பூமரப் பாவைகள் – 13 (2)

“கார் எடுக்கவா?” என்றான் வாசு, திரும்பி மனைவியைப் பார்த்து. நர்மதாவுடன் ஏதோ பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள் வசுமதி.

“வேண்டாம், பக்கத்தில தானே நடந்தே போகலாம் வாசு. வெயில் கம்மியா தானே இருக்கு? நடக்கலாம். நீங்க என்ன சொல்றீங்க அண்ணி?” என்றாள் வசுமதி.

“பத்து நிமிஷம் கூட ஆகாது, நடக்கலாம்” என்றாள் நர்மதா. நரேனும் ஓப்புதலாகத் தலையசைக்க, நால்வரும் நடக்கத் தொடங்கினர்.

அன்று சூரியன் வெகு உக்கிரமாக இருந்தான். கட்டிடத்தை விட்டு வெளியில் வந்ததும், அனைவரின் முகத்திலும் வியர்வை முத்துக்கள் பூத்து உடலை குளிர்விக்க முயற்சித்தது.

அன்று பெரிதாக எந்த விசேஷமும் இல்லை, ஆனாலும் வெள்ளிக் கிழமை என்பதால் கோவில் எப்போதும் போல மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது. வசுமதி கண் மூடி இறைவனை மனமுருக வேண்டிக் கொண்டாள்.

சாமி தரிசனம் முடிந்து கோவிலை விட்டு வெளியில் வந்தனர், வரிசையாய் அங்கிருந்த கடைகளில் பெருமாள் கடையைத் தேடிச் சென்று மல்லிப் பூ வாங்கி வந்தனர் நரேனும், வாசுவும்.

கணவன் நீட்டிய பூவை கையில் வாங்கி, தலையில் சூடிக் கொண்டாள் வசுமதி. மனம் ஆழ்ந்த அமைதியில் நிறைந்திருந்தது.

“துபாயில் கோவில் எப்போ காட்டினாங்க தெரியுமா வாசு?” அவளருகில் நடந்து வந்து கொண்டிருந்த, கணவனைத் திரும்பி பார்த்து கேட்டாள் வசுமதி.

“தெரியலையே வசும்மா, ஆனா ரொம்பப் பழமையான கோவில்னு கேள்வி பட்டிருக்கேன். இந்த அஞ்சு வருஷத்துல இங்க பல முறை வந்திருக்கேன். ஆனா, எப்போ காட்டினாங்க தெரியாது. அதையெல்லாம் யோசிச்சதும் இல்ல” தோளை குலுக்கியபடி சொன்னான் அவன்.

“எனக்கும் கூடத் தெரியாது வசு, எப்போ கட்டினது?” என்றான் நரேன் புருவத்தைச் சுருக்கி கேள்வியாக,

“1958 -ல் கட்டினது அண்ணா” என்றாள் வசுமதி. கேட்ட மூவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தது.

அதைச் சிரித்துக் கொண்டே கவனித்த வசுமதி, மேலும் தகவல்களை அளித்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.

“யூனைட்டட் அரப் எமிரேட்ஸ் நாடே 1971 -ல் தான் ஃபார்ம் ஆச்சாம். ஆனா, அதுக்கு முன்னாடி இருந்தே இங்க கோவில் இருக்கு” என்றாள் தலையை ஒரு புறமாக அசைத்து பெரிய புன்னகையுடன், “வாவ்” என்று வியந்தான் வாசு.

“சூப்பர் வசு, பிரம்மிப்பா இருக்கு” என்றாள் நர்மதா.

கோவிலுக்கு அருகில் இருந்த பள்ளிவாசலை எப்போதும் போல விரிந்த புன்னகையுடன், நிமிர்ந்து நோக்கியபடி கடந்தாள் வசுமதி. அவள் பார்வையைத் தொடர்ந்து வாசுவின் பார்வையும் அங்கே சென்று விட்டு திரும்பியது.

அவளைத் துபாயில் மனதுக்கு மிக நெருக்கமாக உணர வைத்த இடம் என்றால் அது பர்துபாய் தான், அவள் அங்கு வசிப்பதினாலோ, இல்லை அங்கு வேலைப் பார்ப்பதினாலோ மட்டும் அல்ல.

மினா பஸார், கோவில், பேங்க் ஸ்ட்ரீட் என்று அவளுக்கு மிகப் பிடித்த இடங்கள் அங்கு நிறைய இருந்தன.

மினா பஸாரில் ஒரு முறை காலார நடந்தால் போதும். தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, குஜராத்தி என்று எண்ணற்ற இந்திய மொழிகளைக் காது குளிர கேட்கலாம். பெரும்பாலும் இந்திய மற்றும் ஆசிய உணவங்களால் நிறைந்திருக்கும் பர்துபாய். இட்டிலியும், சாம்பாரும் மட்டுமல்ல, அனைத்து வகையான இந்திய உணவுகளும் அங்கே எளிதாகக் கிடைக்கும். ஜவுளி கடை, நகைக் கடை என்று இந்திய வியாபாரிகளின் ராஜ்ஜியம் அங்கு அதிகம்.

துபாய் வந்த தொடக்கத்தில் சமாளிக்கத் தடுமாறியதை தவிர, பெரும்பாலும் அவள் மனம் ஊரை தேடியதே இல்லை. மனம் ஒன்றியே அங்கு வேலை செய்தாள் வசுமதி.

“ஆமா, உனக்கு எப்படி இந்த இன்பர்மேஷன் எல்லாம் தெரியும்?” என்ற வாசுவின் கேள்வியில், சிந்தனை கலைந்து அவனைத் திரும்பி பார்த்தாள்.

“ஒரு முறை இந்தியா, துபாய் பத்தி பேசிட்டு இருந்தோம் ஆபீஸில், அப்போ ஓமர் சொன்னார். எங்க ஆபீஸ் பிஆர்ஓ” என்றாள் வசுமதி.

“ஹ்ம்ம் ஓகே, ஓகே” வேட்டி நுனியை கையில் பிடித்தபடி நடந்தான் வாசு. அவனை விழி உயர்த்தி முதல் முறையாகப் பார்ப்பது போல் பார்த்தாள் வசுமதி. பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாகத் தெரிந்தான்.

“அவசர அவசரமா, எமர்ஜென்சி லீவ் போட்டு வந்து கல்யாணம் பண்ணதுக்கு, வொர்த்தான ஆள் தான் நீங்க மிஸ்டர் வாசுதேவன். யூ லுக் வெரி ஹாண்ட்சம்” அவனை நெருங்கி கிசுகிசுத்தாள் அவள். சட்டென அடக்க முடியாமல் சத்தமாகச் சிரித்து விட்டான் வாசுதேவன்.

“அப்படியா வசும்மா, கேட்கவே சந்தோசமா இருக்கு பொண்டாட்டி” என்று கண் சிமிட்டியவன்,

“நான் எல்லாம் ஃபோட்டோ பார்த்ததும் விழுந்தவன் தான், அதுக்கு அப்புறம் எவன் கிட்டயும் ஒரு கேள்வி கூடக் கேட்கலையே. எங்கப்பா சொன்ன எல்லாத்துக்கும் சரி, சரின்னு தலையை ஆட்டி வச்சேன்” என்று அவன் சொல்ல, கன்னம் கடித்துச் சிரிப்பை விழுங்கினாள் அவள்.

“எங்க உன்கிட்ட பேசினா, ஏதாவது காரணம் சொல்லி… கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு ஒரு சின்னப் பயம். ஒருவேளை என்னைப் பிடிக்கலைன்னு… மறுப்பா ஏதாவது சொல்லி என் மனசை உடைச்சுடுவியோன்னு…” அவன் சொல்லிக் கொண்டே போக, அதிர்ந்து அவனைப் பார்த்தாள் வசுமதி.

“உன்னை ஏர்போர்ட்டில் முதல் முறை பார்த்தப்ப கூட எப்படி உளறினேன், ஞாபகம் இருக்கா?” என்று அவன் கேட்க, வசுமதிக்கு அந்நாளின் நினைவில் இப்போதும் சிரிப்புப் பொங்கியது.

“என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்? எங்களுக்கும் சொல்லலாம் இல்ல?” என்றாள் நர்மதா, அவர்கள் பக்கம் திரும்பி. கோவிலில் இருந்து நால்வரும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

“நான் எப்படிக் காதலில் விழுந்தேன்னு சொல்லிட்டு இருந்தேன் கா” என்றான் வாசு. உடனே நர்மதா அவனை முறைக்க,

“ஐயோ, இதோ இருக்கா பாருங்க. என் காதலி, என் இதயத் தேவதை” என்று அவன் வசுமதியை அவசரமாகக் கைக் காட்ட, பக்கென்று சிரித்து விட்டனர் மூவரும்.

“பேசியே ஆளை கவுத்துடுங்க” என்று அவன் இடுப்பில் கிள்ளினாள் வசுமதி.

“பொழச்சுடுவீங்க வாசு, இப்படியே கன்டினியூ பண்ணுங்க. வாழ்க்கை பிரகாசமா போகும்.” என்று நரேன் தீவிரமாகச் சொல்ல,

“அனுபவம் பேசுது, கேட்டுக்கோங்க” என்று நாக்கை துருத்தி காட்டினாள் நர்மதா.

“அப் கோர்ஸ்” என்று உடனே ஒத்துக் கொண்டான் நரேன்.

சிரிப்பும், பேச்சுமாக வீட்டை அடைந்திருந்தனர்.

இப்போது வீட்டிற்குப் போனால் மாமியார் அங்கிருப்பார் என்ற எண்ணமே நர்மதாவின் கால்களை மேலே நடக்க முடியாமல் கட்டிப் போட்டது. கடந்த இருபது நாட்களின் அமைதியும், நிம்மதியும் இருபது நொடியில் கரைந்து விடும் போலிருந்தது.

தனக்கோ, இல்லை நரேனுக்கோ உடலில் ஏதாவது குறை என்றால் கூட அதனால் தான் குழந்தை பேறு தள்ளிப் போகிறதென, அவள் மனம் சற்றே ஆறுதல் அடைந்து விடும். ஆனால், நிஜத்தில் இருவரும் உடலளவில் ஒரு குறையும் இல்லாமல் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

அவள் மனம் கனத்துப் போனது, தன் சிந்தனைகளில் மூழ்கியபடி நடந்தவளை கலைத்தது வசுமதியின் சிரிப்புச் சத்தம்.

கணவனின் தோளில் தட்டி, கலகலவெனச் சிரித்துக் கொண்டிருந்தாள் வசுமதி. அவள் முகத்தில் நிரந்தரமாக உறைந்திருந்தது மகிழ்ச்சி. தன் கண்களில் ஒட்டு மொத்த அன்பையும் தேக்கி வைத்து மனைவியின் சிரிப்பை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு.

நர்மதாவின் மனம் திருமணமான பின் வந்த முதல் இரண்டு வருடங்களுக்காக ஏங்கியது. எவ்வித கவலைகளும் இன்றி வாழ்க்கையை அதன் போக்கில் மகிழ்வாக வாழ்ந்த நாட்கள் அவை. அந்நாட்கள் மீண்டும் வராது என்ற நினைப்பே அவளுக்குப் பெருமூச்சை வரவழைத்தது.

“என்ன நம்மு?” என்றான் நரேன், அவளது பெருமூச்சை கவனித்து விட்டு, ‘எல்லாக் கோட்டையும் அழித்து விட்டு, மீண்டும் முதலில் இருந்து தொடங்கலாம் நரேன்’ என்று அவனிடம் எப்படிச் சொல்வாள் அவள். அப்போது மட்டும் வாழ்க்கை வேறு வழியில் செல்லும் என்று என்ன நிச்சயம்? அங்கு மட்டும் அவளுக்குப் பூப்பாதை காத்திருக்கும் என்று அவள் எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?

“என்ன நம்மு? யோசனை பலமா இருக்கு? வெளில எங்கேயாவது போகலாமா? லஞ்ச் அப்படியே வெளில சாப்பிட்டுக்கலாம்” என்ற நரேன், அவள் கரம் பற்றி விரல் கோர்த்துக் கொண்டான். சட்டென்று பிரகாசமாகியது அவள் முகம்.

“எங்க போகலாம் நரேன்?” என்று தன் சம்மதத்தை மறைமுகமாகச் சொன்னாள் நர்மதா.

அவர்களின் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த வசுமதியையும், வாசுவையும் திரும்பி பார்த்து,

“வாசு, இன்னைக்கு என்ன பிளான்? முக்கியமான வேலை எதுவும் இருக்கா? இல்ல எங்கேயாவது போகனும்னு பிளான் பண்ணி இருக்கீங்களா?” கேட்டான் நரேன்.

“ஹ்ம்ம் பெருசா பிளான் எதுவும் இல்லைங்க மாம்ஸ். ஏன் கேட்கறீங்க?” என்று அவனைத் திருப்பிக் கேட்டான் வாசு.

“எல்லோரும் சேர்ந்து வெளில எங்கேயாவது போகலாமா? மால், மூவி இல்லனா பீச்?” என்று நர்மதா கேட்க,

“சூப்பர் அண்ணி, நான் ரெடி, நான் ரெடி. எங்க போறோம்? இப்படியே போறோமா? நான் வீட்டுக்கு போயிட்டு டிரஸ் மட்டும் மாத்திக்கவா? அப்புறம் போலாமா?” கண்களில் குதூகலம் மின்ன கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் வசுமதி, ஓடி நர்மதாவின் அருகில் வந்திருந்தாள்.

அவளின் மூக்கைப் பிடித்துச் செல்லமாக ஆட்டிய நர்மதா, “எங்க போகலாம்னு நீங்களே முடிவு பண்ணுங்க வசு. பொறுமையா டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டுக் கிளம்பலாம்” என்றாள் அவள்.

“ஓகே டன்” எனச் சொன்னவள், கணவனின் கைப் பிடித்து வேகமாக நடக்க ஆரம்பித்திருந்தாள்.

அவள் அணிந்திருந்த பட்டை மாற்றி, இலகுவான உடைக்குத் திரும்பி இருந்தாள். வாசுவும் ஜீன்ஸ், டீ-ஷர்ட்கு மாறி இருந்தான்.

ஒரு மணி நேரம் கழித்துக் கராமாவில் இருந்த சிம்ரன் ஆப்பக்கடை உணவகத்தினுள் இருந்தார்கள். ஆப்பம், சிக்கன் ஸ்டியூ, பிரியாணி, சாதம், மீன் குழம்பு முதலியவற்றை வர வைத்து, கலகலத்துக் கொண்டே உண்டு முடித்தனர்.

அங்கிருந்து நேராகத் துபாய் மால் சென்றனர். மாலின் உள்ளேயே அமைந்திருந்த ரீல் சினிமாவில் புதிதாக வெளியாகி இருந்த ஆங்கிலப் படம் ஒன்றை கண்டு மகிழ்ந்தனர். படம் முடிந்து வெளியில் வந்ததும் ஆளுக்கொரு காபியை அங்கிருந்த புட் கோர்ட்டில் அருந்தினர்.

அதன் பிறகு, காலாற ஷாப்பிங் மாலை ஒரு சுற்று சுற்றி வந்தனர். ஷாப்பிங் செய்வதில் எல்லாம் பெரிதாக வசுமதிக்கு விருப்பம் இருந்ததில்லை. நர்மதாவும் அப்படித் தான். அதனால் கண்ணில் பார்த்ததை எல்லாம் வாங்கிக் குவிக்கவில்லை அவர்கள்.

அதுவரை தன் கடமையைக் கன கச்சிதமாகச் செய்து கொண்டிருந்த சூரியன் தன் கடுமையைக் குறைத்துக் கொண்டு விடை பெற, சந்திரன் வெளிவரும் ஆயத்தங்களில் இருந்தான்.

நால்வரும் துபாய் மாலின் பக்கவாட்டில் இருந்த துபாய் பவுண்டேய்னை காண நகர்ந்தனர். துபாய் மாலுக்கும், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவிற்கும் நடுவில் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியில் அமைக்கப் பட்டிருந்தது “தே துபாய் பவுண்ட்டேய்ன்”. அங்கு இசைக்கப்படும் இசைக்கு ஏற்ப நீரூற்றுகள் மேலெழும்பி நடனமாடுவது போல அசைவது தான் அதன் சிறப்பம்சம்.

இசையின் லயத்திற்கு ஏற்ப நீர் எம்பி குதித்து நடனமாடுவதைக் காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும். வசுமதி மழையின் காதலி, அப்படிபட்டவளுக்குத் துபாய் போன்ற பாலைவனத்தில் இது போன்ற அதிசயங்கள் எல்லாம் அவள் ரசித்து அனுபவித்துப் பார்ப்பது. இதுவரை எத்தனை முறை இங்கு வந்திருப்பாள் என்றே அவளுக்குத் தெரியாது. வாசுவுடன் நெருக்கமாக நின்று நீரின் நடனத்தைப் பார்ப்பது அவளுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.

“நீ பக்கத்தில இருக்கறதால தான் என் கண்ணுக்கு எல்லாமே அழகா தெரியுதா வசும்மா?, இதுக்கு முன்னாடி இங்க ரெண்டு, மூனு முறை வந்திருக்கேன். ஆனா அப்போலாம் இது இத்தனை அழகா தெரிஞ்சது இல்ல.” அவள் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னான் அவன்.

“கடவுளே… வாசு…” என்று சிரித்தவள், “விட்டா… அதோ பக்கத்தில இருக்கப் புர்ஜ் கலிபா பில்டிங் கூடச் சின்னதா தெரியுதுன்னு சொல்லுவீங்க போல” என்றாள் கிண்டலாக,

“என் பொண்டாட்டியை விட என் கண்ணுக்கு எதுவும் பெருசில்ல, அழகில்ல, ரம்மியமில்ல, ரசிக்கல” என்று தீவிரமான குரலில் அடுக்கிக் கொண்டே போனான் அவன்.

அவர்களின் அருகில் நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்த நர்மதா, எத்தனை முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல் பக்கென்று சத்தமாகச் சிரித்திருந்தாள். அச்சிரிப்பு மற்ற மூவரையும் தொற்றிக் கொள்ள, மனம் விட்டு சிரித்தனர் நால்வரும்.

மறுநாள் சனிக் கிழமையும் விடுமுறை என்பதால், நிதானமாக இரவு உணவை முடித்துக் கொண்டு, ஜுமைரா பீச் சென்று, மணலில் காதல் புதைய கைக் கோர்த்துக் கொண்டு நடந்தனர். குளிர் காற்றும், பனிப் பொழிவும் மட்டும் இல்லை என்றால் அங்கிருந்து நகர்ந்திருக்கவே மாட்டார்கள் அவர்கள்.

கல்யாணத்திற்கு முன்னரும் பல முறை இது போல வெளியில் வந்திருக்கின்றனர் இருவரும், அவரவர் நண்பர்களோடு, சில முறை ஊரில் இருந்து வந்திருந்த குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, ஆனால் இன்றைக்கு அனைத்துமே புதிதாகக் காண்பது போல் கண்களுக்குப் புதுவித அழகுடன் திகழ்ந்தது‌. அந்நாளை ரசித்து அனுபவித்தாள் வசுமதி. வாசுவின் கண்களோ மனைவியின் மேல் மட்டுமே நிலைத்திருந்தது.

எப்போதும் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் நரேனுக்கு, பல நாட்கள் கழித்து மனைவியுடன் கிடைத்த தனிமையை அவள் முகம் பார்த்து பூரித்தே கடந்தான். சந்தோச மிகுதியில் மனமும், உடலும் தளர்ந்து புத்துணர்வாக இருந்தது. நர்மதா தன் கவலைகளை, வீண் சிந்தனைகளை அன்று முழுவதுமாகத் தூக்கி தூர எரிந்து விட்டு, புது நர்மதாவாக இருந்தாள்.

அவர்கள் எதிர்பாராத விதமாக மிக அழகாக, மனதுக்கு நெருக்கமான நாளாக அமைந்தது அந்த விடுமுறை தினம்.

error: Content is protected !!
Scroll to Top