“என்ன அண்ணி இப்படிச் சிரிக்கறீங்க?, அண்ணாக்கு என்னாச்சு? ஏன் இப்படிக் கோபமா போறாங்க?” திரும்பி நர்மதாவின் தோள் பற்றிக் கேட்டாள் வசுமதி.
“அதுவா? அது ஒன்னும் இல்ல வசு. உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம் உங்க அண்ணா ஓவர் ரியாக்ட் பண்ணுவார்னு உனக்குத் தான் தெரியுமே.” என்றவள்,
“பழங்கள் செக்சன்ல மாம்பழம் இருந்தது, ஆப் சீசன்ல கிடைக்குதேன்னு ஆச்சரியப்பட்டு எடுத்துட்டு இருந்தேன் வசு. இவர், என் பின்னாடியே தொண தொணன்னு பேசிட்டே வந்திட்டு இருந்தார். திடீர்னு இவர் எதையோ எடுக்க வேற பக்கம் போக, நான் இவர், என் பக்கத்தில தான் நிக்கறார்னு நினைச்சிட்டுப் பதில் சொல்லிட்டு இருந்தேன்.”
“ஹ்ம்ம், இதுல என்ன..”
“இரு வசு, இனிமே தான் டுவிஸ்ட்டே வருது” என்று சிரித்துக் கொண்டே தொடர்ந்தாள் நர்மதா.
“நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்க, திடீர்னு எங்கிருந்தோ ஒரு அம்மா என் முன்னாடி வந்து நின்னாங்க. தமிழா? எந்த ஊர் மா? அப்படின்னு கேட்டாங்க. நானும் சும்மா இல்லாம நம்ம ஹிஸ்டரி, ஜியோகிரபி எல்லாத்தையும் விளக்கி சொல்லிட்டு இருந்தேன். நமக்கென்ன இது புதுசா வசு? யாராவது விசாரிச்சா சொல்றது தானே? ஆனா, நான் எல்லாத்தையும் சொல்லி முடிச்சதும், அந்தம்மா பட்டுனு கேட்டாங்க பாரு ஒரு கேள்வி. வீட்ல கல்யாணத்துக்குப் பார்க்கறாங்களாமா? நான் கூட என் பையனுக்குப் பொண்ணு தேடிட்டு இருக்கேன். அதான் கேட்டேன். இங்கேயே வேலை செய்யுற பொண்ணுன்னா ரெண்டு பேருக்கும் வசதியா இருக்குமில்லன்னு சொன்னாங்க.” இரண்டு பெண்களும் வெடித்துக் கொண்டு வெளிவந்த சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தனர்.
“அவ்வளவு தான். எப்படித் தான் கேட்டுச்சோ தெரியல. புஷ், புஷ்னு கோபமா மூச்சு விட்டுட்டு, என் பின்னாடி வந்து நிற்கறார் உங்க அண்ணா. “அவ என் பொண்டாட்டி” அப்படினு அந்தம்மாவை பார்த்து கத்திட்டு, என் கையைப் பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டு வந்தார். அந்தம்மா பாவம், சாரிம்மா தெரியாம கேட்டுட்டேன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம போனாங்க. எனக்குத் தான் ரொம்பச் சங்கடமா போச்சு வசு.” என்றாள் நர்மதா.
“அண்ணாவும் பாவம் தான், அண்ணி” என்றாள் வசுமதி.
“உங்க நொண்ணா பாவம் தான், இருக்காது பின்ன?. அடுத்து என்ன நடந்துச்சுன்னு கேட்டுட்டு அப்புறமா சொல்லு, யார் பாவம்னு.” அதுவரை இருந்த இலகுத் தன்மை மறைந்து கடினமாகியது நர்மதாவின் குரல்.
நன்றாகத் திரும்பி நர்மதாவின் முகத்தைப் பார்த்தாள் வசுமதி.
“நரேன் அம்மாவும் சரியா அந்நேரம் பார்த்து அங்க வந்துட்டாங்க. பக்கத்து செக்க்ஷன்ல காய்கறி எடுக்கத் தான் போனாங்க. அதை விட்டுட்டு, இவர் கத்தின சத்தம் கேட்டு உடனே எங்கக்கிட்ட வந்தாச்சு. அவங்களுக்கு அப்படியே லட்டை தூக்கி கையில கொடுத்தது போல ஆகிடுச்சு.” பேச்சை நிறுத்தி விட்டு, கண்களை இறுக மூடித் திறந்தாள் நர்மதா.
“ஐயோ, அம்மா என்ன அண்ணி சொன்னாங்க?” மெல்ல விசாரித்தாள் வசுமதி.
“இந்நேரம் உன் பொண்டாட்டி கையில ஒரு குழந்தை இருந்தா, யாரு இப்படி எல்லாம் வந்து அசிங்கமா கேட்கப் போறாங்க? புள்ளை இல்லனா, இப்படித் தான். கல்யாணம் ஆகலைன்னு தான் நினைக்க வைக்கும், கண்ட பேச்சையும் கேட்க வேண்டியது வரும்… பிளா, பிளா, பிளா… ” என்றாள் நர்மதா, அதற்கு மேல் அதை விளக்கி சொல்லும் அளவிற்கு அவள் மனம் இடம் கொடுக்காததால், அத்தோடு நிறுத்தி கொண்டாள்.
வசுமதி அவளின் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தாள். வேறு என்ன செய்தாலும் தற்சமயம் நர்மதாவை சமாதானப்படுத்த முடியாது என்று அவளுக்கு உறுதியாகத் தெரியும்.
“இந்த மனுஷன் ஏதாவது அவங்க அம்மாவை சொல்வார்னு பார்த்தா, எப்பவும் போல அம்மாவுக்குத் தான் சப்போர்ட். அப்பவும் அவங்க பையன் மேல கோவிச்சிட்டு வீட்டுக்கு நடந்தே போய்ட்டாங்க அத்தை. இந்தா ரெண்டு நிமிஷம் வாக்கிங் டிஸ்டன்ஸ் தானே?, நடந்து போகட்டும் விடுங்கன்னு சொன்னா, அதுக்கும் என்னைத் தான் முறைக்கறார். எல்லாம் என் நேரம்” சலித்துக் கொண்டாள் நர்மதா.
வசுமதி ஒன்றும் சொல்லவில்லை. எத்தனை நெருக்கமாகப் பழகினாலும், அவர்கள் வீட்டு உள்விவகாரங்களில் தலையிட கூடாது என்பதை அவள் தெளிவாக உணர்ந்தே இருந்தாள்.
நரேன் ஒன்றும் வசுமதியின் சொந்த அண்ணன் அல்ல. வசுமதி வேலைக்கெனத் துபாய் வந்த புதிதில் நர்மதாவை சந்திந்தாள். இருவரும் ஒரே கட்டிடத்தில் தங்கி இருந்ததால் அடிக்கடி சந்திக்க நேரிட்டது.
முதலில் “ஹாய், ஹலோ” என்று தொடங்கிய அவர்கள் நட்பு, பின்னர் வீடு வரை சென்று நெருக்கமானது. நர்மதாவை முதலில் “அக்கா” என்று தான் அழைத்தாள் வசுமதி. ஆனால், நரேனை “அண்ணா” என்றது நர்மதாவுக்குப் பிடிக்கவில்லை.
“இங்க பாரு வசு, ஒன்னு அவரை மாமா சொல்லு. இல்லைனா என்னை அண்ணி சொல்லி கூப்பிடு. என்னை அக்கான்னு சொல்லிட்டு, அவரை அண்ணான்னு சொல்ற? அதெப்படி சரி வரும்?” என்றாள் கறாராக. அப்போதைக்குச் சிரித்துச் சமாளித்தாள் வசுமதி. ஆனால், அதன் பின்னர் அவளுக்கு நர்மதாவும், நரேனும் அண்ணா, அண்ணி ஆகினர்.
நரேன், நர்மதா இருவருமே வேறுவேறு தனியார் நிறுவனங்களில் வேலைப் பார்த்தனர்.
நரேன் துபாயின் புகழ்பெற்ற கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி ஒன்றில் சிவில் என்ஜினீயராக இருந்தான். மேகங்களை எட்டிப் பிடிக்கும் அளவிற்கான உயர்ந்த கட்டிடங்களைக் கட்டுவதில் பெயர் போன நிறுவனம் அது.
பத்து வருடங்களுக்கு மேலாகத் துபாயில் தான் பணிபுரிகிறான் அவன். நரேனின் பெற்றோரும் அவர்களுடனே தங்கி இருந்தனர். முதலில் வெளிநாடு என்றதும் வர மறுத்தார்கள் தான். ஆனால், நரேனின் தம்பி சூர்யாவும், திருமணத்திற்குப் பின் அபுதாபியில் வேலை கிடைத்து வந்து விட, பிள்ளைகள் இருவரும் இங்கிருக்கும் போது பெற்றோர் அடிக்கடி அவர்களைப் பார்க்க வந்தனர்.
முதலில் விருப்பமே இல்லாமல் சில மாதங்கள் தங்கி செல்ல வந்தவர்களுக்கு, அங்கு வந்த ஒரு மாதத்திலேயே துபாய் பிடித்து விட, இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டனர். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு சென்று விட்டு வருவர், அவ்வளவு தான். மற்றபடி துபாய், அபுதாபி என மகன்கள் இருவரிடம் மாறி மாறி இருந்து கொண்டனர்.
நர்மதா தான் வசுமதியிடம் முதலில் பேசி, பழகியது என்றாலும் கூட நரேனின் குடும்பத்தினரும், அவனும், அவளை எவ்வித வேறுபாடும் காட்டாது அவர்களில் ஒருவரைப் போலவே நடத்தினர். அதிலும் நரேன் ஒரு உடன் பிறவா சகோதரனை போலவே அவளிடம் நடந்து கொண்டான்.
நர்மதாவை அவள் அண்ணி என்று அழைத்தாலும் கூட, வசுமதியை அவள் சொந்த தங்கையைப் போலவே நடத்தினாள். பாசம் காட்டினாள். கடந்த ஒன்றரை வருட பழக்கத்தில் மிகவும் நெருக்கமாகி இருந்தது அவர்களது உறவு. ஆனாலும், தன் எல்லைகளை அறிந்தே இருந்தாள் வசுமதி. அதை அவள் என்றைக்கும் கடக்கவும் முயற்சித்தது இல்லை.
அவ்வப்போது வயது மற்றும் அனுபவத்தின் காரணமாக நர்மதாவும், நரேனும் அவளிடம் அதிகமான உரிமை எடுத்துக் கொண்டாலும் கூட வசுமதி அதை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவே செய்தாள். பதிலுக்கு அதே உரிமையை அவர்களிடம் அவள் எதிர்பார்த்ததும் இல்லை, இதுவரை எடுத்துக் கொண்டதும் இல்லை.
“கெட்டதிலயும் நல்லது இருக்கும்னு சொல்லுவாங்க இல்ல, கேள்விப்பட்டிருக்கியா வசு? அது போல இந்த ரணகளத்திலயும் அந்தம்மா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலைன்னு நினைச்சு பேசினது, எப்படி இருக்கு தெரியுமா? குளுகுளுன்னு இருக்கு வசு.” என்று நர்மதா சொல்ல, கிளுக்கி சிரித்தனர் இருவரும்.
நர்மதாவிற்குச் சிரிப்பின் ஊடே கணவனின் முகம் நினைவில் வர,
“சரி வா, வசு. எவ்வளவு நேரம் இந்த வெயில்ல நிக்கறது?. வீட்டுக்குப் போகலாம். உங்கண்ணா இந்நேரம் காரில் பாட்டைப் போட்டு, சாந்தமாகி இருப்பார்” என்று வசுமதியின் கையைப் பிடித்து இழுத்தபடி கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தாள் நர்மதா.
அடுத்தச் சில நொடிகளில் காரை அடைந்து, மெல்ல தங்களை உள்ளே திணித்துக் கொண்டனர் பெண்கள் இருவரும்.
“முத்தத்தாலே பெண்ணே, சேலை நெய்வேன் கண்ணே” காரில் ஒலித்த பாடல் வரிகளும், சமாதான கொடியாக நரேனின் ரகசிய கண் சிமிட்டலும் நர்மதாவை செம்மையுற செய்தது. அதை மறைக்க, பின்னே அமர்ந்திருந்த வசுமதியின் பக்கம் திரும்பி விசாரணையில் இறங்கினாள் அவள்,
“அப்புறம் வசு, ஏதோ சொல்ல வந்த, ஆனா சொல்லல. எதையாவது எங்கக்கிட்ட இருந்து மறைக்க டிரை பண்றியா? அப்பா எதுக்குக் கால் பண்ணாங்க? முதல்ல அதைச் சொல்லு” என்றாள் முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு,
இப்போது வசுமதியின் முகம் சிவந்தது. ஆனால், அது வெட்கத்தினால் அல்ல. மெதுவாகத் தொண்டையைச் செருமி, அசௌகரியமான உணர்வை புறந்தள்ளி, “மாப்பிள்ளை வந்து.. ம்ப்ச்.. அது வந்து கண்ணன் மாமா.. என் தாய் மாமா..” என்று உளறியவள், மறு நொடி கண்ணை மூடி திறந்து, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள்.
நர்மதா கண்ணைச் சுருக்கி, அவளை விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தது வேறு சிரிப்பை மூட்டியது. ஆனால், தன் கேள்விக்குப் பதில் வராமல் அவள் விடப் போவதில்லை என்பது தெரிந்ததால் மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தாள் வசுமதி.
“அது வந்து… கல்யாணம், என் கல்யாண விஷயமா பேசினாங்க அண்ணி. வருண் அண்ணா, மாப்பிள்ளை டீடெயில்ஸ் எனக்கு மெயில் பண்ணி இருக்காங்களாம், அப்பா பார்க்க சொன்னாங்க.” மெல்லிய குரலில் சொன்னாள் வசுமதி.
“சூப்பர் வசு. மெயில் பார்த்தியா? மாப்பிள்ளை யாரு? என்ன பேரு? எங்க இருக்கார்? ஃபோட்டோ எங்க? காட்டு, காட்டு” என்று பரபரத்தாள் நர்மதா.
சத்தமாக விசிலடித்தான் நரேன்.
“நம்ம கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு நம்மு, பறந்து போகப் போகுது” நரேன் சோகமாகச் சொல்வது போலக் காட்டிக் கொண்டாலும், அவன் குரலில் மகிழ்ச்சியே நிறைந்திருந்தது.
“ஆளைப் பாரு, வாயை மூடுங்க, நல்ல விஷயம் பேசும் போது… ஹ்ம்ம்..” கண்ணை உருட்டி, கணவனைக் கண்டித்த நர்மதா, எட்டி வசுமதியின் கையைப் பிடித்து, “ஏன் வசு, என்ன பிரச்சினை? கல்யாணத்துல விருப்பம் இல்லையா? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அக்கறையாகக் கேட்டாள்.
“அப்படிலாம் எதுவும் இல்ல அண்ணி, வீட்டுக்கு போயிட்டு பேசலாமா?” என்றாள் வசுமதி.
ஒரு நொடி வசுமதியின் முகத்தைக் கூர்ந்துப் பார்த்து, “ஓகே, வசு.” என்று அவளின் கன்னத்தைத் தட்டிக் கொடுத்து விட்டு, காரை எடுக்கும் படி நரேனுக்குக் கண் காட்டினாள் நர்மதா.
கார் மெல்ல நகர்ந்தது, வசுமதியின் கைகள் வெகு வேகமாகத் தனது மெயிலை திறந்தது. தேடி தவிக்க நேராமல் அவளது இன்பாக்ஸில் அண்ணனின் மெயில் முதலாவதாக நிற்க, அதை அவள் ஒற்றை விரலால் தொட, புகைப்படம் மெல்ல விரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் கண் முன் பளீரென்று சிரித்துக் கொண்டிருந்தான் அவன், பெயர் வாசுதேவன்.
மாநிறம், சிரிப்பில் பளபளத்த கண்கள், நேரான நாசி என நல்ல களையான முகம். ஆனால், சட்டென அவளைக் கவர்ந்தது அவனின் சிரிப்பு தான். அந்தப் புகைப்படம் எடுத்தவர் கண்டிப்பாக அவனுக்கு மிக நெருக்கமானவராகத் தான் இருக்க வேண்டும், அவ்வளவு இயல்பாக, கச்சிதமாக இருந்தது புகைப்படம். அவன் நன்றாக மலர்ந்து அவனது அழகான வரிசைப் பற்கள் தெரியும்படி சிரித்துக் கொண்டிருந்தான்.
அந்தக் கண்களா, இல்லை சிரிப்பா எதுவென்று சரியாக அவளால் புள்ளிக் குத்த முடியவில்லை. வசுமதிக்கு, அவனைப் பார்த்ததுமே பிடித்திருந்தது.
அவள் வேலைப் பார்க்கும் அதே பர்துபாயின், பேங்க் ஸ்ட்ரீட்டில் தான் அவனுக்கும் வேலை. துபாயின் தனியார் வங்கியில் உயர் பதவியில் இருந்தான் வாசுதேவன். வசுமதியும் ஒரு சர்வதேச நிதி நிறுவனத்தின் துபாய் கிளையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வாசுதேவன் அளவிற்கு இல்லை என்றாலும் கூட, அவளும் நல்ல பொறுப்பான பதவியில் தான் இருந்தாள்.
திருமணத்திற்குப் பின் வேலையை விட வேண்டியது இல்லை என்பதே அவளுக்குப் பெரும் ஆசுவாசத்தையும், நிம்மதியையும் தந்தது. திருமணம் குறித்து நல்லவிதமாக அவள் யோசிக்கக் கூட, அது தான் முதல் காரணம்.
மெயில் திறந்திருக்க, மொபைலை மெல்ல நர்மதாவின் புறமாக நீட்டினாள் வசுமதி. அதை வாங்கிப் பார்த்தவளின் விழிகள் மெச்சுதலாக விரிந்தன. முகம் நிறைத்த புன்னகை அவளின் மகிழ்ச்சியைச் சொல்லாமல் சொல்லியது.
“பையன் பார்க்க நல்லா தான் இருக்கார்.” என்றாள் நர்மதா.
“அவங்க அப்பாக்கு உடம்பு முடியலையாம் அண்ணி, ஹார்ட் அட்டாக். அதனால அவசரமா ஒரு மாசம் லீவ் போட்டுட்டு ஊருக்கு போய் இருக்கார். இவர் தான் வீட்டுக்குக் கடைசிப் பையனாம். அவங்கப்பா, எனக்கு எதுவும் ஆகுறக்கு முன்னாடி என் பையன் கல்யாணத்தைப் பார்க்கனும்னு சொல்லி இருக்கார். அதான்… உடனே அவசர அவசரமா பொண்ணு தேடி இருக்காங்க.
அவங்க அப்பா ஆபரேஷன் முடிஞ்சு ஒரு வாரம் கழிச்சு, ஏதோ வேண்டுதல் நிறைவேத்த மதுரையில இருக்க அவங்களோட குலதெய்வம் கோவிலுக்குப் போய் இருக்காங்க. அப்போ சொந்தக்காரங்க மத்தியில இவரோட கல்யாண பேச்சு அடிபட்டிருக்கு. எங்க ரெண்டு குடும்பத்துக்கும் தெரிஞ்ச, என்னோட தாய் மாமா, என்னைப் பத்தி அவங்கக்கிட்ட சொல்லி இருப்பார் போல..” அப்பா போனில் சொன்னதை அவர்களிடம், அப்படியே ஒரு வார்த்தை கூட மாற்றாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தாள் வசுமதி.
“அது போதுமே. உடனே மாப்பிள்ளை வீடு, உங்க மாமா பேச்சை தெய்வ வாக்கா எடுத்துட்டு இருப்பாங்களே?” என்றாள் நர்மதா, நரேனை முறைத்தபடி, ஆனால் அதைச் சட்டை செய்யாமல் காரை செலுத்திக் கொண்டிருந்தான் அவன்.
“நம்ம ஊர்ல பெரும்பாலான கல்யாணங்கள் எங்க முடிவாகுது தெரியுமா வசு? கல்யாண வீட்லயும், கோவில்லயும் தான்” அவளே கேள்வியும் கேட்டு, பதிலும் சொல்லிக் கொண்டாள் நர்மதா.
நர்மதா, நரேன் திருமணமும் பெற்றோர் பார்த்து நிச்சயித்தது தான். மருத்துவமனை படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நரேனின், அப்பா வழி பாட்டியின் கடைசி ஆசையை நிறைவேற்ற நடத்தப்பட்ட இன்ஸ்டன்ட் திருமணம் தான் அவர்களது.
என்ஜினீயரிங் கடைசி வருட தேர்வுகளை முடித்து விட்டு முடிவுகளுக்காய்க் காத்திருந்த நர்மதாவை, திருமண முடிவெடுக்கச் செய்து, அவசர அவசரமாக மணப் பெண்ணாக்கி இருந்தனர்.
அடுத்த இரண்டே மாதத்தில் திருமணம் முடித்து, நாடும் கடத்தி இருந்தனர். வசுமதிக்குக் கோவில் என்றால், நர்மதாவின் விவரங்கள் கல்யாண வீட்டில் பகிரப்பட்டது. அதைத் தான் கேலியாக, இப்போது நரேனின் முகத்தில் எறிந்து கொண்டிருக்கிறாள் அவள். அவனுக்கு அது கேட்டு, கேட்டு பழகி விட்டதால், இப்போதெல்லாம் அதைப் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.
“நீ மட்டும் வரலைன்னா, எனக்கு யார் வாழ்க்கை கொடுத்து இருப்பா நம்மு” என்று பட்டென்று அவள் காலிலேயே விழுந்து விடுவான் அவன்.
வசுமதிக்கும் அவர்களின் இந்தச் செல்லச் சண்டைகள் பழகி விட்டது, சமயங்களில் பார்ப்பதற்குச் சிறுபிள்ளை தனமாகத் தான் இருக்கிறது. இப்போதும் அப்படித் தான் இருந்தது அவளுக்கு, உதடு பிரியாமல் புன்னகைத்தாள் அவள்.
“சாரி வசு. நீ மேல சொல்லு, நான் இனி பேசல” என்று நர்மதா சொல்ல, மீண்டும் சொல்லத் தொடங்கினாள் வசுமதி.
“முதல்ல அவங்க வீட்ல இருந்து, அப்பாவுக்குப் போன் பண்ணி பேசி இருக்காங்க அண்ணி. மாப்பிள்ளை வீடு, எங்க தாய் மாமாக்கு தெரிஞ்ச குடும்பம். எங்க அத்தை வழி உறவு. அப்பா, அண்ணா விசாரிச்ச வரை எல்லோரும் ரொம்ப நல்ல குடும்பம்னு சர்டிஃபிகேட் கொடுத்து இருக்காங்க. எல்லாமே சரியா இருக்கவும், மூனு நாள் முன்னாடி ரெண்டு குடும்பமும் நேர்ல பார்த்துக்கிட்டாங்க போல, நம்ம வீட்ல அம்மா, அப்பா, அண்ணா எல்லோருக்கும் அவங்களைப் பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. அவங்களுக்கும் என்னை ரொம்பப் பிடிச்சிருக்கறதா, அப்பா கிட்ட சொல்லி இருக்காங்க. சோ, இப்போ நான் தான் டிசைட் பண்ணனும்” நிறுத்தி, நிதானமாகச் சொன்னாள் வசுமதி.
“ஆமா, இவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க மாதிரி முடிவை நம்மகிட்ட தான் தள்ளி விடுவாங்க. என்னமோ நாம வேண்டாம்னு சொன்னா, உடனே விட்டுட போற மாதிரி தான்.. ஹ்ம்ம்..” பொய்யாக அலுத்துக் கொண்டாள் நர்மதா, பார்வை நரேனின் மேல் பதிந்திருந்தது.
அதற்குள் அவர்கள் வீட்டை அடைந்திருக்க, வசுமதியின் காரை பார்க் செய்து சாவியை அவளிடம் நீட்டினான் நரேன்.
நர்மதாவின் கையில் இருந்து, வசுமதியின் மொபைலை பிடுங்கி நிதானமாகப் பார்த்தான். பின்னர் வசுமதியிடம் மொபைலை திருப்பிக் கொடுத்து விட்டு, லிஃப்ட்டை நோக்கி நகர்ந்தான் அவன்.
அவனைப் பின் தொடர்ந்து லிஃப்ட்டினுள் நுழைந்தனர் பெண்கள் இருவரும்.
“நான் வீட்டுக்கு வரல, வசு ஃபிளாட்கு போறேன்” என்றாள் நர்மதா, அவர்களது தளத்திற்கான எண்ணை அழுத்தி விட்டு மனைவியைத் திரும்பி பார்த்த நரேன்,
“ஹ்ம்ம் ஓகே. மதியம் சாப்பாட்டுக்கு வந்திடுவியா?” என்றான் புருவம் உயர்த்தி,
“மாட்டேன். நான், இன்னும் கோபமா தான் இருக்கேன். அதனால் இப்போதைக்கு அங்க வர்றதா இல்ல. ஆனா, நீங்க வசு ஃபிளாட்கு வந்தா சோறு கிடைக்கும்” என்றாள் உதடு சுழித்து,
“சரி, சரி” என்று சிரித்துக் கொண்டே, லிஃப்ட்டை விட்டு வெளியேறி இடது பக்கமாகத் திரும்பி அவர்களது வீட்டை நோக்கி நடந்து போனான் நரேன். அங்கேயே நின்று கணவன் போகும் வரை பார்த்திருந்த நர்மதா, அவன் தலை கண்ணை விட்டு மறைந்ததும் வசுமதியின் கைப் பற்றி, வலதுபுறம் இருந்த அவளது பிளாட்டை நோக்கி நடந்தாள்.