பூமரப் பாவைகள் – 13 (1)

அறைக்குள் அத்துமீறி நுழைந்த சூரிய ஒளியில் தூக்கம் கலைந்து எழுந்தாள் வசுமதி. ஆக்டோபஸ் போலத் தன்னைச் சுற்றி வளைத்திருந்த கணவனின் கரங்களைச் சிறு புன்னகையுடன் விலக்கினாள். கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தாள், உடலெங்கும் சுக அயற்சி.

எப்போதும் ஆர்ப்பரிப்பவன், இப்போது அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்க, புன்னகையுடன் குனிந்து கணவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டுக் குளிக்கப் போனாள் வசுமதி. தண்ணீர் சத்தத்தில் வாசுவும் எழுந்து விட, அவளைத் தொடர்ந்து அவனும் குளித்து விட்டு வந்தான்.

அதன் பின் அன்றைய தினம் அவர்களின் கையில் இல்லாமல் போனது. வாசுவின் ஃபிளாட்டிற்குச் சென்று அவனது உடைமைகளைப் பேக் செய்து, அப்படியே அங்கே நிறுத்தி இருந்த அவனது காரையும் எடுத்துக் கொண்டு வந்தனர். வீட்டை அடைந்த கையோடு, வாசுவின் பொருட்களை இப்போதைய அவர்களின் வீட்டில் இடம் பார்த்து அடுக்கி வைத்தனர்.

வேலை எல்லாம் முடித்து விட்டு, அவர்கள் நிமிர்ந்த போது மதியம் மூன்று என்றது கடிகாரம். வேலைக்கு நடுவில் சமையலை மறந்திருக்க, வெளியில் சென்று உணவை முடித்து விட்டு வந்தனர்.

ஏனோ அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் ஃபிளாட் பக்கமே வரவில்லை நரேனும், நர்மதாவும்.

அன்று வெள்ளிக் கிழமை என்பதால் இருவருக்குமே விடுமுறை நாள் தான், மாலை நெருங்கும் வேளையில் அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட் சென்று ஒரு வாரத்திற்கு வீட்டிற்குத் தேவையான மளிகை, காய்கறிகளை வாங்கி வந்து அடுக்கி வைத்தனர். சனிக் கிழமையும் அது போலவே கடந்து விட, மறுநாள் ஞாயிறு அன்று அலுவலகம் செல்ல வீட்டையும், தங்களையும் தயார்படுத்தினர் இருவரும்.

அதன் பின் நாட்கள் அதன் போக்கில் வேகமாய் நகர்ந்தது. ஒன்றரை மாத விடுமுறைக்குப் பின் அலுவலகம் சென்ற வாசுவிற்குக் கழுத்தளவு வேலைகள் பேங்கில் காத்திருந்தன. அதில் மூழ்கி போனான் அவன்.

வசுமதியை கிண்டல் அடித்தே தங்கள் நாட்களைச் சுவாரசியமாக்கி கொண்டிருந்தனர் அவளது அலுவலக நண்பர்கள். சில நேங்களில் கோபத்தையும், பல நேரங்களில் வெட்கத்தையும் அவர்களுக்குப் பரிசளித்துத் தன் வேலையையும் பொறுப்பாகச் செய்தாள் வசுமதி.

காலையில் அவளை அலுவலகத்தில் கொண்டு விட்டுவிட்டுப் பின்னர்ப் பேங்க் சென்றான் வாசுதேவன். மாலையும் அவனே சென்று அழைத்து வந்தான். இருவரின் அலுவலகமும் அருகருகே இருந்தது வசதியாகிப் போனது.

வேலை முடிந்து வீடு வந்ததும் தங்களுக்குள் மூழ்கிப் போனார்கள் இருவரும்.

நரேன், நர்மதா தம்பதிகளிடம் வசுமதியின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் வாசுவும் நன்றாக ஓட்டிக் கொண்டான். அவனுக்கு நர்மதா அக்காவாகவும், நரேன் மாம்ஸ் ஆகவும் மாறி இருந்தனர்.

வசுமதியின் பயம் தேவையற்றது எனும் விதமாக நாட்கள் மிக இனிமையாகவும், வேகமாகவும் நகர்ந்தன.

அடுத்து வந்த இரு வாரங்கள் மின்னலென ஓடி மறைந்திருந்தது.

“வாசு, வாசு எழுந்திருங்க” என்று கணவனை உலுக்கிக் கொண்டிருந்தாள் வசுமதி.

“ம்ப்ச், தூங்க விடு வசும்மா. லீவ் தானே இன்னைக்கு. அப்புறம் ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுப்பற? என் செல்ல குட்டி பொண்டாட்டி, தூக்கம், தூக்கமா வருது” என்றவனின் கரங்கள், காற்றில் மனைவியைத் தேடி துழாவியது. அவளை நோக்கி நீண்ட அவன் கரத்தை லேசாக அடித்துத் தட்டி விட்டவள்,

“சீக்கிரமாகவா? மணி என்ன தெரியுமா? எழுந்திருங்க வாசு, வெளில எங்கேயாவது போகலாம். ஊர்ல இருந்து வந்து ரெண்டு வாரம் ஆச்சு. நாம எங்கேயும் போகல. உங்களுக்கு ஆபீஸ் வேலையே சரியா இருக்கு. வீட்டுக்கு வந்தாலும் தூங்கிட்டே தான் இருக்கீங்க” கோபமாகப் புகாரை தொடங்கியவள், சிணுங்கலாய் முடித்தாள்.

“நான் எங்க தூங்கினேன்?, இந்த வசுவை வசப்படுத்துறதிலேயே என் இரவுகள் கரைந்து போய்டுது” மிகவும் சிரமப்பட்டுக் கண் திறந்து, மனைவியின் முகத்தைக் கைகளில் ஏந்தி கிறக்கமாய்ச் சொன்னான் வாசு. வசுமதியின் முகம் புன்னகையில் மலர்ந்தது.

“பிளீஸ், எழுந்து வாங்க வாசு. வெளில போகலாம். எனக்கு ரொம்பப் போர் அடிக்குது”

“டைம் என்ன வசும்மா?” கேட்டபடியே எழுந்தான் வாசு.

“பதினொண்ணு பத்து, வெள்ளிக் கிழமை காலை” என்றாள் இயந்திர குரலில், குனிந்து அவள் கன்னத்தில் மீசை உரச அழுத்தமாய் முத்தமிட்டுக் குளிக்கப் போனான் வாசுதேவன்.

அவன் குளித்து முடித்து, தலையைத் துவட்டியபடி வெளியில் வந்த போது, முழுதாகத் தயாராகி நின்றாள் வசுமதி. அவளை உச்சி முதல் பாதம் வரை கண்களால் வருடியவன், சத்தமாக விசிலடித்தான்.

மறுகணமே வேக எட்டுக்கள் வைத்து அவளை நெருங்கியவன், “வாவ், அழகா இருக்க வசும்மா” கிறக்கமாய்ச் சொன்னவனின் கரங்கள் வெற்றிடையில் பதிந்தது.

“ஷ்ஷ், கோயிலுக்குப் போகனும், கையை எடுங்க” பல்லைக் கடித்தபடி, அவனது கையைத் தட்டி விட்டாள் வசுமதி.

“இந்தச் சேலை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு டா. பட்டுச் சேலை, நகைன்னு கலக்கற” கண் சிமிட்டினான்.

“உங்களுக்கும் வேஷ்டி, சட்டை எடுத்து வச்சுருக்கேன், பாருங்க. போட்டு ரெடியாகுங்க. நேரமாகுது” கண்களை உருட்டி மிரட்டினாள். அதற்கு மேல் அவளிடம் வம்பு வளர்க்காமல் தானும் சென்று உடை மாற்றித் தயாராகினான் வாசு.

அடுத்தப் பத்தாம் நிமிடம் நர்மதாவின் வீட்டில் இருந்தனர்.

“வாங்க, வாங்க மாப்பிள்ளை… வசுமதி, வாம்மா, வாம்மா..” நர்மதா கதவை திறந்ததும், அடுப்படியில் இருந்து தன்னால் முடிந்த வரை வேகமாக நடந்து, அவர்களின் அருகில் வந்து வரவேற்றார் சரஸ்வதி.

“வழியை விடு சரசு, புள்ள உள்ள வரட்டும்” என்றார் நரேனின் அப்பா.

உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாக இருவரும் ஒன்றாக, நரேனின் பெற்றோரின் பாதம் பணிந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். சரஸ்வதிக்குக் கண்கள் கலங்கி விட்டது.

“நல்லா இருங்க, நல்லா இருங்க” என்று இருவரின் தலையிலும் கை வைத்து ஆசிவதித்தார் அவர்.

இளைய மகன் குடும்பத்துடன் அபுதாபியில் இருந்தவர் அன்று காலை தான் துபாய் வந்திருந்தார். வசுமதிக்கு, நர்மதா மெஸேஜ் அனுப்பித் தகவல் சொல்ல, உடனே அவரைக் காண வந்திருந்தனர் இருவரும்.

சரஸ்வதியின் முன் சென்று ஒரு முறை சுழன்று வட்டமடித்து நின்றாள் வசுமதி. சட்டென்று உரக்கச் சிரித்து விட்டார் சரஸ்வதி. அனைத்தையும் படுக்கை அறையின் வாயிலில் நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்தனர் நரேனும், நர்மதாவும்.

“இந்தப் பட்டுப் புடவை உனக்கு அவ்ளோ பாந்தமா இருக்குத் தங்கம். அழகா இருக்க. அய்யோ, என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” இரு கைகளிலும் அவளின் முகத்தை வழித்து, நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தார் அவர். அழகாக வெட்கப்பட்டாள் வசுமதி.

நர்மதா, “என்ன விஷயம்?” என்று புருவம் உயர்த்தி வசுமதியைப் பார்த்து விழிகளால் வினவ, “அம்மா எனக்குக் கொடுத்த கிஃப்ட் இந்தப் புடவை, கல்யாண பரிசு” என்றாள் சத்தமாக.

“உட்காருங்க தம்பி, குடிக்க ஏதாவது கொண்டு வரேன்” நொடியில் கிட்சனிற்குள் சென்று மறைந்தார் சரஸ்வதி.

வசுமதி, நர்மதாவின் அருகில் செல்ல, அவளைக் கைப் பிடித்துச் சோஃபாவில் அமர வைத்தாள் அவள். வாசுவும், நரேனும் ஒருபுறம் அமர்ந்து கிரிக்கெட் பேச்சில் மும்முரமாக இருந்தனர்.

“நீங்க கொடுத்த கிப்டில் தான் அண்ணி இந்தச் சேலையும் இருந்தது. அந்தக் காலத்து புடவைனாலும் கூட எவ்வளவு அழகு இல்ல? ஒரு மாதிரி யுனிக்கா இருக்கு அண்ணி” பட்டை தொட்டு, தொட்டு பார்த்துக் கொண்டாள் வசுமதி.

“ஒரிஜினல் வெள்ளி சரிகை டா அது, அதான் வித்தியாசமா இருக்கு. அத்தை எப்பவும் இப்படித் தான், அவங்க பட்டு கலெக்சன் எல்லாம் நமக்குப் பரிசா தான் வரும்.” சிறு புன்னகையுடன் சொன்னாள் நர்மதா.

“இந்த லாவண்டர் கலர் உனக்கு அவ்வளவு பொருத்தமா இருக்கு, இந்தக் கலர் உனக்கு ரொம்பப் பிடிக்கும் இல்ல வசு.?”

“ஆமா அண்ணி..” சேலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள் வசுமதி.

“நகையும் அம்மா தான்….” என்று வசுமதி தொடங்க, “ஆமா வசு, அதுவும் அத்தை கொடுத்தது தான்” என்றாள் நர்மதா.

“இந்தக் கம்மல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றவள், தலையாட்டி பொம்மை போலத் தலையை ஆட்டிக் காண்பித்தாள். அணிந்திருந்த தங்க ஜிமிக்கி அவளின் தலையாட்டலுக்கு இசைந்து ஆடியது. அங்கு அமர்ந்திருந்த அனைவரின் முகமும் புன்னகையில் மலர்ந்தது.

“நீங்க கிஃப்ட் பண்ண சாரி, ஜூவல்ஸ் எல்லாம் இன்னொரு நாள் போட்டுக் காண்பிக்கிறேன் அண்ணி, சரியா?” என்றாள் திரும்பி நர்மதாவிடம், “ஓகே டா” என்றாள் அவள்.

அரை மணி நேரத்தில் தடபுடலாகக் காலை உணவை தயார் செய்து விட்டார் சரஸ்வதி. பூரி, கிழங்கு, இட்லி, சாம்பார், பைனாப்பிள் கேசரி என்று அவளுக்குப் பிடித்ததாகச் சமைத்திருந்தார்.

“காலை டிபன் இன்னும் சாப்பிடலை தானே வசு? இங்கேயும் யாரும் சாப்பிடலை. இப்ப தான் எழுந்தாங்க. வாங்க தம்பி, வந்து உட்காருங்க. சாப்பிடலாம்” என்று அழைத்தார் சரஸ்வதி.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு விட்டு வீட்டில் இருந்து பத்து நிமிட நடையில் இருந்த கோவிலுக்குச் சென்றனர்.

error: Content is protected !!
Scroll to Top