நர்மதாவிற்குத் தன் மேலேயே கோபம் வந்தது. ஆனாலும், அவளால் வசுமதியிடம் கேள்விகள் கேட்காமல் இருக்க இயவில்லை. நர்மதாவின் கடிமான முகம் பார்த்து, தன் தொண்டையை லேசாகச் செருமி சரி செய்து கொண்ட வசுமதி,
“நானும், அவரும் பத்திரிக்கை வைக்க… ரெண்டு பேரும் சேர்ந்து போனோமா, அப்போ டாக்டர் பார்த்தோம்… அவரோட பெரியம்மா…”
“இரு, இரு..” என்று அவளை மீண்டும் தடுத்து நிறுத்திய நர்மதா,
“உங்க கல்யாண பத்திரிக்கை வைக்க, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போனீங்களா?”
“ஆமா” என்று தலையை அசைத்தாள் வசுமதி.
“வீட்ல எப்படி விட்டாங்க?” என்று சத்தமாகக் கேட்ட நர்மதா, வசுமதியை நன்றாகத் திரும்பி பார்த்து,
“வாசுவை ஃபர்ஸ்ட் எப்போ பார்த்த? எங்க பார்த்த? அதில் இருந்து தொடங்கு நீ” என்றாள் ஒரு முடிவுடன்.
அவளுக்குச் சங்கடமாக இருந்தாலும், கண்களை மூடித் திறந்து நர்மதா கேட்டதைச் சொல்லத் தொடங்கினாள் வசுமதி.
“நான் ஊருக்கு போய் இறங்கினதும் வாசுவை தான் முதல்ல பார்த்தேன் அண்ணி. அவர் தான் ஏர்போர்ட்டில் எனக்காகக் காத்திருந்தார். என்னைப் பிக் அப் பண்ண வந்தார்.”
நர்மதாவின் கண்கள் ஆச்சரியத்தில் அகண்டு விரிந்தது, அதைக் கவனியாதது போல மேலே தொடர்ந்தாள் வசுமதி.
“ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டதும் அவர் தான். எங்க வீட்ல கொஞ்ச நேரம் தான் இருந்தார். ஜஸ்ட் ஒரு கப் காபி சாப்பிட்டுட்டு கிளம்பிட்டார்”
“ம்ம்…”
“அன்னைக்கு ஈவினிங்கே திரும்பவும் எங்க வீட்டுக்கு வந்தார். என்னை டின்னர் சாப்பிட வெளில கூட்டிட்டு போனார்.” என்றவள்,
“கல்யாணத்துக்கு முந்தின நாள் மட்டும் தான், நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கலை. மத்த எல்லா நாளும் டெய்லி மீட் பண்ணோம். காலைல வீட்டுக்கு வந்து பிக் அப் பண்ணிடுவார். அப்புறம் பார்க்க வேண்டிய வேலையை எல்லாம் சேர்ந்து தான் பார்த்தோம். ஷாப்பிங், ப்ளவுஸ் தைக்கக் கொடுத்தது, வாங்கினது, நகை வாங்க போனது. அப்புறம் பார்லர், இப்படி எல்லா இடங்களுக்கும் ஒன்னா சேர்ந்து தான் போனோம். பீச், பார்க், மூவி, மால்ஸ், கோவில் சென்னையில் ஒரு இடம் விடலை.” கண்கள் கனவில் மிதக்க, இதழ்கள் புன்னகையில் மலர்ந்திருக்க, கணவனுடன் திருமணத்திற்கு முன் கைக் கோர்த்துக் கொண்டு சுற்றிய நாட்களை நினைவு கூர்ந்தாள் வசுமதி.
திருமணமாகி ஒன்றரை மாதமே ஆகி இருந்த அவர்களுக்கு இடையில் இருந்த நெருக்கமும், புரிதலும் நர்மதாவை சிறிது நாட்களாகவே ஆச்சரியப் பட வைத்தது. ஆனால், அது எப்படி வாய்த்தது என்பது இப்போது புரிவது போலிருந்தது அவளுக்கு.
“உங்க வீட்ல எப்படி விட்டாங்க? உங்க அண்ணா வருண்…” கேள்வி முழுதாக வருவதற்கு முன்னே பதில் சொல்ல ஆரம்பித்தாள் வசுமதி.
“அண்ணா சொல்லி தான் வாசு ஏர்போர்ட்க்கு வந்தார். இல்லனா, கரெக்ட்டா நான் அன்னைக்கு ஊருக்கு வர்றது அவருக்கு எப்படித் தெரியும்?” என்று நர்மதாவை கேட்டவள்,
“அன்னைக்கு ஈவ்னிங் டின்னருக்கு அனுப்பினதும் வருண் அண்ணா தான், அவரோட ஐடியா தான்… வாசு கூடப் போறதுக்கு முன்னாடி என்கிட்ட சொல்லி தான் அனுப்பினார்”
“கல்யாண தேதி முடிவு பண்ணி பத்திரிக்கை அடிச்சு வந்தாச்சு, சோ நாம எல்லாத்துக்கும் சம்மதிச்சே ஆகனும்னு நினைக்காத வசு குட்டி. நீ விரும்பினா மட்டும் தான் கல்யாணம். இல்லனா, இந்த நிமிஷமே எல்லாத்தையும் நிறுத்திடுவேன். நீ எதையும் யோசிச்சு, குழப்பிக்காம போய்ட்டு வா, என்ஜாய் தே டின்னர்” வருணின் வார்த்தைகள் இப்போதும் பசுமையாய் அவள் நினைவில் இருந்தது. அவள் சொன்னதைக் கேட்ட நர்மதாவின் முகத்தில் சிரிப்பின் சாயல் வந்து போனது.
“என் தம்பி கூட எங்க கல்யாணத்தப்ப இப்படித் தான் சொன்னான். நரேனை மிரட்டலாம் செஞ்சான். என்னை ஒழுங்கா பார்த்துக்கலைனா துபாய் வந்து அவரை அடிப்பேன்னு சொன்னான்” இப்போது அவளின் முகத்தில் முழுமையான சிரிப்பு வந்திருந்தது.
“ஓ, அதுக்கு அண்ணா என்ன பதில் சொன்னாங்க?” மெல்லிய அதிர்வுடன் கேட்டாள் வசுமதி.
“நானே விசா போட்டு தரேன், தாராளமா வந்து அடிச்சுட்டு போ. ஒருவேளை உங்க அக்கா என்னை நல்லா பார்த்துக்கலைனு வச்சுக்கோ, அப்பவும் நீ வரணும். என்ன?” நரேனை போலவே அவள் சொல்லி காண்பிக்க, கிளுக்கி சிரிக்க ஆரம்பித்தனர் இருவரும்.
“அன்னைக்கு நைட் வாசு என்னை வீட்டில் விடும் போது, நான் ஒரு தெளிவான முடிவிற்கு வந்திருந்தேன் அண்ணி. எனக்கு அவரை ரொம்பப் பிடிச்சிருந்தது. அதையே வீட்லயும் சொன்னேன். ஆனா, அவர் விட்டுட்டு போன பின்னாடி, என்னைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் உட்கார வச்சு வருண் அண்ணா கேள்வியா கேட்டுக் கொன்னான். அண்ணாகிட்ட இருந்து திவ்யா அண்ணி தான் என்னைக் காப்பத்தினாங்க” என்று பாதியில் விட்டதைச் சொல்ல ஆரம்பித்தாள் வசுமதி.
“எனக்காகக் கார் கதவை திறந்து விட்டதில் தொடங்கி, எனக்குப் பிடிச்சதை கேட்டு ஆர்டர் பண்ணினது வரை… அன்னைக்கு… எல்லாமே எனக்குப் பிடிச்சது.”
“மோஸ்ட் ஜென்டில்மேன் டூ தட்” என்ற நர்மதா, “கதவை திறந்து விடுறது, நம்ம சாய்ஸ் கேட்டு ஆர்டர் பண்றது..” என்று சொல்லிக் கொண்டே போக,
“அந்த மோஸ்ட் ஜென்டில்மேனில் வாசுவும் ஒருத்தரா இருந்தது தான் அன்னைக்கு என்னைக் கவர்ந்தது அண்ணி. அவர் பெருசா ஒன்னும் பண்ணல, ஆனா எனக்காகச் செய்த சின்னச் சின்ன விஷயங்கள் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அன்னைக்கு மட்டும் இல்ல, அதுக்கு அப்புறம் வந்த எல்லா நாளுமே அவர், அப்படித் தான் நடந்துகிட்டார். என் விருப்பத்துக்குத் தான் எப்பவும் முன்னுரிமை கொடுத்தார். அதுக்கு மாறா எதுவுமே இன்னைக்கு வரைக்கும் செய்யலை” கணவனுக்காகப் பரிந்து கொண்டு வந்தாள் வசுமதி. அவள் பேசுவதைப் பார்த்துக் கொண்டு, அமைதியாக அமர்ந்திருந்தாள் நர்மதா.
“ஊருக்கு போய் அஞ்சாவது நாள், வாசுவோட குடும்பம் எங்க வீட்டுக்கு வந்தாங்க. பொதுவா கல்யாண விஷயங்கள் பேசிட்டு, அப்படியே என்னைப் பார்த்துட்டு போக வந்தாங்க” என்ற வசுமதியிடம் புருவம் உயர்த்தினாள் நர்மதா, அதில் இருந்த கேள்வியைப் புரிந்து கொண்ட வசுமதி,
“வாசு, என்னை ரெண்டாவது நாளே அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போனார் அண்ணி. அவங்க அப்பாவை பார்க்க தான் போனேன்.”
“ம்ம்ம்”
“எங்க வீட்டுக்கு வந்துட்டு கிளம்பும் போது, நாங்க அன்னைக்கு எங்க போறோம், என்ன பிளான்னு எங்க அத்தை கேட்டாங்க. செயின்ட் தாமஸ் மௌண்ட்னு சொன்னார் வாசு. அப்ப அவங்க அக்காக்கு, அதாவது வாசுவோட பெரியம்மாக்குப் பத்திரிக்கை கொடுக்க முடியுமா கேட்டாங்க. சரின்னு வாங்கிட்டு போனோம்.
எங்க பெரியத்தைப் போரூர்ல இருக்கப் பெரிய ஹாஸ்பிட்டல கைனகாலஜிஸ்ட்” அதற்கு மேல் எப்படிச் சொல்வது என்று முழித்தாள் வசுமதி.
“அவங்களைப் பார்த்திட்டு, பத்திரிக்கை கொடுத்துட்டு கிளம்பும் போது, வாசு, வாசு… சொல்லி, நான் தான் அவங்க கிட்ட கேட்டேன். அவங்க தான் கருத்தடை மாத்திரை எழுதி கொடுத்தாங்க” ஒரு வழியாகச் சொல்லி முடித்து விட்டு, பெருமூச்சொன்றை எடுத்துத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள் வசுமதி.
நர்மதா மேலே ஒன்றும் கேட்கவில்லை, கேட்கத் தோன்றவும் இல்லை. இப்போது எல்லாக் கேள்விகளும் அர்த்தமற்றதாகப் பட்டது அவளுக்கு. அப்படியே காரணம் கேட்டாலும் என்ன சொல்லி விடப் போகிறாள்? “நாங்க கொஞ்ச நாள் தனியா வாழ்ந்து பார்க்கணும், வீழ்ந்து பார்க்கணும்… ச்சே..” இப்படித் தான் பதில் வரும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். சொந்த அனுபவமும் கூட அவளுக்கு உண்டே.
அவர்களும் திருமணமான புதிதில் இப்படித் தான் முடிவெடுத்தார்கள், குழந்தையைத் தள்ளி போட்டார்கள். ஒன்றாகப் போய் மருத்துவரை பார்க்கவில்லை என்றாலும் கூட முடிவு இருவரதும் தான். இன்றைக்கு அதற்காக அவள் பெரிதும் வருந்துகிறாள் தான். ஆனால், அதைச் சொல்லி வசுமதியை பயமுறுத்த அவள் விரும்பவில்லை.
சிறிது நேரம் அப்படியே மௌனமாக அமர்ந்திருந்தார்கள். இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்திருந்த அமைதியை இருவருமே கலைக்க விரும்பவில்லை.
நர்மதா முதலில் எழுந்து, கிட்சனிற்குள் நுழைய, அவள் பின்னே சென்று மேடையில் அமர்ந்து கொண்டாள் வசுமதி.
“ஏன் அண்ணி, எனக்கு எதுவும் பிரச்சனை இருக்காது இல்ல?” என்று வசுமதி கேட்க, தேநீருக்காகப் பாலை அடுப்பில் ஏற்றிய நர்மதா, அடுப்பை குறைத்து விட்டு வசுமதியின் பக்கமாகத் திரும்பினாள்.
“ஒன்னும் பிரச்சனை இருக்காது வசு. முதல் முறையாக டேப்லெட்ஸ் எடுக்கிற இல்லையா? அதான் இப்படித் தொல்லை கொடுக்குது. உன் முகம் வெளிறி தெரியுது. அனிமிக்கா இருக்க வாய்ப்பிருக்கு. இல்லனா பிசிஓடி இப்படி ஏதாவது இருக்கும். பெருசா ஒன்னும் இருக்காது, பயப்படாத” வசுமதியின் முகம் பார்த்து சொன்னாள் நர்மதா.
“ஹ்ம்ம், ஓகே அண்ணி. வாசு கிட்ட சொல்லணும். அப்புறம் முதல் வேலையா டாக்டர் பார்க்க போகனும்” என்றாள் வசுமதி. ஆனால் அதற்கெல்லாம் தனக்கு நேரம் வாய்க்கப் போவதில்லை என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
நர்மதா பதிலுக்கு ஒன்றும் சொல்லவில்லை. அவள் தேநீர் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக இறங்கினாள்.
சிறிது நேரத்தில் ஆண்கள் இருவரும் கை நிறையப் பைகளுடன் வீட்டினுள் நுழைந்தனர்.
அதன் பின் அந்த வீட்டில் சிரிப்புச் சத்தம் மட்டுமே கேட்டது.
பேச்சு, சிரிப்பிற்கு நடுவிலும் வாசுவின் பார்வை மனைவியின் முகத்திலேயே இருந்தது.
அவள் சோர்ந்து தெரிவது போல இருக்க, “சரிங்க கா, நாங்க ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வர்றோம்” என்றபடி எழுந்து கொண்டான் அவன். மனைவியையும் கை கொடுத்து எழுப்பி விட்டான். அதற்கு மேல் அவனை நர்மதா தடுக்கவில்லை.