பூமரப் பாவைகள் – 14 (2)

கடலை விடப் பரந்து விரிந்த, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, மணல் மட்டுமே தெரியும் பாலைவனத்தில் பயணிப்பதே ஒரு வித்தியாசமான அனுபவம் தான். அதிலும் டூன் பேஷிங் என்று அழைக்கப்படும் மணல் குன்றுகளில், காரில் வேகமாக ஏறி இறங்குவது அலாதியான அனுபவமாக இருக்கும். அந்தத் திரில் ரைய்டு சிலருக்குப் பிடிக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், வசுமதிக்கு மிகவும் பிடிக்கும். துபாய் செல்வோர் வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறையாவது சென்று வர வேண்டிய, கண்டிப்பாகத் தவற விடக் கூடாத நிகழ்வு என்பாள் வசுமதி.

மணல் குன்றுகளில் ஏறி இறங்கியதும், அருகில் இருக்கும், இதற்கெனவே பாலைவனத்திற்கு நடுவில் அமைக்கப் பட்டிருக்கும் கேம்பிற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கே ஒட்டக சவாரி செய்யலாம், அதை அழகாகப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். கைகளில் அழகாக அரேபியா மெகந்தி இட்டுக் கொள்ளலாம்.

அதன் பின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து ரசிக்கும் பெல்லி டான்ஸிம் உண்டு. அது முடிந்ததும், அருமையான, ருசி மிகுந்த பர்பெக்யூ உணவும் உண்ணக் கிடைக்கும். எல்லாம் முடிந்து வீடு திரும்ப நள்ளிரவாகி விடும், வசுமதி இது வரை இரு முறை சென்றிருக்கிறாள்.

முதல் முறை அலுவலக நண்பர்களோடு, இரண்டாம் முறை வருண் குடும்பத்துடன்.

“எல்லாத்துக்கும் முடியாது, முடியாது சொன்னா, எங்க தான் போறதாம்?” கணவனைப் பார்த்து பல்லைக் கடித்தபடி கேட்டாள் அவள்.

“சத்தியமா, டேசர்ட் சஃபாரி என்னால முடியாது வசும்மா. எனக்கு இதயம் தொண்டைக்கு வந்திடும்” என்றான் அவன்.

லேசாகச் சிரித்துக் கொண்டே,

“எனக்கு அந்த அட்ரலின் ரஷ் ரொம்பப் பிடிக்கும் வாசு, அதான் கிக்கே” மெல்ல அவன் புறமாகச் சரிந்து கிசுகிசுத்தாள் அவள்.

“அவ்வளவு தானே? அதை என்கிட்ட விட்டுடு செல்லம். வரும் இரவுகளில் அட்ரலின் தாறுமாறா எகிற வச்சுடலாம்.” என்று அவன் பதிலுக்கு அவள் காதை கடிக்க, புன்னகையை அடக்குவதற்குள் பெரும்பாடு பட்டுப் போனாள் வசுமதி.

தங்கள் உலகத்துக்குள் மூழ்க போனவர்களைக் கலைத்தது நரேனின் குரல்.

“ராஸ் அல் கைமா போலாம், ஐஸ் லேண்ட் வாட்டர் பார்க்? என்ன சொல்றீங்க? ஓபன் பண்ணி ரெண்டு, மூனு மாசம் தான் ஆகுது. முழுக்க, முழுக்கப் பனிக் கட்டியால் செய்யப்பட்டது. இந்த வெயிலுக்கு நல்லா இருக்கும்.”

“ஓ, நானும் நியூஸ்ல பார்த்தேன் மாம்ஸ். போட்டோஸ் பார்க்கவே நல்லா இருந்தது” என்றான் வாசுவும்.

அவ்வளவு தான், மறுநாள் அங்குச் செல்வதென ஒரு மனதாக முடிவு செய்து விட்டனர்.

நரேனின் காரில் அதிகாலையிலேயே ராஸ் அல் கைமா கிளம்பி விட்டனர் நால்வரும்.

நரேன் கார் ஓட்ட, அவனருகில் அமர்ந்திருந்த நர்மதா காரில் ஒலித்த எண்பதுகளின் தமிழ் பாடல்களோடு பாடியபடியே வந்தாள்.

அவளைத் தொடர்ந்து வசுமதியும், வாசுவும் பாடத் தொடங்கினர்.

கார் ஷார்ஜாவில் நுழைகையிலேயே, ஆளுக்கொரு பக்கமாகச் சரியத் தொடங்கினர்.

வழக்கத்தை விடச் சீக்கிரமாக எழுந்ததால், தூக்கம் கண்ணைச் சுழற்ற, அதன் பின் கார் பயணம் முழுவதையும் தூங்கியே கழித்தாள் வசுமதி.

அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் பிரம்மாண்டமாக இருந்தது வாட்டர் பார்க். செயற்கையான அலைகள் நிறைந்த நீச்சல் குளமும், செயற்கை நீர் வீழ்ச்சியும் மற்றும் இன்ன பிற நீர் விளையாட்டுக்களும் அவர்களைக் கவலைகள் மறந்து ரசிக்க வைத்தது. அங்கிருந்த பல குழந்தைகளோடு

குழந்தைகளாக மாறி குதூகளித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர் நால்வரும்.

மாலை நெருங்கும் நேரத்தில் விருப்பமே இல்லாமல் அங்கிருந்து கிளம்பினர். நாள் முழுக்க நீரில் ஆடியது அவர்கள் அனைவரையும் சோர்வுற செய்திருந்தது. அதிலும் வசுமதி மிகவும் அசந்து தெரிந்தாள்.

“கார் நான் ஓட்டுறேன் மாம்ஸ், நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றான் வாசு, காலையில் வரும் போதும் நரேன் தான் காரை ஒட்டி வந்தான் எனும் நினைவில் அவன் கேட்க, உடனே மறுத்து விட்டான் நரேன்.

“நானே ஓட்டுறேன் வாசு, ஐ அம் ஓகே” என்றான் அவன்.

கார் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, மீண்டும் பயணத்தை உறங்கியே கழிக்க முற்பட்டாள் வசுமதி. காரின் பின் இருக்கையில் கணவனின் மடியில் தலை வைத்து, காலை நன்றாகக் குறுக்கி படுத்திருந்தாள்.

அவளின் முதுகை வருடிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான் வாசு. நர்மதாவின் கண்கள் அவ்வப்போது அவர்களைத் தொட்டு தொட்டு மீண்டது.

அவர்கள் துபாய் நகரத்திற்குள் நுழைந்ததும் போக்குவரத்து நெரிசலால் காரின் வேகத்தைக் குறைத்தான் நரேன். திடீரென்று வலப்புறம் இருந்து எதிர்பாராத விதமாக அவர்களது காரின் முன்னே வந்தது மற்றொரு கார். அந்தக் காரின் பின் புறத்தை இடிப்பதை தவிர்க்க, சட்டென்று ப்ரேக்கில் காலை வைத்து அழுத்தினான் நரேன். வாகனம் ஒரு முறை குலுங்கி பின் சீராகப் பயணிக்க ஆரம்பித்தது.

வாசுவின் கரங்கள் மனைவியைப் பாதுகாப்பாய் பற்றி இருந்தாலும் கூட, அந்தக் குலுக்கலில் உடல் அதிர, தூக்கம் கலைந்து விழித்து விட்டாள் வசுமதி.

பாதித் தூக்கத்தில் விழித்ததில் கண்கள் எரிந்தது, அதைக் கசக்கி விட்டபடி, “ஐ டோண்ட் ஃபீல் குட்.” என்றாள் வாசுவின் முகம் பார்த்து,

“என்ன வசும்மா? என்ன சொல்ற?” அவள் சொல்ல வருவது புரியாமல், பதட்டத்துடன் அவள் முகம் பார்த்தான் வாசு.

“தலை வலிக்குது, வாந்தி வரும் போல இருக்கு வாசு” என்றாள் சங்கடமாக, மின்னல் வேகத்தில் கை நீட்டி காரின் ஏசியை நிறுத்தி விட்டு, காரின் அனைத்து கண்ணாடியையும் இறக்கி, உள்ளே காற்று வரும் படி செய்தாள் நர்மதா.

வசுமதியின் வார்த்தைகளைக் கேட்டதும் நிலைமையைப் புரிந்து கொண்டு, உடனே சாலையின் அடுத்த எக்சிட்டில் ஹைவேயில் இருந்து வெளியேறி, அதற்கடுத்து வந்த பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தினான் நரேன்.

“நாள் முழுக்கத் தண்ணில இருந்ததால தலை வலி வந்திருக்கும் வசும்மா, டிராவல் ஒத்துக்காம வாமிட் ஃபீல் வருது போல” என்று அவளின் நெற்றியை அழுத்தி விட்டபடி சொன்னான் வாசு. அவன் முகத்தில் கவலையின் ரேகைகள் துளிர்க்க ஆரம்பித்திருந்தது.

காரில் இருந்து இறங்கி அவளோடு நடக்கப் போனவனைத் தடுத்து நிறுத்தி விட்டு, வசுமதிக்குத் துணையாக ரெஸ்ட் ரூம் சென்றாள் நர்மதா.

அங்கு நுழைந்தது தான் தாமதம், மேடையில் கை பதித்து, சிங்க்கை நோக்கி குனிந்தவள், வயிற்றில் இருந்த மொத்தத்தையும் வாய் வழியே வெளியேற்றி விட்டு தான் நிமிர்ந்தாள். அவளது தலையை அழுத்தி பிடித்தபடி நின்றிருந்தாள் நர்மதா.

“அச்சோ கடவுளே, இவ வாந்தி எடுக்கறதை பார்த்தா, எனக்கும் வாந்தி வரும் போல இருக்கு” முணுமுணுத்தாள் நர்மதா.

இரு கைகளிலும் தண்ணீரை அள்ளி, முகத்தில் அடித்துக் கழுவிய படி, “சாரி அண்ணி” என்றாள் வசுமதி.

“இப்ப ஓகே-வா டா? என்னாச்சு? என்ன பண்ணுது? நீ இப்படி வாந்தி எடுத்து நான் பார்த்ததே இல்லையே வசு?” என்றாள் நர்மதா, குரலில் உண்மையான அக்கறை இருந்தது.

“தலையை வலிக்குது அண்ணி. கண்ணைத் திறக்கவே முடியல. வாசு சொன்ன மாதிரி, நான் அவ்வளவு நேரம் தண்ணில ஆட்டம் போட்டிருக்கக் கூடாது. சளி பிடிக்கப் போகுது போல… காய்ச்சல் வராம இருந்தா சரி தான்” கவலையுடன் சொன்னாள் வசுமதி, கை நீட்டி அருகில் இருந்த பேப்பர் டவலை எடுத்து முகத்தில் இருந்த நீர்த் துளிகளை ஒற்றி எடுத்தபடி.

“ஹ்ம்ம்” என்ற நர்மதா, எதிரில் இருந்தவளின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.

அவளிடம் தொடுப்பதற்கு ஆயிரம் கேள்விகள் வரிசைக் கட்டி நின்றது. ஆனால், கேட்க முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க, கண்களை மூடித் திறந்து தன்னைச் சகஜமாக்கி கொண்டு, “சரி வா போகலாம், வாசு அங்க பயந்து போய் இருப்பார்” என்று சொல்ல, வசுமதியின் முகம் புன்னகையில் விரிந்தது.

அவளுக்குக் கணவனைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்நேரம் தன் கேள்வி கணைகளால் நரேனை ஒரு வழியாக்கி இருப்பான் என்ற சிந்தனையுடன் வெளியில் வந்தாள் அவள்.

அங்கே வாசுவுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறி, திண்டாடிக் கொண்டிருந்தான் நரேன். மனைவி அருகில் வந்து நின்றதும்,

“இப்ப எப்படி இருக்கு வசும்மா?” என்றான், அவள் முகம் நிமிர்த்தி,

“ஃபீலிங் பெட்டர்” என்றாள் அவள் நன்றாகப் புன்னகைத்து. முகம் கழுவி, தலையைச் சரி செய்திருந்தாள், அதில் அவள் முகம் தெளிந்து தெரிந்ததால் சற்றே சமாதானம் ஆனான் அவன்.

அவன் கைகளில் இருந்த லெமன் ஜூஸை அவளிடம் நீட்டினான்.

“இதைக் குடி வசும்மா, வாமிட் நிக்கும்.” என்றான். மௌனமாய் அதைக் கைகளில் வாங்கிக் கொண்டாள் அவள்.

நால்வரும் காரில் ஏறி அமர, நிதானமாகக் காரை செலுத்தினான் நரேன். வாய்க் கசப்பது போலிருக்க, மிடறு மிடறாக லெமன் ஜூசை குடித்துக் கொண்டிருந்தாள் வசுமதி. அவளின் பார்வை பின்னோக்கி ஓடி மறையும் சாலைகளை வெறித்தபடி இருந்தது, மனது ஏனோ காரணமே இல்லாமல் கலக்கமாக உணர்ந்தது.

அவளுக்கு உடலில் ஏதோ சரியில்லை என்று தோன்ற ஆரம்பித்திருந்தது. கையடக்க ஜுஸ் பாட்டிலில் பாதிக் கூடக் குடித்திருக்க மாட்டாள், மீண்டும் வயிற்றைப் பிரட்டுவதைப் போல இருந்தது. கார் பர்துபாயை அடைந்திருக்க, மெல்ல நரேனின் பக்கமாகச் சாய்ந்து,

“அண்ணா கொஞ்சம் வேகமாகப் போங்களேன், எனக்கு… எனக்கு” மேலே சொல்ல முடியாது தயங்கினாள் அவள். ஆனால், அவள் சொல்லாததையும் புரிந்து கொண்டு காரை விரைந்து செலுத்தினான் நரேன்.

அடுத்த ஐந்தாம் நிமிடம் வீட்டின் முன் இருந்தனர். காரின் கதவை வேகமாகத் திறந்து கொண்டு இறங்கியவள், அதை விட வேகமாக ஓட்டமும், நடையுமாகப் பாய்ந்து சென்று லிஃப்ட்டை அடைந்தாள். அங்கே லிஃப்ட்டை பிடித்து வைத்தபடி அவளுக்கு முன்னே நின்றிருந்தான் வாசு.

நிமிடத்தில் அவர்களை அவர்களுக்கான தளத்தில் தள்ளி இருந்தது லிஃப்ட். வீட்டை அடைந்த கணமே, பாத்ரூமுக்குள் நுழைந்திருந்தாள். சற்று முன் குடித்த லெமன் ஜூசும் வெளியில் வந்திருந்தது.

அவளின் தலையை அழுத்தமாக பற்றி இருந்தவன், அவளை அப்படியே தன் மார்பில் சாய்த்து, முகம் கழுவி விட்டு, வாய் கொப்பளிக்கச் செய்தான். அவள் மறுக்க, மறுக்கச் செவி சாய்க்காமல், அவளை அப்படியே தூக்கி சென்று படுக்கையில் கிடத்தினான்.

கிட்சன் சென்று லெமன் டீ தயாரிக்க ஆரம்பித்தான். அதற்குள் நரேனும், நர்மதாவும் காரை அதனிடத்தில் பார்க் செய்து விட்டு, அங்கு வந்திருந்தனர்.

“என்னாச்சு?” என்றாள் நர்மதா.

“தெரியல கா, ஏன் இப்படி வாந்தி எடுத்துட்டே இருக்கா? ஹாஸ்பிட்டல் போகலாமா மாம்ஸ்?” என்றான் இருவரையும் மாறி மாறி பார்த்து,

“ரொம்ப நேரம் தண்ணில ஆட்டம் போட்டதினால உடம்புக்கு சேராம போய் இருக்கும். அதான் தலைவலி. அது அதிகமானதும், வாந்தி. வேற ஒன்னும் இருக்காது வாசு, பயப்படாதீங்க” என்று வாசுவின் தோளை தட்டியபடி சொன்னான் நரேன். வாசுவின் முகத்தில் குழப்ப ரேகைகள் கூடியதே தவிரக் குறையவில்லை.

“ஐ அம் ஓகே, வாசு” என்றாள் வசுமதி மெல்லிய குரலில்.

அவர்கள் அனைவரின் முகத்திலும் அன்றைய தினத்தின் மகிழ்வு இல்லவே இல்லை. அவளுக்கான கவலை மட்டுமே நிலைத்திருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், ஹாலில் டிவியைப் போட்டு அமர்ந்தனர். அவர்கள் படத்தில் மூழ்கிப் போக, வசுமதி தூங்கிப் போனாள். அவள் உறக்கம் கலைந்து விழித்த போது மணி இரவு எட்டை கடந்திருந்தது.

வாசு ஹாலில் அமர்ந்து திரைப்படத்தில் மூழ்கி இருந்தாலும் கூட, மனைவி மேல் ஒரு கண் வைத்திருந்திருப்பான் போல, அவள் அசைந்ததும் பட்டெனச் சோஃபாவில் இருந்து எழுந்து அவளருகில் வந்து, “வசும்மா” என்றான் அவன். வேறு ஒன்றும் கேட்கவில்லை. அவனுக்குப் பதில் சொல்லும் விதமாக, நன்றாக எழுந்து அமர்ந்து பெரிதாகப் புன்னகைத்தாள் வசுமதி.

“அண்ணி, வீட்ல என்ன சமையல்? அம்மா ஏதாவது நமக்கும் சேர்த்து சமைச்சு இருப்பாங்களா? இல்ல வெளில போய்ச் சாப்பிடலாமா? எனக்கு ரொம்பப் பசிக்குது.” என்றாள்.

“அம்மா, நேத்தே அபுதாபி போய்ட்டாங்க வசு. நீ ரெப்ரஷ்ஷாகு, நாங்க வெளில போய்ச் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வர்றோம்” என்றான் நரேன்.

அவள் சம்மதமாகத் தலையாட்ட, “என்னடா வேணும்?” என்றான் வாசு.

“இட்லி போதும்” என்றாள் அவள்.

“டேப்லெட் வாங்கிட்டு வரவா?” என்ற நரேனின் கேள்விக்கு மறுப்பாகத் தலையசைத்தாள் வசுமதி.

ஆண்கள் இருவரும் நடந்து சென்று அருகில் இருந்த மதுரா ரெஸ்டாரண்ட்டில் இரவு உணவை வாங்கி வந்தனர்.

இட்லி, தோசை, சப்பாத்தி, ஊத்தப்பம், பொங்கல் முதலியன தனித் தனி டப்பாக்களில் சூடாக இருந்தது. அவற்றைப் பாத்திரங்களுக்கு மாற்றினர் பெண்கள் இருவரும்.

நர்மதா திரும்பி திரும்பி வசுமதியின் முகம் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் முகம் வெளிறித் தெரிந்தது அவள் கண்களுக்கு. நாக்கின் நுனி வரை வந்து அமர்ந்திருந்த கேள்வியைக் கேட்க தயக்கமாக இருந்தது அவளுக்கு. ஆனாலும் பெரு முயற்சி செய்து தயக்கத்தை உதறி தள்ளி விட்டு கேட்டே விட்டாள்.

“வசு…” என்று மெல்ல அழைத்தாள். சாம்பாரையும், சட்டினியையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொண்டிருந்த வசுமதி, வேலையில் கவனமாக, “சொல்லுங்க அண்ணி” என்றாள்.

“ஏதாவது… என்கிட்ட ஏதாவது சொல்லனுமா?” என்றாள்.

“ஹ்ம்ம், இல்லையே அண்ணி” என்றாள் வசுமதி.

“இல்ல, அது வந்து…கடைசியா… லாஸ்ட் பீரியட்ஸ் எப்போ? உனக்கு எப்போ டேட்ஸ் வந்தது?” திக்கி, திணறி கேட்டே விட்டாள். அவளைச் சட்டென நிமிர்ந்து பார்த்த வசுமதி, எங்கிருந்து வந்தது இந்தக் கேள்வி என்ற எண்ணத்துடன்,

“நான் குறிச்சு வைக்கல அண்ணி” என்றவள், “நானும் இது பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைச்சுட்டே இருந்தேன். நல்லவேளை நீங்களே ஆரம்பிச்சீங்க” மூச்சை ஆழ உள்ளிழுத்த படி சொன்னாள்.

நர்மதாவின் பார்வை அவள் முகத்தில் நிலைத்திருக்க,

“இந்த மாசம் பீரியட்ஸ் இன்னும் வரலை அண்ணி. ஏன் இப்படித் தள்ளிப் போகுது?” என்றாள் அப்பாவியாக, அதைக் கேட்ட நர்மதாவின் முகம் பூரிப்பில் மத்தாப்பாய் மலர்ந்தது. சட்டென்று அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

கைகள் வசுமதியை இழுத்து அணைத்துக் கொள்ளப் பரபரக்க, தன்னைப் பெரிதாகக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள் நர்மதா.

“வசு குட்டி” என்று அவளின் கரம் பற்றினாள். உடல் முழுவதும் ஓடிய சிலிர்ப்பை அவளால் கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை.

error: Content is protected !!
Scroll to Top