பூமரப் பாவைகள் – 12 (3)

ஒரு வழியாகக் குழந்தைகளைச் சமாதானம் செய்து, சாக்லேட் ஆசை காண்பித்து, ஷாலினியும், வருணின் மனைவி திவ்யாவும் அங்கிருந்து அவர்களைத் தூக்கிக் கொண்டு போக, இப்போது கண்கள் கலங்க வசுமதி அவர்கள் போவதையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

“உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவாங்க வசு, நீயும் மிஸ் பண்ணுவ தான். சீக்கிரமே நாம ஊருக்கு வரலாம் டா, இல்லனா அவங்களை விசிட் விசால துபாய் வர வைக்கலாம். டோண்ட் வொர்ரி டா. பிளீஸ், சியர் அப்.” என்று மெல்ல அவளைத் தேற்ற முயன்றான் வாசு. ஆனாலும் அவள் முகம் தெளியவில்லை.

அவள் மனம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. மனதின் ஓரத்தில் குழந்தை ஆசை துளிர்க்க ஆரம்பித்தது. அந்தக் கோலி குண்டு கண்களும், சதைப் பற்றான கன்னங்களும், பட்டு மேனியும், பால் வாசமும், மழலை பேச்சும் அவளை மொத்தமாய் மயக்கியது.

கணவனை லேசாகத் திரும்பி ஓரக் கண்ணால் பார்த்தாள். அவன் முகம் முழுவதும் குழப்ப ரேகைகள். வசுமதிக்கு என்னவோ போலாகி விட்டது. சட்டென்று தன் முகத்தைச் சகஜமாக்கினாள். அவன் கைப் பற்றி, “நேரமாச்சு வாசு, போகலாம்” என்றாள். சட்டென விரிந்த புன்னகையுடன் குடும்பத்தினருடன் விடை பெற்று உள்ளே சென்றனர் அவர்கள்.

இமிக்ரேஷன் முடிந்து செக்யூரிட்டி செக்கிங் நோக்கி நடந்தனர்.

“நர்மதா கா, வீட்டுக்கு கூட்டிட்டு போகலைன்னு கோபமா வசும்மா?” என்றான் வாசு கேள்வியாக,

வீட்டில் இருந்து கிளம்பும் போதே நர்மதாவை ஒரு முறை பார்த்து விட்டுச் செல்லலாம் என்றாள் வசுமதி. ஆனால், நேரம் குறைவாக இருக்க, வாசு மறுக்க வேண்டியதாகி விட்டது. மனைவி எங்கே அதை நினைத்து தான் வருந்துகிறாளோ என்று எண்ணி தான் அவளிடம் அதைப் பற்றிக் கேட்டான் வாசு.

“ச்சே, ச்சே இல்ல வாசு. நீங்க சொன்னது சரி தான். வளசரவாக்கத்தில் இருந்து முகப்பேர் போய், அப்புறம் அங்க இருந்து, எங்க வீட்டுக்கு சின்மயா நகர் போகனும். தலையைச் சுத்தி மூக்கை தொடுற வேலை.

அதுக்கு அப்புறம் ஏர்போர்ட்க்கு மீனம்பாக்கம் வரணும், அதுவும் ட்ராஃபிக் அதிகமாக இருக்க இந்த நேரத்தில்… இந்த மழைக்கு நடுவில எங்கேயும் மாட்டிக்காம… ரொம்பக் கஷ்டம் தான். ஃப்ளைட்க்கு லேட்டாகி இருக்கும், எனக்கு நீங்க சொன்னது புரிஞ்சுது. நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும். கடைசி நேரத்தில் அப்படிக் கேட்டது என் தப்பு தான்” என்றாள் அவள் புரிதலுடன்.

“இல்லடா, அக்கா ஃபோன் எடுத்து பேசி இருந்தா கூட, வீட்ல இருக்காங்களானு கேட்டுட்டு போய் இருக்கலாம். ஆனா, அவங்க மொபைல் ஆஃப் ஆகி இருக்கு. ஒரு வேளை வெளில எங்கேயும் போய் இருந்தாங்கன்னா… அந்த நேரம் நாம அங்க போய் நின்னு, அவங்களைப் பார்க்க முடியாம, வீண் அலைச்சல் தான். அதனால தான் வேணாம்னு சொன்னேன் வசும்மா, மத்தபடி நீ கேட்டு, எதையும் நான் செய்யாம இருப்பேனா சொல்லு..” என்றான் விளக்கமாக, அவன் பதிலில் அவள் இதழ்கள் தாமாகப் பிரிந்து விரிந்தன.

இதே அன்புடன், புரிதலுடன் நாங்கள் இருவரும் எப்போதும் இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வேண்டி கொண்டாள் வசுமதி.

அவள் சிந்தனைகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்க, வாசு நல்ல உறக்கத்தில் இருந்தான். விமானம் நடுவானில் மேகங்களுக்கு மேலே நீந்தி, முன்னேறிக் கொண்டிருந்தது. தரையிறங்க இன்னும் இரண்டு மணி நேரங்கள் இருக்க, தானும் கண்களை மூடினாள், சில நொடிகளில் தூங்கியும் இருந்தாள்.

டாக்ஸி தேரா துபாயின் சாலையில் விரைந்து கொண்டிருந்தது. வீட்டை அடைய எப்படியும் இன்னும் இருபது நிமிடங்களாவது எடுக்கும் என்று அவளுக்குத் தெரியும். வியாழக் கிழமை இரவென்பதால் சாலைகளில் போக்குவரத்து சற்று அதிகமாகவே இருந்தது. கண்களில் இன்னும் தூக்கம் மிச்சமிருக்க, கணவனின் தோள் சாய்ந்து கண்களை மூடினாள் வசுமதி.

திடீரென்று கார் நகராமல் நிற்பதை உணர்ந்தவள், மெல்ல கண்களைத் திறந்தாள், கண் முன் கண்ட காட்சியில் மெய்மறந்து போனாள்.

“வாவ்” என்றாள் சத்தமாக, “பயப்படுவன்னு நினைச்சேன்” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் வாசு.

ஆனால், அவள் கண்கள் சாலையிலேயே பதிந்திருந்தது. அந்த நள்ளிரவில் பர்துபாயையும், தேரா துபாயையும் இணைக்கும் அல் மக்த்தும் ப்ரிட்ஜ் அவர்கள் முன் நட்டமாக நின்று கொண்டிருந்தது தான் காரணம். கப்பல் போக்குவரத்திற்காகத் திறந்து விட்டிருந்தனர். அவளுக்குக் காண கிடைத்த அந்த அரிய காட்சியைத் தவற விட விரும்பாமல் வாய் பிளந்து, கண் சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வசுமதி. அக்காட்சியைத் தனது மொபைலில் சில படங்கள் எடுத்துக் கொண்டான் வாசு.

“நம்ம ராமேஸ்வரம் ரயில் பாலம் கூட, இது போல ஓபன் ஆகும்ல.” என்றான் வாசு, அவளைத் திரும்பி பார்த்து,

“ஹ்ம்ம், ஃபோட்டோ பார்த்திருக்கேன். ஆனா, நேரில் பார்த்தது இல்ல வாசு. அது ரயில் பாலம். ஆனா, இது ரோடு இல்லையா? ஏதோ கருத்த ராட்சசன் எதிரில் நிக்கறது போல இருக்கு.” பிரம்மிப்பு விலகாமல் வாய் பிளந்தபடி சொன்னாள் அவள்.

“அதுவும் இல்லாம இப்படிப் பக்கத்தில இருந்து பார்க்கற வாய்ப்புக் கிடைக்குமா தெரியல. திஸ் இஸ் அமேசிங்” என்றாள், இன்னும் ஆச்சரியம் அகலவில்லை அவளுக்கு. எதிரில் நெட்டுக் குத்தாக நின்று கொண்டிருந்தது கரும் பூதம் போலிருந்த சாலை.

“வேற ரூட் எடுக்கவா?” என்ற டிரைவரின் கேள்வியில் தன் பிரமிப்பில் இருந்து விடுபட்டாள் அவள்.

“எஸ், பிளீஸ்” என்ற வாசுவின் பதிலில், கார் மீண்டும் வந்த வழியில் திரும்பி வேகமெடுத்தது.

சிறிது நேரத்தில் அவர்களின் அபார்ட்மெண்ட்டை‌ அடைந்து, தங்களின் உடைமைகளுடன் வாயிலை நோக்கி நடந்தனர். வசுமதியின் ஸ்டுடியோ பிளாட்டில் தான் இனி தங்களின் குடித்தனம் எனச் சில தினங்களுக்கு முன் முடிவெடுத்து இருந்தனர்.

வாசுவின் நண்பர்களை உடனடியாக வீட்டை காலி செய்யச் சொல்வது அவ்வளவு சரியாக இருக்காது என்று இருவரும் அபிப்பிராயப் பட்டனர். மேலும், சற்று பெரிய அல்லது ஒற்றைப் படுக்கை அறை கொண்ட வீடு தேடலாம் என்றால், அவர்களின் அவசரத்திற்கு வேறு வீடுகளும் எளிதாகக் கிடைக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுத்திருந்தனர்.

இருவரும் லிஃப்ட்டில் நுழைந்ததும், தங்களின் தளத்திற்கான எண்ணை அழுத்தியவள், ஃபிளாட் நம்பரையும் அவனிடம் குறிப்பிட்டாள்.

“நம்ம ஃபிளாட் சாவி என்கிட்ட ரெண்டு இருந்தது. ஒன்னு நர்மதா அண்ணிக்குக் கொடுத்துட்டேன். அதனால் உங்களுக்கு நாளைக்கு டூப்ளிகேட் கீ செய்திடலாம்” என்றாள் கணவனிடம் வசுமதி. “ஓகே டன்” என்றான் அவளை அருகில் இழுத்துக் கொண்டு,

“கீப் டிஸ்டன்ஸ் மிஸ்டர் வாசுதேவன். இது துபாய். இங்க பப்ளிக் டிஸ்ப்ளே ஆப் அப்பெக்சன்க்கு அனுமதி இல்ல” என்றபடி கண் சிமிட்டினாள் வசுமதி.

அவனுக்கும் அது தெரியும் என்பதால், “என் பொண்டாட்டியை, நான் என்ன வேணாலும் பண்ணுவேன். எவன் சட்டம் போட்டா எனக்கென்ன?” என்று வெறுமே வாய் சவடால் பேசாமல் மௌனமாய் நின்றான் வாசு. அதற்குள் அவர்களின் தளம் வந்திருக்க, ஒன்றாக வெளியில் வந்தனர்.

வாசுவிற்கு முன் பெட்டியை இழுத்துக் கொண்டு நடந்தாள் வசுமதி, எதிரில் கண்ட காட்சியில் சட்டெனச் சடன் பிரேக் அடித்தது போல அவள் நின்று விட, அவள் மேல் மோதிக் கொண்டு நின்றான் வாசு.

அவளது ஃபிளாட்டின் முன் இருந்த ஜன்னலின் திட்டில் அமர்ந்தபடி பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் நர்மதா, நரேன் தம்பதிகள்.

‘நர்மதா, ஊரில் தானே இருந்தாள், எப்போது துபாய் வந்தாள்? தன்னிடம் ஊருக்கு செல்வதைப் பற்றிச் சொல்லவே இல்லையே?’ அதிர்ச்சியில் விழிகள் விரிய, இழுத்துக் கொண்டு வந்த பெட்டியை அப்படியே பொத்தென்று தரையில் போட்டு விட்டு, இரு கைகளையும் இடுப்பில் பதித்து அவர்களை முறைத்துக் கொண்டு நின்றாள் வசுமதி.

“டொம்” என்று பெட்டி கீழே விழுந்த சத்தத்தில், சுற்றம் மறந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் கலைந்து நிமிர்ந்து பார்த்தனர். வசுமதி நின்ற தோரணையைக் கண்டதுடம் வந்த சிரிப்பை வழிய விடாமல், உதடு கடித்துத் தடுத்தாள் நர்மதா.

“வசு, எப்படா வந்த? ரொம்ப நேரமா நிக்கறியா?” என்றபடி எழுந்தவள், தன் கையில் இருந்த சாவியைக் கொண்டு அவளின் வீட்டின் கதவைத் திறந்தாள். வசுமதி பதில் சொல்லாமல் சிலை போல நின்றாள், முகம் கோபத்தில் சிவந்து ஜொலித்துக் கொண்டிருந்தது.

“வாங்க வாசு, டிராவல் எப்படி இருந்தது?” என்றான் நரேன்.

“எப்பவும் போலத் தான்ங்க நரேன், வெரி டயரிங்”

என்ற வாசுவின் தோளில் தட்டி கொடுத்து விட்டு, மனைவியைப் பின் தொடர்ந்து ஃபிளாட்டிற்குள் சென்றான் நரேன்.

வசுமதியின் கோபத்தை ஓரக் கண்ணால் ரசித்தபடி, “வா வசும்மா, வீட்டுக்குள்ள போகலாம். உள்ளப் போய்ச் சண்டை போடலாம்” என்றான் வாசு.

“ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லலை பாருங்க. எப்போ கிளம்பினாங்க… என்னைக்குக் கிளம்பினாங்க…” படபடவெனப் பொரிந்தவளை, இடைவெட்டியது நர்மதாவின் குரல், “நீங்க வீட்டுக்கு வந்துட்டு போன மறுநாளே நரேன் வந்து கூட்டிட்டு வந்துட்டார். சாரி, கிளம்பற அவசரத்துல உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்” கண்களைச் சுருக்கி, உதட்டை குவித்து வசுமதியை சமாதானம் செய்ய முயற்சித்தாள் அவள். ஆனால், கோபம் குறையாமல் முகத்தைத் தூக்கி வைத்த படி நின்றாள் வசுமதி.

வீட்டினுள் இருந்து கையில் பெரிய தட்டுடன் நரேன் வர, அவர்களின் பார்வை அங்குத் தாவியது. அப்போது தான் அவர்கள் தங்களுக்காகக் காத்திருந்த காரணத்தைப் புரிந்து கொண்டாள் வசுமதி.

இருவரையும் ஒன்றாக இணைந்து நிற்க பணித்த நர்மதா, அவர்களுக்கு அழகாக ஆலம் சுற்றி பொட்டிட்டாள்.

“எதுக்கு இவ்வளவு சிரமம் கா? அதுவும் மிட் நைட்ல, உங்க தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு?” என்றான் வாசு. தங்களை வரவேற்க அவர்கள் காத்திருந்தது அவனது மனமெங்கும் மகிழ்ச்சியைப் பரப்பியது. ஆனாலும் நேரம் நள்ளிரவை கடந்திருக்க, அவர்களின் உறக்கம் கெடுமே என்று கவலைப்பட்டான் அவன்.

“ஆமா, நாங்க இன்னைக்கு வர்றது உங்களுக்கு எப்படித் தெரியும்?” ஒற்றைப் புருவம் உயர்த்தி, சந்தேகமாகக் கேட்டாள் வசுமதி. அத்துடன் நர்மதாவை இடித்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தாள். இருபது நாட்கள் புழங்காத வீடு போல இல்லாது, அழகாகச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து வைத்திருந்தனர்.

“வருண் கால் பண்ணி இருந்தார்” என்றான் நரேன் சிரித்துக் கொண்டே, “எங்க அண்ணன் இருக்கானே, ஆனாலும் அவனுக்குத் தங்கச்சி மேல இவ்வளவு பாசம் இருக்கக் கூடாது” என்று அலுத்துக் கொண்டே, விழிகளை உருட்டினாள் வசுமதி. சத்தமாகச் சிரித்தனர் மற்ற மூவரும்.

“குட் நைட் வாசு, காலையில் பார்க்கலாம் வசு.” என்றபடி வாயிலை நோக்கி நகர்ந்தான் நரேன். அவனைப் பின் தொடர்ந்து நடந்த நர்மதா, காற்றில் பறக்கும் முத்தத்தை வசுமதிக்கு பரிசளித்தாள். ஆனாலும் வசுமதி கரையவில்லை.

“உன்ன காலையில் பார்த்துக்கறேன்” என்றபடி நர்மதா நகர, “காலையில இருக்கு உங்களுக்கு” என்றாள் பதிலுக்கு வசுமதி. அவர்கள் வெளியேறி கதவை அடைத்ததும், வாசுவின் கைகளை அவளை வளைத்துக் கொண்டன.

“அன்னைக்குப் பூ அலங்காரம் முழுசும் வேஸ்ட்டா போச்சு, பட் இன்னைக்கு அப்படி ஆகாம பார்த்துக்கலாம் வா” என்று அவள் கன்னத்தை உரசி, காதில் ரகசியம் பேசியவன், அவளை இழுத்துக் கொண்டு படுக்கையில் சரிந்தான்.

பால்கனி வழியாக மெல்ல அறைக்குள் நுழைய எத்தனித்த நிலா, முத்த சத்தத்தில் நாணி மேகங்களுக்கு நடுவில் தன் முகத்தை மறைத்துக் கொண்டது.

அறைக்குள் இருந்த ஜோடி புறாக்கள் போட்டி போட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் மயக்கியும், மயங்கியும் கொண்டிருந்தனர். அவர்களை இன்பமாய்த் தழுவி சென்றது குளிர் காற்று.

error: Content is protected !!
Scroll to Top