காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காமல் விரைந்து ஓடி மறைந்தது.
நர்மதா வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்ததால், நாளின் ஒவ்வொரு நிமிடமும் யுகம் போல நகர்ந்தது அவளுக்கு, தனிமை அவளை இரக்கமில்லாமல் கொன்று தின்றது. நரேனுக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் சிரமப்பட்டாள் அவள்.
வேலைக்குச் சென்றாலும் கூட விடுமுறை எப்போது வரும் என்று மிக ஆவலாகக் காத்திருந்தாள் வசுமதி.
வியாழக் கிழமை இரவை பெரிதாக எதிர்பார்த்திருந்தாள் அவள். ஆனால் அவளுக்கு இன்ப அதிர்ச்சியாக அந்த வாரம் யுஏஇ – யின் நேஷனல் ஹாலிடே அறிவிக்கப்பட்டது. புதன் தொடங்கிச் சனி கிழமை வரை எனத் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது.
வசுமதிக்குச் சந்தோஷத்தில் ஆரவாரித்துத் துள்ளி குதிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், இந்த விடுமுறை தினங்கள் முடிகையில் தனது இந்த மகிழ்ச்சி காணாமல் போய் இருக்கும் என்பதை அவள் அறிய வாய்ப்பில்லை.
அனைவரும் செவ்வாய் இரவே விடுமுறை கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர். வாசு எங்காவது வெளிநாடு செல்ல வேண்டும் என்று விரும்பினான். ஆனால், கடைசி நேரத்தில் எதையும் அவனால் பிளான் செய்ய முடியவில்லை. மேலும், நான்கு நாட்கள் போதாது என்ற யோசனையுடன் அதை அப்படியே ஒதுக்கி தள்ளி இருந்தான்.
அல் அய்ன், அஜ்மான் அல்லது கத்தார் செல்வோமா என்று கேட்டான், வசுமதியும் ஆர்வத்துடன் சரி என்றே சொன்னாள். ஆனால், என்ன நினைத்தானோ, கடைசியாக வீட்டிலேயே இருப்போம் என்று முடித்து விட்டான் அவன்.
அன்று அவன் சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து கிளம்பி விட்டான், வழக்கம் போல வசுமதியின் அலுவலகம் சென்று அவளையும் கூட்டிக் கொண்டு வீடு வந்தான், வரும் வழியில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்தனர் இருவரும்.
வசுமதி சோர்வாக இருக்கிறது என்று சொல்லி ஒரு குட்டி தூக்கம் போட, வாசு வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் எழுந்தவள், கணவன் அடுப்படியில் நிற்பதை கண்டதும், ஓடிப் போய்க் குளித்து விட்டு வந்தாள்.
“பசிக்குது வாசு, பசிக்குது வாசு…” என்று ராகம் போட்டு பாடிக் கொண்டிருந்தாள். கிட்சனில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்திருந்தாள் அவள்.
அவளின் கையில் இருந்த தட்டில் சுடசுட சப்பாத்தியை வைத்தான் வாசு.
“பொறுமை, பொறுமை வசும்மா” கரண்டியும் கையுமாகக் கண்டித்தான்.
அவளோ தன் முழுக் கவனத்தையும் உணவில் பதித்தாள். சப்பாத்தியும், தேங்காய் பால் கோழிக் குழம்பும் செய்திருந்தான்.
“அடுத்தச் சப்பாத்தியை போடுங்க வாசு” என்றவள், கோழி குழம்பில் சப்பாத்தியை பிரட்டி அவனுக்கு ஊட்டி விட்டபடி, தானும் உண்டு கொண்டிருந்தாள்.
“சிக்கன் குழம்பு அட்டகாசமா இருக்கு வாசு, யம்மி” என்று சப்புக் கொட்டி சாப்பிட்டாள், வாசுவின் முகம் சடுதியில் பிரகாசமாகியது.
“என் ப்ரெண்ட் ஒருத்தன் மலையாளி, இந்தக் குழம்பு எப்படிச் செய்யறதுன்னு அவன்கிட்ட தான் கத்துக்கிட்டேன் வசும்மா. நாலு வருஷம் ஒரே வீட்ல தங்கி இருந்தோம். நாங்க, நாலு பேரு. எல்லோருக்கும் சேர்த்து அவன் தான் சமைப்பான். மோஸ்ட்லி கேரளா சமையல் தான். எனக்கும், என் ப்ரெண்ட் டேவிட்கும் மட்டும், சிகப்பரிசி பிடிக்காது. பிடிக்காது என்ன, இறங்காது. டேவிட் நம்ம ஊர் தான், விருதுநகர் பையன். எங்க ரெண்டு பேருக்கு மட்டும் பொன்னி அரிசி வாங்கிப்போம்.
முதல்ல அவனுக்குச் சும்மா ஹெல்ப் பண்ணுவோம்னு தான் சமையலில் இறங்கினது. ஆனா, விதவிதமா சமைக்கப் பிடிச்சிருந்தது. அப்படியே மெல்ல மெல்ல குக்கிங் கத்துக்கிட்டேன். இப்போ உனக்காகச் சமைக்க ரொம்பப் பிடிச்சிருக்கு.” அவள் கையில் இருந்த தட்டை வாங்கி, அவளுக்கு ஊட்டியபடியே சொன்னான் அவன்.
உணவை ரசித்து உண்ட படியே அவன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தாள் வசுமதி.
“என்ன தான் எனக்குச் சமைக்கத் தெரிந்தாலும், உன் சமையலும், அம்மா சமையலும் தான் எனக்கு ரொம்பப் பிடிக்குது” என்றான் லேசாகச் சிரித்துக் கொண்டே,
“ஐயோ, டிப்பிகல் மென் டயலாக்” என்று கண்களை உருட்டினாள் அவள்.
“நமக்குப் பிடிச்சவங்க, நமக்காக மெனக்கெட்டு செய்றதனால அவங்க சமையல் ரொம்பப் பிடிக்குதுன்னு நினைக்கறேன் வாசு. கொஞ்சமே கொஞ்சம் அன்பையும், பாசத்தையும் சாப்பாட்டுல கலந்துடுறாங்க. அதனால் தான் அவங்க கை படுற எல்லாம் நமக்கு ருசியா தெரியுது போல…” என்றாள் அவள். ஒன்றும் சொல்லாமல் அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தான் வாசு.
சிறிது நேரத்தில் உணவை முடித்திருந்தனர். வசுமதி பாத்திரங்களைத் தேய்க்க, அதைக் கழுவி துடைத்து, அடுக்கி வைத்தான் வாசு.
இருவருக்கும் சேர்த்து வசுமதி பிளாக் டீ போட, அவன் டிவியைப் போட்டுச் சோஃபாவில் சரிந்தான். விரல்கள் வரிசையாகச் சேனல் மாற்றிக் கொண்டிருந்தது.
“வாசு, எனக்கு வீட்டுக்குள்ள மூச்சு முட்டுற மாதிரி இருக்கு. என்னமோ பண்ணுது. பால்கனி போவோமா?” என்றபடி வந்தாள் அவள், இரு கைகளிலும் தேநீர் கோப்பை.
“ஓகே, வசும்மா” என்றவன், “வெளில ஒரு வாக் போய்ட்டு வருவமா வசு? ஜஸ்ட் க்ரீக் வரைக்கும், தண்ணியைப் பார்த்துட்டே நடந்துட்டு வரலாம். யூ வில் ஃபீல் ரிலாக்ஸ்ட்” என்று கேட்டான் அவன்.
“வேணாம் வாசு, அதெல்லாம் இன்னொரு நாள் போலாம். இன்னைக்கு வீட்ல இருப்போம்” என்றபடி பால்கனிக்கு நடந்தாள் அவள். அவளுக்கு முன்னே சென்று, அங்கே உட்கார பீன் பேக் போட்டு வைத்தான் வாசு.
காலை நன்றாக நீட்டி எதிரில் இருந்த பால்கனி கிரில்லில் தூக்கி வைத்து வசதியாகப் பீன் பேகில் சாய்ந்து அமர்ந்தான் அவன். இரு கைகளிலும் தேநீருடன் நின்ற மனைவியை அருகில் இழுத்து, அவள் கைகளில் இருந்த கோப்பையை நிதானமாக வாங்கித் தரையில் வைத்தான்.
அவள் கரம் பற்றித் தன் மடியில் அவளை வாகாக அமர வைத்தான். அவனைப் போலவே, அவன் மேல் கால் நீட்டி, அவன் மார்பில் தலைச் சாய்த்து அமர்ந்தாள் வசுமதி. அவள் வயிற்றில் கை வைத்து தன்னோடு இறுக்கி கொண்டான் வாசு.
ஒரு கோப்பை தேநீரை இருவரும் பகிர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர்.
அவர்களின் இனிமையான நேரத்தை கலைப்பது போல, அப்போது தொடர்ந்து ஒலித்தது அழைப்பு மணி.
“ம்ப்ச், யார் இந்நேரத்தில..” என்று சலித்துக் கொண்டான் வாசு. வசுமதிக்கு யாராக இருக்கும் என்று தெரியும், ஆனால் சத்தமாகச் சொல்லவில்லை.
‘இப்போ கண்டிப்பா கதவை திறக்கனுமா?’ என்று கண்களில் தொக்கி நின்ற கேள்வியுடன் அவளைப் பார்த்தான் வாசு.
“யாருன்னு பார்க்கலாம், வாங்க” என்று எழுந்து கொண்டாள் அவள்.
அவளுக்கு முன்னே போய்க் கதவை திறந்தான் வாசு. “வாங்க மாம்ஸ், வாங்க கரடி அக்கா” என்று குரலை தணித்து நர்மதாவை பார்த்து முணுமுணுத்தான். வசுமதிக்கு அவனது கோபத்தைப் பார்த்து, சிரிப்பாக வந்தது.
‘எதுக்கு இப்போ எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க?’ என்றது அவன் பார்வை.
“அண்ணா, அண்ணி… வாங்க, வாங்க” என்ற வசுமதி, கணவனின் டீஷர்ட்டை பற்றிப் பின்னே இழுத்து, அவர்கள் உள்ளே வர வழி விட்டாள்.
வாசுவின் முகத்தைப் பார்த்ததும் சிரிப்புப் பொங்கியது நர்மதாவிற்கு, உதடு கடித்துச் சிரிப்பை அடக்கியபடி உள்ளே வந்தாள் அவள்.
‘உங்களைத் தொல்லை செய்து விட்டோமா?’ என்று சம்பிரதாயமாகக் கூடக் கேட்கவில்லை அவள். அவர்களது தனிமையைக் கலைத்து விட்டோம் என்று நன்றாகத் தெரியும் போது, அதைப் பற்றிக் கேட்டால் என்ன?, கேட்காவிட்டால் தான் என்ன? என்று நினைத்துக் கொண்டாள் அவள்.
வசுமதி அவர்கள் இருவருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்தாள். பால்கனி கதவை நன்றாகத் திறந்து வைத்தான் வாசு. நர்மதா, நரேன் சோஃபாவில் அமர்ந்திருக்க, அதை ஒட்டி இருந்த படுக்கையில் அமர்ந்திருந்தனர் வாசுவும், வசுமதியும்.
ஒரு மிடறு டீயை அருந்தி விட்டு, “நாலு நாள் லீவிற்கு என்ன பிளான் வாசு? எங்க போகலாம்?” என்றான் நரேன்.
“எங்க போறதா? எங்கேயும் போறதா இல்ல. எனக்கு என் பொண்டாட்டி கூட இருக்கணும், அதான் பிளான்” என்றான் பளிச்சென்று வாசு.
“ஐயோ ஓவரா வழியுது, துடைங்க” என்றாள் வசுமதி.
“நீங்க எப்பவுமே இப்படித் தானா வாசு?” என்றாள் நர்மதா, தன் ஆச்சரியத்தைச் சிறிதும் மறைக்காமல்.
“எப்பவுமேன்னா? இது என்ன கா கேள்வி?” என்று பொய்யாக நர்மதாவை முறைத்தவன், “உங்களுக்கு ஒரு விஷயம் மறந்து போச்சு கா, எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு ஒரே ஒரு மாசம் தான் ஆகியிருக்கு.” என்றான் வாசு.
“ஒரு வருஷம் ஆனாலும் இப்படித் தான் இருப்பீங்க போல” என்று முணுமுணுத்தாள் நர்மதா. அவர்களின் உரையாடல் பயணிக்கும் திசையை விரும்பாத வசுமதி, சட்டென்று பேச்சை மாற்றினாள்.
“ஒரு நாள் அல் அய்ன் போகலாம் ண்ணா. முதல்ல ஜூ அப்புறம் ஹிலி ஃபன் சிட்டி அமியுஸ்மெண்ட் பார்க் போகலாம். இவெனிங் ஜபெல் ஹபீத் மலை ஏறிட்டு வரலாம். மலை உச்சியில் இருந்து, அவ்வளவு உயரத்தில் இருந்து ஊரைப் பார்க்கவே கொள்ளை அழகா இருக்கும்” என்று கண்கள் ஆசையில் மின்ன சொன்னாள் வசுமதி.
“என்ன? அனிமல்ஸ் பார்க்க ஜு போறியா? அமியுஸ்மெண்ட் பார்க் போகக் குழந்தையா நீ?” என்று சிடுசிடுத்தான் வாசு.
பதிலுக்கு அவனைக் கடுப்புடன் பார்த்த வசுமதி, “கார்டன் சிட்டின்னு அல் அய்னை சும்மா ஒன்னும் சொல்லலை, எவ்வளவு அழகா இருக்கும், தெரியுமா?” கோபத்துடன் படபடத்தாள் அவள்.
“நான் பசங்களோட அங்க நிறைய முறை போயாச்சு, வேற எங்கேயாவது போகலாம்” என்றான் வாசு.
“என் கூடப் போனது இல்ல, இல்ல? அப்புறம் என்ன?” என்று அவனிடம் எகிறியவள்,
“டேசர்ட் சஃபாரி போகலாம் அண்ணா, நீங்க என்ன சொல்றீங்க அண்ணி?” கணவனை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டே சொன்னவள், துணைக்கு நர்மதாவையும் சேர்க்க முயன்றாள்.
“ஆமா நரேன், டேசர்ட் சஃபாரி நல்ல ஐடியா. நாம போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு” என்றாள் நர்மதா.
“என்னது டேசர்ட் சஃபாரியா? வாய்ப்பே இல்ல. என்னால முடியாது” என்று வசுமதியிடம் கடுகடுத்தான் வாசு.