“சரி, வசுவுக்கு ஒன்னும் இருக்காது, பயப்படாத வாசு. டாக்டர் பார்த்து முடிச்சுட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்திடுங்க.” என்று விட்டு காரை எடுத்தான் நரேன். மனைவியின் பக்கம் கோபப் பார்வையையும் வீசத் தவறவில்லை அவன்.
“என்ன முறைக்கறீங்க? பாசம் பலமா பொங்குதோ?” கண்கள் கடக்கும் கட்டிடங்களை வெறித்திருக்க, கேள்வியைக் கணவனின் பக்கம் எறிந்தாள் நர்மதா.
“அவளுக்குத் தான் ஷவர்மா பிடிக்காதுன்னு உனக்கு நல்லாத் தெரியும்ல? அப்புறம் ஏன் அதை அவளுக்கு ஊட்டி விட்ட?” தன்மையாகவே கேட்டான் நரேன்.
“மறந்துடுச்சு…” அசட்டையாகத் தோளை குலுக்கியபடி சொன்னாள் அவள். அமைதியாகக் காரை செலுத்தினான் நரேன்.
“அப்படியாவது ஹாஸ்பிட்டல் போகட்டும்னு தான்…” என்று அவள் முணுமுணுக்க,
“ஏய், நீ என்ன லூசா? நீ தானே நேத்து அவனை ஹாஸ்பிடல் போக வேண்டாம்னு சொன்ன?” எரிந்து விழுந்தான் அவன். கோபம் தன் இருப்பை மெல்லக் காட்டத் தொடங்க, தலையை வலிப்பது போல் இருந்தது அவனுக்கு,
“உனக்கு என்னாச்சு நம்மு?”
அவன் பார்வை அவள் மேல் விழுந்தும், அவள் தன் பார்வையைச் சாலையை விட்டு அகற்றவேயில்லை.
“நானும் டாக்டர் பார்த்து ரெண்டு மாசம் ஆகப் போகுது. நாமளும் பேசாம டாக்டர் பார்த்திட்டு வந்திருக்கலாம்” என்ற நர்மதாவை எரித்து விடுவது போலப் பார்த்தான் நரேன்.
“தொடங்கிட்டியா? உனக்குத் தலைவலி வந்ததோ இல்லையோ, இப்போ எனக்குத் தலையை வலிக்குது” என்றான் அவன்.
“இப்ப என்ன பண்ணிட்டேன் நான்? எல்லாம் உங்க தங்கச்சி நல்லதுக்காகத் தான் அப்படிப் பண்ணேன். வாயை மூடிட்டு, பேசாம ட்ரைவ் பண்ணுங்க” அந்தக் குரலும், அவளின் வார்த்தைகளும் அவனை எரிச்சலடைய செய்ய, காரின் ஸ்டியரிங்கை இறுக பற்றித் தன் கோபத்தை அதன் மேல் காட்டினான் நரேன்.
அதற்கு மேல் அவளுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாதவனாக மௌனமாய்க் காரை செலுத்தினான்.
பகல் பணிரெண்டை நெருங்கிக் கொண்டிருந்தது நேரம். வெளியில் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்க, உள்ளே விளக்குகளின் வெளிச்சத்தில் இரவைப் போலக் காட்சியளித்தது மருத்துவமனை. மற்ற நாட்களில் எப்படியோ, ஆனால் அன்றைக்கு அத்தனை கூட்டமில்லை. அந்தந்த மருத்துவரின் அறை முன்னே இருந்த வெயிட்டிங் பகுதி காத்திருந்த மக்களால் நிறைந்திருந்தது.
மனதில் ஏதேதோ எண்ணங்கள் வலம் வர, வசுமதிக்கு கால் இடறியது. காலை படியில் தவறுதலாக வைத்து நிலைக் குலைந்து கீழே விழப் போனாள் வசுமதி.
“அச்சோ, பார்த்து வசும்மா. கவனம்” என்று அவளின் கரம் பிடித்து அவள் விழுந்து விடாமல் தடுத்தான் வாசு.
அவளை அங்கிருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர வைத்து விட்டு, ரிசப்ஷன் நோக்கி சென்றான் அவன்.
“வாசு..” என்று உரக்க அழைத்து,
“கைனகாலஜிஸ்ட் பார்க்கணும்” என்றாள் வசுமதி. நொடியில் அவள் அருகில் வந்திருந்தான் வாசு.
“ஜெனரல் டாக்டர் பார்த்தா போதுமே வசு”
“ஆமா, ஆனா அது வந்து…. எனக்கு இந்த மாசம் பீரியட்ஸ் இன்னும் வரலை. டேப்லெட் முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு. அதான், டாக்டர் பார்த்து என்னனு கேட்டுடலாம். அப்படியே இந்தப் பிரச்சினையையும்…”
என்று அவள் தயக்கத்துடன் இழுக்க,
“ஓ..” என்றவன், “சரி, நான் போய் ஃபர்ஸ்ட் ரிஜிஸ்ட்ரேஷன் முடிச்சுட்டு வரேன்” என்றபடி நடந்தான் அவன்.
அவன் ஃபார்ம் ஃபில் செய்து விட்டு வர, மருத்துவர் அழைப்பிற்காகக் காத்திருந்தனர்.
அடுத்தப் பத்தாம் நிமிடம் அவர்கள் அழைக்கப்பட இருவரும் மருத்துவரின் அறைக்குள் நுழைந்தனர்.
“கம் இன் வசுமதி வாசுதேவன், பிளீஸ் ஹவ் அச் சீட்” என்று புன்னகையுடன் சொன்ன அந்த இளம் மருத்துவரின் முகத்தைப் பதில் புன்னகையுடன் ஏறிட்டு, இருக்கையில் அமர்ந்தாள் வசுமதி.
“சொல்லுங்க…” என்று அவர் சொன்னது தான் தாமதம், “மூனு நாளா தொடர்ந்து வாமிட் இருக்கு, ரொம்ப டையர்டா ஃபீல் பண்றா..” படபடவெனச் சொல்ல ஆரம்பித்தான் வாசு.
“ஓகே” என்றவர், “நீங்க சொல்லுங்க” என்று வசுமதியை பார்த்துச் சின்னப் புன்னகையுடன் கேட்க,
“ரெண்டு நாளா வாமிட் இருக்கு டாக்டர், டிராவல் பண்ணும் போது இருக்கு, பிடிக்காத புட் சாப்பிட்டா இருக்கு.” என்றாள் வசுமதி.
“ஹ்ம்ம் ஓகே, தென்” என்ற கேள்வியுடன் மருத்துவர் நிமிர,
“ஐ மிஸ்டு தே பீரியட்ஸ் திஸ் மந்த் டாக்டர்” வாசுவை பார்த்துக் கொண்டே சொன்னாள் அவள்.
“ஓகே, லாஸ்ட் பீரியட்ஸ் எப்போ?” கேட்டார், தேதியை சொன்னாள் வசுமதி.
“ஓகே, வெளில எங்கேயும் சாப்டீங்களா? புட் பாய்சன் ஆகி இருக்க வாய்ப்பிருக்கு. பட், அதுக்கு முன்னாடி ஒரு பிரெக்னென்சி டெஸ்ட் பண்ணிடுவோம். ப்ளட், யூரின் சாம்பிள் லேபில் கொடுங்க… ரிசல்ட் உடனே…” அவர் சொல்லி முடிக்கும் முன்னே, இடையிட்டாள் வசுமதி.
“நான் கருத்தடை மாத்திரை எடுத்தேன் டாக்டர். பிரெக்னன்சி வாய்ப்பில்லை.” என்றவள், தெளிவாக அவரிடம் மொத்த கதையையும் சொன்னாள்.
புதிதாகத் திருமணம் ஆனவர்கள், முதல் முறையாகக் கருத்தடை மாத்திரை எடுப்பது, மாத்திரை முடிந்து ஒரு வாரம் ஆகியும் பீரியட்ஸ் வராதது என்று ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. அவள் சொன்ன அனைத்தையும் கூர்ந்து கவனித்துக் குறித்துக் கொண்டே வந்தார் மருத்துவர். இடையிடையே கேள்விகள் வேறு கேட்டு, தெளிவாக்கி கொண்டார். ஆனால் இறுதியில், முதலில் சொன்னதையே தான் திரும்பவும் செய்யச் சொன்னார்.
“இல்ல டாக்டர், நான் தான் டேப்லெட்ஸ் எடுத்தேனே…” என்று அவள் தயக்கத்துடன் ஆரம்பிக்க,
“எஸ் வசுமதி. ஆனா…” என்று ஆரம்பித்தவர், அவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்து விட்டு, “பார்மசியில் ஹோம் பிரேகன்ஸி கிட் கிடைக்கும், வாங்கி இங்கேயே டெஸ்ட் பண்ணுங்க. கருத்தடை மாத்திரை, சாதனங்கள்… கர்ப்பத்தை நூறு சதவீதம் தடுக்கும்னு சொல்ல முடியாது. அதுவும் இல்லாம, நீங்க மாத்திரையை சரியா எடுக்கவும் இல்ல. பெட்டர் நீங்க முதல்ல ஹோம் பிரேகன்ஸி கிட் டிரை பண்ணுங்க. அக்யூரேட் ரிசல்ட் இருக்கும்.
அப்படியே பிளட் அண்ட் யூரின் டெஸ்ட் கொடுத்துடுங்க. ரிசல்ட்ஸ் வரட்டும். தென் லெட்ஸ் டிஸ்கஸ். ஓகே?” என்று அவள் கண்களைப் பார்த்து அவர் கனிவாகக் கேட்க,
“ஓகே டாக்டர், தேங்க்யூ” என்று எழுந்து கொண்டாள் வசுமதி. அவளின் குழப்பம் கொஞ்சமும் தீரவில்லை. மண்டைக்குள் தாறுமாறாய் ஓடிய கேள்விகளைக் கேட்க தயங்கியவள், அமைதியாய் எழுந்து வெளியில் வந்தாள்.
மருத்துவரின் அறைக்குள் நுழைந்ததும் பேசியவன் தான், அதற்குப் பின் வாயை திறக்கவேயில்லை வாசு. அசாதாரணமான அமைதியுடன் அமர்ந்திருந்தான். அவனை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் வசுமதி.
அவன் காத்திருப்போருக்கான இருக்கையில் அமர்ந்திருக்க, வசுமதி சென்று மருத்துவர் சொன்ன பரிசோதனைகளுக்குக் கொடுத்து விட்டு வந்தாள்.
“வாசு..” என்று அவன் கரம் பற்ற,
“எவ்வளவு நேரம் ஆகும்?” என்றான் மொட்டையாக,
“தெரியல, நான் கேட்கலை. பட் ரிசல்ட் வந்ததும், நம்மள கூப்பிடுவாங்க” என்றாள் அவள். மருத்துவர் சொன்ன ஹோம் பிரேகன்ஸி கிட்டை விட ரத்த பரிசோதனையைச் செய்து விடுவதே மேல் என்று அதற்கு இரத்தம் கொடுத்து விட்டு வந்து கணவனின் அருகில் அமர்ந்தாள் அவள்.
தனது மொபைலை கையில் எடுத்து அதில் மூழ்கி போனான் வாசு.
வசுமதிக்குள் பயச் செடி ஒன்று மெல்ல தனது கிளைகளைப் பரப்பி வேக வேகமாக வளரத் தொடங்கியது.
கணவன் ஏதாவது சொல்வான் என்று அவனைத் திரும்பி பார்க்க, அவனோ அவள் அங்கிருப்பதையே மறந்திருந்தான்.
அவளுக்குக் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும், யுகங்களாகக் கடக்க ஆரம்பித்தது. கண்களை மூடி இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தாள்.
“மிஸ். வசுமதி வாசுதேவன்” என்று அவளின் பெயர் உரக்க அழைக்கப் பட, பட்டென்று கண் விழித்து எழுந்து கொண்டாள் வசுமதி.
“காங்கிராஜிலேசன்ஸ்” புன்னகையுடன் நீட்டப்பட்ட தாளை அவள் பிரித்துப் பார்க்கும் முன்னே முடிவு தெரிந்திருந்தது. அது தான் வாழ்த்தும், புன்னகையும் சேர்ந்து விளக்கி விட்டதே. பின்னர் எதற்குப் பிரித்துப் பார்க்க வேண்டும்? ஆனாலும் பிரித்துப் பார்த்தாள். வாசுவின் பார்வையும் பரிட்சை தாளை போல அதைக் கூர்மையாகத் துளைத்தது.
“பாஸிட்டிவ்” என்றது அறிக்கை. வசுமதிக்குக் கண்கள் மளுக்கென்று குளம் கட்டியது. வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி ஒன்று இறக்கை விரிக்க ஆரம்பித்தது. மனதில் எழுந்த கலவையான உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், அப்படியே நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள்.
அவன் சிலையென உறைந்து நின்றான். ஒன்றுமே பேசவில்லை. அதிர்ச்சியா? இன்ப அதிர்ச்சியா? மகிழ்ச்சியா? கோபமா? அவளால் கணிக்க முடியவில்லை. ஆனால், நிச்சயமாக அவன் இதை எதிர்பார்க்கவில்லை என்பது மட்டும் அவனின் உடல் மொழியில் தெரிந்தது.
பரிசோதனை முடிவுகளுடன் போய் மீண்டும் மருத்துவரை சந்தித்தனர். வாசு வழக்கத்தை மீறிய அமைதியுடன் அமர்ந்திருந்தான். வசுமதி தனது எல்லாச் சந்தேகங்களையும் கேட்டு தெளிவாகி கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக அனைத்தும் முடிந்து, மருத்துவர் பரிந்துரைத்த சத்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தனர்.
மருத்துவமனைக்கும், வீட்டுக்குமான பத்து நிமிட பயணத்தை மௌனத்திலேயே கடந்தனர்.
எப்போதும், எதையாவது சதா பேசிக் கொண்டே இருக்கும் கணவன் இப்படி அமைதியாய் அமர்ந்திருப்பது வசுமதியை பெரிதும் கலவரப்படுத்தியது.
அவனிடம் என்னவென்று கேட்கலாம் என்று அவள் திரும்ப, டாக்ஸி அவர்களின் அபார்ட்மெண்ட்டை நெருங்கி இருந்தது.
கார் நின்றதும், “நம்ம வீட்டுக்கு போ, நான் டாக்ஸி பே பண்ணிட்டு வர்றேன்” என்றான் வாசு.
அவன் முகத்தில் இருந்து எதையும் கண்டு கொள்ள முடியாமல், வெறுமே தலையை அசைத்து விட்டு, லிஃப்ட்டின் அருகில் போய் அவனுக்காகக் காத்து நின்றாள் வசுமதி.
“வீட்டுக்கு தானே போகச் சொன்னேன். ஏன் இங்க நிக்கற?” என்றான்.
“உங்களுக்காக வெயிட் பண்ணேன்” என்றாள். லிஃப்ட்டினுள் நுழைந்து தங்களது தளத்திற்கான எண்ணை அழுத்தினான்.
வீட்டுக்குள் நுழைந்தனர், வசுமதி கிச்சனிற்குள் சென்று வறண்டு போன தொண்டையை நனைக்க, தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தாள்.
“வசுமதி…” அந்நியமாய் ஒலித்த கணவனின் குரலில், குடித்த கொண்டிருந்த தண்ணீர் அவளுக்குப் புரையேறியது. அதனைத் தொடர்ந்து இருமலும் வர, அவளருகில் வந்து முதுகை தேய்த்து விட்டான் வாசு.
“என்ன பண்ணலாம்?” என்று அவள் முகம் பார்த்து ஆரம்பித்தவன், “அபார்ட் பண்ணிடலாம், பிளீஸ்” என்று முடித்தான்.
இதைச் சொல்லவா, இவ்வளவு நேரம் அமைதி காத்தான். அவளுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவன் தீவிர யோசனையில் இருந்ததைக் கவனித்தாள் தான். ஆனால், அதற்குப் பின் இப்படி ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை.
“என்ன? என்ன சொல்றீங்க வாசு?” அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.
“கருவை கலைச்சுடலாம்” நிதானமாகச் சொன்னான் வாசு.
ஒரு நொடி அவளின் உலகம் தன் சுழற்சியை நிறுத்தி விட, கண்கள் இருண்டு போனது. காதுகள் கேட்கும் திறனை இழந்திருந்தது. அவன் பேசும் மொழி புரியாதது போல அவனை வெறித்துப் பார்த்தாள் வசுமதி.
அவன் உதடசைப்பது மட்டுமே அவள் பார்வையில் பதிந்தது. மெல்ல நிதர்சனம் உரைத்தது.
அதிர்ச்சியில் கால்கள் நடுங்க, சட்டென்று அடுப்பு மேடையைப் பிடித்துக் கொண்டு, அதன் மேலேயே சாய்ந்து நின்றாள் வசுமதி. கலங்கிய கண்களுடன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவன் வார்த்து வைத்த சிலையைப் போல இரும்பாக நின்றான்.
“வாசு…” என்றாள்.
“எமர்ஜென்சி லீவ் அப்ளை பண்றேன். ஊருக்குப் போகலாம். அங்க போய்ப் பார்த்துக்கலாம்.” அவ்வளவு தான், முடித்து விட்டான்.