க. உங்கம்மா நம்மை முறைக்கறாங்க” அவன் பக்கமாகச் சாய்ந்து, அவன் காதில் கிசுகிசுத்தாள்.
“மனுஷனை சோதிக்கறதே உனக்கு வேலையாப் போச்சு.” சலித்துக் கொண்டான் அவன்.
“அம்மா, போதும் மா. எத்தனை நாளைக்கு இப்படிச் சொன்னதையே சொல்லிட்டு இருப்பீங்க. எங்களுக்கு மட்டும் குழந்தை ஆசை இல்லையா? நாங்க என்ன வேணும்னா குழந்தை பெத்துக்காம இருக்கோம்? எங்களுக்கு என்ன குறை? ஒன்னும் கிடையாது. ஆனாலும், எத்தனை டாக்டர் பார்த்துட்டோம். எவ்வளவு ட்ரீட்மெண்ட் எடுத்தாச்சு. எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படிப் பேசினா நல்லாவா இருக்கு?” என்று கோபமாகக் கேட்டான் நரேன். அவன் அப்படிக் கேட்பான் என்று எதிர்பார்க்காத சரஸ்வதி அவனை அதிர்ச்சியாய் பார்த்தார்.
“இல்லடா…” என்றவரை கை நீட்டி தடுத்தவன்,
“இப்படிக் கேட்டு, நீங்க அவளை மட்டும் அசிங்கப்படுத்தல, உங்க புள்ளை என்னையும் சேர்த்து தான்…”
“ஏங்க, என்ன சொல்றான் பாருங்க. நான் அசிங்கப்படுத்துறேனாம். எப்படிப் பேசறான் பாருங்க. இப்பவும் வாயை மூடிட்டு நீங்க இருந்தா..”
“வாயை மூடு சரசு. நானும் பார்த்துட்டே இருக்கேன். இஷ்டத்துக்குப் பேசிட்டே இருக்க நீ..” என்று இரைந்தார் நரேனின் அப்பா. சாது மிரண்டதும், சட்டென்று வீடே அமைதியாகியது. அறையில் இருந்த மற்ற மூவரின் கண்களும் அவரை வெவ்வேறு உணர்வுகளுடன் வெறித்தது.
“என்ன உனக்குப் பழசு எல்லாம் மறந்து போச்சா?” என்ற அவரின் அடுத்தக் கேள்வியில் சரஸ்வதியின் தலைத் தானாகத் தரையைப் பார்த்தது.
“நான் வேணா ஞாபகப்படுத்தவா?” என்று கோபமாகக் கேட்டவர், “நமக்குக் கல்யாணமாகி எட்டு வருஷம் கழிச்சு தான் நரேன் பொறந்தான். அப்போ நீ எத்தனை பேச்சு வாங்கி இருப்ப? நான் எவ்வளவு அசிங்கப்பட்டு இருப்பேன்? உன் புள்ளை வளர்ந்து வந்ததும், உனக்கு அதுக்காகப் பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போச்சு போலச் சரசு. நானும் எவ்வளவோ பொறுத்துப் பார்த்தேன். ஆனா, நீ மாறவேயில்ல. என்னைக்கு இருந்தாலும் நர்மதா தான் நம்ம மூத்த மருமக. நரேனுக்கு அவ ரொம்ப முக்கியம். அதை இனி மனசில் வச்சுகிட்டு பேசு. உன்னால அவளுக்கு அனுசரணையா பேச முடியாட்டியும் பரவாயில்ல. ஆனா, இப்படி அவளை வார்த்தையால வதைச்சுட்டே இருக்காத” படபடவெனக் கொட்டித் தீர்த்தவர், அவர்களின் அறையை நோக்கி நடந்தார். ஆனால், மனைவியின் அழுகுரல் அவரைத் தடுத்து நிறுத்தியது.
“எனக்கு மட்டும் வில்லியாக ஆசையா என்ன? நர்மதாவை என்னைக்கு நான் நரேனோட பொண்டாட்டியா நடத்தி இருக்கேன். என் சொந்த மகளைப் போலத் தான் நடத்தினேன். அப்போலாம் யாராவது, ஏதாவது சொன்னீங்களா?” என்றவரின் பார்வை மகனையும், கணவரையும் குற்றம் சுமத்தியது.
“எல்லோரும் அவளைத் தாங்கினீங்க. அப்புறம் அவளுக்கு எப்படிக் குழந்தை ஆசை வரும்? அது வரும் போது வரட்டும்னு இருந்துடுவான்னு தான், நான் அப்படி அவளை….” அதற்கு மேல் கேட்க முடியாமல் சோஃபாவில் இருந்து பட்டென்று எழுந்து, அறைக்குள் நுழைந்து கதவடைத்தாள் நர்மதா.
அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. திருமணமான புதிதில் அளவில்லா பாசத்தைக் காட்டிய மாமியார், சட்டென்று கடின முகம் காட்டியதும், அதைக் தாங்கிக் கொள்ள முடியாமல், எத்தனை நாட்கள் மௌனமாய்க் கண்ணீர் வடித்திருக்கிறாள். ஆனால், அதுவும் தன் நலன் கருதி தான் என்னும் போது, அவளுக்கு அதை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை.
“நம்மு..” அவள் தோள் பற்றி இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்தான் நரேன்.
“சாரி. இத்தனை நாள், நான் அத்தையை ரொம்பத் தப்பா புரிஞ்சுக்கிட்டு.. அவங்களை ரொம்பப் பேசி இருக்கேன், இல்ல?” என்றாள் குற்ற உணர்ச்சியுடன்,
“விடு நம்மு, நீ என்ன தெரிஞ்சா பண்ண? அவங்க பேசினாங்க. பதிலுக்கு நீ அப்செட்டான. அவ்வளவு தான். ஃப்ரீயா விடு” என்றான் அவன்.
“ம்ம்ம்” என்றவள், “ஆமா, உங்கம்மா, அப்பா ஹிஸ்டரியை நீங்க ஏன் என்கிட்ட சொல்லவேயில்லை?” என்று அவள் கேட்க, “ஏய் எனக்குத் தெரியவே தெரியாது நம்மு. இன்னைக்கு அப்பா சொல்லித் தான் தெரியும்” பதற்றத்துடன் சொன்னான் நரேன்.
அவளது கண்கள் சுருங்கியது, அவன் சொன்னதை நம்பவில்லை என்றது அவள் பார்வை.
“பொய் சொல்றீங்க தானே? பிராடு..”
“இல்ல நம்மு. பிளீஸ் என்னை நம்பு”
“ஓகே, நரேன். உங்களை நம்பறேன். ஆனா, என்கிட்ட இருந்து எதையும் மறைக்காதீங்க. எனக்குப் பொல்லாத கோபம் வரும். சொல்லிட்டேன். உங்களைக் கொன்னே போடுவேன்.” தீவிரமாக மிரட்டினாள். மனைவியைப் பற்றி அறியாதவனா நரேன், அவளது மனநிம்மதி மட்டுமே அவனுக்கு முக்கியம். அதற்காக அவன் எதையும் செய்வான் எனும் போது ஒரு சிறு பொய் சொல்வதில் என்ன ஆகி விடப் போகிறது என்ற எண்ணத்துடன், அவள் கன்னம் பற்றி, “எதையும் மறைக்க மாட்டேன் நம்மு. ஓகே?” என்றான்.
மெல்ல புன்னகையில் விரிந்தது அவளது இதழ்கள்.
“அம்மா வசுவை பார்க்கணும்னு சொன்னாங்க. அவளுக்கு வீட்டுக்கு வரச் சொல்லி மெஸேஜ் அனுப்பணும்.” என்றபடி நகர்ந்து, அவனது மொபைலை தேடி எடுத்தான் நரேன்.
“நானும் கூடத் தான் பார்க்கணும்னு சொன்னேன். நீங்க கூட்டிட்டு போகவேயில்ல” கோபமாக அலுத்துக் கொண்டாள்.
“ஐயோ நம்மு, உன்னோட, என்னால முடியல. ஒரு நிமிஷம் ஆகுமா அவ வீட்டுக்கு போக, போய்க் காலிங் பெல் அடிச்சு பார்த்திட்டு வா” என்றான், மொபைலில் செய்தியை டைப் செய்து கொண்டே, “நீங்க இப்படித் தான் சொல்வீங்கன்னு, எனக்குத் தெரியும்” கோபமாகப் போய்ப் படுக்கையில் விழுந்தாள்.
“புதுசா கல்யாணம் ஆனவங்க. சும்மா போய், போய் அவங்களைத் தொந்தரவு பண்ண சங்கடமா இருக்கு. அதுவும் வேலைக்குப் போய்ட்டு டயர்டா வர்றவங்களை… எப்படித் தொல்லை செய்யறது?” என்றாள் விட்டத்தைப் பார்த்தபடி.
“ஹ்ம்ம் தெரியுது இல்ல, அப்போ பேசாம இரு. இந்த வீக் எண்ட்ல போய்ப் பார்க்கலாம்” என்றான் நரேன், அவளைச் சமாதானப் படுத்தும் நோக்கில், சம்மதமாகத் தலையசைத்தாள் நர்மதா.
மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருக்க, உறக்கம் அவளை விட்டு எட்டியே நின்றதால் படுக்கையில் புரண்டு கொண்டே இருந்தாள் வசுமதி. பல நாட்களுக்குப் பின்னான கணவனின் முத்தம் மனதை மயிலிறகால் வருட, மனம் லேசாக உணர தொடங்கியது. மீண்டும் அவள் கவனமாகப் புரண்டு படுக்க, அனிச்சையாய் நீண்ட வாசுவின் கரங்கள் அவளைத் தன்னோடு இறுக்கியது.
அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கண் மூடினாள் வசுமதி. அந்நேரம் அவளது மொபைல் ஒலியெழுப்ப எட்டி, கை நீட்டி மொபைலை எடுத்தாள்.
“எப்படி இருக்க டா வசு? வாசு எப்படி இருக்கார்? அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொல்றாங்க. நாளைக்கு முடிஞ்சா ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க” என்றது நரேனின் குறுஞ்செய்தி.
“சரிங்க அண்ணா” என்று பதில் அனுப்பி, மொபைலை ஓரமாக வைத்தாள்.
‘அங்கே நர்மதா இருப்பாளே, அவளை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்?’ அவள் மனதில் இனம் புரியாத பயம் பரவியது.
‘நர்மதாவிடம் இருந்து உண்மையை எத்தனை நாட்களுக்கு மறைக்க முடியும்? உண்மை தெரிந்தால், என்ன செய்வாள் அவள்?’
“ரொம்ப யோசிக்காம, தூங்கு வசும்மா. நாளைக்கு ஆபீஸ் இருக்கு” என்ற கணவனின் குரலில், கேள்விகள் எல்லாம் பின்னுக்குப் போக, தூங்கிப் போனாள் வசுமதி.