அன்றைய இரவை உறக்கமும் விழிப்புமாகக் கடந்தாள் வசுமதி. ஆழ்ந்த உறக்கம் வாய்க்கவில்லை அவளுக்கு. உள்ளம் உதறலில் இருக்கும் போது உறக்கம் எப்படி வரும்?
அதிகாலை நான்கு மணிக்குப் போராடியது போதும் என்று படுக்கையை விட்டு எழுந்து விட்டாள் அவள்.
மெதுவாகத் திரும்பி கணவனைப் பார்த்தாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் அவன். படுக்கையின் ஓரத்தில் உடலை குறுக்கி படுத்திருந்தான் வாசு. இத்தனை நாட்கள் இருவரும் பிண்ணி பிணைந்திருந்ததென்ன… இன்று ஆளுக்கொரு மூலையில் முடங்கி இருப்பதென்ன.. வாழ்க்கை ஒரே நாளில் இப்படித் தலைகீழாக மாறி இருக்க வேண்டாம்.
மெல்ல சத்தம் எழுப்பாமல் சென்று பால்கனியில் அமர்ந்தாள்.
இரவின் போர்வையில் ஊரே உறங்கிக் கொண்டிருக்க, அவளின்
மனம் நேற்றைய நிகழ்வுகளைச் சுற்றியே வட்டமடித்தது.
‘என்ன செய்யப் போகிறேன் நான்?’ தன்னையே கேள்விக் கேட்டுக் கொண்டாள் வசுமதி.
வாழ்க்கை தன்னை இப்படி ஒரு நிலையில் கொண்டு வந்து நிறுத்தும் என்று அவள் நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. வாசு அவள் வாழ்க்கையில் மழையாக வந்து புயலாக மாறி இருந்தான்.
முதல் முறையாகத் தந்தை திருமணப் பேச்செடுத்த போது அவளுக்கு வந்த குழப்பம், ஊரில் இருந்து துபாய் கிளம்பும் போது வந்த தயக்கம் எல்லாவற்றிக்கும் காரணம் இப்போது விளங்கியது. அவளது உள்ளுணர்வு எச்சரிக்கை செய்தது போல, ஆழ்மனம் வரப் போவதை உணர்ந்ததோ என்னவோ…
ஆனால், இந்த விஷயத்தில் வாசுவை மட்டும் முழுக் குற்றவாளியாக்க முடியாது என்று அவளின் மனசாட்சி இடித்துரைத்தது.
அவள் திருமணத்திற்காக ஊருக்கு சென்ற மூன்றாம் நாளே வாசு அவளிடம் கல்யாணம், குழந்தை, அவர்களின் எதிர்காலம் குறித்து மிகத் தெளிவாகப் பேசியிருந்தான்.
“எனக்கு நிறையக் கமிட்மென்ட்ஸ் இருக்கு வசு. அதனால், வந்து” தடுமாறினான்.
“பரவாயில்ல சொல்லுங்க” என்றாள் வசுமதி.
“அது இப்ப அப்பாக்கு ட்ரீட்மெண்ட் பார்த்தது. ஆபரேஷன் பண்ணது. அப்புறம் ஏற்கனவே நாங்க கட்டிட்டு இருந்து புது வீடுன்னு… லாஸ்ட் டூ யியர்ஸா செலவுகள் தான் அதிகம். எனக்குச் சில லட்சங்கள் கடன் இருக்கு. பேங்க் லோன்ஸ் எடுத்திருக்கேன். சேமிப்பு சுத்தமா இல்ல. இந்த லோன் எல்லாம் முடியவே பல வருஷங்கள் ஆகும். நான் பைனான்ஸியல்லா கொஞ்சம் ஸ்டேடியாகக் குறைந்தபட்சம் ரெண்டு வருஷமாவது ஆகும்” தயக்கத்துடன் சொன்னான் அவன்.
அவன் முழுவதுமாகச் சொல்லி முடிக்கட்டும் என்று அமைதியாய் அவன் முகம் பார்த்திருந்தாள் வசுமதி.
“கல்யாணம் இப்போ என்னோட பிளானில் இல்லவே இல்ல. ஆனா, உன்னைப் பிடிச்சிருக்கு. அதனால் தான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன்” அவள் முகத்தில் சிறிய அதிர்ச்சி பரவ,
“என்னால உனக்குப் பெருசா எதுவும் இப்போதைக்குப் பண்ண முடியாது வசு. பெரிய எதிர்பார்ப்புகள் எதையும் வச்சுக்காத. நாம கொஞ்ச நாள் சிக்கனமாகத் தான் வாழ்க்கையை ஓட்டனும்” என்றான். புரிந்ததற்கு அடையாளமாகப் புன்னகைத்தாள். அது அவனை ஊக்குவிக்க, மேலே தொடர்ந்தான் அவன்.
“எனக்கு இதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல வசு. ஆனா.. ஆனா, நீ தப்பா எடுத்துக்கலன்னா… உனக்கும் சம்மதம்னா மட்டும் தான்… இல்லனா வேண்டாம்”
“என்னனு சொல்லுங்க”
“ஒரு ரெண்டு வருஷத்துக்குக் குழந்தை… குழந்தை வேண்டாம் வசு. பிளீஸ்” எதிர்பார்ப்புடன் அவளது விழிகளை ஏறிட்டான்.
“ம்ம்ம்” என்றவளின் கண்களில் மிரட்சி.
“பிளீஸ், தப்பா நினைக்காத வசு. குழந்தை ஆசை எனக்கும் இருக்கு. ஆனா, இப்போ இருக்க நிலைமையில் குழந்தை வந்தா ரொம்பச் சங்கடம் வசு. மெடிக்கல் செலவு, பிரசவ செலவுனு பல விஷயங்கள் இருக்கு. நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். அதனால் குழந்தையைப் பார்த்துக்க ஆள் போடணும். நம்ம ரெண்டு குடும்பத்திலயும் இருந்து குழந்தையைப் பார்க்க யாராவது இங்க வந்துட்டும், போய்ட்டும் இருப்பாங்க. அவங்க விசா, டிக்கெட்னு எவ்வளவோ இருக்கு.
அப்புறம் குழந்தை வளர்ந்து ஒரு நிலைக்கு வர்ற வரைக்கும் ஏதாவது செலவு வந்துட்டே தான் இருக்கும் மா. எல்லாம் சின்னச் சின்ன விஷயமா தான் தெரியும். ஆனா, கணக்குப் போட்டா பெரிய தொகை வந்து நிக்கும் வசு. அதான், ஒரு ரெண்டு வருஷம் பொறுத்து… அதுக்குள்ள நாமளும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிருப்போம்”
அவன் வார்த்தைகளைக் கிரகித்து மனதில் அசைப் போட்டாள் வசுமதி. அவளிடம் பேசத் தயங்கினாலும் கூட, இது குறித்து அவன் நன்றாகச் சிந்தித்துத் தான் இந்த முடிவுக்கு வந்திருப்பான் என்று வசுமதிக்குப் புரிந்தது.
அவன் சொன்ன அனைத்தையும் சிறிது நேரம் மனதில் ஓட விட்டாள். கணவன், மனைவி இருவரும் ஒன்றாக இணைந்து குழந்தை வரவை எதிர்பார்த்து, விரும்பி, ஆவலாக வரவேற்க வேண்டும் என்பதே அவள் எண்ணமாக இருக்க, வாசு பைனான்ஸியலாகவும், தம்பதிகளாக அவர்கள் இருவரின் உறவும் பலப்பட்ட பின்னர்க் குழந்தை வருவதே சரியென்று அவளுக்கும் தோன்றியது.
அவன் காரணங்கள் நியாயமாகப் பட, “ம்ம்ம், ஓகே வாசு” என்று தன் சம்மதத்தைத் தெரிவித்தாள் வசுமதி.
ஆனால், அது இப்படி வந்து முடியும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவள் செய்ததும் தவறு தான் என்று அவளுக்கு விளங்கவே செய்தது. மாத்திரையைச் சரியாக, நாள் தவறாது எடுக்க மறந்தது அன்றைக்கு அவளுக்குப் பெரிதாகத் தோன்றவே இல்லை.
அவன் சொன்னது போல் மருத்துவரிடம் அவள் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும். அவனது பெரியம்மா என்ற காரணத்தினால் அவளால் அவர் முகம் பார்த்து இயல்பாகச் சந்தேகங்கள் கேட்க இயலவில்லை. அது இன்றைக்கு அவர்களை எங்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
அவளது இன்றைய இக்கட்டான சூழ்நிலையை யாரிடமாவது விளக்கி ஆலோசனை கேட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால், இந்த ஊரில் அவளுக்கு நர்மதாவை விட்டால் யாரைத் தெரியும்? இதைப் பற்றி நர்மதாவிடம் பேசுவதை விட வேறென்ன பெரிதாகக் கொடுமை இருந்து விட முடியும்.
அவளது அம்மா, அப்பாவிடம் நிச்சயமாகச் சொல்ல முடியாது. அவர்கள் உடைந்து போவார்கள். வருணுக்கு நிகழ்ந்ததே, வேறொரு வடிவில் அவளுக்கு நேர்ந்தால் அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
வருணிடமோ கருக்கலைப்பு பற்றி மூச்சு விடக் கூட முடியாது. அவ்வளவு தான். டூரிஸ்ட் விசா எடுத்து, அடுத்த ப்ளைட் பிடித்துத் துபாய் வந்து விடுவான்.
வாசுவின் சட்டையைப் பிடிப்பானா அல்லது கழுத்தைப் பிடிப்பானா என்பதையும் கணிக்க முடியாது.
திவ்யா அண்ணியிடம் பேசலாம் தான். ஆனால், அவளின் ஆறிய காயத்தைக் கீறி விட்டது போல் ஆகி விடக் கூடாதே என்ற எண்ணத்தில் அதையும் கைவிட்டு விட்டாள்.
இப்போதைக்கு அவளுக்கு இருந்த ஒரே ஆறுதல் துபாயில் கருக்கலைப்பு சட்டப்படி குற்றம். அவளை மீறி யாராலும் எதையும் செய்ய முடியாது. அது கணவன் வாசுதேவன் நினைத்தாலும் கூட ஒன்றும் செய்ய இயலாது.
அதனால் தான் இந்தியா செல்ல வேண்டும் என்கிறான். அங்கும் சட்டப்படி குற்றம் தான். ஆனாலும், நம் ஊரில் வழிகளா இல்லை.
‘என்ன செய்யப் போகிறேன் நான்? வாசுவுக்கு எப்படிப் புரிய வைப்பேன்? நர்மதா போல எத்தனையோ பெண்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க, தங்களுக்குக் கேட்காமலே கிடைத்த வரத்தை எப்படி உயிரோடு பிடுங்கி எறிவது?’
கேள்விகளும், குழப்பங்களும் சூழ தவிப்புடன் அமர்ந்திருந்தாள் வசுமதி.
கொட்டும் பனியில், பால்கனி சுவரில் சாய்ந்து அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் அருகில் சத்தம் எழுப்பாமல் சென்று அமர்ந்தான் வாசு.
ஒரே நாளில் ஆள் பாதியாக மெலிந்து, முகம் வாடி, கண்கள் வீங்கி, அவளை அப்படிப் பார்க்கையில் அவனுக்கு மனதை என்னவோ செய்தது. அவளை இந்நிலைக்குத் தள்ளியது தான் தான், என்று அவனுக்கு நன்றாகப் புரிந்தது. தன் மேலேயே கோபம் கொண்டான் அவன்.
அவளைத் தொல்லை செய்யாமல், அவளருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான். மூச்சை ஆழ உள்ளிழுத்தான். மனைவியின் பிரத்தியேக வாசமான பூக்களின் மணமும், கூல் வாட்டர் பெர்ஃப்யூமின் மணமும் அவன் நாசியில் நுழைந்து அவனது நுரையீரலை நிறைத்தது. மனைவியே அவனை இறுக அணைத்தது போலிருக்க, அவனது கண்கள் தன்னிச்சையாக மூடியது. மனதில் இனம் புரியாத அமைதி பரவியது.
அவள் அயர்ந்த நித்திரையில் இருக்க, அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சூரியன் தகிக்கும் அவன் கரம் கொண்டு அவளது நித்திரையைக் கலைத்தான். உடல் வியர்வையில் நனைந்திருக்க மெல்ல விழிகளைத் திறந்தவள், அப்படியே உறைந்து போனாள். விழிகளைச் சிமிட்டினால் தொட்டு விடக் கூடிய தூரத்தில் கணவன், அவனது கழுத்தில் வாகாகப் பதிந்திருந்த தனது தலையை மெதுவாக நகர்த்தி நிமிர்ந்து அமர்ந்தாள்.
‘இவன் எப்போது இங்கு வந்தான்? ஏன் இங்கு வந்து உறங்கிக் கொண்டிருக்கிறான்?’ கேள்விகள் உதித்தது. அவனது உயரத்திற்கு இடம் போதாமல் கால்களைக் குறுக்கி படுத்திருந்தான். காலை சூரியனையும், கணவனையும் மாறி மாறிப் பார்த்தாள். காலையிலேயே மாலை வந்தது போலிருந்தது. அவளது வாழ்வைப் போல.
அடுத்தென்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே திகைத்து அமர்ந்திருந்தாள் வசுமதி.
நேரம் கடக்க மெல்ல எழுந்து சென்று அன்றைய வேலைகளைக் கவனித்தாள்.
வாசுவும் எழுந்து வந்தான். அவரவர் வேலையைப் பார்த்தார்கள். மருந்துக்கும் பேசிக் கொள்ளவில்லை.
நண்பகல் கடந்து நேரம் மாலையை நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் அவளருகில் வந்தான் வாசு.
அவள் கையில் சூடான டீ கோப்பையைத் திணித்தான். சூடான டீயை அருந்தி முடிப்பதற்குள், வாழ்வின் பிரச்சனைகள் அனைத்தும் ஆறிப் போய் விடாதா என்றிருந்தது வசுமதிக்கு.
“வசு, எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
“இனி, பேச என்ன இருக்கு?” என்றாள் பார்வையை எங்கோ பதித்துக் கொண்டு,
“பிளீஸ் வசு. நான், என்ன தான் சொல்ல வர்றேன்னு கேட்டுத் தான் பாரேன். இப்படிப் பேசவே மாட்டேன்னு முரட்டுப் பிடிவாதம் பிடிச்சா எப்படி? சொல்லு?”
“சாரி. என்ன பேசணும் சொல்லுங்க, கேட்கறேன்” என்றாள் மிகத் தன்மையாக,
“ஐ ஆம் சாரி வசும்மா. நான் இதை மனசாரப் பண்ணல. நீ அதைப் புரிஞ்சுக்கணும். எனக்கு வேற வழி தெரியாம தான்..” என்று இழுத்தவன்,
“என் நிலையில் இருந்து யோசிச்சு பாரேன் வசு. திரும்பின பக்கம் எல்லாம் கடன். மாசாமாசம் லோன் கட்டவே முக்கால்வாசி சம்பளத்தைத் தூக்கி ஓரமாக வைக்கணும். நிலைமை அப்படி இருக்கும் போது… குழந்தையை நான் செலவா, பாரமா பார்க்கலை வசு. ஆனா, குழந்தை பிறந்த பின்னாடி, அதுக்குத் தேவையானதை கூட வாங்கிக் கொடுக்க முடியாட்டி நானெல்லாம் என்ன நல்ல அப்பா? குழந்தை ஆசைப்படுறதை, கைக் காட்டுறதை எல்லாம் கண்ணை மூடிட்டு வாங்கிக் குவிக்க வேண்டாமா?”
“ஊர்ல இருக்க எல்லோரும் காசை கொட்டி வச்சுக்கிட்டு தான் குழந்தை பெத்துக்கறாங்களா வாசு?” என்றாள் இடை புகுந்து,
“எனக்கு ஊர்ல இருக்கவனைப் பத்தி எல்லாம் கவலை இல்ல வசு. நான் நம்ம குடும்பத்தைப் பத்தி மட்டும் தான் யோசிக்கறேன்” என்றான் தீவிரமான குரலில்,
“பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போகும் வாசு. ஆனா குழந்தை? இன்னைக்கு வேணாம்னு அழிச்சுட்டு, நாளைக்குக் கிடைக்காம போனா என்ன பண்ண போறோம்? என்ன பண்ணப் போறீங்க?” என்றாள் புருவம் உயர்த்தி,
“நமக்கு இன்னும் வயசு இருக்கு வசும்மா. வாழ்க்கையும் இருக்கு. உனக்கு 23 எனக்கு 28 தான் ஆகுது. கொஞ்சம் பொறுமையா…”
“என்ன பொறுமையா? இருவதில் பெத்துக்காம நாப்பதில் பெத்துக்கப் போறீங்களா?” என்றாள் கிண்டலாக,
“தேவையில்லாம கண்டதையும் பேசாத வசு. இப்போ நமக்குக் குழந்தை வேண்டாம். அவ்வளவு தான்.” என்றான் முடிவாக.
“ஓ, அப்படியா? அப்ப என் முடிவையும் கேட்டுக்கோங்க. அடுத்த எட்டு மாசம் முழுசா சுமந்து இந்தக் குழந்தையை நான் பெத்தே தீருவேன். உங்களால என்ன பண்ண முடியுமோ, பண்ணிக்கோங்க. ஆங், வயித்துல சுமக்கற என்னை மீறி, நீங்க என்ன பண்ணிட முடியும்?” என்று தீர்க்கமாக, திமிராக அவன் கண்களைப் பார்த்து கேட்டாள் அவள்.
“என்னால என்ன வேணும்னாலும் பண்ண முடியும் வசு. நீ என் பொண்டாட்டியா இருக்க வரைக்கும், அது என் குழந்தை….”
‘என்ன சொல்லப் போகிறான் இவன்? இந்த உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் நான் உனக்குத் துணை இருப்பேன் என்று சொன்ன வாசு எங்கே போனான்?’ அவளுக்கு உதறியது.
“போதும்” என்று கை நீட்டி அவனைத் தடுத்தாள் வசுமதி. மேலே அவன் சொல்லப் போவது எதுவாக இருந்தாலும் கேட்கும் தைரியம் அவளுக்கில்லை.
“ஐ அம் சாரி வசு” என்றான் உடனே,
“யெஸ், யூ ஷுட் டெபனட்லி ஃபீல் சாரி” என்றாள் அவளும்.