“நரேன்” என்ற மனைவியின் அழைப்பில் அப்படியே உறைந்து போனான் நரேன். அவனுக்கு இந்தக் குரலை நன்றாகத் தெரியும். அவள் எப்போது, எதற்காக இந்தக் குரலை பயன்படுத்துவாள் என்பதையும் அவன் நன்கு அறிவான்.
அவனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மனைவியைத் தவிர்க்கும் வழி புலப்படாமல் திரும்பி அவளைப் பார்த்தான் அவன்.
“நரேன்..” என்று மீண்டும் ராகம் இழுத்தாள் நர்மதா.
“பிளீஸ், வேண்டாம் நர்மதா. அதுவும் இன்னைக்கு வேண்டாம் பிளீஸ். ஏற்கனவே வசுக்கு உடம்பு முடியலை, அதுவே பெரிய கவலையா இருக்கு.. இதுல நீ வேற ஆரம்பிக்காத..” அவள் முகம் பார்ப்பதை தவிர்த்து, சோஃபாவில் சென்று அமர்ந்தான் அவன்.
இரு கைகளையும் இடுப்பில் பதித்து, அவன் முன் வந்து நின்றாள் நர்மதா. முகத்தில் பிடிவாதம் குடியேறி இருந்தது. நரேன் வேறு வழியின்றி,
“சொல்லு மா” என்றான்.
அவ்வளவு தான், ஆரம்பித்து விட்டாள் நர்மதா.
“பிளீஸ் கோபப்படாதீங்க நரேன். நாம… நாம…” எப்படி அவனுக்கு விளக்குவது என்று புரியாமல் முழித்தாள் அவள். அவனுக்கு ஆயாசமாக வந்தது. கண்களை மூடிக் கொண்டு தலையைப் பின்னுக்குச் சாய்த்தான்.
“நாம திரும்பவும் ஒரே ஒரு தடவை டிரை பண்ணி பார்ப்போமா நரேன்” என்று அவள் கெஞ்சலாகக் கேட்க,
“எதை டிரை பண்ணனும்?” என்று அவன் பதில் கேள்வி கேட்கவில்லை. பதில் தெரிந்தே யாராவது கேள்வி கேட்பார்களா என்ன? அவனுக்குத் தான் அவளது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரியுமே, அதனால் வாயை மூடிக் கொண்டு சிலையென அமர்ந்திருந்தான்.
“நரேன்… உங்களைத் தான் கேட்கறேன். காது கேட்காதது மாதிரி உட்கார்ந்திருக்கீங்க.?” கத்தினாள். நரேனுக்குக் கண்களோடு சேர்த்து காதுகளையும் இறுக மூடிக் கொள்ள முடிந்தால் தேவலாம் போலிருந்தது.
“இவ இப்படித் தான் கத்துவா, அப்புறம் வேற வழியில்லாம அமைதி ஆகிடுவான்னு தானே நினைக்கிறீங்க?. அது நடக்காது. ஒழுங்கா பதில் சொல்லுங்க நரேன்”
“வசு எதுவும் கால் பண்ணாளா? டாக்டர் என்ன சொன்னாங்களாம்?” வசுமதியை பற்றி விசாரித்துப் பேச்சை மாற்றினான் அவன். நர்மதாவின் முகம் சிவக்க தொடங்கியதிலேயே அவள் தன்னைக் கண்டு கொண்டாள் என்று புரிந்து கொண்டான் நரேன்.
“என்ன தங்கச்சி பாசம் ஓவரா பொங்குது? என்னமோ கூடப் பிறந்த தங்கச்சி மாதிரி தான்… அப்படியே பாசமலர்…” அதற்கு மேல் தொடர முடியாமல் நிறுத்தினாள் நர்மதா. நரேனை கோபப்படுத்த வேண்டும் என்றே அப்படி ஆரம்பித்தாள். ஆனால், அவளாலேயே அதை மனம் உவந்து சொல்ல முடியவில்லை. வசுமதி அவளுக்கும் மிகப் பிரியமானவள் எனும் போது, அவளால் அதற்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியவில்லை.
“சாரி…” என்று நிலம் பார்த்து சொன்னாள்.
“அவளுக்குக் கால் பண்ணேன், ஆனா அவ எடுக்கல. ஒன்னுமில்ல, நல்லா இருக்கேன்னு மெஸேஜ் பண்ணி இருக்கா.”
“ஹ்ம்ம் ஓகே” என்ற நரேன்,
அவளின் கைப் பிடித்து இழுத்து, தனதருகில் அமர்த்தினான்.
“வாழ்க்கையின் மிகப் பெரிய சோகம் என்ன தெரியுமா நம்மு?”
இந்தக் கேள்வியை மற்றவர்களிடம் கேட்டால், என்ன பதில் சொல்வார்கள் என்று நர்மதாவிற்குத் தெரியாது. ஆனால், அவளின் பதில் அறிந்தே, நரேன் ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறான் என்று அவனை நிமிர்ந்து நோக்கினாள் அவள்.
“வாழ்வின் மிகப் பெரிய சோகமே, வாழ்க்கையை ஒரு முறை தான் வாழ முடியும் நம்மு. அப்படினு மிருணாள் சென் சொல்றாங்க. சத்தியமான உண்மை இல்ல? ஆனா, அந்த ஒரே ஒரு முறை வாழுற வாழ்க்கையை எவ்வளவு காம்பிளிகேட் பண்ணிக்கறோம் நாம” என்றான் நரேன்.
“ஆனா, வாழ்வின் சோகம்னு என்னைக் கேட்டா…” என்று ஆரம்பித்தவளை, மேலே பேச விடாமல் கை நீட்டி தடுத்தான் அவன்.
“எனக்குப் பிராமிஸ் பண்ணி இருக்க நர்மதா. அதை மறந்துடாத” என்று அவளுக்கு நினைவு படுத்தினான்.
“எஸ், எனக்கு ஞாபகம் இருக்கு. ஆனா, சண்டை போட மாட்டேன்னு தான் சத்தியம் பண்ணேன். குழந்தை பத்தி பேசவே மாட்டேன்னு சத்தியம் பண்ணல” படபடவெனப் பொரிந்தாள் அவள்.
“எனக்கு டாக்டர் பார்த்து ரெண்டு மாசம் ஆச்சு நரேன். எனக்கும் நாள் தள்ளிப் போய்…”
“ஓ, பிளீஸ் நர்மதா, ஸ்டாப் இட்.” இம்முறை வழக்கத்திற்கு மாறாக அவன் கத்தினான். அதில் அதிர்ந்து, எழுந்து நின்றாள் நர்மதா.
“இது ஒன்னும் உனக்குப் புதுசு இல்லையே. நாள் தள்ளிப் போறதும், அப்புறம் ஒன்னுமில்லாம போறதும்.. இதுக்காக இப்போ டாக்டர் கிட்ட போய்.. அப்புறம் ஏமாந்துட்டு வரணுமா?” முதல் முறையாகத் தன்னை மறந்து வார்த்தைகளை விட்டான் நரேன். அது அவனது வழக்கமே இல்லை.
நர்மதா வாயடைத்து போனாள். அவள் மனம் சுக்கலாக நொறுங்கி போனது. உலகமே அவளைக் கேள்வி கேட்ட போது கூட அவளுக்கு இத்தனை வலித்தது இல்லை. ஆனால், இன்றைக்கு நரேனின் வார்த்தைகள் அவளைக் கொன்று போட்டது.
அவளுக்குத் தலைச் சுற்றியது, கால்கள் நிற்க முடியாது வலுவிழந்து தொய்ந்து போக, பொத்தென்று சோஃபாவில் விழுந்தாள்.
மனைவியின் நிலையைப் பார்த்த பின்னர்த் தான் சொல்லி விட்ட வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்தான் நரேன். திரும்பப் பெற முடியாத வார்த்தைகள். அவன் சொன்ன இந்தச் சொல், நிச்சயம் அவளைக் கொல்லும் என்பதை அவன் நன்கு அறிவான். இருந்தும் தவறுதலாக வாய் விட்டு விட்டானே. நர்மதாவிற்கு அவன் இதைச் செய்திருக்கக் கூடாது. பட்டென்று மனைவியின் பக்கம் திரும்பி,
“சாரி நம்மு, வெரி சாரி டா. ஏதோ ஒரு கோபத்துல… ஐ அம் சாரி டா. தெரியாம சொல்லிட்டேன். பிளீஸ் மன்னிச்சிடு… பிளீஸ்” அவளின் கரம் பற்றி மன்றாடினான்.
அவள் காதில் அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் எதிரொலித்துக் கொண்டே இருந்தன. ‘கணவன் சொன்னது உண்மை தானே? அவளுக்கு இது ஒன்றும் புதிதில்லையே? குழந்தையை எதிர்பார்ப்பதும், பின் ஏமாறுவதும்… ஆனால் அதைக் கணவன் சொல்லிக் கேட்கும் போது ஏன் இவ்வளவு ஆழமாய் வலிக்கிறது.?’ தன்னில் மூழ்கி இருந்த மனைவியின் கரத்தை லேசாகப் பற்றினான் நரேன்.
“நர்மதா பிளீஸ்…” என்றான். அவ்வளவு தான். இத்தனை நாட்கள் தன்னைச் சுற்றி இருந்த மகிழ்ச்சி எனும் மாயக் குமிழ் உடைந்து போக, நிதர்சனம் அவளைக் கதறி அழச் செய்தது.
“அழாத நம்மு, பிளீஸ்” கெஞ்சினான்.
ஆனால், அவளின் அழுகை அதிகமானதே தவிரக் குறையவில்லை.
“இதுல என் தப்பு என்ன இருக்கு நரேன்? ஏன் எல்லோரும் என்னையே குத்தம் சொல்றீங்க? எனக்கு மட்டும் அம்மா ஆகனும், குழந்தை பெத்துக்கனும்னு ஆசை இல்லையா என்ன? என்னால மட்டும் முடியும்னா, கரு உருவான அந்த நொடியில் இருந்து பொத்தி பாதுகாப்பேன். ஆனா, கடவுள் எங்களுக்கு அதைப் பத்து மாதம் சுமக்க தான் வரம் கொடுத்து இருக்கான். வயித்துக்குள்ள பத்திரமா இருக்கான்னு தெரிஞ்சுக்க முடிஞ்சா…” அதற்கு மேல் தொடர முடியாமல் உடைந்து அழுதாள்.
‘முதல் முறையாகத் தாயாகும் பெண்களுக்குத் தான் எத்தனை ஆயிரம் கேள்விகள், எவ்வளவு சந்தேகங்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அசைவிலும்… ஏன் அவர்கள் உண்ணும் உணவில் கூட எவ்வளவு கவனம் வைப்பார்கள்.. நிற்க, நடக்க, உட்கார, படுக்க என அத்தனைக்கும் பயந்து.. மனம் முழுக்க இனம் புரியாத ஆசையுடன், பலவிதக் கனவுகளுடன், எதிர்பார்ப்புடன் சுமந்து.. மூன்று மாதம், ஐந்து மாதம், எட்டு மாதம் என வயிற்றிலேயே குழந்தைகளைப் பறி கொடுக்கும் தாய்மார்கள் தான் எத்தனை எத்தனை…
முதல் முறையாக இரண்டு மாத கரு கலைந்த போது அவளே எப்படி உடைந்து போனாள். தன் இரத்தத்தை, தன் உயிரை, தன் குழந்தையை… தன்னாலேயே, தன் வயிற்றிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க முடியவில்லை எனும் குற்ற உணர்ச்சி பல நாட்கள், பல மாதங்கள் அவளை உறங்க விடாமல் செய்திருக்கிறது. இன்று வரை பல முறை அவளையே அவள் குற்றவாளி கூண்டில் நிறுத்தி இருக்கிறாள். ஆனால், அது கணவனுக்கு எங்குப் புரியப் போகிறது.’
“நர்மதா… பிளீஸ் மா..” தன்னுள் மூழ்கி இருந்தவளை கலைத்தது அவன் குரல்.
“என்னால அழ மட்டும் தான் முடியுது நரேன். அதையாவது செய்ய விடுங்களேன். மத்த எல்லாத்துக்கும் தான், நான் லாயக்கில்லைன்னு தெரிஞ்சு போச்சே…”
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. கண்கள் சிவந்து, முகம் வீங்கி, அழுகையை அடக்க உதடு கடித்து… அவனால் மனைவியைக் கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை. மனம் நொந்து போனான் நரேன்.
“பிளீஸ், அப்படிப் பேசாத நம்மு”
“உலகமே சொன்னப்ப கூட இத்தனை வலிக்கல நரேன். ஆனா, நீங்க சொல்லும் போது ஏன் இவ்வளவு வலிக்குது?” அவள் வலக் கரம் தானாக நீண்டு, நெஞ்சை அழுத்திக் கொடுத்தது.
“சாரி நம்மு. நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. நான்.. நா..” என்ன சொல்லி அவளைச் சமாதானப் படுத்துவான். சொன்ன வார்த்தைகள் பெரிது, அதில் அவளது காயமும் பெரிது எனும் போது… நரேன் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான். மேலே அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.
இருவருக்கும் இடையில் லாவகமாக வந்து அமர்ந்து கொண்டது மௌனம். அவரவர் சிந்தனைகளில் மூழ்கி இருந்தனர்.