பூமரப் பாவைகள் – 19 (2)

சிறிது நேரத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்த நரேன் நெருங்கி மனைவியின் கரம் பற்றி, “ஐவிஎப், ஐயூஐ எதுன்னு நீயே முடிவு பண்ணு நம்மு. நாம இன்னொரு முறை முயற்சி பண்ணலாம்” என்று அவள் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னான் அவன்.

அவளுக்குச் சத்தமாகச் சிரிக்க வேண்டும் போலிருந்தது, “ஓ” வென்று கதறி அழ வேண்டும் போலிருந்தது. தலையை எதிலாவது முட்டிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

‘அவள் என்ன கேட்டாள், பதிலுக்கு அவன் என்ன சொல்கிறான். இது இன்றைக்கு அவளுக்காக, அவளது கண்ணீருக்காகப் பாவம் பார்த்து அவன் செய்வது. நாளையே இதற்காக அவன் வருந்தவும் செய்வான்’ மனதில் யோசித்தவள், கணவனின் கண்களை ஏறிட்டாள்.

“வேணாம் நரேன். எதுவும் வேணாம். இனி நான் எந்த ட்ரீட்மெண்ட்டும் எடுக்கறதா இல்ல. குழந்தை வரும் போது வரட்டும். இன்னைக்குச் சரின்னு சொல்வீங்க, நாளைக்கு வருத்தப்பட்டு என்னைக் குத்தம் சொல்லுவீங்க. என்னால முடியாது. நான் ஒன்னும் உங்களோட விளையாட்டுப் பொம்மை கிடையாது. நீங்க நினைக்கிற நேரம் என்னை வச்சு கூத்து காட்ட, நான் ஒன்னும் மரப் பாவை இல்ல. உங்களைப் போலவே இரத்தமும், சதையும் உள்ள மனுஷி..” அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான் நரேன். அவளது வார்த்தைகளை அவனால் எளிதாக எடுத்துக் கொண்டு, ஜீரணிக்க முடியவில்லை. அவனைப் பார்த்து என்ன சொல்லி விட்டாள் அவள்.

“நீ என்ன பேசறன்னு கொஞ்சமாவது உனக்குத் தெரியுதா?” என்று கேள்வியாக நிறுத்தினான். அவன் கேள்வியே கேட்காதது போலப் பாவித்துப் பேச ஆரம்பித்தாள் நர்மதா.

“ஒருவேளை நமக்குக் குழந்தையே வராம போனாலும்.. இந்த உலகம் என்னைத் தானே கேள்வி கேட்க போகுது. என்னைத் தானே குற்றம் சொல்லப் போகுது. இத்தனை நாள் பதில் சொன்ன நான், இனியும்…”

“ஓ, பிளீஸ் நர்மதா, ஸ்டாப் இட். திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லாத.. என்னமோ நீ மட்டும் தான் கஷ்டப்படுற மாதிரி, இது என்ன பேச்சு? ஹான்?” குரல் உயர்த்திக் கத்தினான். அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

“எப்பப் பாரு, நான், நான், நான்… எப்பவாவது என்னைப் பத்தி யோசிச்சு பார்த்திருக்கியா நீ? என் கவலை, என் கஷ்டம், என் மனசு… ம்ஹூம்… பெண்களை மட்டும் கேள்விக் கேட்ட காலம் எல்லாம் எப்பவோ மலையேறி போயாச்சு நர்மதா. இப்போ ஆண்களையும் கேள்விக் கேட்கறாங்க. அது நல்லதும் தான்.

ஆனா, உனக்கு உன்னைப் பத்தி மட்டும் தான் கவலை. குழந்தை இல்லனா உனக்கு மட்டும் தான் வேதனையா? எனக்கு இல்லையா? உன்னை மட்டும் தான் கேள்வி கேட்கறாங்களா? என்னைக் கேட்கலையா? உனக்கு மட்டும் தான் டெஸ்ட்ஸ் பண்றாங்களா? எனக்கு இல்லையா? சொல்லு நர்மதா, பதில் சொல்லு?” ஆவேசமாய்க் கத்தியவனை மிரண்டு போய்ப் பார்த்தாள் நர்மதா. அவள் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

என்ன பதில் சொல்வாள் அவள். அவன் கேட்பதும் உண்மை தானே? அவனைக் குறித்து அவள் யோசித்ததே கிடையாது.

“எங்கம்மா, எங்கப்பா, என் தம்பி எல்லோருக்கும் நானும் பதில் சொல்றேன் நர்மதா. என்ன ஆச்சுன்னு கேட்கும் போது, உன்னை மாதிரியே நானும் பதில் சொல்ல முடியாம முழிச்சு நின்னிருக்கேன். உங்கப்பா, “எப்ப, மாப்பிள்ளை நல்ல செய்தி சொல்லப் போறீங்கனு” கேட்டப்போ, கையாலாகாத அவமானத்துல தலை குனிஞ்சுருக்கேன்.” அவன் சொல்வதை நம்ப முடியாத அதிர்ச்சி அவள் கண்களில்.

“என் ப்ரெண்ட்ஸ், கூட வேலை பார்க்கறவன், கூடப் படிச்சவன் எல்லோருக்கும் குழந்தை இருக்கு. உனக்கு எப்படான்னு என்னைக் கேட்கும் போது, நானும் பதில் தெரியாம தவிச்சுருக்கேன் நர்மதா. கடந்த மூனு வருஷத்தில் எல்லா ப்ரெண்ட்ஸையும் தொலச்சுட்டேன். ஏன்னா, ஏன்னா… அவனுங்க கேள்வியில் இருந்து தப்பிக்க… அக்கறையில் இருந்து தப்பிக்க… என்னமோ குழந்தை இல்லனா, நான் ஆம்பளையே இல்லாத.. இல்லாத மாதிரி…” மேலே சொல்ல முடியாமல் சுவரில் இருந்த புகைப்படத்தை வெறிக்க ஆரம்பித்தான். உணர்ச்சிகளை அடக்கியதில் அவனது தொண்டைக் குழி ஏறி இறங்கியது.

பல நாட்கள் அடக்கி வைத்திருந்ததை இன்று வாய்ப்பு கிடைக்கவும் கொட்டி தீர்த்து விட்டான் நரேன்.

நர்மதாவின் வலக்கரம் நீண்டு, அவனது இடக் கரத்தை பற்றி அழுத்தி கொடுத்தது.

“என்னென்ன பேசுவானுங்க தெரியுமா? என்னவோ எனக்கு என் பொண்டாட்டியை சந்தோசமா வச்சுக்கத் தெரியாத மாதிரி.. அவனுங்க கொடுக்கற ஐடியாக்களும், ரெகமெண்ட் பண்ற டாக்டர்களும்…” கண்ணைத் தேய்த்து, தலையை உலுக்கி கொண்டான்.

“என்னை உட்கார வச்சுப் பாடம் மட்டும் தான் எடுத்தது இல்ல. விட்டா..” அவனை மேலே பேச விடாமல், அவன் வாயில் கை வைத்து தடுத்தாள் நர்மதா. இதில் இப்படி ஒரு கோணம் இருக்கும் என்று அவள் யோசித்தது கிடையாது.

அவன் பக்கமிருந்து அவள் என்றைக்கும் சிந்தித்தது இல்லை. அவனை எப்போதும் குற்றவாளியாக நிறுத்தி பார்த்ததில்,

அவன் பக்க நியாயத்தைப் பார்க்க தவறி இருந்தாள் அவள். அவனும் தன் அளவிற்குப் பாதிக்கப் பட்டிருக்கிறான் என்பதைக் கேட்கையிலேயே அவளுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.

தன் தவறு உணர்ந்து,

“சாரி நரேன். நான் உங்களைப் பத்தி யோசித்ததே இல்ல.. சாரி” என்று கலங்கி இருந்த அவனது கண்களைப் பார்த்து சொன்னாள் அவள்.

“ம்ப்ச், நீ ஏன் சாரி சொல்ற நம்மு. நான் தான் சொல்லனும். ஏதேதோ பேசிட்டேன். சாரி டா” என்றான் அவள் கண்களைப் பார்த்து, பதிலுக்குத் தன் கண்களை மூடித் திறந்தாள் நர்மதா. எதுவுமே சொல்லத் தோன்றவில்லை.

“நான் முன்னாடியே சொன்னது தான் நம்மு, எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு மறந்துட்டு நமக்காக வாழ்வோம் டா, பிளீஸ்” என்றான் நரேன். அவளுக்குச் சம்மதிப்பதை தவிர வேறு வழியிருக்கவிலை.

மனம் முழுவதும் நிறைந்திருந்த ஆசையை அவனிடம் கொட்ட முடியாது, தனக்குள் விழுங்கினாள் நர்மதா.

“நாம நமக்காக வாழ்ந்து எவ்வளவு நாள் ஆச்சு? எவ்வளவு வருஷங்கள் ஆச்சு? யோசிச்சு பாரு நம்மு. டாக்டர் சொன்ன நாள், தேதின்னு அந்தக் கணக்கு பின்னாடியே ஒடிட்டு இருக்கோம். இந்த மூனு வருஷத்தில் நாம ரெண்டு பேரும் மனசு ஒன்றி, சேர்ந்து இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிடலாம் நம்மு. என்னால முடியல டா. ஐ மிஸ் யூ.” என்றான் குரல் நடுங்க, அவள் கண்கள் மீண்டும் கலங்கி நின்றது.

அவள் மனதிற்குள் பெரும் ஆயாசம் வந்து சூழ்ந்தது. கணவனுக்கு என்ன சொல்லித் தன் நிலையைப் புரிய வைப்பதென்ற ஆதங்கம் பெரிதாய் எழுந்தது.

“மீட்க முடியாத பல வருடங்களை இழந்து நிற்கிறோம். ம்ப்ச், இந்த மெடிசின்ஸ், ட்ரீட்மெண்ட்ஸ் இதெல்லாம் உண்மையா தேவைப்படுறவங்களுக்கு உதவட்டும் டா, நாம வெயிட் பண்ணுவோம் பிளீஸ். நம்ம குழந்தை நம்ம காதலின், அன்பின் வெளிப்பாடா உருவாகனும் நம்மு. ஏதோ ஒரு ஹாஸ்பிட்டல் லேபில் இல்ல. உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்” என்றான் நரேன்.

நிற்பது வீழும், நகர்வது தான் வாழும் என்பதை நர்மதா நன்கு அறிவாள். ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்காமல் நகர்வது என்று முடிவெடுத்து விட்டாள் அவள்.

இந்த முடிவிற்காக அவள் மிகவும் வருந்துவாள் தான். ஆனால், தேர்ந்தெடுப்பதற்கு அவள் முன் வேறு வாய்ப்புகளும் இல்லை எனும் போது அவளும் என்ன தான் செய்வாள்.

error: Content is protected !!
Scroll to Top