“டிராவல், அலைச்சல். ரொம்ப நேரம் பனிக் கட்டியில் இருந்தது, தண்ணியில நனைந்தது, இப்படி எல்லாம் சேர்ந்து உடம்புக்கு சேரலைனு நினைக்கிறேன் வாசு.” என்றாள் வசுமதி சோர்வாக, தொடர்ந்து நாலு வார்த்தைகள் பேசுவதற்குள் மூச்சு வாங்கியது. கண்கள் தாமாக மூடிக் கொண்டன. அவளின் தலை சரிந்து, சாய்ந்து கொள்ள இடம் தேடியது.
“நேத்து அங்க புட் கோர்ட்டில என்ன சாப்பிட்டோம்? நீ சைனீஸ் தானே சாப்பிட்ட வசு? ஒருவேளை புட் பாய்சன் ஆகி இருக்குமோ நர்மதா கா?” அதுவரை நடப்பவை அனைத்தையும் சிலை போல அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நர்மதாவிடம் சந்தேகம் கேட்டான் வாசு.
“இருக்காது வாசு, நாங்க இதுக்கு முன்னாடி எத்தனை முறை இப்படி வெளில போய் இருக்கோம். அவளுக்கு எப்பவும், எதுவும் ஆனது இல்ல. கேம்ப்பிங் எல்லாம் போய், நைட் வெட்ட வெளில டெண்ட் போட்டு தங்கி இருக்கோம். பாக்கெட் புட், ரெடி டு ஈட் எல்லாம் சாப்பிட்டு இருக்கோம். அப்போலாம் வசுக்கு ஒன்னுமே ஆனது இல்ல” அவன் கண்களை நேராகப் பார்த்து சொன்னாள் நர்மதா.
சடுதியில் அவன் முகம் கலக்கத்தைக் காண்பித்தது.
வசுமதி உறக்கமும், மயக்கமும், மனதின் கலக்கமும் சேர்ந்து கொள்ளச் சோர்வுடன் கணவனின் மேலேயே சரிந்து கண்களை மூடினாள்.
“வசு ரொம்ப டல்லாகிட்டா, எனக்கு ஒன்னும் சரியா படல. நீ கிளம்பு வசு, நாம ஹாஸ்பிட்டல் போகலாம். அக்கா, நீங்க இவளை கூட்டிட்டு வாங்க. நான் போய்க் காரை எடுக்கறேன், அபார்ட்மெண்ட் வாசல்ல இருப்பேன் கா.” சட்டென ஒரு முடிவுக்கு வந்திருந்தான் அவன். ஆனால், அவனது பதற்றத்தை சிறிதும் சட்டை செய்யாமல்,
“ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு வாசு? ரெண்டு தடவ வாந்தி எடுத்ததுக்கு இம்புட்டு அக்கப் போரா? அவ கொஞ்ச நேரம் நல்லா தூங்கி எழுந்திருக்கட்டும். சரியாகிடு்வா.” என்ற நர்மதாவை யோசனையுடன் பார்த்தான் வாசு.
“நைட் நல்லா தான் கா தூங்கினா” என்று மனைவியைப் பார்த்தபடி சொன்னான் அவன்.
“ஓகே, ஆனாலும் இன்னும் கொஞ்ச நேரம் நல்லா தூங்கட்டும். அவ எழுந்ததும் ஏதாவது லைட்டா சாப்பிட கொடுக்கலாம். அப்புறம் சாயங்காலம் வரை பார்ப்போம். அப்பவும் அவ சரியாகலைன்னா….”
“எதுக்குக் கா, வெயிட் பண்ணி பார்த்து ரிஸ்க் எடுத்து? இப்பவே போகலாம் கா, வாங்க” என்றான் அவசரத்துடன்,
“நான் தான் சொல்றேன் இல்ல வாசு. கொஞ்சம் காது குடுத்து கேளுங்களேன். ஜஸ்ட் புட் பாய்சனா தான் இருக்கும். வேற ஒன்னும் பயப்படுற மாதிரி இருக்காது” என்றவள் தொடர்ந்து, “நீங்க பக்கத்தில ஃப்ரெஷ் இளநீர் எங்க இருக்குனு பார்த்து வாங்கிட்டு வாங்க” என்று சொல்லியபடி எழுந்து கொண்டாள் நர்மதா.
அவன் குழப்பத்துடன் அசையாமல் அப்படியே நிற்க, “வசு தூங்கிட்டா பாருங்க வாசு. நான் போய் இட்லி ஊத்தி எடுத்துட்டு வரேன். அவளுக்குக் கொடுத்துட்டு, நீங்களும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நான் மதியத்துக்குச் சமைச்சு எடுத்துட்டு வரேன்.” என்றபடி கதவை நோக்கி நடந்தாள் அவள்.
“உங்களுக்கு எதுக்குக் கா சிரமம்? நானே ஏதாவது…” அவனை முடிக்க விடவில்லை அவளின் கோபப் பார்வை.
“முதல்ல போய் இளநீர் வாங்கிட்டு வாங்க. அவ எழுந்ததும் அதைக் கொடுங்க. நான் கொஞ்ச நேரத்தில வந்துடுறேன்” சொல்லி விட்டு, மின்னலென மறைந்தாள் நர்மதா.
கடைக்குச் சென்று இளநீர் வாங்கி வர வேண்டும் என்று அவனும் நினைத்தான் தான், ஆனால் மனைவியை விட்டு நகர முடியவில்லை அவனால். சோஃபாவில் சரிந்திருந்தவளை பூவை போல அள்ளி படுக்கையில் படுக்கச் செய்து, போர்த்தி விட்டான். ஏசியைக் குறைத்தான், பால்கனியை மூடி, சூரிய வெளிச்சம் உள்ளே வராதபடி திரைச் சிலைகளை இழுத்து விட்டான்.
அவனுக்குப் பசித்தது. ஆனால் சமைக்கும், சாப்பிடும் மனநிலை அப்போது இல்லாததால் அமைதியாக மனைவியின் அருகில் சென்று படுத்து விட்டான் வாசு. சற்று முன் நர்மதா செய்து கொடுத்த இட்லி அப்படியே தொடப்படாமல் அடுப்படியில் இருந்தது.
வசுமதியின் முகத்தை மறைத்த முடிக் கற்றையை ஒற்றை விரலால் ஒதுக்கி விட்டான். அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து நீண்ட அவளின் கரமும், உறக்கமும் நொடியில் அவனைத் தழுவி கொண்டது.
மதியம் நர்மதா வந்து தான், மீண்டும் அழைப்பு மணியைத் தொடர்ந்து அலற விட்டு அவர்களை எழுப்பினாள். அதுவரை நன்றாக உறங்கி விட்டனர் இருவரும்.
“என்னக்கா? இன்னைக்கு எங்களைத் தூங்க விடக் கூடாதுனு சபதம் எடுத்து இருக்கீங்களா?” கதவை திறந்து, நர்மதாவின் முகத்துக்கு நேராக எரிச்சலுடன் கேட்டான் அவன்.
“குட் ஆப்ட்டர்நூன் வாசு சார்” என்ற நரேனின் குரலில், சட்டென்று நிமிர்ந்து அவனைப் பாத்தான் வாசு.
“வாங்க மாம்ஸ், நீங்களுமா?” என்று அலுத்துக் கொண்டே கதவை அவர்கள் உள்ளே வர விரிய திறந்து விட்டான்.
“நல்லதுக்கே காலம் இல்லப்பா?” புலம்பினான் நரேன், “வசு இப்ப எப்படி இருக்கா?” என்று வாசுவிடம் கேட்டான் அவன்.
“நல்லா தான் இருக்கா மாம்ஸ், ரெண்டு பேரும் நல்லா தூங்கிட்டோம். ஃபீலிங் மச் பெட்டர் நவ்” என்று அவன் சொன்னதைக் கேட்டபடியே உள்ளே வந்து, சோஃபாவில் அமர்ந்தனர்.
அதற்குள் வசுமதி எழுந்து பாத்ரூமிற்குள் நுழைந்திருந்தாள்.
நர்மதா சமைத்து எடுத்து வந்த உணவை தரையில் பாய் விரித்து, அதில் ஒவ்வொன்றாக வைத்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் வசுமதி குளித்து விட்டு வர, சாப்பிட அமர்ந்தனர்.
“நீங்க சாப்பிட ஆரம்பிங்க. நானும் குளிச்சுட்டு வரேன்” என்று வாசு விலகி நடக்க, வசுமதி டிவியை ஆன் செய்தாள்.
நர்மதா உணவை பரிமாறி அவளுக்கு நீட்ட, “அவர் வரட்டும் அண்ணி, அப்புறம் சாப்பிடுறேன்” என்றாள் அவள். நர்மதா தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவளும் இதையெல்லாம் கடந்து வந்தவள் தானே, அவளுக்குப் புரிந்தது.
“ஓகே” என்றவள், “இப்போ எப்படி ஃபீல் பண்ற வசு?” என்று கேட்க,
“பைன் அண்ணி, ரொம்ப நேரம் தூங்கினதாலேயோ என்னமோ தெரியல, கொலைப் பசி பசிக்குது. மத்தபடி ஐ அம் ஓகே.” என்று தோளை குலுக்கினாள் அவள்.
“சரி டா, வாசு வந்ததும் சாப்பிடலாம். நிறையத் தான் சமைச்சு எடுத்துட்டு வந்திருக்கேன். அப்புறம் நேத்து ஒரு விஷயம் கேட்டேனே, யோசிச்சியா? டேட்ஸ்…” அவள் முடிக்கும் முன்பே பதில் சொல்ல ஆரம்பித்தாள் வசுமதி.
“என் ஞாபகம் சரின்னா… கல்யாணத்துக்குப் பத்து நாளைக்கு முன்னாடி வந்தது அண்ணி. அப்புறம் மாத்திரை போட்டேனா? அதுக்கு அப்புறம் இன்னும் வரல.” என்று அசட்டையாகப் பதில் சொன்னாள் வசுமதி.
“ஏன் அண்ணி, இந்த மாத்திரை முடிஞ்சா மறுநாளே பீரியட்ஸ் வந்திடுமா? இல்ல இப்படித் தான் லேட் ஆகுமா?” என்று அவள் கேட்க, நர்மதா அவளை முறைத்துக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
“அதெல்லாம் ஹார்மோன் டேப்லெட்ஸ் தானே அண்ணி? உடம்பை போட்டு இந்தப் படுத்து படுத்துது. ஷப்பா முடியல. இந்தப் பீரியட்ஸ் வந்தா தான் நிம்மதியா இருக்கும் எனக்கு” புலம்பினாள் வசுமதி. நர்மதா அவளைப் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“என்ன அண்ணி, ஒன்னுமே பேச மாட்டீங்கறீங்க? முகம் வேற ஒரு மாதிரி இருக்கு? அண்ணா கூடச் சண்டையா? இல்ல உங்களுக்கும் உடம்பு முடியலையா?” என்று அவள் கரிசனத்துடன் கேட்க,
“இல்ல வசு, எனக்கென்ன? நான் ரொம்ப நல்லா தான் இருக்கேன். இப்போ நீ சாப்பிடு. வாசு வந்தாச்சு பாரு” என்று கண்களால் அவனைச் சுட்டிக் காட்டினாள். அவனும் குளித்து விட்டு வந்து அவர்களுடன் இணைந்து கொண்டான். ஒருவருக்கொருவர் உணவை பரிமாறிய படி உண்ணத் தொடங்கினர்.
“ஏன் மாம்ஸ், உங்களுக்கு அக்காவை பிடிக்காதா? வசு உங்களுக்கும் எங்களைப் போல அரேன்ஞ்சுடு மேரேஜ்னு தான் சொன்னா. ஆனா, கட்டாயக் கல்யாணமா? அக்காவை பிடிக்காமயா கட்டிக்கிட்டீங்க?” நரேனின் தோளில் முகம் வைத்து கிசுகிசுப்பாகக் கேட்டான் வாசு. தலையைப் பின்னுக்கு இழுத்து, அவனை அதிர்ந்து போய்ப் பார்த்தான் நரேன்.
“உனக்கு ஏன் இப்படி எல்லாம் சந்தேகம் வருது வாசு? திடீர்னு ஏன் இப்படிக் கேட்கற?” பதில் கேள்வி கேட்டான் நரேன்.
“சந்தேகம் வராம என்ன செய்யும்? எப்பப் பாரு இங்க வந்து டேரா போட்டா..” முணுமுணுத்தான்.
“உன்னை விட்டா, வீட்டுக்கு வராதீங்கன்னு சொல்லிடுவ போலயே வாசு”
“ச்சே ச்சே.. உங்களைப் போய் அப்படி எல்லாம் சொல்வேனா மாம்ஸ்? அப்படிச் சொல்லிட்டு, அப்புறம் என் பொண்டாட்டி கிட்ட யார் உதை வாங்குறது?” என்று அவன் சலித்துக் கொள்ள, சிரித்து விட்டான் நரேன்.
“இப்ப உனக்கு என்ன தான் பிரச்னை?” என்றான் நரேன் திரும்பி வாசுவை பார்த்து, பேசிக் கொண்டிருந்தாலும் இருவருக்கும் உணவும் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது. வாசு, அவ்வப்போது திரும்பி வசுமதி உண்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டான்.
“என்ன மாம்ஸ் நீங்க பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க? பிரச்சனைன்னு இல்ல. ஆனா எங்களுக்குக் கல்யாணமாகி ஒரு மாசம் தான் ஆகி இருக்குனு உங்களுக்கு ரிமைண்ட் பண்றேன், வேற ஒன்னும் இல்ல” என்று சிரித்தான் வாசு.
“அடடே அதை நாங்க மறந்தே போய்ட்டோம் பாரேன்” என்று நரேன் போலியாக வருத்தம் கொள்ள, கண்களைச் சுருக்கி சந்தேகமாக அவனைப் பார்த்தான் வாசு
“இங்க பாருங்க மாம்ஸ், வர்ற ரெண்டு நாளும் நீங்க என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. ஆனா, உங்க பொண்டாட்டி மணிக்கு முன்னூறு தரம் இங்க வரக் கூடாது, அவ்வளவு தான் சொல்லிட்டேன். அவங்களை வீட்ல பிடிச்சு வைக்கறது உங்க பொறுப்பு” என்றான் அழுத்தம், திருத்தமாக,
“சரி வாசு, ஆனா அதை நீயே… அவக்கிட்ட சொல்லிடு…” கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான் நரேன்.
“யோவ் மாம்ஸ், அவங்க உங்க பொண்டாட்டி தானே? இந்தச் சின்ன விஷயத்தைச் சொல்ல கூட ஏன் இப்படிப் பயப்படுறீங்க?”
“சரிப்பா, நான் பயந்தாங்கொள்ளி தான். நீ தைரியமான ஆள் தானே? நீ உன் பொண்டாட்டி கிட்ட முதல்ல சொல்லு. உங்க அண்ணா, அண்ணி இந்த லீவ் முழுக்க நம்ம வீட்டுப் பக்கம் வரக் கூடாதுன்னு. அவ என்கிட்ட சொல்லட்டும், அப்புறம் நாங்க இந்தப் பக்கம் வந்தா…”
“என்னது நானா?” நரேன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடையிட்டு அலறினான் வாசு.
“நீயே தான். வசு உன் பொண்டாட்டி தானே? அவளுக்குப் போய் இப்படிப் பயப்படுற?” என்று தனக்கு வாய்ப்பு கிடைக்கவும் வாசுவின் காலை வாரினான் நரேன். அவனது வார்த்தைகளாலேயே அவனைத் திருப்பி அடித்தான்.
“ச்சே வில்லனுங்க. கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா? புதுசா கல்யாணம் ஆனவனைக் கொஞ்சமாவது பொண்டாட்டி கூட நிம்மதியா இருக்க விடுறானுங்களா?” என்று சிறு குரலில் புலம்பினான் வாசு. அதைக் கேட்டுக் கொண்டிருந்த நரேன் சத்தம் வராமல் சிரித்த படி, வாசுவின் பக்கமாகக் குனிந்து,
“நீ வசுகிட்ட சொல்லு வாசு. அவ சொன்னா நாங்க இங்க வர மாட்டோம்” என்றவன்,
“அப்படியே சொல்லும் போது மறக்காம உன் கழுத்துல இருக்கத் தாலியை எடுத்து அவ கழுத்துல போட்டு விட்டுட்டு சொல்லு” என்றான் சிரிப்பு சற்றும் குறையாமல், அப்போது தான் வாசு குனிந்து தன் கழுத்தை பார்த்தான். நரேன் சொன்னது போல நிஜத்தில் தாலி சரடு அவன் கழுத்தில் தான் இருந்தது. மெலிதாக அவன் முகத்தில் வெட்கம் எட்டிப் பார்த்தது.
பகலெல்லாம் உறங்கியதால் இரவில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தாள் வசுமதி. “எனக்குத் தூக்கம் வரலை வாசு, நீங்க மட்டும் நல்லா தூங்கறீங்க” நாள் முழுக்க அவளுக்காகத் தவித்த அசதியில் அவன் கண்கள் உறக்கத்தில் அமிழ்ந்து போக முயன்று இமைகளை மூடியது.
“வாசு…” அவன் மார்பில் கைப் போட்டு, மென்மையாக அவனை உலுக்கினாள். அவள் எதிர்பாராத நொடியில் அவளைக் குழந்தையைப் போல அள்ளி தன் மார்பில் கிடத்தினான் வாசு. அவளின் நீண்ட பின்னலும், தாலிச் சங்கிலியும் அவனது கழுத்தில் விழ அதைப் பிரித்தெடுக்க விழைந்தாள் வசுமதி. மனைவியின் கைகள் கழுத்தில் ஊர்ந்ததில் உடல் சிலிர்க்க, பாய்ந்து அவள் கைகளையும், அவளின் பின்னலையும் தன்னிடம் இருந்து வெடுக்கென்று பிரித்தான் வாசு. பின்னலில் சிக்கி இருந்த தாலி, அவன் இழுத்த வேகத்தில் வந்து அவன் கழுத்தில் விழுந்தது இப்போது அவன் நினைவில் வந்து சென்றது.
அந்த நினைவில் புன்னகையும், வெட்கமும் அவன் முகத்தில் எட்டிப் பார்த்தது. குளிக்கும் போது கவனித்தான் தான், அதைக் கழற்றி வைக்கும் எண்ணமும் அவனுக்கில்லை என்பதால் அப்படியே விட்டிருந்தான்.
குளித்து விட்டு வந்தவன் அதை மனைவியின் கழுத்திற்கு மாற்ற மறந்திருந்தான். நர்மதா வேறு அங்கிருக்க அவனுக்கு அதற்கெனத் தனியாகச் சமயம் வாய்க்கவில்லை.
இன்றைக்குப் பார்த்து நரேனின் கழுகுப் பார்வையில் அது படும் என்று அவன் நினைக்கவேயில்லை.
சரி, தற்போது அதுவா முக்கியம் என்று அதைப் புறந்தள்ளி விட்டு நரேனை முறைத்துப் பார்த்தான்.
“எங்களுக்குக் கல்யாணம் ஆனது தான் முக்கியம். தாலியை யார் போட்டிருந்தா என்ன? நாங்க ரெண்டு பேரும் ஒன்றான பின்னாடி, எதையும் பிரிச்சு பார்க்க கூடாது மாம்ஸ். நான் தான் அவ, அவ தான் நான்னு ஆனதுக்கு அப்புறம், கழுத்தா முக்கியம்” என்றான் வாசு நெஞ்சை நிமிர்த்தி.
“டேய் டேய் டேய் வெட்கம் கெட்டவனே, நல்லா சமாளிக்கற டா, உனக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கு” என்றான் நரேன் வாய்க் கொள்ளா புன்னகையுடன்.
“நன்றி மாம்ஸ்” அத்தோடு நிற்காமல், நரேனை சிரம் தாழ்த்தி வணங்கினான் அவன்.
“தாலி கட்டும் போது மட்டும் வெட்கம் வராதாம், அப்போ மட்டும் பூரிச்சு போறீங்க இல்ல? நெஞ்சை நிமிர்த்தி, கண்ணைப் பார்த்துப் பெருமையா தாலியை கட்ட வேண்டியது. ஆனா, அதே தாலி நம்ம கழுத்துல வந்தா மட்டும், எதுக்கு வெட்கப் படனும்?” என்றான் வாசு. அவனை நன்றாகத் திரும்பி பார்த்து கையெடுத்து கும்பிட்டான் நரேன்.
அதில் தானாக விரிந்த வாசுவின் புன்னகை நர்மதா முறைப்பதை பார்த்ததும் சிரிப்பாக மாறியது. அவன் கழுத்தை அவள் பார்க்கவும், காரணத்தைப் புரிந்து கொண்டான் அவன். குளித்து, உடை மாற்றியவன் காலருடன் கூடிய ட்ஷிர்ட்டை தான் தேர்ந்தெடுத்து அணிந்திருந்தான். ஆனாலும், அவர்கள் கண்களில் இருந்து தப்பவில்லை.
ஆனால், அதற்காக எல்லாம் அவன் தற்போது வருந்த போவதில்லை, சங்கடமும் படப் போவதில்லை. முகத்தை நிமிர்த்தி நர்மதாவை பார்த்தான் வாசு.
“சாப்பிடும் போது என்ன வளவளன்னு பேச்சு?” ஆண்கள் இருவரையும் கண்டித்தவள், “சாப்பிட்டு முடிச்சாச்சுன்னா கிளம்புங்க. எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்றாள் நர்மதா.
அதைக் கேட்டதும் பெரிதும் அதிர்ந்தவனாகத் திரும்பி நரேனை பார்த்தான் வாசு.
அவனோ, “எங்களைத் தொல்லை செய்யாமல் இருங்களேன்” என்று நரேனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, நர்மதாவோ, அவர்களை முழுதாகத் தன் வீட்டிற்குக் கடத்த முயல, அவனால் தனது அதிருப்தியை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
“எதுக்குக் கா, நாங்க இங்கேயே…” அவனை ஒற்றைப் பார்வையில் முறைத்து அடக்கிய நர்மதா,
“வீட்டுக்கு வர்றீங்களான்னு உங்களைக் கேட்கலை வாசு. எல்லோரும் நம்ம வீட்டுக்கு போறோம்னு சொல்றேன். ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரிஞ்சுதா?” என்று நிதானமாகக் கேட்டாள் அவள்.
வாசுவின் முகம் போன போக்கைப் பார்த்த நரேன், தன் சிரிப்பை அடக்கத் தொலைக் காட்சியில் பார்வையைப் பதித்தான்.
வாசு, அவனுக்கு முன்னே அமர்ந்து தீவிரமாக உணவில் கவனம் செலுத்தி இருந்த மனைவியைப் பார்த்தான். ஆனால், அவளோ அவர்களைச் சுத்தமாக மறந்து விட்டிருந்தாள். பல நாள் பட்டினிக்குப் பின் உணவை கண்டது போல, உண்டுக் கொண்டிருந்தாள் அவள்.
“மாங்கா, எங்க அண்ணி கிடைச்சது? மாங்கா பச்சடி பிரம்மாதம்” சப்புக் கொட்டி சாப்பிட்டு கொண்டிருந்தாள் வசுமதி.
“அடியே பொண்டாட்டி..” என்று அவள் புறமாகக் குனிந்து வாசு அழைக்க,
“ஹ்ம்ம், வேணுமா? டேஸ்ட் நல்லா இருக்கு இல்ல” என்று உணவை அள்ளி அவனுக்கு நீட்டினாள் அவள்.
“எனக்கு அன்னைக்கே டவுட் தான், இவளுக்கு இருபத்தி மூனு வயசா? ம்ஹூம். இருக்காது” என்று உதட்டை பிதுக்கினான் வாசு.
நரேனும், நர்மதாவும் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தனர்.