பூமரப் பாவைகள் – 22 (1)

“நரேன், வீட்ல வெட்டியா இருக்கப் போர் அடிக்குது. வேலைக்குப் போகவா?” என்றாள் நர்மதா.

“என்ன கேள்வி இது நம்மு?” என்றான் சிரித்துக் கொண்டே,

“நீங்க ஏன் சிரிக்கறீங்கன்னு எனக்குத் தெரியும். வேலையை விடும் போது என்னைக் கேட்டா விட்டன்னு தானே?”

“ச்சே, ச்சே இல்ல நம்மு. இதெல்லாம் உன் விருப்பம் டா. நான் என்னைக்குத் தலையிட்டு இருக்கேன். உனக்கு என்ன தோணுதோ. அதைச் செய்” என்றான் நரேன்.

“ம்ம்ம், ஓகே” என்றவள், சிறிது யோசனைக்குப் பின், “இந்த வசு பொண்ணு என்ன ஆனா? ஆளையே காணோம். ஃபோன் பண்ணா ஒழுங்கா பேசுறது இல்ல. மெஸேஜ் அனுப்பினா பார்க்கிறது இல்ல. அவளைப் பார்த்து ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு. உண்மையாவே வாசுக்கு நாம அங்க போறது பிடிக்கலையோ?” என்று வருத்தத்துடன் புலம்பினாள் அவள்.

“வாசு சொல்றதை எல்லாம் பெருசா எடுத்துக்காத, அவன் சும்மா விளையாட்டுக்குச் சொன்னது நம்மு. ரெண்டு பேரும் ஏதாவது வேலையா இருப்பாங்க டா. இல்லனா நம்ம வீட்டுக்கு வராம இருப்பாளா வசு சொல்லு?”

“ஹ்ம்ம், முன்னாடி நினைச்ச நேரத்தில அவ வீட்ல இருக்கலாம். நம்ம கையில இருக்கச் சாவியைப் போட்டு திறந்து அவ ஃபிளாட்க்குள்ள போய்டுவேன். ஆனா, இப்போ அப்படிப் போக முடியாதே. மேடமுக்குக் கல்யாணம் ஆகிடுச்சே” நரேனை பார்த்து கண்ணடித்து, கிளுக்கி சிரித்தாள்.

“உன்னோட… முடியல” போலியாகச் சலித்துக் கொண்டான் நரேன்.

“நான் வசுவை பார்த்தேன்” அவன் சொல்லி முடிப்பதற்குள், திரும்பி அவனை முறைத்து, “எப்போ?” என்று இடையிட்டு கத்தினாள் நர்மதா.

“ஷ்ஷ் பப்ளிக்ல இருக்கோம் நம்மு. ஏன் இப்படிக் கத்துற?”

“பின்ன கத்தாம என்ன பண்ணுவாங்க. என்னை அவோய்ட் பண்ணிட்டு உங்க தங்கச்சி உங்களை மட்டும் பார்த்திருக்கா?” என்று கண்களை உருட்டினாள் அவள்.

“அச்சோ, நான் பார்த்தேன்னு தானே சொன்னேன்?”

“ஓ..”

“ஆமா, ஓ தான். அவ ஆபீஸுக்கு போய் இருந்தேன். மேடமுக்கு புரோமோஷன் கிடைச்சு இருக்கு. அதான், இப்போ வேலைல பிஸி அவங்க.” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் பொரியத் தொடங்கினாள் அவள்.

“என்ன சொல்றீங்க நரேன்? பாருங்களேன். அந்தக் குட்டி பிசாசு என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லல. அவ்ளோ பெரிய ஆளாயிட்டாளா அவ?” என்றவள் தொடர்ந்து, “ஆனாலும், சந்தோசமா இருக்கு நரேன். ஐ அம் வெரி ஹேப்பி ஃபார் ஹெர்” என்றாள்.

“கத்தாத, இதுக்குத் தான் நான் உன்கிட்ட முதல்லயே சொல்லல. அதுவும் இல்லாம, இது வசு வந்து உன்கிட்ட சொல்ல வேண்டிய விஷயம். அவ வந்து சொன்னா நீ இன்னும் சந்தோசப்படுவ இல்ல?” என்று அவன் புருவங்களை உயர்த்த,

“ம்ம்ம் ஆமா தான். ஆனா, இட்ஸ் ஓகே. அவ பிஸியா இருப்பா, அவளே வந்து சொல்லும் போது சொல்லட்டும். நீங்க அவளை எப்போ பார்த்தீங்கன்னு சொல்லுங்க.” நடந்து கொண்டே கேட்டாள்.

கணவன், மனைவி இருவரும் கோவிலுக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

“இன்னைக்கு அவ ஆபீஸுக்கு போய் இருந்தேன்”

“எதுக்கு?”

“என்னோட கிளையண்ட் ஒருத்தர் இன்வெஸ்ட்மென்ட் போர்ட்ஃபோலியோ கிரியேட் பண்ணனும். உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல கம்பெனி ஏதாவது இருந்தா ரெஃபேர் பண்ணுங்கனு சொன்னார். சோ, வசு கிட்ட கூட்டிட்டு போனேன்” என்றான் அவன்.

“ஓகே, ஓகே. எப்படி இருக்காங்க உங்க தங்கச்சி?” என்று அவள் கிண்டலாகக் கேட்க,

“என்ன நம்மு நீ, சும்மா அவ மேல கோபப்படாத. அவ பாவம், ஒரு மாதிரி ஆளே சரியில்ல. என்னால சரியா சொல்லத் தெரியல. பட், சம்திங் இஸ் ராங். ரொம்ப டல்லடிச்சா. என்னனு கேட்டேன், அப்போ தான் புராமோஷன் பத்தி சொன்னா. வேலை அதிகம் போல, சமாளிக்க முடியலைன்னு புலம்பினா”

“ஹ்ம்ம், கொஞ்ச நாள் அப்படித் தான் இருக்கும். அப்புறம் எல்லாத்தையும் லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணுவா பாருங்க” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் நர்மதா.

“ஆனாலும், நான் அவ மேல செம்ம கோபத்துல இருக்கேன். வசு என் கையில மாட்டட்டும் அப்போ இருக்கு அவளுக்கு. இந்த வாசு கூடச் சொல்லலை பாருங்களேன். ட்ரீட் கேட்டுடுவோம்னு பயந்துட்டார் போல, வெயிட் பண்ணுங்க ரெண்டு பேரும். பெரிய பில் போடுறேன்”

பல்லைக் கடித்தபடி வாய்க்குள்ளே முணுமுணுத்தாள் நர்மதா. கையில் இருந்த மொபைலில் வசுமதியின் எண்ணை தேடி எடுத்து மெஸேஜ் அனுப்பினாள்.

வசுமதி தன் இருக்கையில் அமர்ந்தவாறே திரும்பி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அலுவலகம் பிரதான சாலையில் அமைந்திருந்ததால் வாகனங்களின் இரைச்சல் கண்ணாடி சுவரையும் தாண்டி அவளின் காதில் மோதியது.

ஆனால், தற்போது அவளை வாகனங்களின் இரைச்சல் தொல்லை செய்யவில்லை. ஏனெனில் இரைச்சலை விடக் கொடுமையான ஒன்று அவளது வாழ்வில் வியாபித்திருந்தது. அது அமைதி. கணவன், மனைவி இருவருக்கும் நடுவில் வந்திருந்த அமைதியும், மௌனமும் தான் கொடுமையானதாக இருந்தது.

காலம் இத்தனை இரக்கமற்றதாய் மாறி இருக்க வேண்டாம். கலகலவென்று சிரித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது பேசிக் கொள்வதேயில்லை.

கடந்த இரு வாரமாக வாசு எத்தனையோ முறை பேச முயற்சித்து விட்டான். அவன் எவ்வளவு முயன்றாலும் அவனுக்குச் செவி சாய்க்கவில்லை வசுமதி. அவனைத் தவிர்க்க அவளால் என்னவெல்லாம் முடியுமோ, அத்தனையையும் செய்தாள். காதை இறுக மூடிக் கொண்டாள். அறையில் நிறைந்திருந்த இசையின் அளவை வேண்டுமென்றே கூட்டி வைத்தாள். டிவியை அலற விட்டாள், இல்லையென்றால் பால்கனிக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அவனது எல்லா வழிகளும் தோல்வியில் சென்று முடிய, தன் முயற்சியைக் கை விட்டு விட்டான் வாசு.

இருவரின் வாழ்க்கையும் இயந்திர கதியில் இயங்கியது. காலையில் அலுவலகம் செல்வதும், மாலையில் வீடு நுழைந்ததும் ஆளுக்கொரு மூலையில் முடங்குவதுமாக அவர்களின் நாட்கள் சொல்லி வைத்ததைப் போல நகர்ந்தது.

வாசுவிடம் பெரிதாக மாற்றம் ஒன்றுமில்லை. எப்போதும் போல, மனைவியைப் பார்த்துக் கொண்டான். காலையில் அவளை அலுவலகத்தில் கொண்டு விடுவதும், மாலையில் சென்று அழைத்து வருவதையும் நிறுத்தவில்லை.

வீடு வந்த பின்னர் அனைத்து வேலைகளையும் அவனே செய்தான். அவளுக்குப் பிடித்ததாகச் சமைத்தான். உணவை வற்புறுத்தி அவள் மறுக்க மறுக்க ஊட்டி விட்டான். மயக்கம், வாந்தி என்று அவள் துவளும் போதெல்லாம் தோள் கொடுத்தான், துணை நின்றான்.

மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை மீண்டும் வாங்கி வந்து வலுக்கட்டாயமாக அவளை விழுங்கச் செய்தான். அவளது மறுப்பையும், முறைப்பையும் அவன் பொருட்படுத்தவே இல்லை.

வசுமதி, கணவனைத் தவிர்க்க வேண்டுமென்றே அலுவகத்தில் இருந்து வெளியேற தினமும் தாமதமாக்கினாள். அவளுக்காக அலுக்காமல் காரில் அமர்ந்து காத்திருந்தான் வாசு.

இன்றும் அது போலவே அவன் காத்திருக்க, “எனக்கு வேலை இருக்கு, நான் முடிச்சிட்டு வரேன். நீங்க எனக்காக வெயிட் பண்ண வேண்டாம்” என்று அவனுக்கு ஒரு மெசேஜை அனுப்பி வைத்து, வேலையை விட்ட இடத்தில் இருந்து பார்க்கத் தொடங்கினாள். அப்படி ஒன்றும் தலைப் போகும் அவசர வேலை எல்லாம் இல்லை. பொறுமையாக மறுநாள் பார்த்தால் கூடப் போதும் தான். ஆனால், கணவனிடம் இருந்து தப்பிக்க அவளுக்கு, வேலை ஒரு சாக்கு. அவ்வளவு தான்.

அந்நேரம் அவளது மொபைல் ஒலியெழுப்ப யாரென்று எடுத்து பார்த்தாள். நர்மதா தான் மெஸேஜ் அனுப்பி இருந்தாள்.

“நாடார் கடைக்குப் போறேன், உனக்கு என்ன வேணும்?” என்றிருந்தது.

“எதுவும் வேண்டாம்” என்று சொன்னால் வீண் சந்தேகமும், கேள்விகளும் வரும் என்று அறிந்த காரணத்தால், “பொன்னி அரிசி, கருப்பு உளுந்து, பருப்பு பொடி, மாங்காய் தொக்கு, இதயம் நல்லெண்ணெய்” என்று லிஸ்ட்டை அனுப்பி வைத்தாள் வசுமதி.

வசுமதி, நர்மதாவை பார்த்தே பல நாட்கள் ஆகி விட்டது. தன்னால் முடிந்த வரை நரேன், நர்மதாவை தவிர்த்தாள். அவர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை. மொபைலில் அழைத்தாலும் வேலையைச் சாக்கிட்டு ஓரிரு வினாடிகள் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள். நர்மதா வீடு வந்தால், கதவை திறக்கவில்லை.

அவளது செய்கை, அவளுக்கே மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. ஆனால், அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை.

முன்னர் எப்படி ஒரே குடும்பம் போல இருந்தார்கள். ஒன்றாகச் சமைத்து, உண்டு, ஊர் சுற்றியதென்ன… ஆனால், இன்று முகம் பார்த்து பேச கூட முடியாத நிலை. அவளுக்கு இந்நிலை வந்திருக்க வேண்டாம்.

தன் மனக் கலக்கங்களை ஒதுக்கி விட்டு வேலையில் கவனம் செலுத்தினாள் வசுமதி.

அவள் கையில் இருந்த ஃபைலை பார்த்து முடித்து விட்டு நிமிர, நேரம் எட்டை கடந்திருந்தது. அவளுக்கு எப்படியோ, ஆனால் அவள் வயிற்றில் இருந்த குட்டிக்கு பசி பொறுக்கவில்லை போலும், வயிறு சப்தமெழுப்பத் தொடங்கியது.

முன்னர்க் காலை மட்டும் தொல்லை கொடுத்த வாந்தியும், அசதியும் இப்போது நாள் முழுக்க அவளைத் தாக்க தொடங்கியது. “ஏன் சோர்ந்து தெரிகிறாய்?” எனும் கேள்விக்குப் பதிலளித்தே மேலும் சோர்ந்து போனாள் அவள்.

உணவைக் கண்டாலே குமட்டியது. முன்னர் அவளுக்கு விருப்ப உணவுகளாக இருந்த அனைத்தும் இப்போது பிடிக்காத உணவாக மாறியிருந்தது.

அவள் வேலையில் இருந்தாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, அவளுக்குப் பிடித்தமான, வாய்க்கு நன்றாக இருக்கிற உணவை அலுவலகத்துக்கு ஆர்டர் செய்து அனுப்பினான். வீட்டில் அவன் கையாலேயே ஊட்டி விட்டான். அவளால் அவனைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

கணவனை நினைத்துக் கொண்டே அவள் கீழிறங்கி வந்தாள். அங்கே தனது காரில் சாய்ந்து நின்று போனில் பேசிக் கொண்டிருந்தான் வாசு. அவள் வேண்டாம் என்று மறுத்தும் அவளுக்காகக் காத்திருந்தான்.

அதில் மனம் கனிய அவன் முகம் பார்த்தாள் வசுமதி. ஓடிப் போய் இறுக கட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. இப்போதெல்லாம் அவளுக்குக் கணவனை அதிகம் தேடியது. அவன் தோள் சாய்ந்து கொள்ள, இறுக அணைத்துக் கொண்டு உறங்க, அவன் கைப் பிடித்துக் காலாற நடக்க.. ஆனால் அவளே எதிர்பாராத விதமாக வாசு அவளிடம் இருந்து விலகியே நின்றான். சொன்ன வார்த்தை தவறவில்லை அவன். அவளைத் தொடவேயில்லை. அவளுக்குத் தான் ஏமாற்றமாக இருந்தது.

அவள் வந்து நின்றதை கவனிக்காமல் போனில் மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தவனை நன்றாக முறைத்து, அவன் கையில் இருந்த கார் சாவியைப் பிடுங்கி கொண்டு போய் ஏறி அமர்ந்து காரை இயக்கினாள். ரசனையான புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு.

அவள் காரை நகர்த்த, பேசிக் கொண்டே மறுபுறம் ஏறி அமர்ந்தான்.

அடுத்தப் பத்தாம் நிமிடம் வீட்டில் இருந்தனர். வாசலில் அவர்களுக்காகக் காத்திருந்தது நர்மதா அவர்களுக்காக வாங்கி வந்திருந்த பொருட்கள். பையைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள் வசுமதி. கையில் இருந்த பையை விட, மனம் பாரமாக உணர தொடங்கியது.

அது நாள் வரை சிரிப்பு சத்தத்தையும், கொஞ்சலையும், கெஞ்சலையும், சிணுங்கலையும் மட்டுமே கேட்டுப் பழகி இருந்த அவர்களின் வீடு. இந்தப் புதிய அமைதியை தாங்கிக் கொள்ள இயலாமல் அவர்களைப் போலவே உறைந்து நின்றது.

அவள் குளித்து, முடித்து உடை மாற்றி வெளியில் வர வாசு சமையலை முடித்திருந்தான். அவன் குளிக்கச் செல்ல, பாத்திரங்களைக் கழுவி, வீட்டை ஒதுக்கினாள் வசுமதி.

வீட்டில் மற்றவை மாறினாலும், வீட்டை நிறைக்கும் இசை மட்டும் எவ்வித மாற்றத்தையும் காணாதிருந்தது.

“வாள் பிடித்து நின்றால் கூட

நெஞ்சில் உந்தன் ஊர்வலம்

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட

ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்..

என்னையே தந்தேன் உனக்காக

ஜென்மமே கொண்டேன் அதற்காக..”

வாசுவுக்கு மிகப் பிடித்தமான பாடல். பல இரவுகள் நெருக்கத்தில் இவ்வரிகளை முணுமுணுத்திருக்கிறான். அவளை அறியாமல் ஏக்கப் பெருமூச்சொன்று வெளியேறியது.

“வாய் மொழிந்த வார்த்தை யாவும்

காற்றில் போனால் நியாயமா?..”

பாடல் வரிகளைப் போலத் தான் வாழ்க்கையும் மாறிப் போனது.

அவள் விரல்கள் உணவை அளைந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், அவளது தட்டைப் பிடுங்கி ஊட்டி விட ஆரம்பித்தான்.

“வசு…” என்று மெல்ல அழைத்தான். இம்முறை அவனைத் தவிர்க்க முடியாமல், அவனது விழிகளைப் பார்த்திருந்தாள்.

“எனக்கு ஒரு வாய்ப்பு கொடு வசு. என்கிட்ட நீ பேசியே பல நாளாச்சு. இது உனக்கே சரியா இருக்கா வசு? இந்த ஒரு தடவை நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளேன் பிளீஸ். எனக்கு ஒரே ஒரு சான்ஸ், என்னை விளக்க… என் மேல கொஞ்சமாவது நம்பிக்கை வை வசும்மா. இந்த ரெண்டரை மாசத்தில் நான் அந்த அளவுக்குக் கூட என்னை உனக்கு உணர்த்தலையா? என்னை நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா?” அவனது கண்களும், வார்த்தைகளும் கெஞ்சியது.

அவளுக்கோ அவனை அடித்து நொறுக்கலாமா என்கிற அளவுக்கு ஆத்திரம் பொங்கியது. எப்படியும் அதே பழைய பல்லவியைத் தான் பாடப் போகிறான், இதில் புதிதாகக் கேட்க என்ன இருக்கப் போகிறது.

“வசும்மா..”

கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல, தன் காரியத்திலேயே குறியாய் இருக்கும் கணவனைப் பார்க்கையில் அவளுக்குக் கொலை வெறி வந்தது.

அவளது கண்களைப் பார்த்தவன்

என்ன நினைத்தானோ, அவளது மௌனத்தைக் கலைக்க விரும்பாதவனாக அவனும் அமைதியாய் உணவை மட்டும் ஊட்டினான். ஆனால், அவளால் தான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

“வாசு…” என்றாள் மெல்லிய குரலில், பட்டென்று நிமர்ந்தவனின் முகத்தில் மின்னலென ஓடி மறைந்தது மகிழ்ச்சியின் ரேகைகள்.

“சொல்லு வசும்மா” என்றான்.

“ஏன் வாசு, இந்த ஊரில எல்லாம் ஆட்டை வெட்டுறதுக்கு முன்னாடி இப்படித் தானே ஊட்டி, ஊட்டி வளர்ப்பாங்க? இல்ல? அது போலத் தான் நீங்களும்…” அதைக் கேட்டதும் அதுவரை நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்த அவனது பொறுமை காற்றில் கரைந்து போக, அவளின் தலை முடியில் கையை நுழைத்து, ஆவேசமாய் அவள் முகத்தை நிமிர்த்தி, அவளது மிச்ச வார்த்தைகளை விழுங்கினான் வாசுதேவன்.

வன்மையாய் தொடங்கிய முத்தம் நிமிடத்தில் மென்மையாய் மாறத் தொடங்கியது. கணவனின் கழுத்தை வளைத்தது வசுமதியின் கரங்கள். இதழ்களில் இருந்து விலகி, கன்னம், கழுத்து என்று பயணப்பட்ட அவனது உதடுகள் அவளது வயிற்றில் அழுத்தமாய்ப் பதிந்து விலகியது. ஏதோ ஒரு வகையில் அவளுக்கு அது ஆறுதலாகவே இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top