பூமரப் பாவைகள் – 16 (1)

“அவளைக் கொஞ்ச நேரத்துக்குக் கலாட்டா பண்ணாம இருங்க வாசு” என்று வாசுவை அதட்டினாள் நர்மதா.

“வாயை ஜிப் போட்டு மூடி விட்டேன்” என்று செய்கையில் காட்டினான் அவன். அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, கை கழுவ எழுந்தாள் வசுமதி. அவள் பின்னேயே போனான் வாசு.

“அங்க போறதில, உனக்கு ஒன்னும் சங்கடம் இல்லல வசும்மா? இப்போ ஃபீலிங் பெட்டர் தானே? சொல்லு?” என்றான் அவள் கைப் பிடித்து,

“எனக்கு ஒன்னும் இல்ல வாசு. ஐ அம் அப்சலூட்டி ஆல்ரைட்” என்றாள் வசுமதி அவன் மார்பில் சாய்ந்து,

“கொஞ்சம் பயந்துட்டேன் வசும்மா” என்றான் கிசுகிசுப்பாக, அவனது கலக்கத்தை நேற்று அவன் கண் பார்த்தே தெரிந்து கொண்டாள் வசுமதி. தனக்காகத் தான் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் திடமாக இருக்கிறான் என்பதையும் கணித்திருந்தாள்.

“இப்படிச் சின்ன விஷயத்துக்கு எல்லாம் பயப்படுவாங்களா வாசு? இதுக்கே இப்படின்னா, இன்னும் என்னென்னவோ பார்க்க வேண்டி இருக்கு” என்று கண் சிமிட்டினாள் அவள்.

“இன்னும் நிறையப் பார்க்க வேண்டி இருக்கு தான், இல்லைன்னு சொல்லலை. ஆனா, அது இப்போ நடக்கப் போறதில்லைல வசும்மா. அதுக்கான நேரம் வரதுக்குள்ள நான் அதைச் சமாளிக்கக் கத்துக்கிட்டு இருப்பேன். அப்போ பாரு நீ” என்று அவளின் நெற்றியில் முட்டி சிரித்தான் அவன். நொடியில் தங்கள் உலகத்திற்குள் சென்றிருந்தனர் இருவரும்.

“போகலாமா?” என்ற நர்மதாவின் குரல் அவர்களைக் கலைத்து, பிரித்து நிறுத்தியது.

“கரடி…” முணுமுணுத்த படியே திரும்பினான் வாசு.

“நாங்களும் இங்க தான் இருக்கோம்” என்று அவனைப் பார்த்து உதடசைத்துக் கூறினான் நரேன்.

“அதான் அப்பவே போகச் சொன்னேனே, கேட்டா தான?” பதிலுக்கு வாயசைத்தான் வாசு. பளிச்சென்று இருவரும் புன்னகைத்து கொண்டனர். அவர்களுக்கு நடுவில் நடக்கும் நாடகத்தைக் கண்டும், காணாதது போல் முன்னே நடந்தாள் நர்மதா.

என்ன தான் வெளியில் நரேன், நர்மதாவின் வரவு பிடிக்காதது போலக் கோபித்துக் கொண்டு, பொய்யாகச் சலித்துக் கொண்டாலும், உள்ளுக்குள் வாசுவிற்கு நரேன், நர்மதா தங்கள் அருகில் இருப்பதில், தங்களைக் கவனித்துக் கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சி தான்.

அவர்களின் நெருக்கமும், அன்பும், அக்கறையும் அவனை மிகவும் நெகிழ செய்தது. எத்தனை பேரால் இது போல எதையும் எதிர்பார்க்காத அன்பை, நிபந்தனைகள் ஏதும் இன்றி வழங்க முடியும். அந்த வகையில் நானும், வசுவும் வரம் பெற்றவர்கள் தான் என்று எண்ணி மனம் மகிழ்ந்தான் வாசு.

நரேனுக்கு வாசுவின் மனம் நன்றாகப் புரிந்ததால், அவனது விளையாட்டை, கேலியை அவன் விபரீதமாக எடுத்துக் கொள்ளவில்லை. சிறு புன்னகையுடன், அவனுக்கு இணையான நக்கல் பதிலுடன் அதை எளிதாக எடுத்துக் கடந்தான் அவன்.

அடுத்தப் பத்தாம் நிமிடம் நரேனின் வீட்டில் இருந்தனர் நால்வரும். வந்ததும், வராததுமாக ஆண்கள் இருவரையும் வெளியில் துரத்தி விட்டாள் நர்மதா. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அடங்கிய நீள பட்டியல் ஒன்றை அவர்களின் கைகளில் திணித்து அனுப்பி இருந்தாள் அவள்.

“உன் தலைவிதி இப்படி இருக்கும் போது, நான் என்ன பண்ண முடியும். வா, போகலாம் வாசு” என்று அவனை இழுத்துக் கொண்டு லிஃப்ட் நோக்கி நடந்தான் நரேன்.

“கழுத்துல இருந்த தாலியை எங்க டா?” என்று மௌனமாய் அருகில் நடந்து வந்தவனைத் திரும்பி பார்த்து நரேன் கேட்க,

“அதுக்குப் பகல் ஷிஃப்ட் என் பொண்டாட்டியோட கழுத்து மாம்ஸ், அதான் மாத்தி விட்டிருக்கேன்” என்று சிறிதும் அசராமல் பதில் அளித்தான் வாசு‌. அவன் சொன்ன விதத்தில் சத்தமாக வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான் நரேன்.

“ஏன் டா, நானும் உங்க கூடவே தானே டா இருந்தேன். இது எப்போ டா நடந்துச்சு?” சிரிப்பின் ஊடே கேட்டான் அவன்.

“ச்சே, என்ன கேள்வி இது மாம்ஸ்? கொஞ்சம் கூட நாசூக்கே இல்லாம… உங்களுக்குத் தெரியாததா? நீங்களும் இதை எல்லாம் கடந்து தானே வந்திருப்பீங்க?” என்று முகம் சுளித்தவன், தொடர்ந்து,

“நான் வேற அப்பப்போ உங்களுக்கு வயசாகிடுச்சுன்றதை மறந்துடுறேன் பாருங்க மாம்ஸ்” என்று தீவிரமாகச் சொல்ல,

“ஆண்டவா, எங்க சமத்துக் குட்டி வசு, எப்படித் தான் இவனை வெச்சு சமாளிக்கறாளோ, தெரியலையே. பாவம், அவளை நினைச்சாலே எனக்கு மனசு வலிக்குது ….”

“ஆங், அப்புறமா மனசை நனைச்சுக் காயப் போடலாம். மொதல்ல வீட்ல சொல்லி அனுப்பின வேலையை ஒழுங்கா செய்வோம் வாங்க” என்று லிஃப்ட்டை விட்டு வெளியில் வந்து, கார் பார்க்கிங்கில் தங்களின் காரை நோக்கி நடந்தபடி சொன்னான் வாசு.

“பொண்டாட்டியோட வளையலை தன்னோட காப்புக்குப் பதிலா போட்டுட்டு சுத்தினவங்க, லிப்ஸ்டிக் கரையோட ஆபீஸ் போனவங்க, முகத்தில குங்குமம் பூசிட்டு ஊர் சுத்தினவங்களை எல்லாம் எனக்கும் தான் தெரியும்… ஆனா நான் என்ன கிண்டலா…”

“டேய் நிறுத்து நிறுத்து. இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? வசு சொன்னாளா? இருக்காதே… அவளுக்கு நர்மதா சொல்லி இருப்பாளோ?” என்று கேள்வியையும் கேட்டு விட்டு, சத்தமாக யோசிக்க ஆரம்பித்த நரேனை பார்த்து விட்டு, சிரிப்பை அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தான் வாசு. அருகில் நடந்து கொண்டிருந்த ஓரிருவர் திரும்பி பார்த்து புன்னகையுடன் கடந்தனர்.

“அடேய் சொல்லிட்டு சிரி டா” எரிச்சலுடன் சொன்னான் நரேன்.

“யோவ் மாம்ஸ், நான் பொதுவா சொன்னேன். ஆனா, நீங்களா தான் வந்து வாக்குமூலம் கொடுத்து மாட்டிக்கிட்டீங்க” சிரிப்பினூடே சொன்னான் வாசு, எத்தனை முயன்றும் தனது சிரிப்பை நிறுத்த முடியவில்லை அவனால். அவனுடன் சேர்ந்து நரேனும் சிரித்துக் கொண்டே வாசுவை முறைத்தான்.

“அதான் சிரிப்பு வந்திடுச்சு இல்ல. அப்புறம் என்ன முறைப்பு” என்றான் வாசு.

“போதும் டா, கல்யாணமான புதுசுல அப்படி எல்லாம் நடக்கறது சகஜம் தம்பி.” என்று விட்டு,

“ச்சே, இன்னைக்கு உனக்கு என்டர்டெயின்மென்ட்க்கு நான் சிக்கிட்டேன் போல..” என்று புலம்பிய நரேன், “வாடா, வீட்ல சொன்ன வேலையைச் செய்வோம்.” என்று காரைத் திறந்து ஏற, அவனைத் தொடர்ந்து காரில் ஏறினான் வாசு.

வசுமதியுடன் தனியாகப் பேசுவதற்கு ஏதுவாக, ஆண்களை வெளியில் அனுப்பி விட்ட திருப்தியுடன் அவள் முன் போய்க் கைகளைக் கட்டிக் கொண்டு அமர்ந்தாள் நர்மதா.

அவளின் கைகளில் நேரம் குறைவாகவே இருந்தது. அதற்குள் கேட்க வேண்டியதை கேட்டு முடிக்க வேண்டும். அதே நேரம் எதிரில் இருப்பவளையும் குழப்பி விடக் கூடாது என்று முடிவுடன் அவளை மெல்ல அழைத்தாள். அவளுக்கு எவ்வித எதிர்பார்ப்பையும் கிளப்பி விடக் கூடாது என்பதையும் மனதில் இருத்திக் கொண்டாள் நர்மதா.

“வசு, டீ, காஃபி எதுவும் வேணுமா?” என்று விசாரித்தாள்.

“இப்ப தானே அண்ணி சாப்பிட்டோம். அதுவே தொண்டை வரைக்கும் இருக்கு. வாசுவும், அண்ணாவும் வரட்டும். அப்புறமா டீ, டிஃபன் சாப்பிடலாம்” என்றாள் வசுமதி.

“ஹ்ம்ம், ஓகே டா” என்ற நர்மதா, பதட்டத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டாள்.

வசுமதி அமர்ந்திருந்த சோஃபாவில் நன்றாகத் தலையைச் சாய்த்து, கண்களை மூடினாள்.

“வசு…” என்று மெதுவாக அழைத்தாள் நர்மதா.

“சொல்லுங்க அண்ணி” அவள் கண்கள் மூடியே இருந்தது.

“நேத்து கேட்டேனே… இல்ல நீ ஏதோ சொன்னியே?” என்று அவளுக்குத் தங்களின் உரையாடலை நினைவு படுத்த முற்பட்டாள்.

“அதுவா அண்ணி” என்று பெருமூச்சொன்றை வெளியிட்டவள், “நான் வெளில தைரியமா காட்டிக்கிட்டாலும், உள்ளுக்குள்ள பயமா இருக்கு. இந்தப் பீரியட்ஸ் எப்படா வரும்னு இருக்கு, அது வர்ற வரைக்கும்…” சொல்லிக் கொண்டே போனாள் வசுமதி.

“எனக்குப் புரியல வசு, நீ என்ன சொல்ல வர்ற?” என்றாள் நர்மதா குழப்பத்துடன்,

“கருத்தடை மாத்திரை எடுத்துக்கிட்டேன் அண்ணி. ஆனா, அது முடிஞ்சதும் பீரியட்ஸ் வரணும் இல்ல. ஏன் இன்னும் வரல? டாக்டர் கிட்ட போகணுமா?”

“ஹ்ம்ம் டாக்டர் கிட்ட போகனும் தான். ஆனா, நீ முதல்ல இருந்து கதையை, சாரி, நடந்ததைச் சொல்லு?” என்றாள் நர்மதா.

“அது வந்து அண்ணி” என்று வசுமதி தடுமாற,

“இந்த மாத்திரை ஐடியா எல்லாம் யார் கொடுத்தது?” என்று இரைந்தாள் நர்மதா. ஒரு நொடி வசுமதியின் முகம் அதிர்ச்சியைக் காண்பித்தது. ஆனாலும், இது எங்கள் வாழ்க்கை, எங்கள் முடிவு என்ற எண்ணத்துடன்,

“ரெண்டு பேர் சம்மதத்தோடு தான்..” அவள் முடிக்கும் முன்பே அடுத்தக் கேள்வியை வீசினாள் நர்மதா.

“நான் உனக்குச் சம்மதமா, சம்மதம் இல்லையான்னு கேட்கல வசு. இது உனக்கு யார் கொடுத்த ஐடியான்னு தான் கேட்டேன். கேள்வியை சரியா புரிஞ்சுட்டுப் பதில் சொல்லு” என்றாள் நர்மதா குரலில் புதிதாக முளைத்த இறுக்கத்துடன், எச்சில் கூட்டி விழுங்கி தன்னை நிலைப்படுத்தினாள் வசுமதி.

“அது வாசு தான் சொன்னார் அண்ணி, எனக்கும் சரின்னு பட்டது…”

“எப்போ சொன்னார்? உனக்கு நடந்தது அவசர கல்யாணம் தானே? கல்யாணத்துக்குப் பத்து நாள் முன்னாடி தானே… இல்ல இல்ல. நீ சரின்னு சொன்னதில் இருந்து பத்தாவது நாள் கல்யாணம்னு தானே முடிவு பண்ணாங்க. அவதி அவதியா எமர்ஜென்சி லீவ் போட்டு, பேக்ஸ் பேக் பண்ணி தானே ஊருக்கு போன? இதுல எப்போ, எங்க மீட் பண்ணி வாசு கிட்ட இதெல்லாம் பேசின?” புருவங்களை உயர்த்திக் கேட்டாள் நர்மதா.

வசுமதி சில நிமிடங்கள் வாயே திறக்கவில்லை, இப்படிப் பட்ட கேள்விகள் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வில்லை. உல்லாசமாகக் கால் நனைக்கக் கடற்கரைக்குப் போனவள், விபத்தாகப் பெரும் அலை ஒன்றில் சிக்கி கொண்டது போலத் தவித்துப் போனாள்.

error: Content is protected !!
Scroll to Top