பூமரப் பாவைகள் – 20 (2)

அவனது கையில் இருந்த மொத்த மாத்திரைகளையும் பிடுங்கிக் கொண்டு போய்க் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்து விட்டு வந்தாள். கணவனின் பக்கம் ஒரு அலட்சிய பார்வையை வீசவும் தவறவில்லை அவள்.

“அழிக்கப் போற குழந்தைக்கு.. மாத்திரை என்ன எழவுக்கு எடுக்கணும்” முணுமுணுத்தாள்.

முகம் இறுக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. அவனை அப்படிப் பார்க்கையில் அவளுள் சட்டென்று ஒரு இதம் பரவியது.

‘கணவனைக் காயப்படுத்தி அதில் மகிழ்கிறேனா? என்னவாகி கொண்டிருக்கிறேன் நான்?’ அவள் மனம் தானாகப் பதறியது.

கணவனைத் திரும்பியும் பாராமல் போய்ப் படுக்கையில் விழுந்தாள். கண்களை மூடி எத்தனை முயன்றும் தூக்கம் வர மறுத்தது.

வாசு லேப்டாப்பில் வேலையாக இருப்பது தெரிந்தது. அவன் விரல்கள் கீபோர்ட்டை தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

அவளுக்கு எழுந்து எங்காவது ஓடி விட வேண்டும் போலிருந்தது. மனம் விட்டு யாரிடமாவது கதற வேண்டும் போலிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெளிச்சமே புலப்படவில்லை. மனம் நொந்து போனாள் வசுமதி.

நேரம் கடந்து கொண்டே இருக்க, எத்தனை முயன்றும் வசுமதியால் உறங்க முடியவில்லை. இனிமேல் அவளுக்கு நிம்மதியான உறக்கம் ஒருபோதும் இருக்கப் போவதில்லை.

அவளது உறக்கம் தொலைத்த விழிகளில் கடந்த காலத்தின் காட்சிகள் படமாக விரியத் தொடங்கியது.

அப்போது வருண் கல்லூரி மூன்றாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுடன் படித்த திவ்யாவை காதலிப்பதாகக் கூறி வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அம்மா, அப்பா இருவருமே அவர்களின் காதலுக்கு எவ்வித எதிர்ப்பும் இன்றிப் பச்சைக் கொடி காட்டினர், முதலில் படிப்பை முடியுங்கள். காதலை, வாழ்க்கையைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று அறிவுரை கூறினர். ஆனால், விதி அவர்களுக்கு வேறொரு எதிர்பாரா கணக்கை போட்டு வைத்திருந்தது.

அடுத்த இரண்டாம் மாதமே பதட்டத்துடன் இருவரும் அவளின் பெற்றோர் முன் வந்து நின்றனர். பள்ளி விட்டு அப்போது தான் வந்திருந்த வசுமதிக்கு அவளின் அம்மா சூடாகப் பால் கொழுக்கட்டை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார்.

மகனையும், அவன் விரும்பும் பெண்ணையும் புன்னகையுடன் வரவேற்றவர், “ரெண்டு பேரும் உட்காருங்க, சூடா டீ, டிஃபன் சாப்பிடுவீங்க” என்றார்.

“அம்மா..” என்று தயக்கமான குரலில் அழைத்த வருண், சிறு குரலில் தாயிடம் எதையோ சொல்லி, கையைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

வசுமதி தன்னை யாரும் மதிக்கவில்லை எனவும் அங்கிருந்து எழுந்து போய் வீட்டுப் பாடங்களைப் படிக்க ஆரம்பித்தாள். மறுநாள் காலை அவளைப் பள்ளிக்குக் கொண்டு போய் விடும் போது தான் விஷயத்தை அவளிடம் சொன்னார் அப்பா மகேந்திரன். வருணுக்குக் கல்யாணம், அதுவும் அவன் நேசித்த திவ்யாவுடன். அன்று மாலை பள்ளி முடிந்ததும் அவர்களுக்குத் துணிமணிகள், நகைகள் எடுக்கப் போக வேண்டும் என்றார் அவர்.

அவசர, அவசரமாக நடந்தது திருமணம். வீட்டிற்கு வந்த புது உறவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள் வசுமதி.

அடுத்தச் சில மாதங்களில் அண்ணி கல்லூரி செல்வதை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்தார். அண்ணன் மட்டுமே கல்லூரி சென்று வந்தான்.

“அண்ணி மாசமா இருக்கா வசு, நம்ம வீட்டுக்கு பாப்பா வரப் போகுது” என்றார் அவளின் அம்மா. வசுமதிக்கு புரிந்தும், புரியாத வயது. அண்ணனுக்காக மகிழவே செய்தாள். குட்டி பாப்பா ஆசையில் அண்ணி கேட்டதை எல்லாம் ஓடி ஓடி செய்தாள். அவள் பின்னேயே வால் பிடித்துக் கொண்டு சுற்றினாள்.

அவள் வாழ்வின் சந்தோசமான நாட்கள் அவை. ஆனால், அதுவும் விரைவில் முடிவுக்கு வந்தது.

ஒரு நாள் நள்ளிரவில் அடித்துப் பிடித்துக் கொண்டு மருத்துவமனை சென்றனர். அண்ணி வயிற்றில் குழந்தை அசையவில்லை என்றாள். உடனடியாக ஸ்கேன் எடுக்கக் கூட்டி சென்றனர்.

வீட்டினர் அனைவர் முகத்திலும் அத்தனை பதட்டம். வசுமதி அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு ஒன்றும் புரியாமல் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது.

திடீரென்று உரக்க கேட்ட கதறல் ஒலியில் திடுக்கிட்டு விழித்தாள் வசுமதி. அமர்ந்த நிலையில் உறங்கி விட்டிருந்தாள் அவள்.

அவளுக்கு அருகில் நின்றிருந்த நர்சின் கையில் இருந்தது ரோஜா நிறத்தில் ஒரு குட்டி பூ மூட்டை. ரோஜா நிற துணியில் அழகாகச் சுற்றி இருந்தார்கள். குழந்தையைக் கையில் ஏந்தி பார்க்கும் ஆவல் உந்த, திரும்பி அம்மாவை பார்த்தாள் வசுமதி. அவரோ கதறிக் கொண்டிருந்தார்.

“என்னங்க, என்ன இப்படி ஆகிடுச்சு? ஐயோ..” என்று கதறியவரை தேற்ற முடியாமல், கசிந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் மகேந்திரன்.

வசுமதி முன்னே சென்று குழ்ந்தையை வாங்க கை நீட்டினாள்.

“அச்சோ வேணாம் பாப்பா” என்று தீவிரமாக மறுத்தார் நர்ஸ்.

“ஏன், எங்கண்ணா பாப்பா தான் கொடுங்க. நான் பார்க்கணும்” என்றாள் வசுமதி. தலையை மறுப்பாக அசைத்தார் நர்ஸ். வசுமதிக்கு என்ன நடக்கிறதென்று புரிபடவில்லை.

“அம்மா.. பாப்பா மா, வருண் அண்ணா பாப்பா. என்ன பாப்பா அக்கா?” என்று அவள் சந்தோசம் குமிழிட கேட்க, நர்ஸின் கண்களும் கலங்கியது.

வேகமாகக் கை நீட்டி குழந்தையை வாங்கினார் மகேந்திரன். வசுமதியின் முகம் பார்த்து, “பாப்பா.. பாப்பா இறந்திடுச்சு டா, குட்டிமா” சொல்லும் போதே அவர் குரல் உடைந்து, அழத் தொடங்கினார். வசுமதி வாழ்க்கையில் முதல் முறையாகத் தந்தை அழுது பார்க்கிறாள். அவளுக்கும் உதடு பிதுங்கி அழுகை வந்தது.

அப்போது தான் குழந்தை இறந்து விட்டது என்பதே அவளின் மூளையில் பதிந்தது.

“வசுக்குட்டி அழக் கூடாது டா” என்ற தந்தையின் குரலை காதில் வாங்காமல், சத்தமாகத் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். அடம்பிடித்துக் குழந்தையைக் கைகளில் ஏந்தினாள்.

“பெண் குழந்தை”

செதுக்கி வைத்த சித்திரம் போலிருந்தது. ஆனால், அவளது விரல்களைப் பற்றவில்லை. அவளைப் பார்த்துப் பொக்கை வாய் காட்டி சிரிக்கவில்லை. கையை, காலை அசைக்கவில்லை.

வீட்டுக்கு வந்த பின், அவளைத் தொட விடாமல், அவளிடம் இருந்து குழந்தையைப் பறித்துக் கொண்டு போனார்கள். ஆனால், அவள் கண்கள் குழந்தையையே சுற்றி சுற்றி வந்தது.

அதனருகில் சென்று அமர்ந்து தொட்டு தொட்டு பார்த்து கொண்டாள். அதனிடம் ஒரு அசைவும் இல்லை.

அம்மாவின் வயிற்றில் இருக்கையில் கூட அவள் குரல் கேட்டதும் எப்படி அசையும், காலை எட்டி உதைக்க முயலும். ஆனால் இன்று…. விசிம்பிக் கொண்டே இருந்தாள் அவள். எத்தனை கதை பேசி இருப்பாள் அண்ணியுடன், அத்தனையும் வரப் போகும் குட்டி பாப்பாவை குறித்த பேச்சுகள். ஆனால், இன்று அனைத்தும் கைக்கு எட்டாமலேயே போனதே.

“எழுந்திரு வசுக்குட்டி. அழாத மா. சீக்கிரம் இன்னொரு பாப்பா வரும்டா” என்ற அம்மாவின் குரலில், அண்ணியிடம் ஓடினாள்.

“அண்ணி, எனக்குப் பாப்பா வேணும் அண்ணி” சிலையென அமர்ந்திருந்த திவ்யாவின் வயிற்றைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

“ஷ்ஷ், குழந்தை பெத்த பச்ச உடம்பு. அண்ணியை விடு வசு” அதட்டினார் மகேந்திரன்.

“அண்ணா கிட்ட வா வசு” என்று இழுத்து அவளைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டான் வருண்.

ஒரு பக்கம் மனைவிக்கு ஆறுதல் சொல்லி, மறுபக்கம் தங்கையைச் சமாளித்து, அவனது இழப்பையும் தாங்கி, அன்றைய வருணை நினைக்கையில் அவளுக்கு இப்போதும் மனம் கசிந்தது.

அப்போது வசுமதி எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். அதன் பின்னர் வந்த நாட்களில் வருண் அவளிடம் எவ்வளவு கண்டிப்புக் காட்டினான் என்று அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது.

பிரியமும், பாசமும் காட்டியதை விட அதிகமாகக் கண்டிப்பும், கறாரும் காட்டினான். பின்னாட்களில் அவளுக்குக் காரணம் புரியவே செய்தது. ஆனாலும், படிக்கும் வயதில் தடுமாறியதில் வருணுக்குக் கிடைத்தது மிகப் பெரிய தண்டனை தான்.

எட்டு மாதம் சுமந்த குழந்தையைப் பறி கொடுத்த அண்ணி திவ்யா முழுதாக உடைந்து போனாள், அவளைத் தேற்றி பழையபடி மாற்றுவதற்கு அவர்கள் பட்ட பாடு.

‘நாளை என் நிலையும் அப்படித் தான் ஆகப் போகிறதோ?’ என்ற எண்ணம் அவளுள் ஓடி பயத்தைக் கிளப்பியது.

எத்தனை நாட்கள் அண்ணியுடன் சேர்ந்து அவளும் அழுகையில் கரைந்திருப்பாள். இன்றைக்கும் அக்குழந்தையின் முகம் அவளுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அண்ணி திவ்யாவின் கதறலும்.

“வருண், எனக்கு நம்ம குழந்தை வேணும் வருண். இனி கவனமா இருப்பேன் வருண், பிளீஸ். என்கிட்ட கொடுக்கச் சொல்லுங்க” திவ்யாவின் அழுகுரல் காதில் எதிரொலிக்க, ‘நாளை நானும் இப்படித் தான் கதற போகிறேனோ?’ என்ற எண்ணமே, மூடியிருந்த விழிகளில் இருந்து கண்ணீர் வழிய செய்ய, வெடித்து வெளிவந்த விம்மலை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஒரே எட்டில் அவளை நெருங்கி,

“வசு, பிளீஸ். அழாத. பிளீஸ். எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்” அவளது தோள் பற்றி இழுத்து அணைத்தான் வாசு. அவனிடம் இருந்து திமிறி விலகினாள் வசுமதி.

“அழாத வசும்மா” என்றவனின் விழிகளை நேராக நோக்கி,

“வசும்மா, வசும்மா.. இனி மேல் அப்படிச் சொல்லாதீங்க. அப்படிச் சொல்லிச் சொல்லி தான், இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்க” விழிகளால் வயிற்றைச் சுட்டிக் காட்டினாள். அவனின் தாடை இறுகியது, கண்ணை மூடித் திறந்தான்.

“எனக்குக் கொஞ்சம் டைம் கொடு வசும்மா. சீக்கிரமே…” மீண்டும் தன்னை அணைக்க முற்பட்ட அவனது கரத்தை பட்டென்று தட்டி விட்டாள்.

“என்னைத் தொடாதீங்க. தொட்டீங்க… அப்புறம் குழந்தையோடு சேர்ந்து நானும் இல்லாம…”

மின்னல் வேகத்தில் அவனது கை பறந்து வந்து அவளது வாயை மூடியது.

“பிளீஸ் சொல்லாத வசு. அப்படிச் சொல்லாத. இட் கில்ஸ் மீ” அவன் குரல் நடுங்கியது.

“இனி தொடல, ஐ பிராமிஸ்” என்றவன், பட்டென்று எழுந்து அவளிடம் இருந்து விலகிப் போனான்.

ஆம், இருவரும் அக்கணத்தில் இருந்து மனதாலும் வெகுவாக விலகிப் போனார்கள்.

error: Content is protected !!
Scroll to Top