வெளிநாட்டு வேலை, லட்சங்களில் சம்பளம், தடபுடலாக நடந்த திருமணம். ஆனால், அவள் விருப்பத்திற்கு ஒரு குழந்தையைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதைக் கலைப்பதற்கு மனம் இருக்கிறது. அதற்குப் பணமும் இருக்கிறது. ஆனால், பெற்று வளர்க்கத் தான் பணம் போதவில்லை போலும்… என்ன வாழ்க்கை இது?
“ரெண்டு பேருமே இப்போ எமோஷனல்லா இருக்கோம். இப்போ எடுக்கிற முடிவுகள் சரியா இருக்காது. நிதானமா யோசிச்சு நாளைக்கு ஒரு முடிவுக்கு வரலாம் வசு.” என்ற அவன் குரலில் கலைந்து, அவன் முகம் பார்த்தாள் வசுமதி.
இத்தனை நாள் அவன் மீதிருந்த அளவு கடந்த அன்பை, சற்றே பின்னுக்குத் தள்ளி விட்டு, வெறுப்பின் மரம் ஒன்று அவளுள் துளிர்க்க ஆரம்பித்தது.
அவளின் கண்களில் இருந்த வெறுப்பைக் கண்ட வாசு, அவளுக்கு எப்படித் தன் நிலையைப் புரிய வைப்பது என்று புரியாமல் சோர்ந்து போனான். இதனால் மனைவி தன்னை வெறுத்து விடுவாளோ என்ற எண்ணம் தந்த பயமே அவன் நெஞ்சில் பாரமேற்றியது. அவளுக்குக் கொஞ்சமேனும் தன்னைப் புரிய வைத்து விடும் நோக்கில்,
“பணம் மட்டும் காரணம் இல்ல வசும்மா. நமக்கு இப்பத் தான் கல்யாணமாகி இருக்கு. முழுசா ரெண்டு மாசம் கூட முடியல. அதுக்குள்ள… ம்ப்ச், அதை விடு. நாம முதல்ல ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கனும். நாம வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே நமக்கு நடுவுல குழந்தை வந்துட்டா… இன்னும் உன்னை முழுசா கொண்டாடி காதலிக்கக் கூட இல்லை நான்… இதுல…” என்று தோள் குளுக்கியவன், “இன்னும் ஹனிமூன் போகல…” அவன் காரணங்களை அடுக்கிக் கொண்டே போனான்.
அவனது காரணங்களைக் கேட்டு, “ஐயோ” என்றிருந்தது வசுமதிக்கு. நிற்க முடியாமல் கால்கள் துவள, படுக்க வேண்டும் போலிருந்தது.
தூக்கத்தை விட, துக்கத்திற்கு வேறு என்ன நல்ல மருந்து இருந்து விட முடியும்? தூங்கி எழுந்தால் உலகம் மீண்டும் நேராகித் தன் சுழற்சியைத் தொடங்கி விடும் தானே? அப்போது அவளது பிரச்சனையும் நேராகி விடும் தானே? சிந்தனைகளில் சிறகடித்துக் கொண்டிருந்தாள் வசுமதி. ஆனால், வாசுவோ பேசிக் கொண்டேயிருந்தான். அவளால் தான், அவன் பேசும் எதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு சோக மௌனத்துடன் அவன் முகம் பார்த்திருந்தாள் அவள்.
“நீயே குழந்தை வசும்மா, உனக்குப் போய்.. இதுல உனக்கே குழந்தைன்னா… என்னால அதை நினைச்சு பார்க்கக் கூட…” அதற்கு மேல் அவனது வார்த்தைகளில் கவனம் செலுத்தவில்லை வசுமதி.
அவள் பார்வை சட்டென்று படுக்கையின் பக்கம் சென்று திரும்பியது.
“என்ன பார்வை? அங்கேயும் குழந்தையாகத் தான் கொல்ற, அதனால் தான் குமரியானதும் குழந்தை பெத்துக்கலாம்னு சொல்றேன்” பட்டென்று பதில் வந்தது.
அவள் விழிகள் மீண்டும் தளும்பி நின்றது, அவனிடம் தன் நிலையை விளக்கி விட முடியாத தவிப்பு.
அவளைக் குழந்தை, சிறுபிள்ளை என்று தொடர்ந்து அவன் சொல்வது அவளுள் எரிச்சலை மூட்டியது.
“குழந்தைன்னு தெரியுது இல்ல? அப்புறம் என்னத்துக்குக் கல்யா….” கையை வீசி அவள் வாயை மூடி, மேலே பேச விடாமல் தடுத்தான் வாசு. அவன் கண்கள் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது.
“சொல்லாத வசு. எதையும் யோசிச்சு பேசணும்னு இப்ப தானே சொன்னேன்” பல்லைக் கடித்தபடி உறுமினான்.
அவனது கையைத் தனது பலம் முழுவதையும் செலுத்தி, தன்னிடம் இருந்து வெடுக்கென்று அகற்றினாள் அவள்.
“குழந்தை வேண்டாம்னா.. கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாது நீங்க. அந்தக் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் என்னைத் தொட்டிருக்க…”
“வேண்டாம் வசு, டோண்ட் சே இட்” கர்ஜித்தான். அவன் கண்கள் நெருப்பு கோளங்களாய் ஜொலித்தது.
அவனைக் காயப்படுத்தும் நோக்கில் சொன்ன வார்த்தைகள் தான், ஆனால் அவளுக்கும் வலித்தது. இதென்ன வேதனை. அவன் வார்த்தைகளும் அவளைத் தான் காயப்படுத்துகிறது. அவள் வார்த்தைகளும் அவளைத் தான் காயப்படுத்துகிறது. வலியில் அவன் முகம் கசங்கினால் அவளுக்குத் தான் வலிக்கிறது.
அவர்களுக்கு இது நடந்திருக்க வேண்டாம். இன்பமும், துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், அவை இரண்டும் மாற்றி மாற்றி அவள் வாழ்வில் இறகு பந்து விளையாட வேண்டாம் தான்.
வசுமதி கணவனின் முகத்தை நேராகப் பார்த்தாள். அவனும் அச்சமயம் அவளைத் தான் கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான். அந்தக் கோபமான சூழலிலும் அவன் கண்களில் அவளுக்கான காதலே தெரிந்தது. அவனிடம் இருந்து விலகி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் வசுமதி. கைகள் சுவரில் மாட்டியிருந்த கார் சாவியைக் கைப்பற்றின.
“வேண்டாம் வசு. யூ ஆர் நாட் இன் தே ரைட் மைண்ட் டு ட்ரைவ், காரைத் தொடாத. அதுவும் என்னோடது ஃபோர் வீல் டிரைவ், உனக்கு அதை ட்ரைவ் பண்ணி பழக்கம் இல்ல” எச்சரித்தான்.
அவளால் திரும்பி அவனை எரித்து விடுவது போல் பார்க்க மட்டுமே முடிந்தது. அவன் வார்த்தைகளில் நிதர்சனம் உரைத்தது. அவன் ஸ்தம்பித்து நிற்கையிலேயே சாவியைச் சுழற்றி அவன் மார்பில் எரிந்து விட்டு, விட்டை விட்டு வெளியேறினாள் வசுமதி.
“வசு…” என்று அவள் பின்னேயே அவன் ஓடி வர,
“எங்கேயும் போகல, இங்க தான் இருக்கேன்” எரிச்சலுடன் மொழிந்து விட்டு, விறுவிறுவென்று நடந்தாள் வசுமதி.
திருமணத்திற்குப் பின் வரும் முதல் சண்டை, இத்தனை பெரிதானதாக இருந்திருக்க வேண்டாம் என்றே அவளுக்குத் தோன்றியது.
ஒரு கூடலில் நிச்சயம் சமாதானம் ஆகி விட முடியாது. இனி அவனுடன் மனமொத்து கூடுதல் அவளுக்குச் சாத்தியமா? அவள் மனம் கனத்துப் போனது. கைகள் தானாக வயிற்றில் பதிந்தன. கசிந்த கண்களை அழுத்தி விட்டு, நேராக நிமிர்ந்து நடந்தாள் வசுமதி.
மனைவி வீட்டை விட்டும், தன்னை விட்டும் விலகி தூரமாகப் போவதை, தடுக்க இயலாது, கையைக் கட்டியபடி, மனம் முழுவதும் வெறுமை படர அவள் போகும் திசையையே பார்த்தபடி நின்றிருந்தான் வாசுதேவன்.