பூமரப் பாவைகள் – 15 (1)

நர்மதாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. தனக்காகக் கூட அவள் இத்தனை மகிழ்ந்திருக்க மாட்டாள். வசுமதியை அலேக்காகத் தூக்கி தட்டாமலை சுற்ற வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

“வசு, நிஜமாவா டா? எவ்வளவு நாள் ஆச்சு?” கேட்டாள்.

“எதுக்கு எவ்வளவு நாள் ஆச்சு?” என்று மறுகேள்வி கேட்ட வசுமதி, “கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு, அப்புறம்…” என்று மனதில் கணக்கிட்டு எதையோ யோசிக்கத் தொடங்கினாள் அவள்.

“லாஸ்ட்டா பீரியட்ஸ் எப்போ வந்தது வசு? எத்தனை நாள் தள்ளிப் போய் இருக்கு? அதுவாவது தெரியுமா? தெரியாதா? இதைக் கூடச் சரியா கவனிக்காம என்ன பொண்ணு நீ? இன்னும் சின்னப் பிள்ளை இல்ல நீ, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. புரிஞ்சுதா?” செல்லமாக அதட்டினாள் நர்மதா. அவளையும் மீறி குரல் உயர்ந்து, லேசாகக் கோபமும் எட்டிப் பார்த்தது.

அவளை மெல்ல ஏறிட்ட வசுமதி, “கருத்தடை மாத்திரை எடுத்துட்டு இருந்தேன் அண்ணி. அது முடிஞ்சதுக்கு அப்புறமும் பீரியட்ஸ் வரல. மாத்திரை முடிஞ்சு ஒன் வீக் ஆச்சு. அதான் லேட் ஆகுமான்னு சந்தேகம் கேட்டேன்” என்றாள் சாதாரணமாக, அவளை அதிர்ந்து போய்ப் பார்த்தாள் நர்மதா.

“வாட்? மாத்திரை எடுத்தியா? எதுக்கு?” கிட்டத்தட்ட கத்தினாள், அந்தக் குரலில் மிரண்டு போய் அவளைப் பார்த்தாள் வசுமதி. அவளுக்கு நர்மதாவின் திடீர் கோபத்திற்கான காரணம் புரியவேயில்லை.

“ஆமா அண்ணி, வந்து மாத்திரை… கருத்தடை..” என்றாள் திக்கியபடி, ஏதோ தவறு செய்து மாட்டிய பள்ளி மாணவியை விசாரிப்பது போல் இருந்தது நர்மதா கேள்வி கேட்ட தொனி. அவளது முகத்தில் இருந்த கோபத்தைக் கண்ட வசுமதிக்கு குரலே எழும்பவில்லை.

“வசும்மா, பசிக்குது சொன்ன இல்ல? வா, சாப்பிடலாம். ஏற்கனவே உனக்கு உடம்பு முடியலை. இதுல வயித்தை காயப் போடாத, வா” அவளது தோளைத் தொட்டுச் சொன்னான் வாசு.

அவள் பாத்திரத்துக்கு மாற்றி இருந்த உணவுகளை ஹாலிற்கு எடுத்துச் சென்றான் அவன். நர்மதா அதே நிலையில் அப்போதும் வசுமதியை முறைத்தபடியே நின்றிருந்தாள்.

“அண்ணி, அது வந்து…” என்ன சொல்லி அவளைச் சமாளிப்பது என்று தெரியாமல் அவள் கையைப் பிசைந்து கொண்டு நிற்க, “இப்போ வேணாம், அப்புறம் பேசலாம்” என்றபடி முன்னே நடந்தாள் நர்மதா.

“சரிங்க அண்ணி” என்று விட்டு, தானும் அமைதியாகப் போய்க் கணவனின் அருகில் அமர்ந்து கொண்டாள் வசுமதி. டிவியில் சுயம்வரம் படம் ஓடிக் கொண்டிருந்தது. பல உட்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்த நகைச்சுவை திரைப்படம் அது. நொடியில் அவளது மனநிலை முற்றிலுமாக மாறிப் போக, படத்தில் முழுவதுமாக லயித்திருந்தாள். கை தானாக உணவை அள்ளி வாய்க்கு கொடுத்துக் கொண்டிருந்தது.

இரவு உணவை முடித்து விட்டு, மீண்டும் படத்தில் மூழ்கினர் நால்வரும். நாள் முழுக்கப் பயணம் செய்த அசதியில், உணவு உள்ளே சென்றதும் உறக்கம் அவளைத் தழுவ, கணவனின் தோள் சாய்ந்து அமர்ந்தவாக்கிலேயே உறங்கி விட்டாள் வசுமதி. அவளை அப்படியே தூக்கி சென்று படுக்கையில் கிடத்தினான் வாசு.

சிறிது நேரத்தில் படம் முடியவும், அவனிடம் விடை பெற்றுக் கொண்டு வீட்டிற்குக் கிளம்பினார்கள் நரேனும், நர்மதாவும்.

மறுநாள் விடியலிலேயே வந்து, அவர்கள் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள் நர்மதா.

“அக்கா, என்னாச்சு கா? இவ்வளவு காலையில வந்திருக்கீங்க?? மாம்ஸ் எங்க?” பாதித் தூக்கத்தில் எழுந்து வந்து கதவை திறந்த வாசு, கண்களைத் தேய்த்து விட்டப் படியே கேட்டான். அவள் உள்ளே வர, இரெண்டெட்டு பின்னே நகர்ந்து வழியும் விட்டான்.

“என்ன என்னாச்சு? ஒன்னும் ஆகல, மணி என்ன தெரியுமா? எட்டு. வசுவை பார்க்க வந்தேன்” என்றாள் நர்மதா, அறைக்குள் நுழைந்து சோஃபாவில் அமர்ந்தபடி, ஓரக்கண்ணால் இடப்புறம் பார்த்தாள்.

ஹாலையும், படுக்கை அறையையும் மெல்லிய திரைச்சீலை தடுப்பாக நின்று பிரித்துக் காட்டியது. அந்தப் பக்கம் வசுமதி உறங்கிக் கொண்டிருந்தது வரிவடிவமாகத் தெரிந்தது.

“மணி எட்டு தான் ஆகுதா? எர்லி மார்னிங் தான் ஆகுதா? அப்போ நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன். நீங்க டிவி பாருங்க கா” என்று கொட்டாவி விட்டபடியே சொன்னான் வாசு.

“சோம்பேறிங்க…” முணுமுணுத்தாள் நர்மதா.

“லீவு நாள் அதுவுமா, விடியக் காலையிலேயே எழுப்பி விட்டுட்டு… சொல்ல மாட்டீங்க பின்ன..” தன் பங்குக்கு அவனும் முணுமுணுத்தான்.

நர்மதா ஹாலில் அமர்ந்திருக்கும் போது அவளைப் புறக்கணித்து விட்டு, உறங்க செல்வது மரியாதையாக இருக்காது என்பதால், பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு வந்தான் வாசு.

“காபியா, டீயா அக்கா?” என்றான், ப்ரிட்ஜ் திறந்து பாலை எடுத்தபடி,

“காஃபி, நான் ஏற்கனவே குடிச்சுட்டேன். சோ, கொஞ்சமா குடுங்க” என்றாள் நர்மதா.

அவளை விசித்திரமாகப் பார்த்த வாசு,

“நரேன் மாம்ஸ் எங்க கா?” என்று கேட்க,

“அவர் தூங்கறார்” பட்டென்று வந்தது பதில்.

“தூங்கறாரா? அப்போ நாங்க மட்டும் தான் சோம்பேறிங்களா?” கடுப்புடன் கேட்டான், ஆனால் அந்தக் கேள்விக்குப் பதில் வரவில்லை.

பாலை அடுப்பில் ஏற்றி, தீயை குறைத்து வைத்தான். மெதுவாக நர்மதாவின் முன் வந்து நின்று,

“என்னக்கா? ஏதாவது பிரச்சனையா? மாம்ஸ் கூடச் சண்டையா?” அக்கறையாய் விசாரித்தான்.

அவனிடம் வசுமதி முன்னரே சொல்லி இருக்கிறாள். கணவன் அல்லது மாமியாரிடம் சண்டை என்றால் நர்மதா இங்குத் தான் தஞ்சம் புகுவாள் என்று, மேலும் அவன் முன் தின இரவு இரு பெண்களும் ஏதோ சிறு குரலில் ரகசியமாகப் பேசிக் கொண்டதை பார்த்திருந்தானே. நர்மதாவின் குரல் உயர்ந்து கூடக் கேட்டதே, அவர்களுக்கு நடுவில் எதுவும் பிரச்சனையோ என்று குழம்பி போனான் அவன். ஏதோ சரியில்லை என்று அவனது உள்ளுணர்வு சொல்லியது.

“அக்கா உங்களைத் தான் கேட்கறேன்” குரல் உயர்த்தினான். தன் சிந்தனைகளில் மூழ்கி இருந்தவள் அவனை நிதானமாக நிமிர்ந்து பார்த்து, “என்ன வாசு?” என்றாள்.

மறுபக்கம் அவர்களின் பேச்சுச் சத்தத்தில் உறக்கம் கலைந்து எழுந்த வசுமதி, “குட் மார்னிங்” என்று சத்தமாகச் சொன்னாள். அவள் உடலை வளைத்து சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையில் இருந்து கீழிறங்க, பாதத்தைக் கீழே வைத்த கணமே தலையைச் சுற்றி விட்டது அவளுக்கு, நொடியில் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு, பாத்ரூம் நோக்கி நகர்ந்தாள் அவள்.

“குட் மார்னிங் வசும்மா” என்றவன், “ஒன் மினிட் கா, காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்” அடுப்படிக்குள் நுழைந்தான்.

“காஃபி நான் போடவா வாசு?” சம்பிரதாயத்துக்காகக் கேட்டாள் நர்மதா.

“வேணாம் கா, டூ மினிட்ஸ் கொடுங்க. கையில சுடசுட காஃபி இருக்கும்” என்று வேலையில் இறங்கினான் அவன்.

பத்து நிமிடம் கழித்துப் புத்தம் புது மலரை போல வெளியில் வந்த மனைவியிடம் காஃபி கோப்பையை நீட்டினான் வாசு. அவள் முகத்தில் பனித் துளிகளைப் போல மின்னிய, நீர்த் திவலைகளைத் துடைத்து விட்டான்.

அவன் நீட்டிய காபியை வாங்கி, ஒரு மிடறு தான் அருந்தி இருப்பாள், அதற்குள் குமட்டிக் கொண்டு வர, கோப்பையைக் கணவனின் கையில் திணித்து விட்டு மின்னல் வேகத்தில் பாத்ரூமை அடைந்தாள். அங்கு அவள் உடலில் இருந்த ஒட்டு மொத்த நீரும் வாய் வழியே வெளியேறியது.

அவளின் பின்னே வந்து நெருங்கி நின்று, அவளின் தலையை அழுத்தி பிடித்திருந்த வாசு, “உனக்கு என்னடா ஆச்சு வசும்மா? ஏன் இப்படி வாந்தியா எடுக்கற? நேத்து வெளில சாப்பிட்டது ஒத்துக்கலையா?” கவலை தோய்ந்து வந்தது அவன் வார்த்தைகள்.

வெறும் வயிற்றில் வாந்தி எடுத்ததில் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க அவன் மேல் நன்றாகச் சாய்ந்து கண்களை மூடி இருந்தாள் வசுமதி. அவளைக் கைத் தாங்கலாக நடத்திக் கொண்டு போய்ச் சோஃபாவில் அமர வைத்தான். அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

error: Content is protected !!
Scroll to Top