“இது தான் என்னோட ஃபைனல் டெசிடன் வாசு. நீங்க என்ன காரணம் சொன்னாலும் நான் இதுல இருந்து மாறப் போறதில்ல. எனக்கு இந்தக் குழந்தை வேணும். இது நம்ம அன்பில் உருவானது வாசு. உங்களுக்கு அதை அழிக்க எப்படி மனசு வருது? நான் தான் உங்களைத் தப்பா புரிஞ்சுக்கிட்டேனா? ஏன் இப்படி மாறிப் போனீங்க வாசு?” அவளையும் மீறி குரல் உடைந்தது.
“புரியாம பேசாத வசு. பிளீஸ். நீயே நல்லா யோசிச்சு…” அவன் சொல்லி முடிக்கும் முன் இடையிட்டாள் அவள்.
“என்னத்த நல்லா யோசிக்கணும்? நீங்க கொடுத்து இருக்கறது ஒரே ஒரு ஆப்ஷன் தான். இதுல என்ன முடிவை எடுக்க? உங்களுக்கே அநியாயமா தெரியலையா? குழந்தையைப் பெத்துக்க அப்பாவா துணை நிக்க முடியல. ஆனா, அழிக்க மட்டும் அப்பாவா வந்து நிப்பீங்களோ? அசிங்கமா இல்ல?”
“வசு…” கர்ஜித்தான். கோபத்தில் நடுங்கியது அவன் உடல், அருகில் இருந்த தண்ணீரை எடுத்துத் தொண்டையில் சரித்துக் கொண்டான். அப்படியே திரும்பி அவள் முகம் பார்த்து,
“இந்த அக்கவுண்ட்ஸ் கொஞ்சம் பாரு வசு. அப்புறம் நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சரி தான்” என்றான் அவன் இறுதி முடிவாக. லேப்டாப்பை அவள் புறமாக நகர்த்தி வைத்தான்.
அவளால் எதையும் பார்க்க முடியாது. எதற்கும் அவள் தயாராக இல்லை. எதுவும் அவளது முடிவை மாற்றி விடப் போவதில்லை.
“முடியாது” என்றாள் ஒற்றை வார்த்தையில்,
“வசு, ரெண்டு பேரும் ஆளுக்கொரு பக்கம் இழுத்தா, எப்படிச் சரி வரும். கொஞ்சமாவது நான் சொல்றதை…”
“நீங்க சொல்ற எதைக் கேட்கலை நான்? எப்பவும் உங்க முடிவு தானா? அப்போ, எனக்கு என்ன மரியாதை? என்னத்துக்கு என்னைக் கல்யாணம் பண்ணீங்க? இப்படிக் கொடுமை பண்ணவா?”
“சின்னப் பிள்ளை மாதிரி பேசாம, லேப்டாப்பில் இருக்க அக்கவுண்ட்ஸ்…”
“உங்க பேங்க்கர், கணக்கு பண்ற புத்தியை என்கிட்ட காட்டாதீங்க” கத்தினாள்.
“நீயும் உன் கிரைசிஸ் மேனேஜ்மென்ட் (Crisis Management) மூளையை என்கிட்ட காட்டாத! இங்க அதுக்கு எந்த அவசியமும் வரல” பதிலுக்குக் கத்தினான் அவன்.
சட்டென்று அறையை நிறைத்தது மயான அமைதி. இருவருமே அதன் பின் ஒன்றும் பேசவில்லை. ஏற்கனவே அதிகமாகப் பேசி விட்டக் காரணத்தினால் இருக்கலாம்.
அவன் சொல்ல விட்டாலும் அவளது கிரைசிஸ் மேனேஜ்மென்ட் மூளை அப்போது ஓவர் டைம் வேலை செய்து கொண்டு தானிருந்தது. எத்தனையோ நிறுவனங்களையும், தனி மனிதர்களையும் பைனான்ஸியல் கிரைசிஸில் இருந்து காப்பாற்றி இருக்கிறாள் அவள். சொந்த வாழ்க்கை ஆபத்தான சரிவை நோக்கி செல்லும் போது எப்படிக் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பாள்.
“நீங்க என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாது வாசு. எல்லா முடிவும் நீங்க தான் எடுப்பீங்கன்னா, நான் எதுக்கு இங்க தேவையில்லாம?”
தன்னைக் காயப்படுத்தும் அவனைப் பதிலுக்கு எப்படியாவது வலிக்கச் செய்து விட வேண்டும் என்று கதறியது அவள் மனம்.
அவனை வார்த்தைகளால் குதறி விடத் துடித்தது மனது. சிலையெனச் சமைந்து அவளது விழிகளைப் பார்த்திருந்தான் வாசு.
“இந்த ஆண் என்ற திமிர் உங்களுக்கு எல்லாம் எப்போ வருது வாசு? கல்யாணத்துக்கு முன்னாடியா? இல்ல தாலியை கட்டினதுமா? இல்ல பிறவியிலேயா? பொண்டாட்டியை சகமனுஷியா மதிக்கவே மாட்டீங்களா? நீங்க காலம் முழுக்க வச்சு விளையாட நாங்க என்ன மரப்பாச்சி பொம்மைகளா? நீங்க சொல்றதுக்கு எல்லாம் மண்டையை மண்டையை ஆட்டிட்டு இருக்க? என்ன கூத்து இது?” நக்கலாகச் சிரித்துக் கொண்டே கேட்டாள் அவள். வாசுவின் கண்கள் கடினமுறத் தொடங்கியது.
“கூத்துன்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. குடும்பம், வாழ்க்கைன்னு நீங்க அடிக்கற கூத்துல வர்ற வெறும் பாவைகளா, பெண்கள் நாங்க?”
“வசு, பேசாத..” அப்போது தான், அதிகமாகப் பேசத் தோன்றியது அவளுக்கு.
“உங்களுக்கு ஒன்னுத் தெரியுமா?” என்று புருவம் உயர்த்தியவள்,
“இந்தக் கூத்துக்குப் பயன்படுத்துற மரப் பாவைகள் எப்படிச் செய்வாங்க தெரியுமா வாசு? பெரும்பாலும் கல்யாண முருங்கை மரத்தால தான் மரப் பாவைகள் செய்யப்படுது.
பெண்களைப் போலவே தான். என்ன ஒரு விநோத ஒற்றுமை.” சிரிப்பொன்றை உதிர்த்தது அவளது இதழ்கள்.
“கல்யாண முருங்கை மரத்தை நீரில் ஊற விட்டு, நிழலில் உலர்த்தி, கண், காது, மூக்குன்னு ஒவ்வொரு உறுப்பா செதுக்கி, கூத்துக்கு ஏத்த பாத்திரம் முடிவு செய்து, அதுக்கேத்த வண்ணம் தீட்டி, ஆடை அலங்காரம் செய்து, நகைகள் பூட்டி, கண்ணேறு கழிச்சு… அப்புறம் தான் பாவைகளைப் பயன்படுத்துவாங்க.
அப்படியே பெண்களோட ஒத்துப் போகுது இல்ல வாசு? எங்களையும் கல்யாணத்திற்கு இப்படித் தானே தயார் பண்றாங்க?”
கேலியும், கிண்டலும் எட்டிப் பார்த்தது அவள் குரலில். ஆனால், அவனுக்கு அதில் விரக்தி மட்டுமே தெரிந்தது.
அவனது பதிலை எதிர்பார்க்காமல் மேலே சொல்லத் தொடங்கினாள் வசுமதி.
“பொம்மையின் தலை, முதுகு, கை, கால்களை இணைக்கப் பயன்படுத்துற கயிருக்கு பேரு “சுண்டு கயிறு”. கயிற்றின் ஒரு முனை பாவையில் இருக்கும், இன்னொரு முனையை மூங்கில் கூச்சிகளில் கட்டியிருப்பாங்க. அப்போ தான் கூத்து காட்டுறவர், குச்சியைப் பிடிச்சுக் கயிறை இழுக்க, இழுக்கப் பாவைகள் அசைந்து ஆட ஆரம்பிக்கும்.” சோஃபாவில் சரிந்து கண்களை மூடிக் கொண்டாள்.
“ஒரு வகையில் பெண்கள் நாங்களும் மரப் பாவைகள் தான். இல்ல வாசு? “பூமரப் பாவைகள்” நாங்கள். மரப் பாவைகளுக்குக் கல்யாண முருங்கை மரம். எங்களுக்குக் கல்யாணம். மத்தபடி செய்முறை எல்லாம் ஒன்னு தானே? வண்ணம் தீட்டி, ஆடை அலங்காரம் செய்து, நகைப் பூட்டி, அங்கே சுண்டு கயிறால் பிணைக்கறாங்க. இங்க தாலி கயிறு. அவ்வளவு தான் வித்தியாசம். கூடுதலா எங்களுக்குப் பூ அலங்காரம் நடக்குது. மத்தபடி வித்தியாசம் ஒன்னும் இல்ல. ஆட்டி வைக்கப் போறது யாரோ. வெறுமே ஆடுவதற்கு, உங்க இஷ்டத்திற்கு ஆட்டி வைப்பதற்கு, உங்க கூத்துக்கு வாய்ச்ச பாவைகள் நாங்க” என்றாள்.
அறையில் பேரமைதி. இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.
மூச்சினை ஆழ உள்ளிழுத்தான் வாசு. கண்களை மெல்லத் திறந்து கணவனைப் பார்த்தாள் வசுமதி. தன்னைப் பெரிதும் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன். கண்கள் சிவந்து, முகம் வெளிறி, கைகள் மடக்கி, உடல் இறுக.. மறுகணம் அதிகம் பேசி விட்டோமோ என்ற எண்ணம் அவளைச் சூழ, அதை ஆமோதித்தான் வாசு.
“கல்யாணம் ஆன இந்த ஒன்றரை மாசத்துல, இல்ல கல்யாணத்துக்கு முன்னாடி சந்திச்ச பத்து நாட்களையும் சேர்த்து, ரெண்டு மாசம். இந்த ரெண்டு மாசத்துல… உனக்கு, என் மேல, கல்யாணத்தின் மேல, ஆண்கள் மேல இப்படி ஒரு அபிப்பிராயம் வர்ற அளவுக்குத் தான், நான் நடந்துக்கிட்டேனா வசு?” வெகு நிதானமாக வந்தது கேள்வி.
“நீ சொல்லி எதையாவது மறுத்து இருக்கேனா? உனக்கு மரியாதை கொடுக்காம இருந்திருக்கேனா? உன் விருப்பத்தை மீறி நடந்து இருக்கேனா? சொல்லு வசு. இப்ப ஏன் பேச மாட்டேங்ற?”
என்ன சொல்வாள் அவள். குழந்தை விஷயம் தவிர, அவன் வேறு எதிலும் அவள் விருப்பத்தை மீறி நடந்ததே கிடையாது எனும் போது அவளும் என்ன தான் சொல்வாள்?
“கல்யாணம் உன்னை மட்டும் இல்ல, உன்னோடு சேர்த்து என்னையும் தான் இணைக்குது.
நீ சொல்ற அந்தச் சுண்டு கயிறு… தாலி.. பல நாள் அது என் கழுத்துல தான் இருந்திருக்கு. அதுக்கு என்ன சொல்லப் போற? அப்போ நீ என்னை ஆட்டி வச்சன்னா? ஆனா, நான் அப்படிலாம் சொல்லப் போறதில்ல. உன்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணேன். அது என்னைக்கும் மாறப் போறதில்ல. இது வரை உன் விருப்பத்துக்குத் தான் ஆடினேன். இனியும் ஆடுவேன். அதுல எனக்கு எந்த அசிங்கமும் இல்ல”
அவளது விழிகளில் இருந்து தன் விழிகளை விலக்கியவன், லேப்டாப்பை கையில் எடுத்தபடி எழுந்து கொண்டான். அந்த வேகத்தில் அவனது கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போய்ப் பால்கனியில் அமர்ந்து கொண்டான்.
வசுமதி இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. சிலையென அமர்ந்திருந்தவளின் காதில் கணவனின் வார்த்தைகள் ஏதிரோலித்துக் கொண்டேயிருந்தது.
“உன்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணேன். உன் விருப்பத்துக்குத் தான் ஆடினேன். இனியும் ஆடுவேன்” இதன் மூலம் என்ன சொல்ல வருகிறான் என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அறையில் பரவியிருந்த ஏசியின் குளிரையும் மீறித் தாக்கியது பால்கனி வழியாக வந்த வெப்பம். அறையின் காலநிலையைப் போலவே அவள் மனநிலையும் குழம்பத் தொடங்கியது.