பூமரப் பாவைகள் – 20 (1)

நரேனின் பக்கமாக நன்றாகத் திரும்பி அமர்ந்து, “ஐ அம் சாரி நரேன். குழந்தை, குழந்தைன்னு ஓடி… நீங்க சொன்ன மாதிரி, ஒரு ரோபோட் போலத் தான் இத்தனை நாள் வாழ்ந்து இருக்கோம். உங்க பக்கத்திலேயே இருந்தும், இல்லாம இருந்து இருக்கேன். இனி அப்படி ஆகாது நரேன். குழந்தை வரும் போது வரட்டும். அது நாம காதலை கொண்டாடி மகிழ்ந்த நொடியில் உதிக்கட்டும்” என்று புன்னகைத்தாள் நர்மதா.

அவள் மனதில் இருந்து சொன்னாளா, இல்லை அவனைச் சமாதானப்படுத்த சொன்னாளா என்று நரேனால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆனாலும், அவளது வார்த்தைகள் அவனுக்கு மிகுந்த மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது.

“தாங்க்ஸ் நம்மு.” அவள் முகத்தைக் கையில் ஏந்தி, அவளின் கண்களைப் பார்த்து கனிவாகச் சொன்னான் நரேன்.

“எனக்குத் தெரியும் நம்மு, இந்த முடிவை எடுக்க நீ எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பன்னு, ஆனா, என்னை நம்பு டா. எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று அவளின் நெற்றியில் அழுத்தமாக இதழ் ஓற்றினான் நரேன்.

அந்நேரம் பார்த்து அழைப்பு மணியோசை அவர்களின் காதில் அறைய இருவரின் புருவங்களும் கேள்வியில் சுருங்கியது.

“நீ போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வா, நான் யாருன்னு பார்க்கறேன்” என்று நரேன் எழுந்து கொள்ள, நர்மதா அறையை நோக்கி நடந்தாள்.

“வசு, வா டா. என்ன தனியா வந்திருக்க? வாசு எங்க?” என்ற நரேனின் குரலில் கதவருகில் நின்று திரும்பிப் பார்த்தாள் நர்மதா. பார்வையைத் தரையில் பதித்து நின்றிருந்தாள் வசுமதி.

“அவர், அவர்.. ஏதோ வேலையா இருக்கார். அதான்… நான்…” தடுமாறினாள்.

“ஓகே, உள்ள வா” நேராகச் சென்று சோஃபாவில் காலை மடக்கி அமர்ந்தாள் வசுமதி.

மனம் கலங்கி போய் இருந்த அக்கணத்தில் வீட்டை விட்டு, கணவனை விட்டுத் தூரமாகச் சென்று விட வேண்டும் என்பது மட்டுமே அவள் மனதில் இருக்க, காரையும் எடுக்கக் முடியாமல், எங்குச் செல்வது என்று தெரியாமல், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருக்க, வேறு வழியின்றி நர்மதாவின் வீட்டிற்கு வந்திருந்தாள் வசுமதி.

இதுவே ஊராக இருந்தால் அவள் செல்வதற்கு, தஞ்சம் அடைவதற்குப் பல இடங்கள் இருக்கும். ஆனால், இங்கு நரேன், நர்மதாவை தவிர அவளுக்கு நெருக்கமாக யார் இருக்கிறார்கள்?

“டாக்டர் என்ன சொன்னாங்க வசு?” என்ற நரேனின் கேள்விக்கு என்ன சொல்வது என்றே ஒரு நொடி அவளுக்குப் புரியவில்லை.

“வருண் கால் பண்ணி இருக்கார் நரேன். நாலு மிஸ்டு கால்ஸ். உன் ஃபோன் எங்க வசு?” என்றபடியே அறையில் இருந்து நரேனின் போனுடன் வெளியில் வந்தாள் நர்மதா. நொடி நேரமே ஆனாலும், அவர்களின் கவனம் தன் மேலிருந்து திரும்பியது வசுமதிக்கு நிம்மதியாக இருந்தது.

“வீட்ல இருக்கு அண்ணா” என்கையிலேயே தொண்டை அடைக்கும் போலிருந்தது. மனம் அண்ணன் வருணை தேடியது. அவனது அண்மைக்காக ஏங்கியது. அதே நேரம் அவன் மேல் கோபமும் எழுந்தது.

“பார், எப்படிப்பட்ட மாப்பிள்ளையைக் கொண்டு வந்திருக்கிறாய் பார்.” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும் போலிருந்தது.

எந்தவொரு ஆணும் தங்கையை எவ்விதத்திலும் காயப்படுத்தி விடக் கூடாது என்று இதுநாள் வரை அவளைப் பாதுகாத்த வருண், இன்றைக்குத் தங்கை சொந்த கணவனாலேயே காயப்படப் போகிறாள் என்பதை அறிந்தால் என்ன செய்வான் அவன்?

வாசுதேவனை அடித்துத் துவைத்து விடுவான் என்பது அவளுக்கு நிச்சயம். ஆனால், வருணிடம் கணவனைக் காட்டிக் கொடுக்க அவளுக்கு மனம் இருக்கிறதா என்பது அவளுக்கே தெரியவில்லை.

“வசு, என்னாச்சு மா?” என்று நரேன் மீண்டும் கேட்க, தன் சிந்தனைகளில் இருந்து மீண்டு வந்தாள் வசுமதி.

நரேன் சற்று நேரத்திற்கு முன் சொன்ன வார்த்தைகள் நர்மதாவின் மனதில் வந்து போனது. நண்பர்கள் அனைவரையும் தொலைத்து விட்டேன் என்றானே. ஆக, வசுமதியிடம் அவன் ஓட்டிக் கொண்டதின் காரணம் இப்போது அவளுக்கு நன்றாக விளங்கியது.

உறவுகள், நண்பர்கள் என்று பேச, பழக யாருமே இல்லாத தேசத்தில் கிடைத்த உறவை இருவருமே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். வசுமதி அவர்களின் அன்பிற்குத் தகுதியானவளும் கூட, அவளின் கலக்கமான முகம் நர்மதாவிற்குக் கவலையைத் தர, “என்னாச்சு டா வசு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தபடி கேட்டாள் நர்மதா.

“உங்களுக்கு உடம்பு முடியல சொன்னீங்க இல்ல அண்ணி, இப்போ எப்படி இருக்கு? என்ன பண்ணுது? உங்க முகம் ஏன் இப்படி இருக்கு?” நர்மதாவின் சிவந்த விழிகளும், வீங்கிய முகமும் அவளை அப்படிக் கேட்க செய்தது.

“தலைவலி வசு, வேற ஒன்னுமில்ல. ஐ அம் ஓகே. நீ சொல்லு உனக்கு டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று அவளை மறுகேள்வி கேட்க, வசுமதியின் கண்கள் நரேனை கூர்ந்தது. அவர்களுக்குள் எதுவோ சரியில்லை என்று அப்போது தான் அவளுக்கு உரைத்தது.

வசுமதி மருத்துவர் சொன்னதை என்னவென்று அவளிடம் சொல்வாள்? நர்மதாவால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா? அதை அவளிடம் சொல்ல தனக்கும், கேட்டு ஜீரணிக்க நர்மதாவிற்கும் தைரியமும், தெம்பும் இருக்கிறதா என்றால்… இல்லை என்பதே பதிலாக வந்தது, குனிந்து அவள் முகம் பார்த்தாள் வசுமதி.

“ஒன்னுமில்ல அண்ணி, புட் பாய்சன் ஆகியிருக்கும்னு டாக்டர் சொன்னாங்க. மூனு நாளைக்கு மெடிசின் கொடுத்திருக்காங்க. ஐ வில் பீ ஓகே.” என்று சமாளித்தாள் வசுமதி.

“ஹ்ம்ம், என்ன டேப்லெட்ஸ் கொடுத்தாங்க?” என்று அடுத்தக் கேள்வியை முன் வைக்க, அதற்கு நிச்சயமாய் அவளிடம் பதிலில்லை.

“விட்டமின் டேப்லெட், போலிக் ஆசிட் டேப்லெட் கொடுத்தார்கள்” என்று எப்படிச் சொல்வாள்? தன் பொய் வெளிப்பட்டு விடுமே எனும் பயத்தில், “நான் கவனிக்கலை அண்ணி, அவர் தான் வாங்கினார்.” என்றாள் வசுமதி.

“சரி டா, வருண் கிட்ட பேசு. நான் காஃபி போடுறேன்” என்று நகர்ந்தாள் நர்மதா.

காஃபி எனும் பெயரை கேட்கும் போதே, அவளுக்குக் குமட்டுவது போலிருந்தது. இத்தனைக்கும் அவள் மகா காபி பிரியை. இப்போது வேண்டாம் என்று சொன்னால், அடுத்தக் கேள்வி வரும். சிறு சிறு விஷயங்களும் அவளுக்குப் பெரிதாக மன அழுத்தத்தைக் கொடுக்க ஆரம்பித்தன.

நரேன் தன் போனில் வருணை அழைத்து, அவளிடம் நீட்டினான். மிக முயன்று வருவித்த சாதாரணக் குரலில் இரண்டு நிமிடம் பேசி விட்டு வைப்பதற்குள் கண்ணைக் கட்டியது அவளுக்கு.

அன்று வெள்ளி கிழமை அவள் வீட்டிற்கு அழைக்கும் நாள். மற்ற நாட்களும் பேசுவாள் தான், ஆனால் வெள்ளி அன்று மட்டுமே நிதானமாக மணிக்கணக்காக அவளால் பேச முடியும். ஆனால், இன்று வீட்டிற்கு அழைக்க மறந்திருந்தாள்.

யாரிடமும் பேசும் நிலையிலா அவள் இப்போது இருக்கிறாள். அதுவும் தன் குடும்பத்துடன் அவள் இப்போது பேசினால், உடைந்து விட மாட்டாளா?

“என்ன வசு மா? ஏதாவது பிரச்சனையா? எதுனாலும் என்கிட்ட நீ சொல்லலாம் வசு. என்னாச்சு?” என்று நரேன் கேட்க, வெளிவர துடித்த கண்ணீரை சிரமப்பட்டு உள்ளுக்கிழுத்தாள்.

வசுமதி புன்னகைத்தாள். பதில் சொல்ல முடியா பல கேள்விகளுக்குப் புன்னகை மட்டுமே பதிலாகிறது.

“என்ன வசு?”

“அட, சும்மா தான் வந்தேன் ண்ணா. டாக்டர் பார்த்ததை உங்ககிட்ட சொல்ல வந்தேன்.” என்றாள் அவள்.

அவளை நம்பாத பார்வை பார்த்த நரேன் மேற்கொண்டு எதுவும் கேட்டு அவளைச் சங்கடப் படுத்தவில்லை.

“அண்ணிக்கு என்னாச்சு?”

“சண்டை. நான்… நான் தான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்” என்று கரகரத்த குரலில் சொன்னான் நரேன்.

“என்ன சண்டை?, எதற்குச் சண்டை?” என்று கேட்கவில்லை வசுமதி. அவளுக்குப் புரிந்தது. அவர்களின் நிலையை நினைக்கையில், “இது என்ன மாதிரி விளையாட்டு கடவுளே” என்று கதற வேண்டும் போலிருந்தது.

“ஒருத்தி பல வருடங்களாகக் காத்திருக்கிறாள் அவளுக்குக் கொடுக்காமல், வேண்டாம் என்று சொல்கிற என் கையில் ஏன் வரத்தை கொடுத்தாய்?” என்று கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

மெல்ல கால் நீட்டி சோஃபாவில் சரிந்தாள், சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டாள்.

சில மணி நேரம் கழித்து நரேனின் மொபைல் அடிக்க, அந்தச் சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்தாள் வசுமதி. அவள் சென்று முகம் கழுவி விட்டு வருவதற்குள், நர்மதா அவளுக்காக மீண்டும் காஃபி கலந்திருந்தாள்.

அதைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து விட்டாள் வசுமதி.

“வீட்டுக்கு போறேன் அண்ணா, வரேன் அண்ணி” என்று அவள் நகர, “ஏய் காஃபி குடிச்சுட்டு போ வசு. உனக்காகத் தான் போட்டேன்” கத்தினாள் நர்மதா.

“என் பங்கையும் சேர்த்து அண்ணா குடிப்பார். இல்லண்ணா?” என்றாள். நரேன் சரியென்று தலையசைக்க, முயன்று வருவித்த சிறு புன்னகையுடன் எழுந்து வாசலை நோக்கி நடந்தாள் வசுமதி.

“இவளுக்கு என்னாச்சு? இவ்வளவு நேரம் இங்க இருந்துட்டு, தூங்கி எழுந்து போறா? கேட்டா சரியான பதில் இல்ல. இந்த வாசு பொண்டாட்டியை எப்படித் தனியா விட்டார்?” என்ற நர்மதாவின் குரல் கதவை அடைத்த பின்னும் வசுமதியின் காதில் ஒலித்தது.

“என்னாச்சு?” என்ற கேள்வியே வசுமதியின் மனதிலும் ஓடியது. அன்று காலை வரை தெளிந்த நீரோடையைப் போல இனிமையாகச் சென்ற வாழ்க்கை, சட்டென்று எப்படிப் பாதை மாறிப் போனது. அவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

எத்தனை மெதுவாக நடந்தாலும் வீட்டிற்குச் சென்று தானே ஆக வேண்டும். தன் ஃபிளாட் முன் நின்று மூடியிருந்த கதவையே வெறித்திருந்தாள் அவள். காதை கதவில் பொருத்தி இருந்திருப்பான் போல, அவள் அழைப்பு மணியை அழுத்தாமலேயே, உடனே கதவை திறந்து விட்டான் வாசுதேவன்.

அவனைச் சிறிதும் சட்டை செய்யாமல் பார்வையை நேராகப் பதித்து வீட்டிற்குள் சென்றாள் வசுமதி.

“சாப்பிட வா, வசு” என்று அவளின் கைப் பிடித்து நிறுத்தினான் வாசு. பட்டென்று கையை உதறி விட்டு, பாத்ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.

அணிந்திருந்த உடையுடன் ஷ்வரை திறந்து விட்டு அப்படியே நின்றாள். சடசடவென ஊசியாய் அவள் மேல் விழுந்தது நீர்.

அவளது அடக்கமான ஸ்டுடியோ ஃபிளாட் அவளுக்கு எப்போதும் மிகப் பிடித்தமான இடம். ஆனால், இன்றைக்கு ஒரு பெட்ரூம் வீடோ, அல்லது இரண்டு பெட்ரூம் வீடோ இருந்திருக்கலாம் என்று தோன்றியது. கணவனிடம் இருந்து தப்பித்து ஏதேனும் ஒரு அறைக்குள் சென்று கதவடைத்துக் கொள்ளலாமே. ஆனால், தற்போது அது முடியாது. அவனை எதிர்கொண்டே ஆக வேண்டிய சூழல்.

அவளின் எண்ணப்போக்கை உணர்ந்தது போலக் கதவை படபடவென்று தட்டினான் வாசு.

“எவ்வளவு நேரம் தண்ணில நிற்ப வசு. வெளில வா” கத்தினான். அவனை வெறுப்பேற்ற வேண்டும் என்றே மேலும் சிறிது நேரம் தண்ணீரில் நின்று விட்டே வெளியில் வந்தாள் வசுமதி.

ஈரம் சொட்ட சொட்ட வெளியில் வந்து உடை மாற்றினாள். உணவை மறந்து உறங்கப் போனாள்.

அவள் அருகில் வந்து அமர்ந்தான் வாசு, அவன் கையில் இருந்த தட்டில் இட்டிலும், தக்காளி சட்டினியும் இருந்தது. அவளது விலகலை, புறக்கணிப்பை பொருட்படுத்தாமல் அவளுக்கு உணவை ஊட்டத் தொடங்கினான்.

இதழ்களை இறுக மூடிக் கொண்டு பிடிவாதமாய் அமர்ந்திருந்தாள் வசுமதி. வலுக்கட்டாயமாக உணவை திணித்து, அவளைத் தண்ணீர் குடிக்கச் செய்தான். இத்தனை அன்பை பொழிந்து என்ன புரோஜனம்?

அவளுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.

அவளது கைப்பையில் மாத்திரைகளைத் தேடி எடுத்து வந்தான். அதைப் பார்த்ததும் மீண்டும் வசுமதியின் கோபம் மலையேறியது.

error: Content is protected !!
Scroll to Top