பூமரப் பாவைகள் – 18 (1)

“நீங்க என்ன பேசறீங்க வாசு? எனக்குப் புரியல?” திக்கி, திணறி பேச முயன்றாள். கேட்ட கேள்வியையே மீண்டும் கேட்டாள் வசுமதி.

அவளுக்கு மொழிகள் எல்லாம் மறந்து போயிருந்தது. உடல் மரத்துப் போனது போன்று செயல்பட மறுத்தது. ஏதேனும் கெட்ட கனவு காண்கிறோமோ? விடியல் வந்தால் எல்லாம் பழையது போல ஆகி விடுமோ? என்ற யோசனை அவள் மனதில் ஓட, அதைக் கலைத்தது அவன் குரல்.

“நாம இதைப் பத்தி முன்னாடியே பேசி இருக்கோம். நான் ஒன்னும் இப்போ புதுசா எதையும் சொல்லலை. முதல்ல நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு. இப்படித் தொட்டதுக்கு எல்லாம் ஷாக் ஆகாத” அவளது பெயரை சொல்லவேயில்லை அவன். மிகக் கவனமாகத் தவிர்த்தான்.

சிறிது நேரத்திற்கு முன் கூட “வசுமதி” என்று முழுப் பெயரிட்டு அல்லவா அழைத்தான். இதுவரை என்றுமே அவளை அப்படி அழைத்ததில்லை அவன். சென்னை விமான நிலையத்தில் அவளை முதல் முதலாகச் சந்தித்த போது கூட, “வசு” என்று தான் கூப்பிட்டான்.

அவள் சிலையாய் நிற்பதை பார்த்து, “வா, இங்க வந்து உட்காரு” என்று வலுக்கட்டாயமாக அவளை இழுத்துக் கொண்டு போய்ச் சோஃபாவில் அமர வைத்தான்.

“இதை எமோஷனல்லா பார்க்காம, பிராக்டிக்கல்லா பாரு. நான் சொல்றது உனக்குப் புரியும். இப்போதைக்கு இது தான் சரியான முடிவா இருக்கும். அபார்ஷன்….” அவன் சொல்லிக் கொண்டே போனான்.

அவன் பேசும் மொழி புரியாதது போல, அவனது வார்த்தைகள்

எதையும் கிரகிக்க முடியாமல் சற்று நேரம் தடுமாறி விட்டு, “முடியாது வாசு..” என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளித்தாள் வசுமதி.

அவளுக்குப் பதட்டத்தில் கை கால்கள் நடுங்க, உடல் மெல்ல வியர்க்க ஆரம்பித்தது. எப்போதும் அவளுக்காகத் துடிப்பவன், இப்போது கையைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்திருந்தான்.

அவளது மொபைல் அடிக்கும் சத்தம் கேட்டது, எடுத்து வந்து நீட்டினான்‌. நர்மதா தான் அழைத்திருந்தாள். அழைப்பை பாதியில் துண்டித்து விட்டு, “காலையில் வீட்டுக்கு வரேன் அண்ணி. ஆல் நார்மல் ஒன்லி. ஐ அம் ஓகே” என்று மெஸேஜ் மட்டும் அனுப்பி வைத்தாள்.

“உங்க ஆபீஸில் பேசிட்டு, எப்போ லீவ் கிடைக்கும்னு கேட்டு சொல்லு. அதுக்கு ஏத்த மாதிரி நானும் லீவ் போடுறேன். ஒன் வீக் போதும் தானே?” என்று சாதாரணமாகக் கேட்டான் அவன்.

“ஒன் வீக்? ஏழு நாட்கள்? எதற்கு? என் வயிற்றில் இருக்கும் குழந்தையைக் கொல்ல? உயிரோடு பிடுங்கி…” தனக்குத் தானே சத்தமாகப் பேசிக் கொண்டாள் வசுமதி.

எல்லாமே சூனியமாகி விட்டது போல் அவள் உள்ளேயும் வெளியேயும் வெறுமை பரவத் தொடங்கியது. உடம்பு நடுங்குவது போல் இருந்தது.

“கம் ஆன், முதல்ல இந்த நாடகத்தை நிப்பாட்டு” எரிச்சலுடன் சொன்னான் வாசு. அவளுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது.

“நான் தான் அப்பவே முடியாதுன்னு சொல்லிட்டேனே வாசு, உங்களுக்குக் கேட்கல?” வெகு இயல்பாகக் கேட்டாள் அவள். அவன் தன் கை முஷ்டிகளை மடக்கி, கோபத்தைக் கட்டுப்படுத்துவது தெரிந்தது.

“பேச்சை மாத்தி பேசாத வசுமதி. நாம இது பத்தி முன்னாடியே பேசிட்டோம், கல்யாணத்துக்கு முன்னாடியே…” குரலை உயர்த்தினான்.

“யார் பேச்சை மாத்தி பேசறா? நானா? நீங்களா?”

“என்ன உளர்ற?” மார்பின் குறுக்கே கையைக் கட்டிக் கொண்டான். இதுவரை காதலுடன் மட்டுமே பார்த்த அவனது முகத்தை, முதல் முறையாக அச்சத்துடன் நிமிர்ந்து நோக்கினாள் வசுமதி.

“நான் ஒன்னும்…”

“சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்காத..” அவன் இவ்வளவு தீவிரமாக இருப்பான் என்று அவள் நினைக்கவே இல்லை.

அவளுக்கு நெஞ்சுக் கூடு காலியானது போன்ற உணர்வு, அழுகையில் உதடு துடித்து, தொண்டை அடைத்தது. பெரு முயற்சி செய்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“ஓகே, அக்ரீட். நாம இது பத்தி முன்னாடியே பேசி இருக்கோம். கல்யாணத்துக்கு முன்னாடியே… ஆனா, கருத்தடைக்குத் தான் நான் சம்மதம் சொன்னேன். கருவை கலைக்க இல்ல வாசு” என்றாள் அவன் முகம் பார்த்து தெளிவாக, ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து சொன்னாள்.

அவனது தாடை இறுகியது.

“ஓ, அப்போ… நான் இதையும் சேர்த்து பேசி இருக்கணுமோ? ஒருவேளை மாத்திரை வேலை செய்யலைன்னா? ஒருவேளை நீ கன்சீவானா, என்ன பண்றதுன்னு அப்பயே பேசி இருக்கணுமோ? இதையெல்லாம் யோசிச்சு இருக்கணுமோ? அப்படியா சொல்ற? என்ன சொல்ல வர்ற நீ?” அவன் வார்த்தைகளில் அனல் தெறித்தது.

இதற்கு அவள் என்ன பதில் சொல்வாள்? என்ன பதில் எதிர்பார்க்கிறான் இவன்? பெரும் ஆயாசம் அவளைச் சூழ்ந்தது. மதிய உணவு வேறு உண்ணவில்லை, வெளியில் அலைந்து விட்டு வந்த சோர்வும், பசியும், நேரம் காலம் தெரியாமல் அவளைப் படுத்தி எடுத்தது. சோஃபாவில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டாள். கண் திறக்கையில் இதுவரை நிகழ்ந்தது எல்லாம் கனவாகி போய் விடாதா என்றிருந்தது அவளுக்கு.

“பிளீஸ் வாசு…” கெஞ்சினாள். அவன் இறங்கவேயில்லை.

“உனக்கு விருப்பம் இல்லைன்னா, அப்பவே என்கிட்ட சொல்லி இருக்கணும். அதை விட்டுட்டு மாத்திரையை ஒழுங்கா போடாம இருந்திருக்க..” பட்டென்று சோஃபாவில் இருந்து எழுந்து நின்றாள் வசுமதி.

கணவனின் முகத்தை நேராகப் பார்த்தாள். திடீரென்று உயரமாகத் தெரிந்தான் அவன். இத்தனை நாள் அவளுக்குப் பெரிதாகத் தெரியாத அவனது வளர்த்தி, இன்று அவனைக் கழுத்தை வளைத்து அண்ணார்ந்து பார்க்கையில் அவளுக்கு நெஞ்சில் காரணமற்று பாரமேறியது.

“21 நாள் எடுக்க வேண்டிய மாத்திரையை 30 நாள் எடுத்து இருக்க? தொடர்ந்து எடுக்கணும்னு கூடத் தெரியாதா உனக்கு? அவ்வளவு அலட்சியம்” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான். அவளுக்கு அவனது கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது உடல் உதறியது.

ஆக, அவள் மருத்துவரிடம் சொன்ன அனைத்தையும் கேட்டிருக்கிறான். அவளுக்கு அவமானமாக இருந்தது.

அவரச கல்யாணம், அதை விட அவரசமாக வந்து விட்ட குழந்தை. தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. முழுதாக இரண்டே மாதத்தில் தன் வாழ்க்கை ஏன் இப்படி மாறிப் போனது. அவளைத் தன்னிரக்கம் சூழ்ந்து கொண்டது.

வாழ்க்கை ஏன் அவள் எதிர்பார்க்காததை, அவள் கேட்காததையே அவளுக்குப் பரிசளிக்கிறது.

குழந்தை குறித்து அவள் பெரிதாகக் கற்பனை செய்திருக்கவில்லை தான். ஆனாலும், அந்தச் செய்தி கணவனால் இப்படி உள்வாங்கப் படும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவளைத் தூக்கி கொண்டாட வேண்டாம்.

அவர்களுக்கு அன்பும், மகிழ்வும் அளிக்க வேண்டிய செய்தி. ஆனால், இன்று கணவன் அதைக் கேட்டு முறைத்துக் கொண்டு நிற்கிறான், அவளோ கலங்கி போய் நிற்கிறாள். இதென்ன கொடுமை.

கணவன் தன் பதிலுக்காகக் காத்திருப்பது புரிய, “எனக்குத் நிஜமா தெரியாது வாசு” என்றாள்.

“என்னத்த தெரியாது? அதான் எங்க பெரியம்மா தெளிவா எல்லாம் சொல்லி இருப்பாங்க இல்ல? அப்புறமும் மாத்திரை எப்படி மிஸ் பண்ண?”

“அது.. அது.. முத நாள் புது வீட்ல… மாத்திரை அப்போ கையில இல்ல. அதான் எடுக்கல…” திக்கி, திணறி சொல்லி முடித்தாள். இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கவே அவளுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது.

“சரி, அதுக்கு அப்புறம்… இடையில ரெண்டு, மூனு நாள் ஏன் எடுக்கல?” அடுத்தக் கேள்வியை வீசினான்.

“எங்க வீட்டுக்கு போனோம். அங்க… மறந்துட்டேன். அப்புறம்…” கண்ணீர் வெளி வரத் துடித்தது.

“எல்லாம் வேணும்னு பண்ணி இருக்க. நான் சொல்லும் போது சரி, சரின்னு தலையை ஆட்டிட்டு, குழந்தைன்னு வந்துட்டா… ஒன்னும் சொல்ல மாட்டான். சமாளிச்சுடலாம்னு எண்ணம், அப்படித் தானே?” அவளது முகத்தின் அருகில் வந்து ஆவேசமாய்க் கத்தினான். மிரண்டு பின் வாங்கினாள் வசுமதி.

என்னவெல்லாம் குற்றம் சொல்கிறான். இது அவள் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று. அவளுக்கு எல்லாமே புதிது. திருமணம், கணவன், அவனுடனான இந்த வாழ்க்கை அனைத்துமே… இன்னும் கணவனையே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை அவள். இதில் புதிதாக உறவொன்றை அவள் ஏன் எதிர்ப்பார்க்கப் போகிறாள். அதுவும் திருமணமான ஒரே மாதத்தில்.

“இல்ல வாசு. எனக்கு எல்லாமே புதுசா இருந்தது. கல்யாணம், நீங்க, புது உறவுகள், புது வாழ்க்கை… மாத்திரை சத்தியமா நான் வேணும்னு மிஸ் பண்ணல. சாரி வாசு. ஆனா குழந்தைக்கு… ஸ்கேன்ல… குழந்தைக்கு ஹார்ட் பீட் வந்திடுச்சு. இப்போ போய்க் கலைக்க… வேணாமே பிளீஸ்.. என்னால முடியாது வாசு… பிளீஸ், டோண்ட் டூ திஸ் டு மீ” கரகரவெனக் கண்ணீர் இறங்கி அவள் கன்னம் தொட்டது.

அதற்கு மேலும் அவளைச் சோதிக்காமல், அவளை நெருங்கி அணைத்துக் கொண்டான் வாசு. அடித்த தாயின் காலைக் கட்டிக் கொண்டு, தூக்கச் சொல்லி கெஞ்சும் குழந்தையைப் போல அவனை இறுக கட்டிக் கொண்டு அவன் முகம் பார்த்தாள் வசுமதி. பதில் சொல்லாமல் அவள் தலையைத் தன் தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தான் அவன்.

“நீயே குழந்தை வசும்மா, இதுல உனக்கு..” அவனது அந்தப் பிரத்தியேக அழைப்பில் அவளின் அழுகை அதிகமானது. எவ்வளவு நேரம் பெயரை கூடச் சொல்லாமல் அவளை வாட்டினான்.

“பிளீஸ் வாசு… வேணாம்.. எனக்காக.. பிளீஸ்” கெஞ்சினாள். தனது கண்ணீரும், கெஞ்சலும் அவனை இளக்கி விடாதா என்ற ஆதங்கம் அவள் நெஞ்சில் எழுந்தது.

“ஷ்ஷ்ஷ்… அழாத வசும்மா” என்று அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.

“அழாதே” என்று அவன் தேற்ற, தேற்ற அவளின் அழுகை மேலும் அதிகமானதே தவிரக் குறையவில்லை. கடைசியாக எப்போது மனம் உடைந்து கதறி கண்ணீர் விட்டோம், என்று யோசித்துப் பார்த்தாள் வசுமதி. அண்ணன் வருணுக்காக அழுதது. பல வருடங்களுக்கு முன்…

அதற்குப் பின் அவள் அழ நேர்ந்தது இல்லை. ஒற்றைப் பெண் என்பதால் கேட்டது எல்லாம் கிடைத்து விடும். அவள் கலங்கும் சூழல் வராமல் போற்றிப் பாதுகாத்து வளர்த்தனர். பல நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டுக் கண் கலங்கி இருக்கிறாள் தான், ஆனால் கதறி அழுததில்லை.

கணவன் தான் அழுது காரியம் சாதிக்க முயல்கிறோம் என்று நினைப்பானோ என்ற எண்ணம் அவள் மனதில் உதித்த நொடியே, அவனை விட்டு விலகி நின்றாள்.

“பிளீஸ் வசு, என்னை வில்லன் மாதிரி பார்க்காத. நான் கல்யாணத்துக்கு முன்னாடியே என் நிலையை, ரொம்பத் தெளிவா உனக்குச் சொல்லிட்டேன். இப்போ என்னை என்ன பண்ண சொல்ற?” அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.

“பணம் தானே பிரச்னை வாசு? அதை எப்படிச் சமாளிக்கறதுன்னு எனக்குத் தெரியும். பணம் பிரச்சனை ஆகாது வாசு. என்னோட இன்சூரன்ஸ்ல மெட்டர்னிட்டி கவர்டு. சோ, நாம இதுக்காகப் பெருசா செலவு பண்ண வேண்டி இருக்காது.” எப்படியாவது அவனது முடிவை மாற்றி விட வேண்டும் என்று படபடவென அவளுக்குச் சாதகமான காரணங்களைத் தேடி அடுக்கினாள் அவள்.

“ம்ப்ச் வசு, சின்னப் பிள்ளை மாதிரி பேசாத. நீ பிரசவ செலவு மட்டும் தான் யோசிக்கிற? நான் அதுக்கப்பறம் வர்ற செலவுகளையும் சேர்த்து யோசிக்கறேன். குழந்தை பிறந்ததும் என்ன பண்ண போறோம்? அப்புறம் எவ்வளவு செலவுகள் இருக்கு? ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம், குழந்தையை யார் பார்த்துப்பா? அதுக்கு ஒரு கேர் டேக்கர் போடணும், அப்புறம் ஸ்கூல் போக ஆரம்பிக்கும்… வரிசையா செலவுகள் வரிசை கட்டி நிற்கும். அதை எல்லாம் கொஞ்சமாவது யோசிச்சியா நீ?”

“ஹ்ம்ம்…” அவன் முகம் பார்த்து நின்றாள். இதற்கு என்ன பதில் சொல்வாள் அவள்.

“எனக்கு உங்க காரணம் புரியுது வாசு. ஆனா, நம்மால முடியும். உங்க சம்பளத்தை மட்டும் வச்சு கணக்கு போடாதீங்க. என் சம்பளமும் வருது இல்ல, அதுல எல்லாச் செலவுகளையும் நாம கவர் பண்ணலாம்”

“ம்ஹூம், அது முடியாது வசு.” வேகமாக மறுத்தான்.

“ஏன் முடியாது?” அவனை விட வேகமாகக் கேள்வியை முன் வைத்தாள்.

“உன் சம்பளம், அது அப்படியே இருக்கட்டும். தேவைப்படும் போது…”

“ஓ, எல்லா முடிவையும் நீங்க தான் எடுப்பீங்களா மிஸ்டர் வாசுதேவன்? அப்போ நான் என்னத்துக்கு இங்க இருக்கேன்? முதல்ல கருவை கலைக்க உங்களுக்கு யாரு உரிமை கொடுத்தா? என்ன தைரியத்தில அது பத்தி பேசறீங்க?” கத்தினாள். அவன் முகம் வலியில் கசங்கி போனது.

“என்ன பேசற வசு நீ? பேசத் தெரியும்னு வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக் கூடாது. இன்னைக்கு நாம பேசிய வார்த்தைகள், நாளைக்கு நம்மைக் கேள்வி கேட்கும், மனசாட்சியைப் போட்டு உலுக்கும். அப்போ நமக்கு முன்னாடி நாமே குற்றவாளியா நிற்க கூடாது. ஒவ்வொரு வார்த்தையையும் யோசிச்சு பேசணும். அதுவும் யார் கிட்ட என்ன பேசணும்னு உனக்குத் தெரிய வேண்டாமா?”

வசுமதிக்கு எல்லாமே வெறுத்துப் போன நிலை. இவன் இதைக் கண்ணாடி பார்த்துத் தனக்குத் தானே சொல்லிக் கொள்ள வேண்டிய வாசகம். விந்தை என்னவென்றால் அவளிடம் அதை உளறிக் கொண்டிருக்கிறான்.

error: Content is protected !!
Scroll to Top