பூமரப் பாவைகள் – 17 (1)

மாலை தேநீரை முடித்து விட்டு வந்து படுத்தவர்கள்தான், சற்றைக்கெல்லாம் நன்றாக உறங்கி விட்டனர். இரவு உணவும் நரேன் வந்து கொடுத்து விட்டு போக, உணவை முடித்து விட்டு, மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தனர்.

மறுநாள் காலை வேளையில் மீண்டும் அழைப்பு மணியை அலற விட்டு அவர்களை எழுப்பி விட்டாள் நர்மதா.

“வாங்க கா” என்று கதவை திறந்து விட்டு, குளிக்கச் சென்றான் வாசு. படுக்கையைச் சீர் செய்து விட்டு, வசுமதியும் எழுந்து வர, அவளுக்குச் சூடாக டீ போட்டுக் கொடுத்தாள் நர்மதா. அதை அமைதியாகப் பருகிக் கொண்டிருந்தாள் வசுமதி.

“வீட்லயே இருந்தா போர் அடிக்குது வசு, வெளில எங்கேயாவது போகலாமா?” என்று நர்மதா கேட்க, மறுத்து விடத் தான் முதலில் நினைத்தாள் வசுமதி. ஆனாலும், தன்னை அவர்கள் அளவில்லா அக்கறையுடன் நன்றாகப் பார்த்துக் கொள்ளும் போது, தான் மட்டும் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் மறுத்தால் நன்றாகவா இருக்கும் என்ற எண்ணத்துடன்,

“ஓ, போலாமே அண்ணி. அவர் குளிச்சுட்டு வரட்டும். நானும் ரெடியாகி வர்றேன். அப்புறம் போகலாம்” என்றாள் அவள்.

“எங்க போகலாம்?” எப்போதும் போல முளைத்தது அடுத்தக் கேள்வி.

“ஜூமைரா பீச் வசு, உனக்கு ரொம்பப் பிடிக்குமே? அங்கேயே போவோம். ஜஸ்ட் கொஞ்ச நேரம் காற்றாட நடந்திட்டு வீட்டுக்கு வந்திடலாம்” என்றாள் நர்மதா.

பகல் நேர வெயிலை நினைக்கையிலேயே வசுமதிக்கு வியர்த்து வழிந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் எங்குக் காற்றாட நடக்க? என்ற கேள்விகளைத் தனக்குள்ளே அமிழ்த்தி கொண்டாள் வசுமதி.

குளித்து, உடை மாற்றி வெளியில் வந்த வாசுவிற்கு அவர்களின் திட்டம் பிடிக்கவில்லை என்றாலும் கூட அமைதியாய் அவர்களுடன் வெளியில் கிளம்பினான்.

எங்கே வெளியில் சென்றால், காரில் பயணித்தால் மீண்டும் மனைவிக்கு முடியாமல் போய் விடுமோ என்ற கவலை அவனுக்கு. ஆனாலும், வீட்டில் அடைந்து கிடப்பதை விட, வெளிக் காற்று உடலில் படுவது புத்துணர்ச்சியைத் தரும் என்ற எண்ணத்துடன் கிளம்பினான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜுமைரா பீச்சில் இருந்தனர். வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த விரிப்பை, கடற்கரை மணலில் விரித்து அமர்ந்தனர். காலை சூரியன் கருணை இல்லாது சுட்டெரித்துக் கொண்டிருந்தான். ஆனால், கடலுக்கு அருகில் இருந்ததால் காற்றில் ஈரப்பதம் மிகுந்திருந்தது.

மிக அருகில், ஓடிப் போய்த் தொட்டு விடும் தூரத்தில் இருந்த புர்ஜ் அல் அரப் ஹோட்டலை அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்தே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் வசுமதி. துபாயின் அடையாளமாக இருக்கும் ஹோட்டல் அது.

“ஒரு நாள் அங்க டின்னருக்கு போவோமா வசு மா?” என்று வாசு கேட்க,

“தூரத்தில் இருந்தே பார்க்க தான் பிடிச்சிருக்கு வாசு. பக்கத்தில் போய்ப் பார்த்திட்டா இப்போ இருக்க இந்தப் பிரமிப்பு போய்டும். அதுவும் இல்லாம அவங்க டிரஸ் கோட் எல்லாம் வச்சு இருப்பாங்க. நம்மால முடியாது பா. எனக்குத் தழைய தழைய சேலை கட்டிட்டு போகனும். விடுவாங்களா?” என்று புருவம் உயர்த்திக் கேள்வி கேட்டாள் வசுமதி, விழிகள் இன்னமும் ஹோட்டலின் மேலேயே பதிந்திருந்தது.

“ம்ம்ம். சேலை, தெரியலையே வசும்மா. நாம பிசினஸ் சூட்ல போகலாம்” என்றான் வாசு.

“மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை தீவில் ஹோட்டலை கட்டி இருக்காங்க. நாம இங்க இருந்து ஹோட்டலுக்குப் போகத் தனி ப்ரிட்ஜ் இருக்கு. ஹோட்டல்ல நிறைய இடங்கள் தங்க முலாம் பூசப்பட்டிருக்கு. உலகின் ஒரே செவன் ஸ்டார் ஹோட்டல். மேலே ஹெலிகாப்டர் வந்து தரையிறங்க, ஹெலி பேட் கூட இருக்கு… இன்னும் சொல்லிட்டே போகலாம்” வியந்து சொல்லிக் கொண்டே போனாள் வசுமதி. அவளிடம் இருந்து பார்வையை அகற்றவில்லை வாசுதேவன்.

“எனக்கு எப்பவும் நீ தான் உலக அதிசயம் வசும்மா.. உன்னை விட….” அவன் முடிக்கும் முன்பே,

“இவன் ஸ்டார்ட் பண்ணிட்டான் நம்மு. அடிக்கற வெயிலுக்கு மூளை கரைஞ்சு ஒழுகிரும் போல இருக்கு. இதுல இவன் வேற.. இவனை…” என்ற நரேனின் புலம்பல் குரல் பின்னிருந்து ஒலித்தது. சிரிப்பை அடக்கியதில் வசுமதியின் உதடுகள் துடித்தது. நரேனை திரும்பி முறைத்தான் வாசு.

கடற்கரை மணலை விடக் கணவனின் பார்வையும், வார்த்தைகளும் தான் வசுமதியை அதிகம் குறுகுறுக்க வைத்தது. நெருப்பு கோளமாய் மின்னிக் கொண்டிருந்தான் சூரியன். பச்சையும், நீலமும் பாய்ந்த கடலையும், நீலமும், வெண்மையும் கலந்த வானையும் விழியெடுக்காது ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வசுமதி.

“வா வசு, தண்ணில கால் நனைச்சிட்டு வரலாம்” என்றான் வாசு, அவளின் தோள் தொட்டு, கணவனின் முகத்தை ஏறிட்டாள் அவள். நீலப் பின்னணியில் பளிச்சிட்ட கணவனின் முகத்தை ரசனையுடன் பார்த்திருந்தாள் அவள்.

ஏனோ இன்று அவளுக்குத் தண்ணீர் அருகில் செல்லவே விருப்பமில்லை. அதையே கணவனிடமும் சொன்னாள்.

“நான் வரலை வாசு. இப்படியே உட்கார்ந்து இருக்கலாம். இதுவே நல்லா இருக்கு” என்றாள் அவள்.

“ஓ, அப்போ போதும் வசு, எழுந்திரு. வீட்டுக்குப் போகலாம்” என்று அவளைக் கைப் பிடித்து எழுப்பினான் வாசு.

“அட, இப்பவேவா?. இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாம்” என்று அலறினாள் நர்மதா. ஆனால், அதைக் கண்டு கொள்ளாமல் எழுந்து நடக்க ஆரம்பித்த வாசுவை தொடர்ந்து மற்ற மூவரும் எழுந்து கொள்ள, அமைதியாய் காரை நோக்கி நகர்ந்தனர்.

“இந்தப் பார்வையை வீட்டுக்குள்ள மட்டும் வச்சுக்கோ வசும்மா. வெளியில் வந்துட்டு இப்படிப் பார்த்தா, அப்புறம் என்னைக் குறை சொல்லக் கூடாது, சொல்லிட்டேன்.” என்று அவள் காதில் கிசுகிசுத்து அவளைச் சிவக்க வைத்தவன்,

“இவனுங்க வேற ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போட்டு வச்சுருக்கானுங்க. சொந்த பொண்டாட்டி மேல கூடப் பப்ளிக்ல கைப் போட கூடாதுன்னா எப்படி?” என்று புலம்பவும் மறக்கவில்லை.

“உங்களோட…” என்று அவனை இடித்துக் கொண்டே நடந்தாள் வசுமதி.

“நேரா வீட்டுக்கு தானே வாசு? லஞ்ச் எப்படி? வெளில சாப்பிடுவோமா?” காரை பிரதான சாலைக்குள் செலுத்திய படியே கேட்டான் நரேன்.

“வீட்டுக்கு போய் ஏதாவது லைட்டா சாப்பிட்டுக்கலாம் மாம்ஸ். லஞ்ச்கு இன்னும் நிறைய டைம் இருக்கே” என்றான் வாசு.

“ஓகே டன்” மறுநொடி சீரான வேகத்தில் கார், வீடு நோக்கி விரையத் தொடங்கியது.

காரில் ஒலித்த பாடலுடன் இணைந்து சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தனர் வசுமதியும், வாசுவும்.

“கிட்ஸ்” என்று அவர்களைப் பார்த்துக் கண்களை உருட்டினாள் நர்மதா. சிரித்தான் நரேன்.

“உனக்குப் பொறாமை நம்மு” என்றான்.

“ஆமா, யாரு இல்லைன்னு சொன்னா?” என்றவள் காரை ஓரமாக நிறுத்த சொன்னாள். அவள் கண் காட்டிய இடத்தின் முன் போய்க் காரை நிறுத்தினான் நரேன்.

பாடலில் மூழ்கி இருந்தவர்கள் கார் நின்றதை கவனிக்கவில்லை. நரேனும், நர்மதாவும் இறங்கி போய் ஏதோ வாங்கிக் கொண்டு, மீண்டும் வந்து காரில் ஏறினர்.

பாடல் வரிகளை மறந்து விடக் கூடாது என்பதற்காகக் கண் மூடி யோசித்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்தாள் வசுமதி.

“சாப்பிடு வசு” என்று அவள் முன் எதையோ நீட்டினாள் நர்மதா.

“அண்ணி.. பாடிட்டு இருக்கேன்…” என்று சிணுங்கியவளின் உதட்டில், உணவை வைத்து அழுத்த, வேறு வழியின்றிக் கடித்து மென்று விழுங்கினாள். ஆனால், பிடிக்காத சுவையில் முகம் அஷ்ட கோணலாகியது.

“என்ன வசும்மா?” என்று வாசு அவள் முகம் போன போக்கைப் பார்த்து கேட்க,

“ஐ டோண்ட் லைக் ஷவர்மா” முகம் சுளித்தாள். கை நீட்டி முன்னே இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து வாயில் சரித்தாள். ஆனாலும், நாக்கில் ஒட்டிக் கொண்டு போக மறுத்தது மயோனைஸின் சுவை. இப்போது வயிற்றைப் பிரட்டுவது போல் இருந்தது. இது என்னடா பெரிய தலை வேதனை என்று எரிச்சலாக வேறு வந்தது.

தங்களுக்குப் பின்னே மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த கார்களைக் கவனமாகத் தவிர்த்து, ஒவ்வொரு லேனாக மெது, மெதுவாக மாற்றிச் சாலையின் ஓரத்திற்கு வந்தான் நரேன். அடுத்து வந்த ஷாப்பிங் மாலில் முன் காரை நிறுத்தி,

“இங்கேயே வெயிட் பண்றேன். போய்ட்டு வாங்க” என்றான் திரும்பி வசுமதியிடம், அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்ட அவன் மேல் எப்போதும் போல மரியாதையும், பாசமும் அதிகரித்தது.

“தாங்க்ஸ் அண்ணா” என்றபடி இறங்கி வேகவேகமாக உள்ளே ஓடினாள் வசுமதி.

நர்மதா இம்முறை எதையும் சட்டை செய்யாமல், பார்வையை வெளியில் பதித்து, ஷவர்மாவை உண்டு கொண்டிருந்தாள்.

“நம்மு, போய் வசுக்கு என்னனு பாரு” என்றான் நரேன்.

“ம்ப்ச், நான் போகலை நரேன். அவ வாந்தி எடுக்கறதை பார்த்தா எனக்கும் வாந்தி வரும் போல இருக்கு” என்று முகம் சுளித்தபடி சொன்னாள் நர்மதா.

நரேன் அமைதியாய் அமர்ந்திருந்தான், கண்கள் ஷாப்பிங் மாலின் வாசலில் நிலைத்திருந்தது.

மனைவியைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றான் வாசு.

அவனுக்கு ஏன் இப்போது வெளியில் வந்தோம் என்று கடுப்பாக வந்தது. இன்று தான் கொஞ்சம் தேறி வந்தாள். அதற்குள் அவளுக்குப் பிடிக்காததைக் கொடுத்து மீண்டும் வாந்தி வர வைத்தாயிற்று. அவனுள் என்ன சோதனை இது என்ற சலிப்பு தோன்றி மறைந்தது.

எத்தனை ஆவலாக எதிர்பார்த்த விடுமுறை நாட்கள், திருமணம் முடிந்து வேலையில் சேர்ந்த பிறகு கிடைத்த நான்கு நாட்கள். ஆனால், விதி இப்படியா தங்களைச் சோதிக்க வேண்டும் என்று அலுத்துக் கொண்டான் அவன். அவனை விட அதிகமாகச் சோர்ந்து போய் வெளியில் வந்தாள் வசுமதி.

“வசும்மா, பிளீஸ் டாக்டர் பார்த்திடலாம் டா. ஏதாவது புட் பாய்சனா இருந்தா… ரிஸ்க் எடுக்க வேண்டாம். நீ இப்பவே ரொம்ப டல்லாகிட்ட…” கரிசனத்துடன் சொன்னான் வாசு.

“ஓகே வாசு” என்றபடி அவனுடன் இணைந்து நடந்தாள் அவள்.

காரில் ஏறியதும், “என்னாச்சு?” என்று கண்களால் கேள்விக் கேட்ட நரேனிடம், “மாம்ஸ் பக்கத்தில ஏதாவது ஹாஸ்பிட்டலுக்குக் காரை விடுங்க” என்றான் வாசு.

“இல்ல, பர்துபாய் போய்டலாம் நரேன். அங்க இருக்க ஹாஸ்பிட்டலில் பார்த்துக்கலாம்.” என்றாள் நர்மதா.

“இங்கேயே பார்த்துக்கலாம்…” என்று நரேன் சொல்லத் தொடங்க,

“நம்ம வீட்டு பக்கத்தில பார்த்தா, நாள பின்ன ஃபாலோ அப் போக ஈஸியா இருக்கும். அதுக்குத் தான் சொன்னேன்” விளக்கினாள். நர்மதா சொல்வது சரியென்று பட, காரை வீட்டை நோக்கி செலுத்தினான் நரேன்.

அடுத்த இருபதாம் நிமிடம் அவர்களின் வீட்டின் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் இருந்தனர் நால்வரும்.

“எனக்குக் கொஞ்சம் உடம்பு முடியல வசு. நீயும், வாசுவும் டாக்டர் பார்த்திட்டு டாக்ஸி எடுத்து வீட்டுக்கு வந்துடுங்க. நானும், நரேனும் இப்போ வீட்டுக்கு போறோம்” என்றாள் நர்மதா, வசுமதியின் கைப் பற்றி,

“சரிங்க அண்ணி” என்று வசுமதி சொல்ல,

“என்னாச்சு கா? என்ன பண்ணுது? வாங்க உங்களுக்கும் டாக்டர் பார்த்திடலாம்” என்று வாசு கேட்க,

“இல்ல லேசா தலைவலி தான் வாசு, கொஞ்சம் தூங்கி எழுந்தா சரியாகிடும்” என்று சொல்லி விட்டு அவள் விலகி நடக்க, வாசுவிடம் வந்தான் நரேன்.

“டாக்டர் பார்த்திட்டு கால் பண்ணு வாசு, நான் வந்து பிக் அப் பண்ணிக்கறேன்” என்றான் அவன்.

“அட, போய் அக்காவை கவனிங்க மாம்ஸ், நாங்க வந்திடுவோம்” என்று இளஞ்சிரிப்புடன் சொன்னான் வாசு.

error: Content is protected !!
Scroll to Top